உலகிலேயே பயமில்லாதவர்கள் யார் தெரியுமா? - அடையாளம் காட்டும் கதை #FeelGoodStory

உன்னை அறிந்தால்

`சின்னச் சின்ன விஷயங்களில்கூட நம்பிக்கையோடிருங்கள். ஏனென்றால், அவற்றில்தான் உங்களின் பலம் உறைந்துகிடக்கிறது’ - ஒரு மாபெரும் விஷயத்தை மிக எளிமையாகச் சொல்லியிருக்கிறார் அன்னை தெரஸா. ஒருவர் மீது முழு நம்பிக்கை வைப்பதுகூட ஒருவகையில் நமக்கு ஆற்றலைத் தரும் என்பது உண்மையே! இதைத்தான் `நம்பினார் கெடுவதில்லை’ என்கிறது ஒரு மூதுரை. நம்பிக்கையின் சக்தி தெரிந்துவிட்டால், நாம் எதற்கும் கலங்க மாட்டோம். பிரச்னைகள் ஏற்பட்டால், ஏதோ ஓர் அதிசயம் நடக்கும், நம்மை தேவதைகள் வந்து காப்பாற்றும் போன்ற எண்ணமெல்லாம் தோன்றாது. சரி... ஒருவர் மேல் நமக்கு நம்பிக்கை எப்படி வரும்? `இவர்தான் நமக்கு எல்லாம்...’, `இவர் நம்மோடிருக்கும்போது எந்தக் கஷ்டமும் வராது’ என்கிற நினைப்பு மிக மிக நெருக்கமாக உணர்கிற ஒருவருடனிருக்கும்போதுதான் ஏற்படும். அவர்களிலும் மிக முக்கியமானவர்கள் இருக்கிறார்கள். மனிதர்கள் ஒவ்வொருவரும் நம்பவேண்டிய உறவு அது. யார் அந்த உறவு என்பதை விளக்கும் கதை இது. 

லண்டனிலிருந்து பெர்மிங்ஹாம் (Birmingham) அப்படி ஒன்றும் அதிக தூரமில்லை. விமானத்தில் பயணம் செய்தால், நான்கு மணி நேரத்துக்குள் போய்விடலாம். லண்டன் ஏர்போர்ட்டுக்கு அந்த இளம் தொழிலதிபர் வந்து சேர்ந்தபோது விமானம் கிளம்புவதற்கான நேரம் நெருங்கியிருந்தது. போர்டிங் கேட்டை மூடுவதற்கு சில நிமிடங்களே இருந்தபோது அவன் உள்ளே நுழைந்திருந்தான். பரபரப்பாக இருந்தான். அன்றைய பயணமும் அதே பரபரப்போடுதான் இருக்கப் போகிறது என்பது அப்போது அவனுக்குத் தெரியாது. பெருமூச்சுவிட்டபடி, வியர்வை வழிய கவுன்ட்டரில் தன் டிக்கெட்டைக் காண்பித்தான். விமானத்தை நோக்கி விரைவாக நடந்தான். 

விமானம்

விமானத்தில் ஏறி, தன் இருக்கையில் அமர்ந்த பிறகுதான் அவனுக்கு நிம்மதியாக இருந்தது. மெதுவாக அக்கம் பக்கம் அமர்ந்திருந்தவர்களை நோட்டமிட்டான். அவனுக்குப் பக்கத்தில் ஒரு சிறுமி உட்கார்ந்திருந்தாள். அவளுக்கு அடுத்து ஜன்னலோரமாக நாற்பது வயது மதிக்கத்தக்க மனிதர் ஒருவர் அமர்ந்திருந்தார். முதலில் அந்த மனிதரோடுதான் சிறுமி வந்திருக்கிறாள் என்று அவன் நினைத்தான். அந்தச் சிறுமி தன் கையிலிருந்த சீட்டுக்கட்டுகளை கலைத்து விளையாடிக்கொண்டிருந்தாள். அந்த நடுத்தர வயதுள்ள மனிதர் சிறுமியின் பக்கம் திரும்பவே இல்லை. இவனின் மகளுக்கும் இந்தச் சிறுமியின் வயதுதான் இருக்கும். சற்று நேரம் கழித்துதான் அந்தச் சிறுமி தனியாக விமானத்தில் பயணம் செய்கிறாள் என்பது அவனுக்குப் புரிந்தது. அந்த நினைப்பே அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. 

விமானம் கிளம்பியது. இப்போது அவள் சீட்டுக்கட்டை ஓரமாக வைத்துவிட்டு, ஒரு நோட்டுப் புத்தகத்தில் எதையோ கிறுக்கிக்கொண்டிருந்தாள். சிறிது நேரத்துக்குப் பின்னர் அவன், அந்தச் சிறுமியிடம் பேச்சுக் கொடுத்தான். ``உன் வயசு என்ன கண்ணு?’’ 

``ஒன்பது.’’ 

``உனக்கு எது ரொம்பப் பிடிக்கும்?’’ 

``கார்ட்டூன் சேனல் பார்ப்பேன்... டிராயிங் வரையறதும் பிடிக்கும்.’’ இப்படி நீண்ட உரையாடலில் அவளுக்கு, பக்கத்து வீட்டிலிருக்கும் பொமரேனியன் நாய், வீட்டு வாசலிலிருக்கும் மரத்தில் குதித்து விளையாடும் அணில், அவளுடைய வகுப்பாசிரியை லாரா டீச்சர், அம்மா ஞாயிற்றுக்கிழமைகளில் வாங்கித்தரும் சாக்லேட் ஐஸ்க்ரீம் இவையெல்லாம் பிடிக்கும் என்பதைத் தெரிந்துகொண்டான். இத்தனைக்கும் அவன் கேட்ட கேள்விகளுக்கு ஒற்றைவரியில் அல்லது வெகு சுருக்கமாக பதில் சொல்லிக்கொண்டிருந்தாள் அவள்.

சிறுமி கதை

ஆனாலும், தனிமையில் அந்தச் சிறுமி விமானத்தில் பயணம் செய்வது அவனுக்குப் புதுமையாக இருந்தது. அவ்வப்போது ஓரக்கண்ணால் அவளைப் பார்த்தபடியிருந்தான். விமானம் வானில் பறந்து ஒரு மணி நேரமிருக்கும். பயங்கரமான ஒரு குலுக்கல்... பயணிகள் அதிர்ந்துபோனார்கள். அப்போது ஒலிபெருக்கியில் பைலட்டின் குரல் ஒலித்தது... ``பயணிகள் பயப்பட வேண்டாம். எல்லோரும் அவரவர் சீட் பெல்ட்டுகளை அணிந்துகொள்ளவும். மிக மோசமான வானிலை காரணமாக விமானம் இப்படி அசையவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது...’’ இதைக் கேட்டதும், பயணிகள் தங்கள் சீட் பெல்ட்டை அணிந்துகொண்டார்கள். அதற்குப் பிறகும் பலமுறை விமானம் குலுங்கியது; அப்படியும் இப்படியும் அசைந்தது. பயணிகள் எல்லோரும் மரண பயத்தோடு உறைந்துபோயிருந்தார்கள். அவர்களில் சிலர் அழ ஆரம்பித்திருந்தார்கள்; பலர் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்திருந்தார்கள். அந்த இளைஞனும் தன் இருக்கையை எவ்வளவு இறுக்கமாகப் பிடிக்க முடியுமோ அவ்வளவு இறுக்கமாகப் பிடித்திருந்தான். ஆனாலும், அவன் கைகள் நடுங்கிக்கொண்டிருந்தன. விமானம் குலுங்கி, ஆடும்போதெல்லாம் ``கடவுளே...’’ என்று முணுமுணுத்தான். 

ஒரு கணம் அவன் திரும்பிப் பார்த்தான். அவன் பக்கத்தில் அமர்ந்திருந்த சிறுமியின் முகத்தில் எந்தச் சலனமுமில்லை. துளிக்கூட பயமில்லை. அமைதியாக அமர்ந்திருந்தாள். ஏதோ ஒரு ரைம்ஸை அவள் அசைபோட்டுக் கொண்டிருக்கிறாள் என்றுகூட அவனுக்குத் தோன்றியது. அவள் எடுத்து வந்திருந்த நோட்டுப் புத்தகங்கள், சீட்டுக்கட்டுகள் அழகாக, அவளுக்குப் பக்கத்திலிருந்த பையில் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. 

சிறிது நேரம் கழித்து விமானம் குலுங்குவது நின்றது, விமானம் சீராகப் பறக்க ஆரம்பித்திருந்தது. சில நிமிடங்கள் கழித்து ஒலிபெருக்கியில் மறுபடியும் பைலட்டின் குரல் ஒலித்தது. அவர் விமானத்தில் ஏற்பட்ட கோளாறுக்காக மன்னிப்புக் கேட்டார். `இன்னும் சிறிது நேரத்தில் அருகிலிருக்கும் விமான நிலையத்தில் பத்திரமாகத் தரையிறங்கிவிடுவோம்’ என்கிற உறுதியையும் கொடுத்தார். 

பயணிகள் இயல்புநிலைக்குத் திரும்பினார்கள். சற்று நேரம் கழித்து அந்த இளைஞன், சிறுமியிடம் கேட்டான்... ``ஏய் குட்டிப் பொண்ணு... உன்னை மாதிரி தைரியமான ஒருத்தரை நான் என் வாழ்க்கையில சந்திச்சதே இல்லை. விமானம் குலுங்கினப்போ, பெரியவங்களான நாங்களே பயந்து நடுங்கிக்கிட்டிருந்தோம். உன்னால எப்படி அமைதியா, பயமில்லாம உக்கார்ந்திருக்க முடிஞ்சுது?’’ 

சிறுமி, இப்போது நேருக்கு நேராக அவனைப் பார்த்துச் சொன்னாள்... ``நான் ஏன் பயப்படணும்? என்னோட அப்பாதான் இந்த ஏரோப்ளேனோட பைலட். அவர், என்னை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போய்க்கிட்டிருக்கார்!’’ 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!