வெளியிடப்பட்ட நேரம்: 16:09 (07/04/2018)

கடைசி தொடர்பு:16:09 (07/04/2018)

நாவலில் எழுதியதுதான் 14 ஆண்டுகள் கழித்து நிஜத்திலும் நடந்தது... டைட்டானிக் மர்மம்!

நாவலில் எழுதியதுதான் 14 ஆண்டுகள் கழித்து நிஜத்திலும் நடந்தது... டைட்டானிக் மர்மம்!

சில விஷயங்கள் நம்மை ஆச்சயர்யப்படுத்தும், சில விஷயங்கள் நம்மை வியக்க வைக்கும், சில விஷயங்கள் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கும், சில விஷயங்கள் நம் அறிவுக்கு அப்பாற்பட்டு விளங்கும், சில விஷயங்கள் மர்மமாகவே தொடரும். 

டைட்டானிக் கப்பல் பிரமாண்டத்தின் உச்சம். ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்கு முன்னர், சரியாகச் சொல்ல வேண்டுமானால் ஏப்ரல் 15,1912 அன்று நள்ளிரவில் வடக்கு அட்லான்டிக்கில் ஒரு பனிப்பாறையின் மீது மோதி கடலில் மூழ்கியது. ஆயிரத்து ஐந்நூறுக்கும் மேற்ப்பட்ட பயணிகள் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். இது எல்லோருக்குமே தெரிந்த ஒன்றுதான். ஆனால், விஷயம் அதுவல்ல. நிஜ டைட்டானிக் கப்பல் மூழ்குவதற்கு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த ஒரு புதினத்தில் புனையப்பட்ட ஒரு கற்பனையான கப்பலுக்கும் நிஜ கப்பலுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு என்பதை நம்ப நமக்கு நிச்சயம் கால அவகாசம் தேவைப்படும்.கப்பல்கள் என்றாலே ஒற்றுமைகள் இருக்கும் என நினைக்கலாம். ஆனால், இந்த ஒற்றுமைகள் வேற லெவல்.

 Futility or The Wreck of The Titan:
1898 ம் ஆண்டு மார்கன் ராபர்ட்சன் (Morgan Robertson) எழுதிய Futility or The Wreck of The Titan புதினத்தின் கதைக்களத்தைச் சற்று சுருக்கமாகப் பார்ப்போம். நாயகன் பெயர் ஜான் ரோலண்டு ( John Rownald) அமெரிக்கக் கப்பல் படையின் அதிகாரி. மதுபான போதைக்கு அடிமையானதால் தன் வேலையை இழக்க நேரிடுகிறது. அதனால் டைட்டன் கப்பலில் பணிபுரிய வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுகிறார். அப்போது ஓர் இரவு டைட்டன் கப்பல் பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளான போது ஓர் இளம்பெண்ணைக் காப்பாற்றும் பொருட்டு இருவரும் சேர்ந்து கடலில் குதிக்கின்றனர். அந்த இளம்பெண் ஜானின் முன்னாள் காதலியின் பெண். பின்னர் இருவரும் ஒரு பயணிகள் கப்பலில் தஞ்சமடைகின்றனர். ஆனால், ஜான் காப்பாற்றிய பெண்ணின் தாயார் ஜான் தன் மகளைக் கடத்தியதாக அளித்த புகாரின் பேரில் ஜான் கைது செய்யப்படுகிறார். இருந்தாலும் நீதிபதி ஜானின் தரப்பில் நியாயம் உள்ளதை உணர்ந்து ஜானை விடுதலை செய்கிறார். மேலும், தன் மகளின் உயிரைக் காப்பாற்றியவரின் மேலேயே புகார் அளித்ததால் அப்பெண்ணின் தாயாரை எச்சரிக்கிறார். பின்னர், சிறிது வருடங்களிலேயே ஜானும் மரணமடைந்து விடுவதாக கதை செல்லும். டைட்டானிக் திரைப்படத்தைப்போலவே இப்புதினமும் சோக காவியம்தான். 

டைட்டானிக்

இப்போது கற்பனை கப்பலுக்கும் நிஜ கப்பலுக்கும் உள்ள ஒற்றுமைகளைப் பார்ப்போம்.

டைட்டானிக் கப்பல் எப்படி ஏப்ரல் மாதம் ஒரு நள்ளிரவில் பனிப்பாறையில் மோதியதோ அதே போன்று டைட்டன் கப்பலும் ஒரு ஏப்ரல் மாதத்தில் வடக்கு அட்லான்டிக்கில் பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளானது.

புதினத்திலும் சரி நிஜத்திலும் சரி அதிகப்படியான உயிர்ச் சேதத்திற்கு காரணம் போதுமான அளவு துணைப்படகுகள் (Lifeboats) இல்லாதது தான். டைட்டன் கப்பலில் மொத்தமே இருபத்துநான்கு துணைப்படகுகளே இருந்தன. அதேபோல் டைட்டானிக்கில் மொத்தமே பதினான்கு துணைப்படகுகள் இருந்தன.

இரு கப்பல்களுமே ``UNSINKABLE” அதாவது மூழ்கடிக்க முடியாதவை என்றே விளம்பரம் செய்யப்பட்டது.

மார்கன் ராபர்ட்சன்டைட்டன் கப்பல் ஏப்ரல் மாதம் நள்ளிரவில் வடக்கு அட்லான்டிக்கில் சுமார் மணிக்கு 25 knot வேகத்தில் பயணம் செய்து பனிப்பாறையில் மோதியது. newfounland-டிற்கு நானூறு மைல் தூரத்தில் விபத்து நடைபெற்றதாகப் புதினத்தில் கூறப்பட்டிருக்கும். அது போலவே நிஜ டைட்டானிக் கப்பல் வடக்கு அட்லான்டிக்கில் 221/5 knot வேகத்தில் பயணம் செய்து பனிப்பாறையில் மோதியது. newfounland-டிற்கு நானூறு மைல் தூரத்தில்தான் இந்த விபத்து நடந்தது.

மேலும், புதினத்தில் கூறப்பட்டிருந்த டைட்டன் கப்பலில் இரண்டாயிரத்து ஐந்நூறு பயணிகள் உயிரிழந்ததாகவும் பதின்மூன்று பேர் மட்டுமே உயிர் பிழைத்ததாகவும் கூறப்பட்டிருக்கும். டைட்டானிக் கப்பலில் பயணம் செய்த இரண்டாயிரத்து இருநூறு பயணிகளில் ஆயிரத்து ஐநூற்றுஇருபத்துமூன்று பேர் உயிரிழந்தனர். 705 பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர்.

இதன் விளைவாக நிஜ டைட்டானிக் கப்பல் விபத்துக்குள்ளாகி மூழ்கிய பிறகு மக்கள் பலரும் புதினத்தின் ஆசிரியரான மார்கன் ராபர்ட்சனை இப்படி ஒரு விபத்து நடக்கும் முன்னரே யூகித்து புதினம் எழுதியதாகக் கூறினர். ஆனால், மார்கன் ராபர்ட்சன் அதனை மறுத்தார். மேலும், மார்கன் ராபர்ட்சன் ``கப்பல் கட்டுமானத்தில் தனக்கு இருக்கும் ஆற்றலினால்தான் இந்தப் புதினத்தை எழுதினேன்" எனத் தெரிவித்தார்.

எவ்வளவோ அறிவியலும் விஞ்ஞானமும் வளர்ந்தாலும் சில கேள்விகளுக்கு விடை கண்டுபிடிக்க முடியாமல் நாம் இருக்கிறோம். அப்படி தான் Futility புதினமும் இன்று வரை உள்ளது. இலக்கியம் என்பது காலத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி என்று கூறுவர். ஆனால், அக்கண்ணாடி எதிர்காலத்தையும் காட்டுமா என்பதுதான் இங்கு கேள்வி.


டிரெண்டிங் @ விகடன்