வெளியிடப்பட்ட நேரம்: 19:58 (31/03/2018)

கடைசி தொடர்பு:20:45 (31/03/2018)

சர்ச்சை சிக்கலில் சாந்தா கோச்சர்!

சர்ச்சை சிக்கலில் சாந்தா கோச்சர்!

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் சி.இ.ஒ சாந்தா கோச்சருக்கு இது போதாத காலம் போல. பாவம், சர்ச்சை சிக்கலில் மாட்டித் தவிக்கிறார். ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, வீடியோகான் நிறுவனத்துக்கு அளித்த கடன் பற்றி இப்போது செபி கண்காணிக்கத் தொடங்கியிருக்கிறது. இது என்ன புது சர்ச்சை என்று கேட்கிறீர்களா? கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் தலைவர் சாந்தா கோச்சரின் கணவர் தீபக் கோச்சர். இவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது, 2008-ல் நியூ பவர் என்கிற நிறுவனத்தை ஆரம்பித்தார். வீடியோகான் நிறுவனத்தின் தலைவரும் வேணுகோபால் தூத் உடன் சேர்ந்து இந்த நிறுவனத்தை ஆரம்பித்தார் தீபக் கோச்சர். இந்த நிறுவனத்தை ஆரம்பித்த ஒரு மாதத்திலேயே வேணுகோபால் அந்த நிறுவனத்திலிருந்து விலகிவிட்டார். அப்படி விலகும்போது அவருக்கு சொந்தமான 24,999 பங்குகளை (இதன் மதிப்பு ரூ.2.5 லட்சம்) தீபக் கோச்சருக்கு மாற்றினார். இது நடந்தது 2009-ல்.

2010-ல் நியூ பவர் நிறுவனம் சுப்ரீம் எனர்ஜி பிரைவேட் லிமிட்டெட் என்கிற நிறுவனத்திடமிருந்து 64 கோடி ரூபாய் கடன் வாங்கியது. வீடியோகான் நிறுவனத்தின் துணை நிறுவனம்தான் இந்த சுப்ரீம் எனர்ஜி பிரைவேட் லிமிட்டெட். இந்தக் கடனுக்குப் பதிலாக நியூபவர் நிறுவனத்தின் 94.9 சதவிகிதப் பங்குகளை வேணுகோபாலுக்கு அளித்தார் தீபக் கோச்சர்.

இதன்பிறகு, தன்னிடமிருந்த பங்குகளை வேணுகோபால் தூது, மகேஷ் குமார் புங்க்லியா என்பவருக்கு மாற்றினார். 2013-ம் ஆண்டில் மகேஷ் குமார் புங்க்லியா தன்னிடமிருந்து பங்குகளை தீபக் கோச்சர் நடத்தும் பின்னக்கிள் எனர்ஜி என்கிற டிரஸ்ட்டுக்கு மாற்றம்செய்தார். அதுவும் வெறும் ரூ.9 லட்சம் என்கிற மதிப்பில். அதாவது, ரூ.64 கோடியைக் கடனாக வாங்கி, அதற்குப் பதிலாக பங்குகளைத் தந்த தீபக் கோச்சர், அந்தப் பங்குகளை வெறும் ரூ.9 லட்சத்தில் திரும்ப வாங்கியது உலகில் எங்கும் நடக்காத அதிசயம்.  
தலைசுற்றுகிற மாதிரி இருக்கும் இந்த பணப் பரிவர்த்தனைகளில் எல்லாம் எந்தப் பிரச்னையும் இல்லை. பிரச்னை என்னவென்றால், இடைப்பட்ட காலத்தில் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, வீடியோகான் நிறுவனத்துக்கு ரூ.3,250 கோடி கடன் அளித்ததுதான். வீடியோகான் நிறுவனம் கிட்டத்தட்ட இருபது வங்கிகளில் ரூ.40,000 கோடி கடன் வாங்கியது. இந்தக் கடன் எஸ்.பி.ஐ வங்கியின் தலைமையில் அளிக்கப்பட்டது. வீடியோகான் நிறுவனம் இந்தக் கடன் வாங்கியபின், அதன் பிசினஸ் நன்றாக செயல்படாமல் போக, அந்தக் கடன் வாராக் கடனாக மாறியது. திவால் நிலைக்கு வந்திருக்கும் வீடியோகான் நிறுவனம், இந்தக் கடனை திரும்பக் கட்ட முடியாது என்று சொல்லிவிட்டது. 

ஐ.சி.ஐ.சி.ஐ நிறுவனம் வீடியோகானுக்கு அளித்த ரூ.3,250 கோடியில் வெறும் ரூ.2,810 கோடிதான் வாராக் கடன் என்றாலும், இந்தப் பிரச்னையில் பலவிதமான கேள்விகள் எழுப்பப்படுகிறது. உதாரணமாக, தீபக் கோச்சரும், வேணுகோபால் தூத்-ம் ஒரு நிறுவனத்தை ஆரம்பித்தபின், ஒரே மாதத்தில் அந்த நிறுவனத்திலிருந்து வேணுகோபால் விலகிக்கொள்ள என்ன காரணம், தீபக் கோச்சர் நடத்திய நிறுவனத்துக்கு வேணுகோபால் ரூ.64 கோடி கடனாகத் தந்து பின் தீபக் நிறுவனத்தில் 94.99 சதவிகித பங்குகளைப் பெற்று, அதே பங்குகளைப் பல பரிவர்த்தனைகளுக்குப் பின், தீபக்கின் டிரஸ்ட்டுக்கு 9 லட்சத்துக்கு மாற்றியது  ஏன், வேணுகோபாலின் வீடியோகான் நிறுவனத்துக்குக் கடன் தரப்பட்டபோது, தன் கணவருக்கும் அந்த நிறுவனத்துக்கும் தொடர்பு இருந்தது என்பதை சாந்தா கோச்சர் வங்கி இயக்குநர்கள் குழுவிடம் சொன்னாரா, அது தெரிந்துதான் வங்கி அவருக்குக் கடன் தந்ததா, ஒருவேளை அவர் அதைச் சொல்லாமல் விட்டிருந்தால், ஏன் சொல்லவில்லை எனப் பல கேள்விகள் எழுகின்றன.

வீடியோகான் நிறுவனத்துக்குக் கடன் அளித்ததற்கும் அதன் சி.இ.ஒ.வான சாந்தா கோச்சருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை; இதில் தொழில் முரண்பாடு (Conflict of interest) எதுவும் இல்லை என அந்த ஐ.சி.ஐ.சி.ஐ நிறுவனத்தின் தலைவர் எம்.கே சர்மா தெளிவாகச் சொல்லிவிட்டார். 

என்றாலும், இந்த சர்ச்சை பற்றி இப்போது செபி விசாரிக்கத் தொடங்கியிருக்கிறது. மேலும், இந்த விஷயத்தில் தீபக் கோச்சர் ஏதாவது தவறு செய்திருப்பாரோ என்கிற அடிப்படையில் முதல்கட்ட விசாரணை செய்வதற்காக சி.பி.ஐ முடிவு செய்துள்ளது.
இந்த சர்ச்சை இனி எப்படிச் செல்லுமோ, இனியாவது இந்தச் சிக்கலிலிருந்து ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் சி.இ.ஒ சாந்தா கோச்சர் விடுபட்டு, நிம்மதி அடைவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!