மோடி சிரிப்பு...கொய்யாக்காய் சேர்மானம்... விஷால் வீர வசனம்..! எடப்பாடி பழனிசாமியின் கலகல அறிக்கைகள்

`அம்பாள் தேநீர் கடைக்குச் சென்று தேநீர் அருந்தினார். தேநீர் அருந்திய பிறகு, அதற்கான தொகையை மாண்புமிகு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் கடை உரிமையாளரிடம் வழங்கினார்' என்றெல்லாம் அறிக்கை வெளியிட்டு காமெடிக்குத்தம் செய்து கொண்டிருக்கிறது எடப்பாடி & கோ. அடுத்து எப்படியும் `மதுரைக்குச் சென்றார், மயிலாடுதுறைக்குச் சென்றார்' என புதுப்புது அறிக்கைகள் நிச்சயமாக வரும். அதைத் தாங்கிக்கொள்ளும் சக்தியை தமிழனுக்கு முன்கூட்டியே கொடுக்கவே இந்த வார்ம் அப் அறிக்கைகள்... மனசை தேத்திக்கோங்க மக்கா!

எடப்பாடி பழனிசாமி

`மதுரை மாவட்டத்தில் உள்ள மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்துக்கு, அதாவது பாரத ரத்னா, பொன்மனச் செம்மல், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் திருப்பெயரைக்கொண்ட பேருந்து நிலையத்துக்கு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் சென்றார். சென்றமுறை இந்தப் பேருந்து நிலையத்துக்கு வந்திருந்தபோது தனியார் பஸ் ஏஜென்ட்கள் சிலர் `சார் மெட்ராஸா... கவர்மென்ட் ரேட்தான் சார்...' எனக் கேட்க, நம் முதலமைச்சரும் `சரி' என்றவாறு தலையாட்டிவிட, அவரை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினைப்போல் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்றனர். அதனால், இந்த முறை அவர்கள் `சென்னையா' எனக் கேட்டபோது `சென்னை இல்லை சேலம்' என சமயோசிதமாகச் சொல்லித் தப்பித்தார். முதலமைச்சர் இந்த வீரதீர சாகசத்தைச் செய்யும்போது மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் கொய்யாக்காய் விற்கும் பாட்டி ஒருவரும் உடன் இருந்தனர். இறுதியாக, அந்தப் பாட்டியிடம் கொய்யாக்கா வியாபாரம் பற்றியும், மிளகாய்ப்பொடி சேர்மானம் பற்றியும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கேட்டறிந்தார்.'

`சென்னை மாவட்டத்தில் உள்ள பீச் ஸ்டேஷனுக்கு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் சென்றார். ரயிலைவிட்டு இறங்கி அரை மணி நேரம் சுற்றிமுற்றிப் பார்த்த அவர், `பீச் ஸ்டேஷன்னு சொன்னாங்க, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பீச்சே இல்லையே' என ஆதங்கமானார். உடனே, தனது பாக்கெட்டில் இருந்த பேனாவை எடுத்து அதன் மூடியைக் கழற்றி பின்னால் செருகி, முத்துமுத்தான கையெழுத்தால் முக்கியமான அறிவிப்பு ஒன்றை எழுதினார். அதில் `பீச் ஸ்டேஷனுக்கு வந்து பீச்சைப் பார்க்க முடியாமல் மக்கள் ஏமாறுவதைத் தடுக்க, 3,600 கோடி ரூபாய் செலவில் செயற்கை பீச் ஒன்றையும், அதில் தங்கத்தாரகை, இதயதெய்வம், புரட்சித்தலைவி, கழகத்தின் நிரந்தரப் பொதுச்செயலாளர் மாண்புமிகு அம்மா அவர்களின் சமாதியின் மாதிரி ஒன்றையும் அமைக்கத் திட்டமிடவிருக்கிறோம்' என முத்து முத்தான எழுத்துகளால் எழுதியிருந்தது. அதை, 2000 ரூபாய் செலவில் இருபது ஏ4 கலர் ஜெராக்ஸ் போட்டு ரயில் நிலையத்தில் இருந்த தூண்களில் அவராகவே சோற்றுப்பருக்கைகள் கொண்டு ஒட்டினார். இந்த வரலாற்று நிகழ்வின்போது மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்கள் உடன் இருந்தார். `செயற்கை பீச்சில் நீர் ஆவியாகாமல் தடுப்பது என் பொறுப்பு' என வீரமுழக்கமிட்டார் செல்லூர் என்னும் ராஜூ என்னும் தமிழ் மக்களின் செல்ல ராஜூ.'

`திருச்சி மாவட்டத்தில் உள்ள மலைக்கோட்டைக்கு மேல் இருக்கும் உச்சி பிள்ளையார் கோயிலுக்குச் செல்ல ஆசைப்பட்டார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள். ``தம்பிக்கோட்டை, தாமிரக்கோட்டை, மயிலங்கோட்டை, மண்டலங்கோட்டை, மலைக்கோட்டை, உள்ளிக்கோட்டை, உச்சங்கோட்டை, பறவைக்கோட்டை, பட்டுக்கோட்டைன்னு எல்லா கோட்டையும் பார்த்திருக்கேன்டா. இந்த மலைக்கோட்டையையும் பார்த்திடுறேன்டா" என விஷால் வீரவசனம் பேசிவிட்டு டிரான்ஸ்ஃபார்மர் வொயரில் சிகரெட் பற்றவைக்கும் காட்சியை நேற்று முதலமைச்சர் பார்த்தார். அதனால், நாமும் மலைக்கோட்டைக்குச் சென்று புகையிலை பற்றிய விழிப்புஉணர்வை விஷால் போன்றோருக்குத் தருவோம் என ரத்தத்தின் ரத்தங்களை அழைத்தார்.

இவரது அழைப்பின்பேரில் அலைகடலென ஐந்து பேர் கிளம்பி வந்திருந்தனர். அவர்களுக்கு கரும்புச் சாறு வாங்கிக் கொடுத்து விருந்தோம்பல் செய்தார். கரும்புச் சாறு அருந்திய பிறகு அதற்கான தொகையை மாண்புமிகு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் கடை உரிமையாளரிடம் வழங்கினார். பிறகு, இரண்டு படிகள் ஏறிப் பார்த்தவர் `முடியலைடா சாமி!' என `மோடி' சிரிப்புச் சிரித்துக்கொண்டே வண்டி ஏறி கிளம்பிவிட்டார். இந்த அற்புதமான தருணத்தில் மாண்புமிகு சமூகநலத் துறை அமைச்சர் டாக்டர் V.சரோஜா உடனிருந்தார்.'

`கோவை மாவட்டத்தில் உள்ள ப்ரூக்ஃபீல்டு மாலுக்கு `பிளாக் பாந்தர்' திரைப்படத்தைக் காண மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் வந்திருந்தார். படம் பார்க்க ஆன்லைன் புக்கிங் செய்திருந்தார். இடைவேளையில் உண்ண பாப்கார்ன், குளிர்ந்த காபி போன்றவற்றையும் டோக்கன் பயன்படுத்தி சலுகை விலையில் ஆர்டர் செய்திருந்தார். நான்கு மணி காட்சிக்கு, மூன்று மணிக்கே மாலுக்குள் நுழைந்த மாண்புமிகு முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள், மாலை சில நிமிடம் சுற்றிப் பார்த்தார். எல்லா கடைகளுக்கும் சென்று, கடை உரிமையாளர்களிடம் இந்த மாலில் வியாபாரம் எவ்வாறு நடைபெறுகிறது எனக் கேட்டறிந்தார். அப்படியும் காட்சிக்கு இருபது நிமிடம் மிச்சமிருந்ததால் எஸ்கலேட்டரில் மேலும் கீழும் ஏறி இறங்கி நேரத்தை அருமையாகக் கடத்தினார். இந்த நிகழ்வின்போது மாண்புமிகு மீன்வளத் துறை அமைச்சர் திரு.டி.ஜெயக்குமார் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர். அவர்கள் யாருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் டிக்கெட் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.'

Do you like the story?

Please Appreciate the Author by clapping!