திமிங்கிலத்தின் மூதாதையர் மான்களா...? - ஆச்சர்யமூட்டும் ஓர் ஆராய்ச்சி | What is the connection between whales and deers

வெளியிடப்பட்ட நேரம்: 10:40 (02/04/2018)

கடைசி தொடர்பு:10:40 (02/04/2018)

திமிங்கிலத்தின் மூதாதையர் மான்களா...? - ஆச்சர்யமூட்டும் ஓர் ஆராய்ச்சி

விலங்குகள் ஆராய்ச்சி

இது நடந்து முப்பது வருடங்கள் இருக்கும். தென்னிந்திய புவியியல் ஆராய்ச்சியாளரான ரங்கா  ராவ் காஷ்மீரின் பழமையான பாறைகளை ஆராய்ந்து கொண்டிருந்தபோது அவருக்கு ஒரு விலங்கின் உடல் படிமம் கிடைத்தது. அந்தப் பாறையில் இருந்து சில பற்களையும் மண்டையோட்டுப்  பகுதியையும் சில எலும்புகளையும் மட்டுமே அவரால் பிரித்து எடுக்க முடிந்தது. அதை அவர் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க, அது முடிவடையும் முன்னரே சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். அவரது மனைவியின் மூலம் அந்தக் கூறுகளைப் பெற்றுக் கொண்ட பேராசிரியர் தெவிசன் அவரது ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்.

செயற்பாடுகள் அனைத்திற்குமான அடையாளங்களையும் ஆதாரங்களையும் விட்டுச்செல்வது இயற்கைக்கு வாடிக்கை. அப்படிக் கிடைத்த படிமங்கள் மூலம் நாம் அறிந்த அதிசயங்கள் எண்ணிலடங்காது. ஆயினும் மேன்மேலும் அவள் தனது சாதனைகளைப் பறைசாற்றிக் கொண்டே இருக்கிறாள். அந்தப் பறைசாற்றலின் ஒரு பகுதி தான் இந்த மானின் படிமம்.
டார்வினின் ஆராய்ச்சிகளின் படி விலங்குகளின் பரிணாம வளர்ச்சி பற்றிய அறிவை நாம் எய்தி இருந்ததால், நீர்வாழ் பாலூட்டிகள் முதலில் நிலத்தில் தான் வாழ்ந்திருந்தன என்பதை நாம் ஓரளவு புரிந்துகொண்டோம். ஆனால் கடலில் வேட்டையாடியாக இருக்கும் அவை நிலத்தில் வேட்டையாடிகளாகத் தான் வாழ்ந்தன என்று நினைத்துவிட்டோம். அதனால், நிலத்தில் தாவர உண்ணிகளாக வாழ்ந்த இன்றைய நீர்வாழ் பாலூட்டிகள், வேட்டையாடிகளுக்கு பயந்தே அன்று நீருக்குள் சென்றன என்ற கூற்றை நம்புவதற்குச் சிறிது கடினமாகத் தான் இருக்கும். கடினமாக இருந்தாலும் அது தான் உண்மை.

விலங்குகள் ஆராய்ச்சி

சருகு மான், எலி மான் என்று அழைக்கப்படும் ஒரு மான் இனம் இன்றளவும் ஆப்பிரிக்காவில் உண்டு. அது தன்னை வேட்டையாட வரும் விலங்கிடம் இருந்து தப்பிக்க நீருக்குள் புகுந்துவிடும். சுமார் 4 நிமிடங்கள் வரை நீருக்குள் அதனால் சமாளிக்க முடியும். மிகவும் ஆபத்தான  சூழலில் அதற்கு மேலும் அதனால் சமாளிக்க முடியும். இதன் ஆதி இனத்தில் இருந்து தான் 4.8 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் கடல்வாழ் பாலூட்டிகள் பிரிந்து சென்றுள்ளன.

ஆம், ரங்கா  ராவ் கண்டெடுத்த படிமங்களை ஆராய்ந்த தெவிசன், அதை எதனோடும்  ஒப்பிட முடியாமல் குழம்பியிருந்தார். அவர் ஒப்பிட்ட அனைத்துமே இன்றைய நில வாழ் நான்கு கால் விலங்குகளோடு. தற்செயலாக அவரது உதவியாளர் அந்த மண்டையோட்டை உடைத்திருக்கவில்லை என்றால் இன்றுவரை நான்கு கால்களும் நீந்துவதற்கு ஏற்ற விரல்களற்ற பட்டையான நீந்தும் துடுப்பு உறுப்பாக மாறியிருக்கலாம் என்று அவர் கற்பனை கூடச்  செய்திருக்க மாட்டார்.

இண்டோஹியஸ் ( Indohiyus) அந்த விலங்கின் பெயர். வளைந்த முதுகுடன் நான்கு கால்களோடு மான் போன்ற முக அமைப்பு கொண்டது. சில கோடி ஆண்டுகளுக்கு முன் அது நிலத்தில் அதுவும் தாவரங்களை உண்ணும் ஹெர்பிவோராகத் ( Herbivore) தான் வாழ்ந்து கொண்டிருந்தது. வேட்டைக்குப்  பயந்து சில சமயங்களில் வேட்டையாடியை ஏமாற்றுவதற்காக நீருக்குள் சென்றுவிடும். காலப்போக்கில் அதன் உடலமைப்பு நீர் நிலம் இரண்டிலும் வாழ்வதற்கு ஏற்றவாறு மாறியது. அதன் தலை எலும்பில் காதுப் பகுதியின் உட்புற எலும்பு, இதற்கு முன் கிடைத்த நீர்வாழ் பாலூட்டி மூதாதைகளின் படிமங்களில் இருந்த அமைப்போடு ஒத்துப்போகவே அவருக்கு ஒரு பொறி தட்டியது. ஏன் இது திமிங்கிலம், டால்பின் போன்ற விலங்குகளுக்கு முந்தையதாக இருந்திருக்கக் கூடாது என்ற கோணத்தில் தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். அதன் உடல் எலும்புப் பாகங்களில் சில மிகக் கடினமாகவும் சில மிக மென்மையாகவும்  இருப்பதற்கான காரணத்தை அப்போது தான் அவர் புரிந்துகொண்டார். நீர்வாழ் பாலூட்டிகளுக்கு உட்புற எலும்புகள் மிக உறுதியாக இருக்கும்,வெளிப்புற எலும்புகள் மிக மென்மையாக  இருக்கும்.  

அது தாவர உண்ணியாக வாழ்ந்தது என்பதை ஆராய்ந்து புரிந்துகொண்ட அவர், வேட்டையாடிகளுக்கு பயந்து நீர்நில வாழ் உயிரினமாக மாறிய பின் அதன் எலும்பில் மாற்றம் நிகழ்ந்திருக்க வேண்டும். ஆபத்துகளில் இருந்து தப்பிக்க ஆழத்திற்குச் சென்று ஒழிந்துகொண்ட அவை உணவுக்காக அங்கே இருந்த சிற்றுயிர்களையே சாப்பிடத் தொடங்கி மாமிச உண்ணியாகவும் மாற்றமடைந்தன. இந்தக் கடினமான எலும்புகளோடு நிலத்தில்  விரைவாகச் செயல்பட முடியாது. நிலத்தில் அதன் வேகம் குறைந்திருக்கும். அதே சமயம் நீரில் அதன் செயற்பாடு அதிகரித்திருக்கும். இதன் பிறகே முழுமையான நீர்வாழ் இனமாக இண்டோஹியஸ் மாறியிருக்கும்.

காலப்போக்கில் திமிங்கிலங்களின்  மூதாதையான பாகிசெடிடேவாக (Pakicetidae) வளர்ச்சி அடைந்திருக்க வேண்டும். அதிலிருந்து ஆம்புளோசெடிடேவாக ( Ambulocetidae) தனது கால்கள் முழுமையாக மாற்றமடைந்து நீந்துவதற்கு ஏற்றத் துடுப்பு உறுப்புகளோடு, முடிகள் இன்றி வழுவழுப்பான தேகத்தோடு திமிங்கிலமாக வளர்ச்சி அடைந்திருக்கிறது.

மனித அறிவால் மான்களுக்கும் திமிங்கிலத்துக்கும் இடையில் ஓர் ஒப்பீட்டினை சிறிதளவும் பொருத்திப் பார்க்க முடியாது. ஏனென்றால் நமது பார்வை வேறு. இயற்கையின் பார்வை வேறு. அவள் இவ்வுலகின் ஒவ்வொரு உயிருக்கும் இடையில் தொடர்பை ஏற்படுத்தி இருக்கிறாள். அந்தத் தொடர்பு பற்றி தெரிந்துகொள்ளத் தேடுவதைவிட புரிந்துகொள்ள முயலவேண்டும். அதுவே அவளை அரிக்காமல் அழிக்காமல் வாழ வழிவகுக்கும்.

நிலம் தந்த ஆபத்தில் இருந்து பிழைக்க நீருக்குள் சென்றன திமிங்கிலங்கள். ஆனால் மனிதனால் மாசடையும், குப்பைத் தொட்டியாகும் ஆழ்கடலில் வாழமுடியாத அவை இதற்கு மேல் எங்கே செல்வது என்று தெரியாமல் இயற்கை அன்னையிடம் முறையிட்டு, தனக்கொரு வழிகேட்டு மனிதர்கள் முன்னால் கூட்டம் கூட்டமாகக்  கரைக்கு வந்து தன் உயிரை மாய்த்துக்கொண்டு தற்கொலைப் புரட்சி புரிகின்றன.


டிரெண்டிங் @ விகடன்