இன்றைய இளைய தலைமுறைக்கு ஒரு டிஜிட்டல் சவாலை கையில் கொடுத்து அவர்கள் திறமையை சோதிக்க இந்திய அரசால் தொடங்கப்பட்டது ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான். ஒவ்வொரு ஆண்டும் இந்தியா முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்கள் தங்களுக்கு ஆர்வமுள்ள டெக்னாலாஜி மற்றும் டொமைனை மையமாக கொண்டு ஸ்மார்ட் இந்தியா அறிக்கை ஒன்றை சமர்ப்பிப்பார்கள். சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை ஆய்வு செய்து, அதில் சிறந்தமற்றும் சவாலான ப்ரொஜெக்ட்களை தேர்வு செய்யப்பட்டு அதை மாணவர்களுக்கு மத்திய அரசு தெரியப்படுத்துகிறது
மத்திய அரசின் 43 அமைச்சரவைகள், `ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2018’ என்ற பெயரில் மார்ச் 30 மற்றும் 31ஆம் தேதிகளில் சாப்ட்வேர் தயாரிக்கும் பணியில் மாணவர்களை இடைவிடாமல் 36 மணிநேர ஈடுபடுத்தியுள்ள இறுதிச் சுற்று நடந்து வருகிறது. அந்தவகையில் ஜெய்ப்பூர் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடைபெறும் ஸ்மார்ட் இந்தியா ஹாக்கத்தான் 2018-ன் இறுதி முடிவு, தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தின் 16 அறிக்கைகளுக்கு மாணவர்கள் மென்பொருள் வடிவில் ஒரு தீர்வினை கண்டுபிடிக்கவுள்ளனர்.
சென்னை எஸ்.எஸ்.என் கல்லூரி மாணவர்கள் ஹர்ஷவர்தன், ஸ்ரீ ஹரி, வருண் குமார், ஆத்ரேயா, ஆனந்த், அனிஷ், இளநிலை ஆய்வாளர் கீதா மற்றும் இணை பேராசிரியர் சிராஜுதீன் ட்விட்டரில் வரும் ட்வீட்களை கொண்டு “சோசியோ-ஜர்னலிஸ்ட்” என்ற ஒரு இணையதள செயலியை வடிவமைத்து உள்ளனர். அவர்களிடம் பேசியதில், "இந்த செயலி இணையத்தில் வரும் செய்திகளை கண்டறிந்து அதில் முதன்மையான செய்திகளை வகைப்படுத்தி அதன் பயன்பாட்டாளர்களுக்கு கொடுக்கிறது. இதில் உண்மையான செய்திகளை கண்டறிய, பொய்யான செய்திகளைப் பிரித்தெடுத்து அதன் நம்பகத்தன்மையை மக்களுக்கு விளக்கிச் சொல்லும். இந்த ஹாக்கத்தானில் பங்குபெற்றதால் நாங்கள் நிறைய கற்றுக்கொண்டோம். இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டு படிக்கும் நாங்கள் தொழில்நுட்ப இலக்குகளை சரியாக தெரிந்து கொள்ளாமலேயே ஆரம்பித்தோம். இங்கு வந்து கொடுக்கப்பட்ட 36 மணி நேரத்தில் அனைவரும் ஒன்றிணைந்து இந்த `சோசியோ ஜர்னலிஸ்ட்’ செயலியை உருவாக்க முடிந்தது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது." என்று கூறினார்கள்.
சென்னை ஆர்.எம்.கே இன்ஜினியரிங் கல்லூரியில் இருந்து வந்திருந்த நிகிதா, லோகித், சங்கீகா, கீர்த்தி, ராமமணி, ஷங்கர், யுவராஜன், மற்றும் இணை பேராசிரியர் பொன்னியன் அவர்களைச் சந்தித்துப் பேசினோம். "நாங்கள் உணர்வு பகுப்பாய்வு எனப்படும் சென்டிமென்ட் அனாலிசிஸ் என்ற ஆய்வுமுறையை கொண்டு பொழுதுபோக்கு துறையில் வரும் கருத்துக்களை கணிக்க உதவும் செயலியை உருவாக்கியுள்ளோம். உதாரணமாக டி.டி சேனலில் ஒளிபரப்பப்படும் தொடர்களை மக்கள் எவ்வாறு எடுத்துக் கொள்கிறார்கள், அதை பார்ப்பவர்களின் கருத்துக்களை வைத்து அந்த தொடரை மேம்படுத்த என்ன செய்யலாம் என்ற ஒரு முடிவை அடைய இந்த சென்டிமென்ட் அனாலிசிஸ் உதவும். இங்கு வந்ததில் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குபவர்களை சந்திக்க முடிந்தது. அவர்கள் கூறிய கருத்துக்களும் எங்களுடைய சிஸ்டம் சிறப்பாக இயங்க உதவியாய் இருந்தது. அவர்கள் வலியுறுத்திய சில செயல்பாடுகள் சிக்கலானதாக இருந்ததால் அதை செய்ய எங்களுக்குஅதிக நேரம் தேவைப்பட்டது" என்று கூறினார்கள்.
சென்னை ராஜலக்ஷ்மி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் இருந்து கார்த்திக், கார்த்தி, ஹரிணி, கவிப்ரியா, ஜெயலட்சுமி, காயத்ரி, துணை பேராசிரியர் தினகரன்ஆகியோர் வந்திருந்தனர். அவர்கள் அனைவரும் மத்திய அரசால் நடத்தப்படும் தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பப்படும் விளம்பரங்களுக்கான கட்டணங்களை கணக்கிட ஒரு அமைப்பு முறையை வடிமத்துள்ளனர். இதுவரையில் தனியார் நிறுவனங்களின் உதவியோடு விளம்பரங்களுக்கான கட்டணங்கள் கணக்கிடப்பட்டு வருகிறது. அவர்களது நம்பகத்தன்மையை கண்காணிக்க சிரமமாக இருப்பதால், அதனை மத்திய அரசே செய்ய உதவும் ஒரு முறையை பரிந்துரைத்து இருக்கிறோம். இந்த 36 மணி நேரத்தில் 3 முறை தகவல் தொழில்நுட்பத் துறையில் சிறந்து விளங்கும் நிபுணர்கள் எங்களைச் சந்திக்க வந்தார்கள். முதல் முறை வந்தவர்களே அடுத்தடுத்த முறையும் வந்திருந்தால் எங்களுக்கு இன்னும் சிறந்த வழிகாட்டுதல் கிடைத்திருக்கும்" என்று தங்கள் கருத்துக்களைக் கூறினார்கள்.
சென்னை பனிமலர் இன்ஜினியரிங் காலேஜில் இருந்து மாணவர்கள் முத்துக்கமலேஷ், நாகராஜ், காவ்யா, ஜெயசூர்யா, கபிலன், கண்மணி, இணை பேராசிரியர் ஜெனிபர் மற்றும் மில்லியன் ஐ டெக்னாலஜியில் பணியாற்றும் கணேஷ் தொழில்துறை வல்லுநராக வந்திருந்தனர். இவர்கள் அனைவரும் தொலைக்காட்சியில் இணைக்கப்பட்டு இருக்கும் செட்டொப் பாக்ஸ் மூலம் டி.டி தொலைக்காட்சியில் ஒளிபரப்பபடும் இலவச சேனல்களுக்கான ஒரு மொபைல் செயலியை உருவாக்கினர். நடுவர்களின் இறுதி கேள்விக்கணைகளை எதிர்கொண்ட இவர்களை சந்தித்தோம்.
"எங்களுக்கு இந்த ஹேக்கத்தான் கலந்துகொண்டது மகிழ்ச்சி அளித்தது. ஹிந்தி மட்டும்தான் ஒரே குறையாக இருந்தது. இங்கு வந்துள்ள பெரும்பாலான வல்லுநர்கள் ஹிந்தியில் உரையாடியதால், எங்களால் அவர்களது கேள்வியைச் சரியாகப் புரிந்துகொள்ளவோ, அதற்கான பதில்களைக் கூறவோ முடியவில்லை. மேலும் வடஇந்திய உணவு மட்டுமே பரிமாறப்பட்டது. இது எனது முதல் விமானப் பயணம். இதனை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது. ரயிலில் வந்த மாணவர்கள் எல்லோரும் ஒரே பெட்டியில் ஜாலியாக வந்தனர். சென்னையில் இருந்து ஜெய்ப்பூர் வரும் வழியில் போபால், நொய்டா, சிந்தி போன்ற இடங்களில் ஒவ்வொரு குழுவாக அவர்களைப் பிரிந்து இங்கு வந்து சேர்ந்தோம். இதுபோன்ற புதுமையான போட்டிகளில் நாங்கள் கலந்துகொள்ள விரும்புகிறோம்"என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். இதில் வெற்றிபெறும் குழுவிற்கு முதல் பரிசாக 1 லட்சம் ரூபாய், இரண்டாவது பரிசாக 75,000 ரூபாய் மற்றும் மூன்றாவது பரிசாக 50000 ரூபாயும் மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் கொடுக்கவுள்ளது.