வெளியிடப்பட்ட நேரம்: 17:57 (01/04/2018)

கடைசி தொடர்பு:17:57 (01/04/2018)

மனித இனத்தையே இல்லாமல் செய்ய வல்ல தேனீக்களின் அழிவு..! #HoneyBee

மனித இனத்தையே இல்லாமல் செய்ய வல்ல தேனீக்களின் அழிவு..! #HoneyBee

தேனீ

எங்கு பார்த்தாலும் வாடி வறண்ட செடிகள், விரிசல் விழுந்து இப்பவோ அப்பவோ என்று மரங்கள் இழுத்துக் கொண்டிருக்கின்றன. புதியதாக எந்த மரங்களையுமே காணோம். ஆங்காங்கே ஒன்றிரண்டு செடிகளும் புற்களுமே செழிப்பாக வளர்கின்றன. உலகின் கடைசி விலங்கையும் அடித்துக் கொன்று தின்றுகொண்டிருந்தார்கள், உடலில் எலும்பைத் தவிர வேறெதுவும் இல்லாத ஒரு சிலர். அது தான் கடைசி விலங்கு, இனி சாப்பிட மாமிசம் கூட கிடைக்காது. மனித மாமிசத்தைத் தவிர. அதையும் சில பகுதிகளில் தொடங்கிவிட்டனர். சைவ உணவு உண்பது பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே உரித்தாகிவிட்டது. ஒரு கிலோ தக்காளியின் விலை ஒரு லட்சம் ரூபாய். உலகின் ஒவ்வொரு மனிதனும் வாரத்திற்கு ஒருவேளை சாப்பிடுவதற்கே உணவைத் தேடி ஓடிக்கொண்டிருக்கிறான். செயற்கை மகரந்தச் சேர்க்கை மூலம் வளர்க்கப்படும் தாவரங்கள் தாராளமாக அனைவருக்கும் வாரி வழங்கும் அளவிற்கு இல்லை. கொத்துக் கொத்தாக பஞ்சத்தால், பட்டினியால் மக்கள் மடிந்து கொண்டிருக்கிறார்கள்.

இது கற்பனையல்ல. நிஜத்தில் வரும் காலத்தில் நிகழக்கூடியவை. உலகின் கடைசித் தேனீ அழியும்போது நமது நிலை இதுதான். அளவில் மிகச்சிறிய தேனீக்கள் சூழலுக்கும், தாவரங்களின் பசுமைக்கும் இன்றியமையாதது. ஒரு விதையை விதைத்து அதற்குத் தேவையான உரங்களைப் போடுங்கள், தேவையான நீரைத் தாருங்கள். ஆனால் அவற்றைத் தேனீக்கள் அண்டாத வகையில் பாதுகாத்து வையுங்கள். அத்தாவரத்தின் வளார்ச்சி நன்றாகத் தான் இருக்கும். ஆனால் நமக்குத் தேவையான பூக்களோ, பழங்களோ மேலும் அவற்றை வளரச் செய்வதற்குத் தேவையான விதைகளோ எதையுமே அது தராது.

செடிகள் கருத்தரிப்பதற்கும், பல்கிப் பெருகுவதற்கும் மகரந்தச் சேர்க்கை நடைபெற வேண்டும். அது இரண்டு முறைகளில் நடைபெறும். சுய மகரந்தச் சேர்க்கையில் ஒரே செடியில் பிறக்கும் ஆண் பூக்கள் அதே செடியின் பெண் பூக்களுக்குத் தனது மகரந்தத் துகள்களை அனுப்பி கருத்தரிக்கச் செய்கிறது. இது உலகின் மொத்த தாவரங்களில் சிலவற்றிலேயே நடைபெறும். ஆனால், பெரும்பாலான செடிகள் அயல் மகரந்தச் சேக்கை மூலமே வம்சவிருத்தி அடைகின்றன. அதாவது, ஒரு செடியில் இருக்கும் ஆண் மலரின் மகரந்தத் துகள்களை வேறொரு செடியின் பெண் மலருக்குத் தந்து கருத்தரிக்கச் செய்வது. செடிகளால் நகர முடியாதல்லவா, அதனால் அவற்றுக்குப் பூச்சிகள் உதவுகின்றன. அவை ஆணின் வித்துக்களைச் சுமந்துசென்று பெண் மலரிடம் சேர்க்கிறது. இவ்வாறு செய்பவற்றைப் பூந்து சேர்ப்பிகள் (Pollinators) என்று அழைப்பார்கள். இந்தப் பணியில் பங்கெடுப்பதில் 90% பணியாளர்கள் தேனீக்கள் தான்.

தேனீக்கள் அழிந்துவிட்டால், இந்தப் பணி முழுவதும் நிறைவடையாமல் ஸ்தம்பித்துவிடும். உலகப் பொருளாதாரத்தில் பங்கெடுக்கும் சுமார் 250,000 தாவர வகைகள் கருத்தரிப்பதற்குத் தேனீக்களைச் சார்ந்து தான் இருக்கின்றன. மகரந்தச் சேர்க்கை நிகழாமல் இனப்பெருக்கம் நிகழுமா, உணவுப் பொருள்கள் தான் கிடைக்குமா?

பிறகு இந்த அயல் மகரந்தச் சேர்க்கை செய்யவேண்டியது மனிதர்களின் கடமையாகிவிடும். இந்தப் பணிச் சுமையைத் தாங்குவது எளிதான காரியமல்ல. அதனால் அதன்மூலம் கிடைக்கும் உணவுப்பொருள்களின் விலையும் தாறுமாறாக உயரும். 100இல் 99 பேர் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படுவார்கள். உணவுப் பஞ்சம் மனித இனமே அழியக்கூடிய நிலைக்கு ஏற்படும். உலகப் பொருளாதாரமே முடங்கிவிடும். உணவைத் தேடுவதே பிரதான வேலையாகிவிடும். சுய மகரந்தச் சேர்க்கையில் வளரும் தாவரங்களில் உணவைத் தேடிக்கொள்ளும் நிலைக்கு நமது உணவுப் பழக்கம் பழகுவதற்குள் உலகின் பாதி மக்கள் தொகையை இழந்துவிடுவோம். ஆடைப் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிக்கும் பருத்தி இல்லாமலே ஆடை உடுத்தும் நிலைக்குத் தள்ளப்படுவோம். 

இன்ஃபொஇகிராபிக்ஸ்

அட இதையெல்லாம் இப்ப எதுக்குப்பா சொல்லிகிட்டு இருக்க? தேனீக்களுக்கு இப்ப என்ன குறை வந்துடுச்சு?

கடந்த 20 வருடமாகச் சிற்றுயிர் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் வடக்கில் பஞ்சாபில் இருந்து தெற்கில் கேரளா வரையிலும், மேற்கில் மகாராஷ்டிராவில் இருந்து மேற்கில் திரிபுரா வரையிலும் அனைத்து மாநில விவசாயிகளும் அவர்களது பகுதிகளில் தேனீக்களின் வரத்து முன்பிருந்ததைவிட குறைந்துவிட்டதாகக் கூறியிருக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட தேனீ என்றில்லை, தேனீ இனத்தைச் சேர்ந்த எந்த வகையும் பெருமளவில் வருவதில்லை என்று அஞ்சுகிறார்கள். அரிசி, கோதுமை போன்றவற்றில் சுய மகரந்தச் சேர்க்கையே நடைபெற்றாலும் அவற்றை மட்டுமே உண்ணமுடியாது. காய் மற்றும் கனி வகைகளின் உற்பத்தி இவற்றின் வருகை பாதிப்பால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகும் என்று வருந்துகிறார்கள்.

தேனீக்களின் வருகை ஏன் குறைகிறது?

இரண்டாம் உலகப் போருக்குப் பின் உலகளவில் ஏற்பட்ட உணவுப் பற்றாக்குறையால் பெரும்பாலான நாடுகள் ரசாயன உரங்களின் மூலம் அதீத உற்பத்தியைச் சாத்தியமாக்கினார்கள். பின்னாளில், அவர்களது வியாபார வெறி அதை வைத்துப் பணத்தில் புரள நினைத்த வியாபாரிகளின் பேராசை அதை உலகம் முழுக்கப் பரவச் செய்தது. இன்று விவசாயம் என்றால் ரசாயன உரமின்றி சாத்தியமில்லை என்ற நிலைக்குத் தள்ளிவிட்டார்கள்.

நிலைமை இப்படியிருக்க, பெண் மலர்களைக் கருத்தரிக்கச் செய்வதற்கு மகரந்தத் துகள்களை ஆண் மலரில் சேகரிக்கும் தேனீக்கள் அவற்றோடு ரசாயனத்தையும் உட்கொள்கின்றன. தொடக்கத்தில் அவற்றின் உணர்கொம்பு திறனை இழப்பதால் மணங்களை நுகரும் திறனை இழந்து மலர்களைக் கண்டடைய முடியாமல் தவிக்கின்றன. பிறகு, அந்த ரசாயனம் அவற்றின் மத்திய நரம்பு மண்டலத்தைப் பாதிப்பதால் தசைகள் முடக்கப்பட்டு இறந்துவிடுகின்றன.

அவற்றின் மகரந்தச் சேர்க்கைத் தாவரங்களைச் சார்ந்து வாழும் தாவர உண்ணிகள் உணவின்றி அழியத்தொடங்குவதில் இருந்து உணவுப் பொருள்களின் உற்பத்தி பாதிப்பது, உலகளவில் பஞ்சம், புது மரங்கள் வளராமல் போவதாலும் இருக்கும் மரங்களும் அழிந்துபோவதாலும் நீர்த்தேக்கச் செயல்பாடுகள் நிகழாமல் நன்னீர் பற்றாக்குறை ஏற்படும். நீர் மற்றும் உணவுப் பற்றாக்குறையால் பட்டினிச் சாவுகள் அதிகரிக்கும்.

உலகில் உள்ள ஒவ்வொரு உயிரும் ஒன்றை ஒன்று சார்ந்து சங்கிலித் தொடரில் பின்னிப்பிணைந்து வாழும் வகையில் அமைத்திருக்கிறது இயற்கை. அதன் படைப்பில் அனைத்தும் செழித்து வாழ்வதற்கு அது வகுத்தளித்த பாதையில் இருந்து பிறழ்ந்து சென்றது மனித இனம். அந்த ஒரு இனத்தின் பிறழ்வு உலகின் இயக்கத்தையே ஆபத்திற்கு உள்ளாக்கிவிட்டது.


டிரெண்டிங் @ விகடன்