வெளியிடப்பட்ட நேரம்: 14:13 (04/04/2018)

கடைசி தொடர்பு:14:13 (04/04/2018)

``இப்படி நடக்கும்னு எனக்கு முன்னாடியே தோணிருக்கு!" இந்த தேஜா வூ எதனால் நிகழ்கிறது? #Déjàvu

இது என்ன ஒரு மாயசக்தியா? இதை வைத்து எதிர்காலத்தைக் கணிக்கும் திறன் நமக்கு இருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாமா? இப்படியெல்லாம் எண்ணங்கள் நமக்கு நிச்சயம் மேலோங்கும்.

``இப்படி நடக்கும்னு எனக்கு முன்னாடியே தோணிருக்கு!

முன் குறிப்பு: இந்தக் கட்டுரை அல்லது இதில் குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் ஒரு விஷயம், உங்களுக்கு ஏற்கெனவே பரிச்சயமானதாகவோ, பழக்கப்பட்டதாகவோ புலப்படக் கூடும். ஆனால், எங்கே எப்படி என்பது நினைவில் இருக்காது. இது உண்மையாகவும் இருக்கலாம். தேஜா வூ-வாகவும் இருக்கலாம்.

சென்னை உங்களுக்குப் புதிய இடம். புதிய வேலை கிடைத்து இங்கே வந்திருக்கிறீர்கள். முதல் வார விடுமுறையின் போது, நண்பன் ஒருவனுடன் பெசன்ட் நகர் பீச்சுக்குச் செல்கிறீர்கள். இதுவரை நீங்கள் அங்கே சென்றதே கிடையாது. இதுவே முதல் முறை. கண்களில் ஆர்வம் மின்ன, பீச் மணலில் பாதங்களைப் புதைத்து அமர்கிறீர்கள். கடலை ஆச்சர்யமாக உற்று நோக்குகிறீர்கள். சட்டென மனதில் ஒரு மெல்லிய சலனம். இதே கடற்கரைக் காட்சி, இதே மணல், முன்பே நீங்கள் எங்கேயோ பார்த்திருப்பதாகத் தோன்றுகிறது. கனவிலா? இல்லை நிஜத்திலேயா? தெரியவில்லை. ஆனால், இதே இடம், சினிமாவில் சொல்வது போல இதே ஃப்ரேம்! யோசித்து யோசித்து தலை வலித்ததுதான் மிச்சம். நண்பனிடம் தயங்கித் தயங்கிக் கூறினால், விழுந்து விழுந்து சிரிக்கிறான். அவ்வளவுதான். இனி உங்கள் வாழ்நாளில் வேறு எங்கு இப்படித் தோன்றினாலும் வெளியே சொல்லக் கூடாது என்று உறுதிமொழி எடுக்கிறீர்கள். யார் இப்படி அவமானப்படுவது? அதன் பிறகு, இதைப் போல பல இடங்களில், பல சூழ்நிலைகளில் தோன்றியபோதும், நீங்கள் வெளியே சொல்லவில்லை. நிச்சயம் இப்படி உங்கள் வாழ்விலும் நடந்திருக்கக்கூடும். இதை அறிவியல் ரீதியாக  Déjà vu என்று அழைக்கிறார்கள்.  பிரெஞ்சு வார்த்தையான இதற்கு அர்த்தம், 'ஏற்கெனவே பார்த்தது'!

தேஜா வூ

இந்த தேஜா வூவை இரண்டாகப் பிரிக்கலாம். ஒன்று இடம் சார்ந்தது, மற்றொன்று நிகழ்வுகள் சார்ந்தது. ஏதேனும் ஒரு புதிய இடத்துக்குச் செல்லும்போது இந்த உணர்வு மேலோங்கலாம். அதாவது அந்த இடத்தை நீங்கள் ஏற்கெனவே பார்த்தது போன்ற ஓர் எண்ணம். இதை Déjà visite (ஏற்கெனவே சென்று பார்த்தது) என்று அழைக்கிறார்கள். இப்போது இடத்தை விட்டு விடுங்கள். ஏதேனும் ஒரு நிகழ்வை எடுத்துக் கொள்வோம். உங்கள் நண்பன் அன்று பளீர் மஞ்சள் நிறத்தில் சட்டை அணிந்து வருகிறான். இனிப்புகள் வழங்குகிறான். பிறந்தநாள் என்கிறான். இந்தச் சம்பவம் உங்களுக்கு ஏற்கெனவே நடந்தது போல தோன்றுகிறது. இங்கே சம்பவம் நடந்த இடம் ஞாபகம் இல்லை. சம்பவம் மட்டுமே நினைவில் இருப்பதாக உணர்கிறீர்கள். இதை Déjà vecu (ஏற்கெனவே உணர்ந்தது) என்று அழைக்கிறார்கள். 

சரி, இது என்ன ஒரு மாயசக்தியா? இதை வைத்து எதிர்காலத்தைக் கணிக்கும் திறன் நமக்கு இருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாமா? இப்படியெல்லாம் எண்ணங்கள் நமக்கு நிச்சயம் மேலோங்கும். ஆனால், இது உண்மையில் ஒரு பெரிய விஷயமே இல்லை. இது நம் மூளை நிகழ்த்தும் ஒரு கண்ணாமூச்சி ஆட்டம் மட்டுமே. சொல்லப்போனால் இதை நம் நினைவகத்தில் நிகழும் சிறு கோளாறு (Memory Glitch) எனலாம். இதற்கு இது காரணமாக இருக்கக் கூடும் என்று பல்வேறு விளக்கங்கள் பல்வேறு அறிவியலாளர்களால் வழங்கப்படுகின்றன. அவற்றில் முக்கியமான சிலவற்றை பார்ப்போம்.

இந்த தேஜா வூ ஏதோ ஒரு சிலருக்கு மட்டும் நிகழும் அறிய நிகழ்வு கிடையாது. உலக மக்கள் தொகையில் 60 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு இது அவ்வப்போது நிகழ்கிறது. அதுவும் குறிப்பாக 15 முதல் 25 வயதிற்குள் இருப்பவர்களுக்கு, இது அதிக அளவில் நிகழும். மருத்துவ அறிவியலின்படி, தேஜா வூ இரண்டு சந்தர்ப்பங்களில் நேரலாம். நோயியல் (Pathology) படி கன்னமடல் வலிப்புநோய் (Temporal-Lobe Epilepsy) ஏற்படும்போது தேஜா வூ நிமிடங்கள் தொடர்ந்து நிகழ வாய்ப்புண்டு. ஆனால், நம்மைப் போன்ற சாமானியர்களுக்கு, முழு ஆரோக்கியத்துடன் இருக்கும்போதும் தேஜா வூ நிகழும். இவைதான் நாம் மேலே பார்த்த சில உதாரணங்கள். ஒரு சில சமயங்களில் நீங்கள் நோய்க்காக எடுக்கும் விதவிதமான மாத்திரைகளால், அதன் பக்க விளைவுகளால்கூட, இந்த தேஜா வூ நிமிடங்கள் அடிக்கடி நிகழலாம். 

ஒரு சிலர் இதை ஒரு ஃபேன்டஸியாக, எதிர்காலத்தை கணிக்கக் கூடிய சக்தியாகப் போற்றுகிறார்கள். ஆனால், பெரும்பாலான உளவியலாளர்களின் கருத்துப்படி, இது நம் மூளை செய்யும் விளையாட்டு மட்டுமே. நிகழ்காலத்தின் சில நொடிகளை இறந்த காலமாக கணக்கில் கொண்டு மூளை தன்னையே குழப்பிக் கொள்கிறது அவ்வளவே. இந்த விளக்கத்தைக்கூட நீங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவாறு எனக்கு இந்தக் காட்சி முன்னரே தோன்றியிருக்கிறது என்று உங்களைக் குழப்பி எடுக்கும். தேஜா வூ-வை விளக்க, புரிந்துகொள்ள பல விதமான ஆராய்ச்சிகள் தற்போதும் நடந்து வருகின்றன. அதில் சில வருடங்களுக்கு முன்னர் நடந்த இந்த ஆய்வு சற்றே சுவாரஸ்யமானது.

ஸ்காட்லாந்தில் உள்ள செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான அகிரா ஓ'கானர் (Akira O’Connor), தன் குழுவினருடன் இணைந்து தேஜா வூ குறித்து ஆராய்ச்சி செய்துள்ளார். இந்த தேஜா வூ-வில் உள்ள பிரச்னை என்னவென்றால், இது எப்போது நிகழ்கிறது, எதனால் நிகழ்கிறது, எது நடந்தால் இது நிகழும் என்றெல்லாம் நாம் கணிக்கவே முடியாது. ``இப்போ தேஜா வூ வரணும்" என்று நீங்கள் உட்கார்ந்தால், ஒன்றுமே நடக்காது. பின்பு, எப்படி இது குறித்து ஆய்வு செய்ய? இதைச் சரிக்கட்ட, தேஜா வூ உணர்வைச் செயற்கையாகத் தூண்டிவிட ஒரு வழியைக் கண்டுபிடித்தது அகிராவின் குழு.

பொய்யான நினைவுகளை நம் நினைவகத்தில் பதிய வைப்பதன் மூலம் தேஜா வூ வரும் வாய்ப்பை அதிகப்படுத்தலாம் என்கிறார்கள் இவர்கள். உதாரணமாக, உங்களிடம் ஒருவர் இரவு சம்பந்தமான வார்த்தைகளைக் கூறுகிறேன் என்று தலையணை, கட்டில், நட்சத்திரம், கனவு போன்ற வார்த்தைகளைக் கூறுகிறார். இது போகிறபோக்கில் மட்டுமே உங்கள் காதில் விழுகிறது. நீங்கள் சிரத்தையுடனும், கவனத்துடனும் இதைக் கேட்கவில்லை. பின்னர் ஒரு நாளில், அதே நபர் உங்களிடம் வந்து அன்று அவர் சொன்ன வார்த்தைகளை நினைவுக் கூரச் சொல்கிறார். உங்கள் மூளையில் அது இரவு சம்பந்தமான வார்த்தைகள் என்று மட்டுமே நினைவில் இருக்கும். அவர் தலையணை, கட்டில், நட்சத்திரம், கனவு வார்த்தைகளுடன் தூக்கம் என்ற வார்த்தையையும் சேர்த்து அடுக்க, உங்கள் மூளை `தூக்கம்' என்ற வார்த்தையும் அன்று நீங்கள் கேட்டதாகவே எடுத்துக்கொள்ளும். அவரே பின்னர், நான் `தூக்கம்' என்ற வார்த்தையை அன்று கூறவில்லை என்று கற்பூரம் அடித்து சத்தியம் செய்தால்கூட நீங்கள் அதை ஏற்காமல் குழப்பமடைவீர்கள். காரணம், அது உங்களுக்குப் பழக்கப்பட்ட வார்த்தையாகத் தோன்றும். இது போலத்தான் தேஜா வூ செயல்படுகிறது. 

தேஜாவூ

இது தவிர தேஜா வூ ஏற்பட இவைதான் காரணம் என இரண்டு எளிய விளக்கங்களை அளிக்கிறார்கள். 

ஒரு விஷயத்தை நீங்கள் பார்க்கும்போதே, அதன் தொடர்பான, இல்லை அதையே நீங்கள் ஏற்கெனவே பார்த்திருக்கிறீர்களா என உங்கள் மூளை பழைய நினைவுகளைத் தோண்ட தொடங்கும். இருக்கிறது என்றால், அந்த நினைவை உங்கள் கண்முன் நிறுத்தும். பின்புதான் அதை நீங்கள் ஏற்கெனவே பார்த்திருப்பதை உணர்வீர்கள். ஆனால், இந்த தேஜா வூ நிகழ்வின்போது, உங்கள் மூளை பழைய நினைவுகளைத் தேடி ஆராய்ந்து உங்கள் கண்முன் நிறுத்தும் முன்னரே, அது உங்களுக்குப் பழக்கப்பட்ட நினைவாக நீங்கள் நினைத்துக் கொள்வீர்கள். ஆனால், உங்கள் மூளையால் இல்லாத ஒரு நினைவைக் கண் முன் நிறுத்த முடியாது அல்லவா? இதுதான் தேஜா வூ குழப்பத்துக்குக் காரணம்.

இரண்டு கண்களிலிருந்தும் நம் மூளையின் காட்சிப் புறணிக்குத் (Visual Cortex) தகவல்கள் சீராக ஒரே நேர்கோட்டில் சென்று கொண்டிருக்கும். இதில், சில சமயம் மாற்றங்கள் நிகழும். அதாவது, ஒரு காட்சி குறித்த தகவல்களை நம் காட்சிப் புறணிக்கு அனுப்பும் வேலையைச் செய்யும் கண்களில் ஏதோ ஒன்று வேகமாகச் செயல்பட்டிருக்கும். உதாரணத்துக்கு, ஒரு குதிரை குறித்த காட்சியை உங்கள் இடது கண், வலது கண்ணுக்கு முன்பாகவே அனுப்பி விடுகிறது. அது உங்கள் நினைவகத்தில் பதியும் முன்னமே, வலது கண்ணின் தகவலும் வந்து சேர்கிறது. உங்கள் மூளை ஏற்கெனவே, இடது கண் அளித்த தகவலை படித்து விட்டதால், இந்தக் குதிரைக் காட்சி இப்போது ஏற்கெனவே உங்களுக்குப் பரிச்சயமான ஒன்றாகத் தோன்றும். ஆனால், அதை உங்கள் நினைவகத்தில் தேடினால் கிடைக்காது. ஏனென்றால், இடது கண் கொடுத்த தகவல்தான் உங்கள் நினைவகத்தில் இன்னும் பதியவில்லையே? இது உங்களுக்கு தேஜா வூ நிமிடங்களாக விரியும்.

தேஜா வூ என்பது ஒரு மாயசக்தியோ, வியாதியோ கிடையாது. இது ஒரு சாதாரண செயல்பாடு மாற்றம் மட்டுமே. உங்களுக்கு அடிக்கடி தேஜா வூ நிகழ்ந்தால் மட்டும் மருத்துவரை அணுகுங்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்