வெளியிடப்பட்ட நேரம்: 15:10 (01/04/2018)

கடைசி தொடர்பு:19:18 (03/04/2018)

2 ஆண்டுகள் முன்பு கடலுக்கடியில் தொலைந்த கேமரா... சார்ஜுடன் கிடைத்த அதிசயம்!

2 ஆண்டுகள் முன்பு கடலுக்கடியில் தொலைந்த கேமரா... சார்ஜுடன் கிடைத்த அதிசயம்!

'கடலில் மிதந்துவந்த கண்ணாடி பாட்டிலில்  இருந்து பல வருடங்களுக்கு முன்னால் எழுதப்பட்ட காகிதம் கண்டுபிடிக்கப்பட்டது' என்பது போன்ற செய்திகளைப் பலர் கேட்டிருக்கக்கூடும், திரைப்படங்களில் பார்த்திருக்கக்கூடும். அடைக்கப்பட்ட அந்த பாட்டிலின் உள்ளேயிருக்கும் அந்தக் காகிதத்தில் யாரோ ஒருவர் எழுதிய ஒரு செய்தி பதிவு செய்யப்பட்டிருக்கும். கடலில் பயணம் செய்பவர்கள் தங்களிடம் இருக்கும் காலியான பாட்டில்களில் இது போல செய்தியை வைத்து கடலில் எறிந்து விடுவார்கள்,சில சமயங்களில் கடலுக்கு வெளியே இருப்பவர்களும் இது போல ஒன்றைத் தயார் செய்து கடலில் எறிவதுண்டு. அந்த பாட்டில் என்றோ ஒருநாள் யாரோ ஒருவரின் கைகளுக்கு செல்லலாம் என்பதுதான் அவர்கள் எதிர்பார்க்கும் விஷயம். அந்தக் காகிதத்தில் பெரும்பாலும் எழுதியவரின் பெயர், அதைக் கண்டெடுப்பவருக்கு அவர் கூறும் செய்தி போன்ற தகவல்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும். அப்படிப் பல வருடங்களுக்கு முன்பு கடலில் எறியப்பட்ட பாட்டில்கள் எந்த வித சேதாரமும் இல்லாமல் கண்டெடுக்கப்பட்ட நிகழ்வுகள் உலகம் முழுவதிலும் பல இடங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. கிட்டத்தட்ட அதைப்போலவே தைவானில் நடைபெற்றிருக்கும் ஒரு சம்பவம் இன்னும் சுவாரஸ்யமானது.

சுத்தம் செய்யும் மாணவர்கள்

தைவானின் வடகிழக்கு பகுதியில் அமைந்திருக்கிறது யிலன் மாகாணம் (Yilan County) தைவான் ஒரு தீவு என்பதால் அதன் நிலப்பரப்பைச் சுற்றிலும் கடற்கரைகள் அமைந்திருக்கின்றன.அப்படி யிலன் மாகாணத்தில் இருக்கும் கடற்கரையை அந்த ஊரில் இருக்கும் ஒரு பள்ளியின் ஆசிரியரான பார்க் லீ-யும் அவரது மாணவர்களும் சுத்தம் செய்வது வழக்கம். அப்படி வழக்கம்போல கடந்த  27­-ம் தேதி பார்க் லீயும் அவரது மாணவர்களும் கடற்கரையின் ஓரத்தில் ஒதுங்கிக்கிடந்த குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். அப்பொழுதுதான் அந்தக் குழுவில் இருத்த 11 வயது மாணவன் ஒருவன் கரையில் கிடந்த அந்த வினோத வடிவம் கொண்ட பொருளைப் பார்த்திருக்கிறான்.

கேமரா

அதை அவரது ஆசிரியரான  பார்க் லீயிடம் தெரிவிக்கவே அது என்னவென்று பரிசோதித்துப் பார்ப்பதற்கு அவர் முடிவு செய்திருக்கிறார். பார்ப்பதற்குக் கடலில் இருக்கும் பாறை போலத் தோற்றமளித்த அது சற்று வித்தியாசமாக இருந்திருக்கிறது, கடைசியில் அவர்கள் நன்றாக ஆராய்ந்த போதுதான் அது ஒரு கேமரா என்று கண்டறிந்திருக்கிறார்கள்.

வட்டார் ஃப்ரூப் கவர்

ஒரு Canon PowerShot G12 கேமரா தண்ணீர்ப் புகாமல் இருக்கவேண்டும் என்பதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு கவருக்குள் இருந்திருக்கிறது. எனவேதான் வெளிப்புறமாக கேமரா பார்ப்பதற்கு வித்தியாசமாகக் காட்சியளித்திருக்கிறது, கடலில் கிடந்ததால் பாசிகள் படிந்து பாறைபோல தோற்றமளித்திருக்கிறது. சரி கேமரா வேலை செய்யுமா என பார்க்கலாம்னு அதை ஆன் செய்தவர்களுக்குஆச்சர்யம் தாங்க முடியவில்லை. கேமரா இயங்கியிருக்கிறது முக்கியமாக அதில் இருந்த பேட்டரியில் சார்ஜ் இருந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து அதில் ஏதாவது புகைப்படங்கள் இருக்கிறதா என்பதை ஆராய்ந்திருக்கிறார்கள் அதில் இருந்த மெமரி கார்டில் இருந்த புகைப்படங்கள் அழியாமல் இருந்திருக்கின்றன. அதில் எடுக்கப்பட்ட கடைசி புகைப்படம்  2015 வருடம் செப்டம்பர் மாதம் 7-ம் தேதி எடுக்கப்பட்டிருந்தது அதை வைத்துப்பார்க்கும் போது கேமரா தொலைந்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகியிருக்கும் என பார்க் லீ முடிவு செய்கிறார். இரண்டு வருடங்கள் ஆழ்கடலின் உள்ளேயே இருந்தாலும் கேமராவில் சிறு கீறல்கள் கூட விழவில்லை, ஒரு சொட்டுதண்ணீர் கூட கேமராவின் உள்ளே இல்லை.

Canon PowerShot G12


உதவி செய்த ஃபேஸ்புக் பதிவு

செரினா சுபாகிரா

கேமரா கையில் இருக்கிறது இதை உரியவரிடம் சென்று சேர்த்தால் என்ன என்று  பார்க் லீக்கு ஒரு யோசனை தோன்றியிருக்கிறது. தாமதிக்காமல் உடனே செயலில் இறங்கியவர் கேமராவில் இருந்த புகைப்படங்களை முதலில்ஆராய்ந்து பார்த்திருக்கிறார். அதில் இருந்த புகைப்படங்கள் பெரும்பாலானவை ஜப்பான் நாட்டின் கடற்கரையில் எடுக்கப்பட்டது போலத்  தோற்றமளிக்கவும் கேமராவின் உரிமையாளர் ஜப்பானியராகவோ அல்லது சீனராகவோ இருப்பதற்கு வாய்ப்பிருக்கலாம் என்ற முடிவுக்கு வருகிறார். உடனே தனது ஃபேஸ்புக்கில் ஜப்பான் மொழியிலும், சீனமொழியிலும் கேமராவைப் பற்றிய தகவல்கள், அதிலிருந்த சில புகைப்படங்கள் ஆகியனவற்றைப் பதிவிடுகிறார். உரிமையாளர் யாராவது இருந்தால் அவரைத் தொடர்பு கொள்ளவும் அவரது தகவல்களை பதிவு செய்கிறார். ஒரே நாளில் பத்தாயிரம் தடவைக்கு மேலே அந்தப் பதிவு பகிரப்படுகிறது. ஒரு வழியாக அந்தப் பதிவு கேமராவிற்கு உரிமையாளரான செரினா சுபாகிரா-வையும் சென்றடைகிறது (Serina Tsubakihara). உடனே அவர் பார்க் லீ-யை மின்னஞ்சல் மூலமாகத் தொடர்பு கொண்டு அந்த கேமராவிற்கு தான்தான் உரிமையாளர் என்ற விவரத்தைத் தெரிவிக்கிறார். பார்க் லீ நினைத்தது போலவேசெரினா சுபாகிரா ஒரு ஜப்பானிய பெண். இரண்டு வருடங்களுக்கு முன்னால் ஜப்பானில் இருக்கும் இஷிகாகி என்ற தீவுப்பகுதியில் ஆழ்கடல் டைவிங் செய்யும் பொழுது கேமராவை தவற விட்டிருக்கிறார். இஷிகாகி தீவு தற்போழுது கேமரா கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் யிலன் மாகாணத்தில் இருந்து 250 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.  இரண்டுவருடங்களுக்கு முன்னால் தொலைந்த கேமரா திரும்ப கிடைத்ததில் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார் செரினா. கூடியவிரைவிலேயே தைவானுக்குச்  சென்று பார்க் லீ-யை சந்திக்கவிருக்கிறார்


டிரெண்டிங் @ விகடன்