பூமியில் விழப்போகும் 8.5 டன் சீன விண்வெளி நிலையம்... என்ன பாதிப்புகளை ஏற்படுத்தும்? #Tiangong1 | What will happen while Chinese space station crash?

வெளியிடப்பட்ட நேரம்: 17:47 (29/03/2018)

கடைசி தொடர்பு:17:47 (29/03/2018)

பூமியில் விழப்போகும் 8.5 டன் சீன விண்வெளி நிலையம்... என்ன பாதிப்புகளை ஏற்படுத்தும்? #Tiangong1

மீண்டுமொருமுறை விண்வெளியிலிருந்து பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கிறது ஒரு பொருள். விண்வெளியிலிருந்து அவ்வப்போது குப்பைகள் வந்து பூமியில் விழுவது பெரிய விஷயமல்ல; ஆனால், இந்தமுறை விழப்போவது ஒரு விண்வெளி நிலையம். ஏன் விழப்போகிறது? 

ESA

கடந்த சில மாதங்களுக்கு முன்பே கீழே விழும் எனக் கணிக்கப்பட்ட சீனாவின் தியான்குங்-1 விண்வெளி நிலையம்தான் விரைவில் விழவிருக்கிறது. இது மார்ச் 30 முதல் ஏப்ரல் 2-ம் தேதிக்குள் பூமியில் வந்துவிழும் எனக் கணித்திருக்கிறது ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி. 

மூன்றாம் உலகப்போர் தண்ணீருக்காக நிகழும் என்று பலரும் கூறினாலும் அதற்கு முன்னரே ஒரு யுத்தம் விண்வெளியில் தொடங்கிவிட்டது. விண்வெளியின் ஆதிக்கம் செலுத்துவதன் மூலம் மற்ற நாடுகளை விட வல்லரசாக மாறிக்கொண்டிருக்கிறோம் என்பதைச் சொல்லாமல் சொல்கின்றன வளர்ந்த நாடுகளும் வளரும் நாடுகளும். பல்வேறுத் தேவைகளுக்காகப் பலவகையான செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்புகிறோம். அதுமட்டுமல்லாமல் விண்வெளியிலேயே இருந்து ஆராய்ச்சி பண்ண விண்வெளி நிலையங்களும் அமைக்கப்படுகின்றன. பல்வேறு நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி நிலையத்தையும் சில நாடுகள் தனியாகவும் விண்வெளி நிலையங்களை அமைத்து வருகின்றன. இவை அனைத்தும் விண்வெளியில் இயங்கினாலும் பூமியிலிருந்தே இவையனைத்தும் கட்டுப்படுத்தப்படுகின்றன. சில நேரங்களில் இவை கட்டுப்பாட்டை இழந்து விடுகின்றன. அவற்றை விண்வெளியில் அப்படியே விட்டுவிடுவார்கள். அவை விண்வெளிக்குப்பைகளாக விண்வெளியிலேயே சுற்றி வருகின்றன. இதுபோன்று ஏராளமான விண்வெளிக்குப்பைகள் விண்வெளி முழுக்கச் சுற்றிக்கொண்டிருக்கின்றன. 

ஆரம்பத்திலிருந்தே விண்வெளி ஆராய்ச்சியில் மற்ற வளர்ந்த நாடுகளுக்கு இணையாக ஆர்வம் காட்டி வந்த நாடு சீனா. தங்களுக்கென்ற தனி விண்வெளி நிலையத்தை அமைக்க முனைப்புடன் செயல்பட்ட அந்நாடு, செப்டம்பர் 26, 2011 ல் தியான்குங்-1 விண்வெளி நிலையத்தை நிறுவியது. தியான்குங்-1, 8.5 டன் எடையும் 40 அடி நீளமும் கொண்டது. தியான்குங் என்பதற்குச் 'சொர்க்கத்தின் அரண்மனை' என்று பொருள். 2012, 2013-ம் ஆண்டுகளில் மூன்று விண்வெளி வீரர்கள் தியான்குங்-1 விண்வெளி நிலையத்திற்குச் சென்று ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளனர். அதற்குப் பின்பு மார்ச் 21, 2016-ல் தியான்குங்-1 விண்வெளி நிலையம் கட்டுப்பாட்டை இழந்தது. எவ்வளவு முயற்சி செய்தும் அதனைத் தொடர்புகொள்ள முடியவில்லை என அதிகாரபூர்வமாக அறிவித்தது சீனா. தொடர்பை இழந்த காரணத்தை இன்றுவரை தெரியவில்லை. அதன்பின் தியான்குங்-1 விண்வெளி நிலையம் தனது சுற்றுவட்ட பாதையிலிருந்து கீழே இறங்கத் தொடங்கியது.

தியான்குங்-1 விண்வெளி நிலையம்

கைவிடப்பட்ட தியான்குங்-1 விண்வெளி நிலையம் சராசரியாக ஒவ்வொரு 88 நிமிடங்களுக்கும் 134 மைல்கள் தன்னுடைய உயரத்திலிருந்து கீழிறங்கி வர ஆரம்பித்தது. 2016-ம் ஆண்டு மார்ச்சில் 346 கிலோமீட்டர் உயரத்தில் இருந்த இதன் உயரம் மிகவும் குறைந்துவிட்டது. மார்ச் 30-ம் தேதியிலிருந்து ஏப்ரல் 2 ம் தேதிக்குள் பூமியின் வளிமண்டலத்திற்கு நுழையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தியான்குங்-1 விண்வெளி நிலையத்தின் எடை 8.5 டன்னாக இருந்தாலும் புவியின் வளிமண்டலத்திற்குள் வேகத்துடன் நுழையும்போது உருவாகும் வெப்பத்தால் அதன் பெரும்பாலான பாகங்கள் எரிந்துவிடும் வாய்ப்புகளே அதிகம். சிறு சிறு பாகங்களே தரையில் விழுந்தாலும் பெரிதாக பாதிப்புகள் இருக்காது என விஞ்ஞானிகளால் நம்பப்படுகிறது. இதிலிருக்கும் Hydrazine என்ற எரிபொருளால் சுற்றுச்சூழலுக்கும் மனிதர்களுக்கும் தீங்கு ஏற்படலாம் எனவும் கூறப்படுகிறது. தியான்குங்-1-ன் இழப்பைச் சரிக்கட்டும் வகையில் 2022-க்குள் தியான்குங்-2 விண்வெளி நிலையத்தை அமைக்கவும் ஆரம்பித்துள்ளது. 

தியான்குங்-1

இதேபோன்று ரஷ்யாவின் சல்யூட் 7 என்ற விண்வெளி நிலையமும் நாசாவின் ஸ்கைலேப் விண்வெளி நிலையமும் இதற்கு முன்பு பூமியில் விழுந்து நொறுங்கியுள்ளன. 1979-ல் கீழே விழுந்த ஸ்கைலேப் விண்வெளி நிலையம் தியான்குங்கைவிட பத்து மடங்கு பெரியது. மேற்கு ஆஸ்திரேலியாவின் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அதன் சில பாகங்கள் விழுந்தன. 1997-ல் ஒக்லஹொமா மாகாணத்தில் கீழே விழுந்த டெல்டா 2 ராக்கெட்டின் சிறு பகுதி லோட்டி வில்லியம்ஸ் என்பவருக்குச் சிறிய காயங்களை ஏற்படுத்தியுள்ளது. விண்வெளிக் குப்பைகள் கீழே விழுந்து நொறுங்கியதில் காயம் ஏற்பட்ட ஒரே ஆள் அவர் மட்டுமே! இந்தமுறை இப்படி எதுவும் நடக்காது என நம்புவோம்.

 


டிரெண்டிங் @ விகடன்