Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“நான்தான் அப்படி ட்வீட் பண்ணேன்னா, நம்ப மாட்றாங்க!” - ஐ.பி.எல். புறக்கணிப்பு பற்றி சுமந்த் சி. ராமன்

Chennai: 

சென்னையில் ஐபிஎல் போட்டிகளைப் புறக்கணிக்க வேண்டும் என்று பலரும் குரல் எழுப்பிவரும் நிலையில் சமூக வலைத்தளங்களில் அதிக கவனம் ஈர்த்தது கிரிக்கெட் வர்ணனையாளர் சுமந்த் சி.ராமனின் ஸ்டேட்டஸ்தான்.

11-வது ஐபிஎல் போட்டிகள் வரும் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கவுள்ளது. மொத்தம் 60 போட்டிகள் கொண்ட இத்தொடரில் 7 போட்டிகள் சென்னை சேப்பாக்கத்திலுள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இந்தச் சென்னைப் போட்டிகளைத்தான் புறக்கணிக்க வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்துள்ளார் சுமந்த் ராமன்.

சுமந்த் ராமன்

ட்விட்டரில் அவர் இட்டப் பதிவு இதுதான். "இந்த சீசனில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் நான் பங்கேற்கப் போவதில்லை. போட்டியைக் காண மட்டுமல்ல,  ஐபிஎல் போட்டி குறித்த தொலைக்காட்சி  நிகழ்ச்சிகளிலும், வர்ணனைகளிலும் பங்கேற்கப் போவதில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அல்லது அதற்கு நிகரான அமைப்பு உருவாக்கப்படும்வரை இது தொடரும். வாழ்க்கையில் விளையாட்டைவிட முக்கியமான விஷயங்களும் உண்டு.  இந்த நேரத்தில் நாம் விவசாயிகளின் பக்கம் நிற்கவேண்டும் என நம்புகிறேன்" எனப் பதிவிட்டிருந்தார் சுமந்த். 

சுமந்த் ராமன்

தீவிர கிரிக்கெட் ரசிகரும், வர்ணனையாளருமான சுமந்த் ராமனின் இந்தத் திடீர் உக்கிர ஸ்டேட்டஸுக்கு என்ன காரணம் என அவரிடமே கேட்டோம்.

”முதல்ல ஒரு விஷயத்தை தெளிவுபடுத்திடுறேன். அந்த ட்வீட்டைப் போட்டது நான்தான். சிலர் நான்தான் அந்த ட்வீட் போட்டேன்னே நம்ப மாட்றாங்க.  நம்புங்கப்பா அது நான்தான். 

கிரிக்கெட்டின் மிகப்பெரிய ரசிகன். அதுலயும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியோட வெறித்தனமான ஃபேன். இருந்தாலும் உச்ச நீதிமன்றம் சொன்னதுக்குப் பிறகும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் இருக்குறதுக்கு எதிர்ப்பு காட்ற விதமாதான் நான் அந்த ட்வீட் போட்டேன். நான் இந்த ஐபிஎல் போட்டிகள்லயும் சரி, ஐபிஎல் சார்ந்த டிவி நிகழ்ச்சிகள்லயும் சரி கலந்துக்கமாட்டேன்.

இந்த முடிவை எடுக்குறதுக்கு முன்னாடி சில டிவி நிகழ்ச்சிகள்ல பேசியிருக்கேன். அதை இனிமேல்தான் டிவில ஒளிபரப்புவாங்க. அதையும் ஒளிபரப்பாதீங்கன்னு அந்த டிவி நிர்வாகிகளிடம் சொல்லிட்டேன்.

நிறைய பேர் கிரிக்கெட் வீரர்களை விளையாடவிடாமல் அவங்களை முற்றுகை பண்ணுவோம்னு சொல்றாங்க. ஆனா அப்படி பண்ணறதுல எனக்கு உடன்பாடில்ல. அதேமாதிரி, ஸ்டேடியம்ல மேட்ச நடக்குறப்ப சார்ட்ல எழுதி எதிர்ப்பைக் காட்டுவோம்னு சிலர் சொல்றாங்க. அதுக்குச் சாத்தியக்கூறுகள் ரொம்பக்கம்மி.

மேட்ச் நடக்குறப்ப யாரும் கிரவுண்டுக்குப் போய் பார்க்காம இருக்கணும்னுதான் நான் சொல்றேன். அப்பதான் அந்த மேட்ச் இந்தியா முழுக்க ஒளிபரப்பு ஆகுறப்ப ஆடியன்ஸ் இல்லாத காலி கிரவுண்ட் பதிவாகும். அது மேட்ச் பாக்குற பல கோடி பேருக்கு நம் நோக்கத்தைக் கொண்டு போய் சேர்க்கும். இன்னைக்கு நடக்குற பந்த், கடையடைப்பு இது எல்லாமே நம்ம ஊர் மீடியால மட்டும்தான் நியூஸாகும். ஆனா, நான் சொல்ற மாதிரி நடந்தா அது இந்தியா முழுக்க உள்ள பல மீடியாவுலயும் பதிவாகும். அது மிக மிக முக்கியமான ஓர் எதிர்ப்பா பதிவாகும். இப்படி நம்மளோட எதிர்ப்பை வெளிப்படுத்திப் போராட்டம் பண்ணினா, அது பொதுமக்களுக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் இருக்கும். அதே சமயம் விவசாயிகளுக்கான நம் குரலாவும் இருக்கும்" எனப் படபடவெனப் பேசினார் சுமந்த்.

இப்பவாவது நம்புங்கப்பா.... சுமந்த் ராமனுக்கு அட்மின் எல்லாம் யாரும் இல்லயாம்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement