வெளியிடப்பட்ட நேரம்: 20:09 (28/03/2018)

கடைசி தொடர்பு:20:09 (28/03/2018)

நீரவ் மோடி உறவினரின் பெண்ணை மணக்க இருக்கும் முகேஷ் அம்பானி மகன்!

மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரி மகளான ஸ்லோகா மேத்தாவைக் காதலித்துக் கரம்பிடித்திருக்கிறார் முகேஷ் அம்பானியின் மூத்தமகன் ஆகாஷ். கடந்த வார இறுதியில், கோவா கடற்கரையில் ஸ்லோகா குடும்பத்தினரும் முகேஷ் அம்பானி குடும்பத்தினரும் சந்தித்துப் பேசி, திருமணத்தை இந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடத்த முடிவுசெய்துள்ளனர். 

அம்பானி

ஸ்லோகாவின் தந்தை ரூஸ்செல் மேத்தா `ரோஷி ப்ளூ டைமண்ட்ஸ்' என்ற பெயரில் வைர ஆபரண நிறுவனத்தை நடத்திவருகிறார். இந்த நிறுவனம், வைரத்தை மெருகூட்டி `ஓரா' என்ற பெயரில் ஆபரண நகைகளை வடிவமைத்து விற்பனை செய்துவருகிறது. ரூஸ்செல் மேத்தா, இந்தியா முழுவதும் 26 நகரங்களில் 36 வைர ஆபரண ஷோரூம்களையும், இஸ்ரேல், பெல்ஜியம், அமெரிக்கா, ஜப்பான், ஹாங்காங், சீனா, அரபு ஏமிரேட்ஸ் என 12-க்கும் மேற்பட்ட நாடுகளிலும் ஆபரண விற்பனையகங்களை அமைத்திருக்கிறார். இவருக்கு மூன்று மகள்கள். கடைசிப் பெண்தான் ஸ்லோகா. மேத்தாவின் மனைவி மேனா மேத்தா, நீரவ் மோடியின் உறவினர்.

ஆகாஷ், ஸ்லோகா மேத்தா இருவரும் மும்பையில் உள்ள திருபாய் அம்பானி சர்வதேசப் பள்ளியில் ஒன்றாகப் படித்துள்ளனர். பள்ளியில் படிக்கும்போதே  இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்திருக்கின்றனர்.  இவர்களைப் போலவே, மேத்தாவின் குடும்பமும் முகேஷ் குடும்பமும் நட்பு வட்டத்திலேயே இருந்திருக்கிறது.  

அம்பானி

ஆகாஷும் ஸ்லோகாவும் 2009-ம் ஆண்டில் பள்ளிப் படிப்பை முடித்ததும் கல்லூரிப் படிப்புக்காக வெளிநாடு சென்றனர். ஆகாஷ் அமெரிக்காவில் பொருளியல் பிரிவில் பட்டப்படிப்பையும் முதுநிலைப் பட்டப்படிப்பையும் படித்திருக்கிறார். ஸ்லோகா, பிரிட்டனில் உள்ள பிரிஸ்டன் பல்கலைக்கழகத்தில் மானுடவியல் துறையில் பட்டப்படிப்பையும், லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸில் முதுநிலைப் பட்டப்படிப்பையும் முடித்திருக்கிறார்.  

இருவரும் வெளிநாட்டுப் படிப்பை முடித்தவுடன் 2014-ம் ஆண்டு மும்பைக்குத் திரும்பியுள்ளனர். ஆகாஷ்,  ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவராக பதவி ஏற்றிருக்கிறார். இவரைப்போலவே, ஸ்லோகாவும் `ரோஷி ப்ளூ ஃபவுண்டேஷன்' நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவராகப் பதவியேற்றிருக்கிறார். மேலும், கனேக்ட்பார் என்ற நிறுவனத்தை நண்பர்களுடன் தொடங்கி, தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு உதவி செய்து வருகிறார். 

ஸ்லோகா மீதுள்ள காதலை பெற்றோரிடம் சொல்லி, முதலில் சம்மதம் பெற்றிருக்கிறார் ஆகாஷ். இந்தச் சம்மதத்தை, ``தன்னுடைய பிள்ளைகள் யாரை வேண்டுமானாலும் வாழ்க்கைத்துணையாக ஏற்றுக்கொள்ளலாம். அவர்கள் இருவரையும் நானும் என் கணவரும்  மனதார வாழ்த்தக் காத்திருக்கிறோம்'' என்று பொதுவிழா ஒன்றில் சூசகமாக சொல்லியிருந்தார் நீதா அம்பானி.

அம்பானி

அவர் கருத்து தெரிவித்து ஒரு வாரம்கூட கடக்காத நிலையில், கோவா கடற்கரையில் இரண்டு குடும்பத்தினரும் சந்தித்தனர். ஆகாஷ் - ஸ்லோகா மேத்தா திருமண நிச்சயதார்த்த விழா ஜூன் மாதத்திலும், திருமணம் டிசம்பர் மாதம் 8-ம் தேதி ஆரம்பித்து 12 தேதி வரை கோலாகலமாக நடத்தத் திட்டமிட்டுள்ளது அம்பானி குடும்பம். 

மூத்தமகனின் திருமணம் குறித்துப் பேசிய நீதா, ``ஸ்லோகா பள்ளிக் குழந்தையாக இருக்கும்போதே தெரியும். அவள் எங்கள் வீட்டுக்கு மருமகளாக வருவதை மனப்பூர்வமாக வரவேற்கிறேன்” என்று சொல்லியிருக்கிறார். நிச்சயதார்த்தம் முடிந்துள்ள நிலையில், குடும்பத்துடன் மும்பையில் பிரசித்திபெற்ற விநாயகர் கோயிலுக்குச் சென்று வழிபட்டுள்ளனர். 


டிரெண்டிங் @ விகடன்