வெளியிடப்பட்ட நேரம்: 19:04 (01/04/2018)

கடைசி தொடர்பு:19:04 (01/04/2018)

பேரலல் ட்வின், VTwin, V16, Straight8, இன்லைன், பாக்ஸர்... எந்த இன்ஜினில் என்ன ப்ளஸ்?

`இன்ஜின்' - எந்த வாகனத்துக்கும் தேவையான உந்துசக்தி மற்றும் இழுவைத்திறனை வழங்குவது இதுதான். எரிபொருளும் காற்றும் கலந்த கலவை, கேம்ஷாப்ட் உதவியுடன் இயங்கும் இன்லேட் வால்வ் வழியாக சிலிண்டர் போருக்குள் செல்லும். இந்தக் கலவை ஸ்பார்க் பிளக்கினால் எரியூட்டப்பட்டு, அதனால் உண்டாகும் அழுத்தம் வால்வ் அமைப்புக்குக் கீழே இருக்கும் பிஸ்டனைக் கீழ்நோக்கித் தள்ளும்.

இன்ஜினில் என்ன சிறப்பு

பிறகு, கனெக்ட்டிங் ராடு உடன் கூட்டணிவைத்து இயங்கும் க்ராங்க் ஷாப்ட், அடுத்த சுழற்சியில் பிஸ்டனை மேலே கொண்டுவந்து, கலவையை எரியூட்டியதால் உண்டாகும் புகையை, எக்ஸாஸ்ட் வால்வ் வழியாக வெளியே தள்ளும். இதுதான் Engine இயங்கும் விதம். இதே பாணிதான், சிங்கிள் சிலிண்டர் 100சிசி முதல் 12 சிலிண்டர் Engine வரை பின்பற்றப்படுகிறது.

இந்தியாவில் பிரபலமாக இருக்கும் இன்லைன் சிலிண்டர் அமைப்பு!

இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் டூ-வீலர்களில் இருப்பது சிங்கிள் சிலிண்டர் இன்ஜின்களே. அவற்றிலிருந்து அதிக செயல்திறனைப் பெறுவதற்காக, எடை அதிகமுள்ள பெரிய பிஸ்டன் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் இன்ஜின் அதிக அழுத்தத்துக்கு ஆட்படுத்தப்படுகிறது. இதைத் தவிர்க்கும் பொருட்டு உருவானவைதான் பேரலல் ட்வின் இன்ஜின்கள் (உதாரணம் - நின்ஜா 300). இதில் ஒரு பெரிய பிஸ்டனுக்குப் பதிலாக, இரண்டு சிறிய பிஸ்டன்கள் பொருத்தப்பட்டிருக்கும்.

engine

இதனால் இவை சிலிண்டர் போருக்குள்ளே வேகமாக இயங்கி, அதிக பவரை வெளிப்படுத்தும் திறனைக்கொண்டிருக்கின்றன. இதில் சிலிண்டர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொண்டே சென்றால், ட்ரிப்பிள் (உதாரணம் - ஸ்ட்ரீட் ட்ரிப்பிள்), 4 சிலிண்டர் (உதாரணம் - பெரும்பான்மையான கார் இன்ஜின்கள்), 5 சிலிண்டர் (உதாரணம் - வால்வோ S60 D5), 6 சிலிண்டர் (உதாரணம் - பிஎம்டபிள்யூ 335i) 8 சிலிண்டர் (உதாரணம் - Pontiac) என இன்ஜின்கள் தேவைக்கு ஏற்ப உருவாக்கப்பட்டன. 

Straight 8 சிலிண்டர் Engine எப்படி இருக்கும்?

இதில் Straight 8 சிலிண்டர் இன்ஜினின் கேம்ஷாப்ட் மற்றும் வால்வ் டிரெயின் அமைப்பு, சிம்பிளான வடிவமைப்பைக்கொண்டிருக்கும். எனவே, இந்த இன்ஜினைத் தயாரிப்பது மற்றும் பராமரிப்பது எளிது. மேலும், இவை அதிக ஆர்.பி.எம்-மை எளிதாக எட்டிப்பிடிக்கும் என்பதுடன், அங்கே பவர் டெலிவரியும் அதிரடியாக இருக்கும். ஆனால், நாளடைவில் கார்களின் சைஸ் சிறிதானதால் அதிக இடத்தை ஆக்கிரமித்துக்கொள்ளும் Straight 8 சிலிண்டர் இன்ஜின்கள் அரிதாகிவிட்டன.

straight 8 cylinder engine

ஏனெனில், சிலிண்டர்களை இயல்பாகவே ஒன்றன் பின் ஒன்றாக வரிசைப்படுத்தும்போது (In-line), இந்த வகை இன்ஜின்கொண்ட காரின் முன்பகுதியின் நீளத்தை அதிகரிக்க நேரிடும். வாகனங்களின் அளவு காம்பேக்ட் ஆகிக்கொண்டிருக்கும் நிலையில், இதற்கான தீர்வாக வெளிவந்தவைதான் வி-ட்வின் இன்ஜின்கள். 

V-Twin மற்றும் பாக்ஸர் Engine என்றால் என்ன?

எதிர் எதிர் கோணத்தில் இரண்டு சிலிண்டர்கள் இருந்தால், அதுதான் வி-ட்வின் இன்ஜின். இந்த வகை இன்ஜின்களைப் பிரபலப்படுத்தியதில் பெரும்பங்கு ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தையே சேரும். ஒருவேளை இரண்டு சிலிண்டர்களை எதிர்த்திசையில் அப்படியே கிடைமட்டத்தில் வைத்தால், நமக்குக் கிடைப்பது பாக்ஸர் இன்ஜின். இரண்டு சிலிண்டர் பாக்ஸர் இன்ஜின் (உதாரணம் - பிஎம்டபிள்யூ R1200GS), 6 சிலிண்டர் பாக்ஸர் இன்ஜின் (உதாரணம் - போர்ஷே 911) என வெகுசில தயாரிப்புகளில் மட்டுமே இந்த வகை இன்ஜின் பயன்பாட்டில் இருக்கிறது.

v twin

காம்பேக்ட் சைஸ் அதிர்வுகளைக் கட்டுப்படுத்தும் சிலிண்டர் அமைப்பு என வி-ட்வின் மற்றும் பாக்ஸர் இன்ஜின்களின் ப்ளஸ்பாயின்ட்கள் அதிகம். மேலும், இரு சிலிண்டர்களுக்கு இடையே ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் மற்றும் ஏர்பாக்ஸ் அமைப்பு இருப்பதால், பேக்கேஜிங் மற்றும் சர்வீஸ் செய்வது எளிது. இங்கும் சிலிண்டரின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொண்டே சென்றால், வி-4 (உதாரணம் - ஹோண்டா VFR 1200F), வி-6 (உதாரணம் - ஆடி S5 3.0 TFSI), வி-8 (உதாரணம் - ஃபெராரி 458), வி-10 (உதாரணம் - லம்போர்கினி கலார்டோ), வி-12 (உதாரணம் - ஃபெராரி என்ஸோ), வி-16 (உதாரணம் - கெடிலாக் வி-16) என இன்ஜின்கள் தேவைக்கு ஏற்ப வளர்ச்சி கண்டிருக்கின்றன. 

V16, W12... பர்ஃபாமென்ஸ் Engine-கள்தான்!

முந்தைய வகையில் Straight 8 சிலிண்டர் இன்ஜின்போல, இங்கே வி-16 வகை இன்ஜின் அரிதான ஒன்றாகிவிட்டது. ஃபோக்ஸ்வாகன் நிறுவனம், இரண்டு வி-6 இன்ஜின்களை ஒன்றுசேர்த்து கண்டுபிடித்ததுதான் W12 இன்ஜின் (உதாரணம் - பென்ட்லி கான்டினென்ட்டல் GT). இது 12 சிலிண்டர் இன்ஜினின் பவரை வெளிப்படுத்தினாலும், இதன் அளவு என்னவோ இன்லைன் டிரிப்பிள் சைஸ்தான். ஆக, ஒரு இன்ஜினுக்குத் தேவைப்படும் இடத்தைத் தாண்டி, ஒரு வாகனத்துக்கு என்ன வகையான இன்ஜின் வேண்டும் என்பதை, அதன் பொசிஷனிங்தான் முடிவுசெய்கிறது.

W16 cylinder engine

அதிக டார்க் என்றால் வி-ட்வின், சரிசமமான டார்க் மற்றும் பவர் என்றால் வி-4, அதிக ஆர்.பி.எம்-மில் பவர் வேண்டும் என்பவர்களுக்கு இன்லைன் 4 சிலிண்டர், ஸ்மூத்தாக இயங்கும் இன்ஜின் என்றால் இன்லைன் 6 சிலிண்டர் மற்றும் வி-6, பவர் - ஸ்மூத்னெஸ் - எக்ஸாஸ்ட் சத்தம் கலந்த கலவை என்றால் வி-8 என என்று வகைகளைப் பற்றிப் பேசிக்கொண்டே செல்லலாம்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்