Published:Updated:

`பைக்கை குடுங்க சார்... பணத்தைக் கோர்ட்ல கட்டுறேன்' - வாலிபரின் தற்கொலை மிரட்டலால் பதறிய போலீஸ்

`பைக்கை குடுங்க சார்... பணத்தைக் கோர்ட்ல கட்டுறேன்' - வாலிபரின் தற்கொலை மிரட்டலால் பதறிய போலீஸ்
`பைக்கை குடுங்க சார்... பணத்தைக் கோர்ட்ல கட்டுறேன்' - வாலிபரின் தற்கொலை மிரட்டலால் பதறிய போலீஸ்

`பைக்கை குடுங்க சார்... பணத்தைக் கோர்ட்ல கட்டுறேன்' - வாலிபரின் தற்கொலை மிரட்டலால் பதறிய போலீஸ்

போலீஸ் பிடித்து வைத்த தனது பைக்கை மீட்டுத்தரக் கோரி, செல்போன் டவர்மீது ஏறி தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டிய ஒருவரால் இன்று காலை ஜெகதாபட்டினம் பரபரப்பானது.

புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டினம் அருகில் உள்ள மஞ்சகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன் (45). இன்று மஞ்சகுடியில் நடந்த பங்குனி உத்திரத் ஊர்த்திருவிழாவுக்கு தன்னுடைய பைக்கில் சென்றிருக்கிறார் மோகன். போகும்போது அங்கு பந்தோபஸ்துக்கு நின்றிருந்த போலீஸார், மோகனை வழிமறித்து லைசென்ஸ் உள்ளிட்ட விவரங்களைக் கேட்டிருக்கிறார்கள். மோகனும் எல்லாவற்றையும் எடுத்துக் காட்டியிருக்கிறார். ஆனால், மோகன் ஹெல்மெட் போடவில்லை என்று போலீஸார் அபராதம் போட்டிருக்கிறார்கள். மோகன் பணம் இல்லை என்று கூறியிருக்கிறார். போலீஸாரும் "ரசீது போட்டாச்சு. பணத்தைக்கட்டிட்டு பைக்கை எடுத்துட்டு போ" என்று கூறி இருக்கிறார்கள். மோகன் அவர்களுடன், "சாமி கும்பிட வர்றவன் ஹெல்மெட்டா போட்டுட்டு வருவான். பைக்கை குடுங்க சார். பணத்தை நான் கோர்ட்ல கட்டுகிறேன் "என்று கூறி இருக்கிறார். ஆனால், போலீஸ்காரர்களோ... பணத்தை ஸ்டேஷனில் வந்து கொடுத்துவிட்டு பைக்கை எடுத்துச் செல்லும்படி கூறிவிட்டு, மோகனின் பைக்கை எடுத்துக்கொண்டு ஜெகதாபட்டினத்திலுள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்துவிட்டார்கள். பின்னாலயே வந்த மோகன், அருகில் உள்ள தனியார் செல்போன் டவரில் சரசரவென  ஏறி, தற்கொலை மிரட்டல் விடுக்க ஆரம்பித்துவிட்டார்.

"என்னோட பைக்கை போலீஸ் பிடிச்சு வெச்சுகிட்டு லஞ்சம் கேக்குறாங்க. என்னோட பைக்கை தரலேன்னா, டவர்லேருந்து கீழே விழுந்து தற்கொலை பண்ணிக்குவேன்" என்று மோகன் போட்ட சத்தத்தில் கூட்டம் கூடிவிட்டது. போலீஸாரும் வந்துவிட்டார்கள். எல்லோரும் மாறி மாறி சமாதானம் பேசியும் அவர் மசியவில்லை. அவரை மீட்பதற்காகச் சிலர் டவர்மீது ஏற முற்பட, அவர்களிடம், "மேல யாரும் ஏறி வராதீங்க. வந்தீங்கன்னா... கீழே குதிச்சுடுவேன்" என்று பயம் காட்டவே  எல்லோரும் பதறி நின்றார்கள். கிட்டத்தட்ட அரை மணி நேரத்துக்கும் மேலாக இந்த இழுபறி நீடித்து பரபரப்பைக் கூட்டியது. கூடி இருந்தவர்கள் பைக்கை வாங்கித் தருவதாக உறுதி அளித்த பிறகே, மோகன் கீழே இறங்கி வந்து மயங்கி விழுந்தார்.

போலீஸ் தரப்பில் விசாரித்தோம். "மஞ்சகுடியில் சீட்டாடும் கும்பலின் தொல்லை அதிகமாகிவிட்டது என்று அந்தக் கிராமத்திலிருந்து பொதுமக்கள் சார்பாகப் புகார் வந்தது. அந்தக் கும்பல் விளையாடும் இடத்துக்குச் சென்று அவர்களைப் பிடிக்கத் துரத்தினோம். அதில், மோகனைத் தவிர, மற்றவர்கள் தப்பிவிட்டார்கள். மோகனிடம் யார் யார் விளையாடினார்கள் என்ற பெயர் பட்டியலை வாங்கினோம். அவர்களையெல்லாம் ஸ்டேஷனுக்கு கூட்டிவரச் சொல்லி மோகனிடம் கூறினோம். அவனது பைக்கை நாங்கள் பிடித்து வைத்திருப்பது உண்மைதான். ஆனால், உண்மைகளை மறைத்துவிட்டு தேவையில்லாத பழியை எங்கள்மீது சுமத்துவதோடு தற்கொலை மிரட்டலும் செய்கிறார். அவன்மீதும் அவரின் நண்பர்கள் மீதும் சீட்டாடி பொதுமக்களுக்கு இடையூறு தந்ததாக வழக்கு பதிவு செய்துவிட்டோம்" என்றார்கள்.

அடுத்த கட்டுரைக்கு