வெளியிடப்பட்ட நேரம்: 14:57 (06/04/2018)

கடைசி தொடர்பு:14:57 (06/04/2018)

``தம்பி... இங்க நோ செல்ஃபி!” - செல்ஃபி எடுக்க ஆபத்தான இடங்களை கண்டுபிடிக்குறாங்கப்பா

 

செல்ஃபி

புகைப்படம் என்பதே வாழ்வின் அழகிய தருணங்களைப் பதிவு செய்வதுதான். அப்படிப்பட்ட  அழகிய தருணங்களை ஆபத்து நிறைந்ததாக மாற்றியது செல்ஃபி என்ற விஷயம். மொபைலில் ஃபிரன்ட் கேமரா என்பது கவனிக்கப்படாத காலங்களில் செல்ஃபி என்ற வார்த்தையே மக்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனால், எப்பொழுது ஸ்மார்ட்போன்கள் பிரபலமாகத் தொடங்கியதோ அப்பொழுதிருந்து செல்ஃபி மோகம் மக்களிடையே படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. குறிப்பாக இளைஞர்கள் அதிகமாக செல்ஃபி என்ற விஷயத்திற்கு அடிமையானார்கள். காலையில் எழுவதிலிருந்து இரவு தூங்கச் செல்லும் வரைக்கும் செல்ஃபியாக எடுத்து ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என சமூக வலைதளங்கள் பலவற்றில் அப்லோடு செய்வதை கடமையாகவே கடைப்பிடித்து வருகிறார்கள் . 

தொடர்ந்து அதிகரித்த விபத்துகள்

விபத்துக்கள்

செல்ஃபி எடுப்பவர்கள் சாதாரணமாக எடுத்துக்கொண்டிருந்த வரைக்கும் யாருக்கும் எந்த விதத்திலும் பிரச்னை ஏற்படவில்லை. ஆனால், அதன் மீதான பார்வை பொழுதுபோக்கு மனநிலையிலிருந்து மாறி சாகசமான விஷயமாகப் பார்க்கத் தொடங்கிய போதுதான் ஆரம்பித்தது பிரச்னை. ஆபத்தான இடங்களிலிருந்து செல்ஃபி எடுப்பது என்பதை சமூக வலைதளங்களில் சாகசமாகப் பார்க்கப்பட்டது. ஆபத்தான இடங்களிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களுக்கு குவியும் லைக்குகளால் ஈர்க்கப்பட்ட பலர் அப்படிப்பட்ட செல்ஃபி எடுக்க விரும்பினார்கள். மிகவும் உயரமான இடங்கள், ஆபத்தான விலங்குகளின் அருகே, ஓடும் ரயிலின் அருகே என மக்கள் ஃசெல்பி எடுக்க விரும்பும் ஆபத்தான இடங்களின் பட்டியல் சற்றே நீளம்தான். செல்ஃபி எடுக்கும்போது ஏற்படும் உயிரிழப்புகளைப் பொறுத்தவரையில் உயரமான இடத்திலிருந்து விழுந்தவர்கள்தாம் அதிகம். அதற்குப் பிறகு நீரில் மூழ்குதல், ரயிலில் அடிபடுதல் ஆபத்தான விலங்குகளுக்கு அருகே எனப் பல விதங்களில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. 

இந்தியாவுக்குத்தான் முதலிடம்

ஆபத்தான செல்ஃபி

தொடக்கத்தில் இது போன்று செல்ஃபி எடுக்கும் போது நிகழ்ந்த விபத்துகளைப் பற்றி செய்திகள் வெளியாகும்போது அந்த விஷயத்தை யாரும் கவனத்தில் கொள்ளவில்லை. ஆனால், தொடர்ச்சியாக உயிரிழப்புகள் ஏற்படத்தொடங்கிய போதுதான் உலகம் விழித்துக்கொண்டது. இதற்குப் பின்னால் இருக்கும் ஆபத்தை உணரத்தொடங்கியது. பல நாடுகளில் செல்ஃபியால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கும் பொருட்டு ஆபத்தான இடங்களில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டன. சில இடங்களில் செல்ஃபி எடுப்பதற்குத்  தடை விதிக்கப்பட்டன. பல நாடுகளைப் போலவே இந்தியாவிலும் செல்ஃபி எடுக்கும் போது ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரிக்கத் தொடங்கியது. சில மாதங்களுக்கு முன்னால் கூட இளைஞர் ஒருவர் தண்டவாளத்தின் அருகிலிருந்து செல்ஃபி எடுக்கும் போது அவர் மீது ரயில் மோதுவதைப் போல எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகப் பரவியது. இங்கே நமது ஊரில் கூட பல சம்பவங்கள் நிகழ்ந்தவாறுதான் இருக்கின்றன. உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது செல்ஃபியால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகமாக நிகழ்வதில் முதலிடம் இந்தியாவுக்குத்தான். பல வருடங்களாகவே இந்த விஷயத்தில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. இங்கே அதைப் பற்றிய விழிப்புஉணர்வு போதிய அளவில் இல்லாததுதான் முக்கியமான அதற்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. வெளிநாடுகளில் குறைந்த பட்சம் ஆபத்தான இடங்களில் புகைப்படம் எடுப்பதைத் தவிர்க்கும் படி எச்சரிக்கைப் பலகைகளை வைத்திருப்பார்கள். ஆனால், இந்தியாவில் அப்படி இருக்கும் இடங்கள் மிகக்குறைவுதான்        .

எச்சரிக்கை செய்யச் சொல்லும் மத்திய அரசு 

இந்நிலையில் மக்களவையில் செல்ஃபி எடுக்கும் போது ஏற்படும் உயிரிழப்புகள் பற்றிய ஒரு கேள்விக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் பதிலளித்திருக்கிறார். அதன்படி சுற்றுலாத்தளங்களில் இனிமேல் ஆபத்தான பகுதிகளைக் கண்டறிந்து அந்த இடங்களில் செல்ஃபி எடுக்கத் தடை செய்யப்பட்டுள்ளது என்பதை மக்களுக்கு உணர்த்தும் வகையில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். மற்றும் சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்கள் மூலமாக மக்களுக்கு இதிலிருக்கும் ஆபத்துகளைப் பற்றி விழிப்புஉணர்வு ஏற்படுத்த வேண்டியது மாநில அரசுகளின் கடமை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். எனவே, இனிமேல் ஆபத்தான இடங்களில் செல்ஃபி எடுப்பதைத் தடுக்கும் வகையில் அரசு எச்சரிக்கை செய்வதற்கு வாய்ப்புள்ளது. அதை மீறுபவர்களுக்கு அபராதங்கள் விதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. இது போன்று அரசு எடுக்கும் விழிப்புஉணர்வு நடவடிக்கைகளால் எதிர்காலத்தில் அபாயகரமான இடங்களில் செல்ஃபி எடுக்கும்போது ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறையும் என நம்பலாம்.

ஆனால், இதற்கும் அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டுமா? நம் உயிர் நமக்கு முக்கியமில்லையா?


டிரெண்டிங் @ விகடன்