வெளியிடப்பட்ட நேரம்: 07:54 (04/04/2018)

கடைசி தொடர்பு:10:46 (04/04/2018)

கேள்விக்கு தவறாகப் பதில் சொன்னால் என்ன செய்ய வேண்டும்? - பாடம் எடுத்த மாணவனின் கதை! #MotivationStory

நாம் சொல்வது மட்டுமே சரியாக இருக்கும் என்று நினைக்கக் கூடாது. சில நேரங்களில் எதிரே இருப்பவர்கள் சொல்வதும் சரியாக இருக்கும்.

கேள்விக்கு தவறாகப் பதில் சொன்னால் என்ன செய்ய வேண்டும்? - பாடம் எடுத்த மாணவனின் கதை! #MotivationStory

கதை

`புரியலை’... இப்போது தமிழகத்தில் அதிகம் புழக்கத்திலிருக்கும் ஒரு வார்த்தை. ஒருமுறை பத்திரிகையாளர் சந்திப்பொன்றில் நிருபர்கள் கேள்வி கேட்க, பதில் சொல்லிக்கொண்டிருந்தார் ஓய்வு பெற்ற அமெரிக்க பேஸ்கட்பால் விளையாட்டு வீரர் டென்னிஸ் ராட்மேன் (Dennis Rodman). ``புரியவில்லை’’ என்று நிருபர் திரும்பக் கேட்க, அதற்கு டென்னிஸ் ராட்மேன் இப்படிச் சொன்னார்... ``என்னோட பதில் உங்களுக்குப் புரியலைங்கிறது என்னோட பிரச்னையில்லை; உங்களோட பிரச்னை.’’ வெகு சாதாரணமாக இந்தக் கூற்றை நம்மால் கடந்துபோய்விட முடியாது. யாரிடமோ ஒரு கேள்வி கேட்கிறோம்; அதற்கான பதிலும் நமக்குத் தெரியும். ஆனால், நாம் முன்னரே தீர்மானித்துவைத்திருந்த பதிலைச் சொல்லாமல், அவர் வேறொன்றைச் சொல்கிறார் என்று வைத்துக்கொள்வோம்... அவர்தான் தவறாகச் சொல்கிறார் என்று எடுத்துக்கொள்ளக் கூடாது. வாழ்க்கை நம் ஒவ்வொருவருக்கும் உணர்த்தும் பாடம் இது. மற்றவரை தவறாக எடைபோடக் கூடாது; கண்ணுக்குத் தெரிவதை மட்டும் உண்மை என நம்பிவிடக் கூடாது; பிறரைச் சாதாரணமாக நினைத்துவிடக் கூடாது; நம்மிடம்தான் தவறு இருக்கிறது... என எத்தனையோ உண்மைகளை உணர்த்தும் பாடம் இது. அதிலும், பல நேரங்களில் குழந்தைகள் பெரியவர்களுக்குக் கற்றுத்தரும் பாடங்கள் அசாதாரணமானவை, அசரவைப்பவை.

அது ஓர் ஆரம்பப்பள்ளி. ஒன்றாம் வகுப்புக்குப் பாடமெடுக்கும் கணக்கு ஆசிரியை அவர். எளிதாகக் கணக்கைக் குழந்தைகளுக்குப் புரியவைத்துவிட வேண்டும் என்கிற மெனக்கெடல் அவரிடமிருந்தது. கிட்டத்தட்ட மழலையாகவே மாறி பாடமெடுப்பார். அன்றைக்கு ஆசிரியை ஒரு மாணவனை அழைத்தார். ``நான் உனக்கு ஒரு ஆப்பிள் (சுண்டுவிரலை உயர்த்தி), அப்புறம் ஒரு ஆப்பிள் (சுண்டுவிரலோடு மோதிர விரலை உயர்த்தி), கூட ஒரு ஆப்பிள் (ஆசிரியையின் நடுவிரலோடு சேர்த்து இப்போது மொத்தம் மூன்று விரல்கள் உயர்ந்திருந்தன) கொடுக்கிறேன்னு வெச்சுக்குவோம். உன்கிட்ட மொத்தம் எத்தனை ஆப்பிள் இருக்கும்?’’

நெகிழ்ச்சிக் கதை

மாணவன், ஆசிரியை உயர்த்திக் காட்டிய விரல்களைப் பார்த்தான். தன் விரல்களை ஒவ்வொன்றாக அதேபோல விரித்து எண்ணினான். பிறகு சொன்னான்... ``நாலு ஆப்பிள்.’’

ஆசிரியையின் முகம் ஏமாற்றத்தால் சுருங்கியது. ``உனக்குப் புரியலையா ராஜூ... நான் உனக்கு ஒரு ஆப்பிள் (பழையபடி விரல்களை உயர்த்தி), அப்புறம் ஒரு ஆப்பிள், கூட ஒரு ஆப்பிள் கொடுக்கிறேனுவெச்சுக்கோ. உன்கிட்ட மொத்தம் எத்தனை ஆப்பிள் இருக்கும்?’’

மாணவன் ஆசிரியையின் முகத்தைப் பார்த்தான். என்ன பதிலைச் சொன்னால் டீச்சர் நிம்மதியடைவார் என்றெல்லாம் யோசித்தான். பிறகு மறுபடியும் தன் விரல்களைப் பிரித்து எண்ணிப் பார்த்தான். தயங்கித் தயங்கி பதில் சொன்னான்... ``நாலு ஆப்பிள்.’’

ஆசிரியையின் முகம் கோபத்தால் சிவந்தது. ஆனால், அவனோ சிறுவன், குழந்தை... அவனிடம் கோபத்தைக் காட்ட முடியுமா? அப்போது திடீரென ஆசிரியைக்கு ஒருநாள் அந்த மாணவன், தனக்கு சாக்லேட் என்றால் மிகவும் பிடிக்கும் என்று சொன்னது நினைவுக்கு வந்தது. `ஒருவேளை அவனுக்கு ஆப்பிள் பிடிக்காமப் போயி அதுக்காக தப்பா பதில் சொல்றானோ...’ என்றெல்லாம் யோசித்தார். இப்போது கேள்வியைக் கொஞ்சம் மாற்றிக் கேட்டார்... ``இப்போ நான் உனக்கு ஒரு சாக்லேட், அப்புறம் ஒரு சாக்லேட், கூட ஒரு சாக்லேட் கொடுக்கிறேன்... உன்கிட்ட மொத்தம் எத்தனை சாக்லேட் இருக்கும்?’’

அந்தச் சுட்டிப் பையன், ஆசிரியையின் மலர்ந்த முகத்தைப் பார்த்தான். விரல்களால் கணக்குப் போட்டான். பிறகு பதில் சொன்னான்... ``மூணு.’’

ஆசிரியையின் முகம் மகிழ்ச்சியடைந்தது. ``குட்... இப்போ பழைய கேள்விக்கு வருவோம். இப்போ சொல்லு... நான் உனக்கு ஒரு ஆப்பிள் (எண்ணிக்கையைக் காட்ட உயர்ந்த ஆசிரியையின் விரல்கள்), இன்னொரு ஆப்பிள், அப்புறம் இன்னொரு ஆப்பிள் கொடுக்கிறேன்... உன்கிட்ட மொத்தம் எத்தனை ஆப்பிள் இருக்கும்?’’

மாணவன் பதில் சொன்னான்... ``நாலு.’’

``அது எப்படி ராஜூ...’’ படபடக்கும் குரலில் ஆசிரியைக் கேட்டார்.

``நான்தான் ஏற்கெனவே ஒரு ஆப்பிளை பேக்குலவெச்சிருக்கேனே...’’

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்