"குழந்தையை நீங்கள் சரியாகத்தான் கவனித்துக்கொள்கிறீர்களா?" - அவசியத்தை விளக்கும் கதை! #FeelGoodStory

உன்னை அறிந்தால்

மெரிக்க எழுத்தாளர் ராபர்ட் ஃபல்கம் (Robert Fulghum) பல `பெஸ்ட் செல்லர்’ புத்தகங்களை எழுதியவர். ஒரு கருத்தரங்கில் பேசும்போது இப்படிக் குறிப்பிட்டார்... ``நீங்கள் சொல்வதை குழந்தைகள் கேட்பதில்லை என்பதற்காகக் கவலைப்படாதீர்கள். அவர்கள் எப்போதும் உங்களையே கவனித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதற்காகக் கவலைப்படுங்கள்.’ குழந்தைகளுக்கு பெற்றோர்தான் ஆதர்சம் என்பது பலருக்குப் புரிவதில்லை. எல்லா குழந்தைகளுக்குமே முதல் ரோல்மாடல் அப்பாவாகவோ, அம்மாவாகவோதான் இருப்பார்கள். குழந்தைகள் அவர்களைச் சுற்றி நடக்கிற எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த வயதில் அவர்களை பாதிக்கிற விஷயங்கள் ஆழ்மனதில் அப்படியே பதிந்தும் போய்விடுகின்றன. எனவே, பெற்றோர்களுக்கு, தங்கள் குழந்தைகளின் மனதில் தவறான எண்ணமோ, கருத்தோ பதிந்து போய்விடாமல் வளர்க்கவேண்டிய பொறுப்பு இருக்கிறது. அது ஏன் என்பதை விளக்குகிறது இந்தக் கதை. 

கதை

அந்தப் பெண்மணி ஓர் ஆசிரியை. அன்றைக்கு இரவுச் சாப்பாடு முடிந்த பிறகு, வகுப்பு மாணவர்கள் எழுதிக் கொடுத்திருந்த விடைத்தாள்களைத் திருத்த உட்கார்ந்தார். அவருடைய கணவர் அவருக்கு எதிரே ஒரு மேசையிலமர்ந்து தன் கையிலிருந்த ஸ்மார்ட்போனை நோண்டிக்கொண்டிருந்தார். சிறிது நேரம் போனது. அவர் யதேச்சையாகத் திரும்பி தன் மனைவியைப் பார்த்தார். கண்களில் நீர் திரள, தன் கையிலிருந்த ஒரு விடைத்தாளையே பார்த்துக்கொண்டிருந்தார் அந்தப் பெண்மணி. ஏதோ பிரச்னை என்பதைப் புரிந்துகொண்ட கணவர் அவரருகே போனார். 

``ஏய்... என்னாச்சு?’’ 

``நேத்து நாலாம் கிளாஸ் படிக்கிற பசங்களுக்கு ஒரு ஹோம்வொர்க் கொடுத்திருந்தேன். `என்னோட ஆசை’னு ஒரு தலைப்புக் கொடுத்து, `என்ன தோணுதோ எழுதிட்டு வாங்க’னு சொல்லியிருந்தேன்...’’ 

``சரி... அதுக்கும் நீ கண்கலங்குறதுக்கும் என்ன சம்பந்தம்? நீ கையிலவெச்சிருக்குற பேப்பர்ல அப்படி என்ன எழுதியிருக்கு?’’ 

``படிக்கிறேன்... கேட்குறீங்களா?’’ 

போன்

தலையசைத்தார் கணவர், ஆசிரியை படிக்க ஆரம்பித்தார். அதில் ஒரு மாணவன் இப்படி எழுதியிருந்தான்... ``நான் ஒரு ஸ்மார்ட்போனாகணும்கிறதுதான் என்னோட ஆசை. ஏன்னா, என்னோட அம்மா, அப்பாவுக்கு ஸ்மார்ட்போன் ரொம்பப் பிடிச்சிருக்கு. சில நேரங்கள்ல என்னை கவனிச்சுக்கிறதைக்கூட மறந்துட்டு, போனை அவ்வளவு நல்லா கவனிச்சுக்கிறாங்க. அப்பா ஆபிஸ்லருந்து களைச்சுப் போய் வருவாரு; என்கூடப் பேசுறதுக்கு நேரமில்லைன்னாக்கூட, போன்ல பேசுறதுக்கு அவருக்கு நேரமிருக்கு. அம்மாவும் அப்பாவும் எவ்வளவு பிஸியான வேலையில இருந்தாலும், போன் ஒரு ரிங் அடிச்சாப் போதும், ஓடிப்போய் எடுத்துடுறாங்க; பல நேரங்கள்ல நான் சத்தமாக் கூப்பிட்டாக்கூட திரும்பிப் பார்க்க மாட்டேங்கிறாங்க. ஸ்மார்ட்போன்ல கேம் விளையாடுறாங்களே தவிர, என்கூட அதிகமா விளையாடுறதில்லை. அவங்க யாரோடயாவது போன்ல பேசிக்கிட்டிருக்கும்போது, எவ்வளவு முக்கியமான விஷயமா இருந்தாலும் நான் சொல்றது அவங்க காதுல விழுறது இல்லை. அதனால, அம்மாவும் அப்பாவும் என்னையும் கவனிக்கணும்கிறதுக்காக நான் ஒரு ஸ்மார்ட்போனா ஆகணும்னு ஆசைப்படுறேன்...’’ 

இதைக் கேட்ட கணவரும் நெகிழ்ந்துதான் போனார். ``சரி... இதை யார் எழுதியிருக்குறது?’’ 

``நம்ம பையன்தான்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!