ஓவர் தூக்கம் டி.என்.ஏ.வையே மாத்திடும் பாஸ்... எச்சரிக்கும் ஆய்வுகள்! #Oversleeping | Over sleeping can change your DNA pattern says new experiments

வெளியிடப்பட்ட நேரம்: 20:04 (02/04/2018)

கடைசி தொடர்பு:20:04 (02/04/2018)

ஓவர் தூக்கம் டி.என்.ஏ.வையே மாத்திடும் பாஸ்... எச்சரிக்கும் ஆய்வுகள்! #Oversleeping

இதன்மூலம் குறைவான நேரம் தூங்குவதும் மற்றும் நீண்ட நேரம் தூங்குவதும் நமது டி.என்.ஏ-வில் (DNA) மாற்றத்தினை ஏற்படுத்தும் என்பது உறுதியாகியுள்ளது என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓவர் தூக்கம் டி.என்.ஏ.வையே மாத்திடும் பாஸ்... எச்சரிக்கும் ஆய்வுகள்! #Oversleeping

விடுமுறை தினங்கள் மற்றும் வாரத்தின் இறுதி நாள்கள் என்றாலே அதன்மீது ஒரு அலாதி பிரியம் அனைவருக்கும் இருக்கும். அதற்குப் பல காரணங்கள் உண்டு. அதில் முக்கியமான காரணம் அந்த வாரம் முழுவதும் தாங்கள் தொலைத்த சுகமான தூக்கத்தினை, வட்டியும் முதலுமாக மொத்தமாக அடையமுடியும் என்பதாகத்தான் இருக்கும். விடுமுறை நாள்களில் 10-12 மணிநேரம் முரட்டுத்தூக்கம் தூங்கலாம் என்று உங்களில் யாரேனும் திட்டம் போட்டு வைத்திருப்பீர்களேயானால், அதனை மறுபரிசீலனை செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள்.  நீண்ட நேரத் தூக்கமானது அந்த நாள் முழுவதும் சோர்வினை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், உடல் ஆரோக்கியத்துக்கும் பெரும் தீங்கு விளைவிக்கும் என்று கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

தூக்கம்

குறைந்த அளவு உறக்கம்:
நீண்ட நாள்கள் குறைந்த அளவில் தூங்குவது, உடல் பருமன் அதிகரிப்பு (obesity) இதயக் கோளாறுகள், மனச்சோர்வு (depression) போன்றவற்றை ஏற்படுத்தும். உயிரிழப்புக்குக்கூட கொண்டு போகலாம். 11 நாள்கள் 25 நிமிடங்கள் தூக்கம் இல்லாமல் இருந்ததே, இதுவரை ஒருவர் நீண்ட நாள்கள் உறங்காமல் நிகழ்த்திய சாதனையாக இருக்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த ‘ராண்டி கார்ட்னர்’ (Randy Gardner) என்பவர் தனது 17-வது வயதில் இந்தச் சாதனையை நிகழ்த்தினார். ஆனால், தற்போது தூக்கமின்மை (insomnia) நோயினால் சிரமப்படும் அவர்,  சிறுவயதில் தான் நிகழ்த்திய அந்த சாகசம்தான் இதற்குக் காரணம் என்று நினைத்து இன்று வருந்துவது தனிக் கதை. அது இருக்கட்டும், தற்போது நீண்ட நேரம் உறங்குவதுகூட (versleeping) மேலே குறிப்பிட்ட உடல்நலக் குறைபாட்டுக்கு இட்டுச்செல்லும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அச்சுறுத்தும் ஆய்வறிக்கைகள்:
2016-ம் ஆண்டு இருதயவியலுக்கான சர்வதேச ஆய்வு இதழில் (international journal of cardiology) ஓர் ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், தைவானைச் ( Taiwan) சேர்ந்த 4 லட்சம் இளையோர்களிடம் ஏழு வருடங்களுக்கு மேலாக உறக்கம் சார்ந்த பழக்கவழக்கங்களைப் பற்றி நடத்தப்பட்ட ஆய்வில் பின்வரும் முடிவானது பெறப்பட்டது.

6-8 மணிநேரம் தூங்கும் ஒருவரைவிட, 4 மணிநேரத்துக்கும் குறைவாக உறங்கும் ஒருவர் 34 சதவிகிதம் அதிகம் இதயநோயினால் இறக்கும் வாய்ப்பினை கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது... அப்படியென்றால் 8 மணிநேரத்துக்கு அதிகமாக உறங்கினால்..? -(கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக) - அவர்கள் 35 சதவிகிதம் அதிகம் இறக்கும் வாய்ப்பினை பெற்றிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல 2015-ம் ஆண்டு ஜர்னல் ஆப் நியூராலாஜி (journal of neurology) வெளியிட்டுள்ள ஆய்வின்படி, 8 மணிநேரத்துக்கும் அதிகமாக உறங்கும் ஒருவருக்கு பக்கவாதம் (stroke) தாக்கும் வாய்ப்பு அதிகம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றும் 2009-ல் வெளியிடப்பட்ட ஸ்லீப் மெடிசின் ஆய்வறிக்கையானது (sleep medicine) நீண்ட நேரம் உறங்கும் ஒருவர், இரண்டாம் வகை நீரழிவு நோயினால் (type II diabetes) பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. 

தூக்கம்

குழப்பமடையும் டி.என்.ஏ-க்கள்:
உடல் நலமில்லாத ஒருவர், குணமடைவதற்காக நீண்ட நேரம் உறங்கத்தானே வேண்டியுள்ளது என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அதற்கான விடையையும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். 2014-ம் ஆண்டு ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று தூக்கத்தின் பின்னால் உள்ள மரபியல் (genetics) பற்றியும் மற்றும் உறக்கம் சார்ந்த நோய்களைப் பற்றியும் ஆய்வினை மேற்கொண்டனர். 

‘ஸ்லீப்’ (sleep) என்ற மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வுக்காக 900 இரட்டையர் (twins) ஜோடிகளிடம் நடத்தப்பட்டது. பல்வேறு புள்ளிவிவர மாதிரிகளின் உதவியால் மரபணுக்களுக்கு இடையேயான தொடர்பினை அறிவதன் மூலம், மனச்சோர்வு (depression) போன்ற உடல் நலக்குறைவானது எப்படி அதன் மரபியலால் கட்டுப்படுத்தப்படுகிறது என்பது கண்டறியப்பட்டது. அதாவது எவ்வளவு பங்கு மரபணுவினாலும், எவ்வளவு பங்கு சுற்றுச்சூழலினாலும் (environment) - குறிப்பாக தூக்கத்தினால் - கட்டுப்படுத்தப்படுகிறது என்பது கண்டறியப்பட்டது. அதில், இரவில் 8-9 மணிநேரம் உறங்கும் மக்களில் 27%  பேர் மனச்சோர்வின் அறிகுறியினையும், 7 மணி நேரத்துக்கு குறைவாகவோ, அல்லது  9 மணி நேரத்துக்கு அதிகமாகவோ உறங்கும் மக்களில் 50% பேர் அந்த மனச்சோர்வின் அறிகுறியினை அவர்களின் மரபணுவில்  பெற்றுள்ளனர் என்பதும் கண்டறியப்பட்டது. இதன்மூலம் குறைவான நேரம் தூங்குவதும் மற்றும் நீண்ட நேரம் தூங்குவதும் நமது டி.என்.ஏ-வில் (DNA) மாற்றத்தினை ஏற்படுத்தும் என்பது உறுதியாகியுள்ளது என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வளவு நேரம் தூங்கலாம்?
ஒருவர் எவ்வளவு நேரம் (அதிகமாகவோ / குறைவாகவோ) உறங்க வேண்டும் என்பது சில காரணிகளைப் பொறுத்து அமையும், குறிப்பாக ஒருவரின் வயது. தி நேஷினல் ஸ்லீப் ஃபௌன்டேஷனின் (the national sleep foundation) அறிவுரையின்படி, பதின்பருவத்தினருக்கு 7-9 மணிநேரம் தடையில்லாத உறக்கம் தேவை எனவும். அதிகபட்சம் 10 மணிநேரம் வரை உறங்கலாம் எனவும் கூறுகிறது. மேலும், 6 மணிநேரம் ஒருவருக்கு கட்டாய உறக்கம் அவசியம் என்றும் வலியுறுத்துகிறது. 

மொத்தத்தில் காலையில் உறக்கத்திலிருந்து எழும்போது தலைவலி, முதுகுவலி போன்றவை இல்லாமல் சுறுசுறுப்பாக இருப்பதாக உணர்ந்தால் அதுவே போதுமான அளவு உறங்கிவிட்டோம் என்பதை அறிவதற்கான சிறந்த வழியாகும்.                         
                                           


டிரெண்டிங் @ விகடன்