``அண்ணா பல்கலைக்கழகத்தை ஊழலற்ற பல்கலைக்கழகமாக மாற்றுவேன்!’’ - புதிய துணைவேந்தர் சூரப்பா

சர்வதேச அளவில் அண்ணா பல்கலைக்கழகத்தை மேம்படுத்துவதே என்னுடைய இலக்கு - புதிய துணைவேந்தராகப் பதவி ஏற்க உள்ள பேராசிரியர் சூரப்பா

``அண்ணா பல்கலைக்கழகத்தை ஊழலற்ற பல்கலைக்கழகமாக மாற்றுவேன்!’’ - புதிய துணைவேந்தர் சூரப்பா

அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக கர்நாடகாவைச் சார்ந்த பேராசிரியர் சூரப்பா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பெங்களூருவில் உள்ள இந்தியா அறிவியல் கழகத்தில் 24 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றிய அனுபவம் நிறைந்தவர். பஞ்சாபில் புதிதாக ஏற்படுத்தப்பட்ட ஐ.ஐ.டி-யின் இயக்குநராகவும் பணியாற்றி இருக்கிறார். 

சூரப்பா

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் கெளரவப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் சூரப்பாவை நியமித்து இருக்கிறார். இவரது நியமனம் தொடர்பாக ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், மத்திய மனிதவளத்துறையின் தரவரிசையில் முதன்மை இடத்தைப் பிடித்திருக்கும் பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தின் பேராசிரியர் சூரப்பா அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகச் செயல்படுவார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மைசூர் பல்கலைக் கழகத்தில் பி.எஸ்.சி படிப்பை முடித்த சூரப்பா, பொறியியல் படிப்பு, முதுநிலை அறிவியல் படிப்பு, முனைவர் பட்டம் என அனைத்தையும் இந்திய அறிவியல் கழகத்தில் பெற்றிருக்கிறார். மேலும், படித்து முடித்தவுடன் இந்திய அறிவியல் கழகத்திலேயே உதவி பேராசிரியராகப் பணிக்குச் சேர்ந்தவர் படிப்படியாக உயர்ந்து டீன் பதவியையும் பெற்றிருக்கிறார். கர்நாடகா அறிவியல் தொழில்நுட்ப அமைப்பில் செயலாளராகவும் பணியாற்றியிருக்கிறார். இவருக்கு கர்நாடகா திறந்த நிலை பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்திருக்கிறது.

பேராசிரியர் சூரப்பாவிடம் பேசினோம். ``இந்திய அளவில் தொழில்நுட்பக் கல்வியில் அண்ணா பல்கலைக்கழகம் சிறந்த பெயரைப் பெற்றிருக்கிறது. இந்தச் சிறப்பை மேலும் பலப்படுத்தி சர்வதேச அளவில் பெயரெடுக்கப் பாடுபடுவேன். 

இதுவரை இந்திய அறிவியல் கழகம், இந்தியத் தொழில் நுட்பக்கழகம் போன்றவற்றில் பணியாற்றியிருந்தாலும், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியை ஒரு சவாலானதாகவும், மிகப்பெரிய கல்வி நிறுவனத்தைக் கையாள்வதற்குக் கிடைத்த வாய்ப்பாகவும் பார்க்கிறேன். இதுவரை மாநிலப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய அனுபவம் இல்லை என்றாலும் என்னுடைய அனுபவம் மற்றும் திறமையை முழுமையாகப் பயன்படுத்தி அண்ணா பல்கலைக்கழகத்தை மிகப்பெரிய உயரத்துக்குக் கொண்டு செல்வேன்.

அடுத்த மூன்று ஆண்டுகளில், ஆசிரியர்களின் திறனையும், மாணவர்களின் அறிவாற்றலையும் மேம்படுத்தி, ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஊக்குமளித்து, புதிய கண்டுபிடிப்புக்கான ஆய்வகங்களை ஏற்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்படும். அத்துடன்,  நிர்வாகத்தில் வெளிப்படத்தன்மை கொண்டு வருவேன். இங்கு திறமையானவர்கள் இருக்கிறார்கள். அவர்களை மேலும் திறமையானவர்களாக மாற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வேன். மேற்கத்தியப் பல்கலைக்கழகங்கள் சிறந்த கல்வி வழங்குவதிலும், மேம்பட்ட நிர்வாகத்திறனாலும் சிறப்பு நிலையை எட்டி இருக்கின்றன. அதே போன்ற நிலையை அண்ணா பல்கலைக்கழகத்தையும் எட்ட வைப்பேன். 

அண்ணா பல்கலைக்கழகம்

நான் ஏற்கெனவே பஞ்சாப் ரோபரில் உள்ள ஐ.ஐ.டி-யில் இயக்குநராகப் பணியாற்றிய போது, சிறந்த நிபுணத்துவம் பெற்றவர்களை தேர்வுக் குழுவாக அமைத்து 70 பேரைப் பேராசிரியர்களாக நியமித்திருக்கிறேன். அதைப்போலவே, அண்ணா பல்கலைக்கழகத்திலும் அறிவார்ந்த நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்று அண்ணா பல்கலைக்கழகத்திலும் பேராசிரியர்கள் நியமிக்கப்படுவர். அண்ணா பல்கலைக்கழகத்தை ஊழலற்ற பல்கலைக்கழகமாக மாற்றி அமைப்பதில் முழு கவனம் செலுத்துவேன்" என்கிறார் சூரப்பா. 

எப்போது பதவி ஏற்றுக்கொள்ள இருக்கிறீர்கள்? என்று கேட்டபோது, ``இந்திய அறிவியல் கழகத்தின் பணியிலிருந்து விலகி அடுத்த வாரத்தில் பதவி ஏற்றுக்கொள்ள இருக்கிறேன்" என்றார். 

அண்ணா பல்கலையின் 37- வருட வரலாற்றில் வெளி மாநிலத்தைச் சார்ந்த ஒருவர் துணைவேந்தராகப் பதவி ஏற்பது இதுவே முதல்முறை. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!