வெளியிடப்பட்ட நேரம்: 10:27 (08/04/2018)

கடைசி தொடர்பு:09:07 (20/04/2018)

விஜய்யுடன் மோதிய முதுமலை கும்கி... போட்டியில் வென்றது யார்? - அத்தியாயம் 6

கும்கி

விஜய்யுடன் மோதிய முதுமலை கும்கி... போட்டியில் வென்றது யார்? - அத்தியாயம் 6

ஒரு காலில் மட்டும் செயின் கட்டப்பட்டிருந்ததால் செயினில் இருந்து விடுபட முதுமலை எவ்வளவோ முயற்சி செய்கிறது. அசம்பாவிதம் நடக்கப் போகிறது என்பதை யானை முகாமில் இருந்த எல்லோரும் உணர ஆரம்பிக்கிறார்கள். முதுமலையின் மாவூத் மாறன் பதறி அடித்து ஓடி வருகிறார். மாறன் முதுமலையை எச்சரிக்கிறார், குச்சியால் கட்டளைகளை இடுகிறார். ஆனால் எந்த மாற்றமும் நிகழவில்லை.  அதற்குள் விஜய் யானையின் மாவூத்தும் விஜய்யை அங்கிருந்து அப்புறப்படுத்த முயல்கிறார். முதுமலையின் ஆக்ரோஷமான உடல் மொழியும், பிளிறலும் மாறனின் மனதிற்குள் பீதியை உண்டாக்குகிறது. வன ஊழியர்கள், மாவூத்துகள் என எல்லோரும் முதுமலையின் பின் இரு கால்களுக்கு செயினை மாட்டுவதில் குறியாக இருக்கிறார்கள்.முதுமலை விஜய்யை பார்த்து அதிகமாக பிளிற ஆரம்பிக்கிறது.ஒரு மணி நேர இடைவெளியில் விஜய் மற்றும் மற்ற யானைகளை அவசர அவசரமாக அங்கிருந்து அழைத்து செல்கிறார்கள். பலகட்ட முயற்சிகளுக்குப் பிறகு முதுமலை யானையை செயினில் உதவியால் கட்டுக்குள் கொண்டுவருகிறார்கள். நினைத்ததைப் போல அன்றைய  தினம் வேறெந்த அசம்பாவிதங்களும் நிகழவில்லை.ஒட்டு மொத்த யானை முகாமும் நிம்மதியடைந்தது. ஆனால் அந்த நிம்மதி அதிக நாட்கள் நிலைக்கவில்லை. அதற்கான சூழ்நிலையை காலம் மீண்டும் வேறு ஒரு வகையில் உருவாக்கி கொடுத்தது. அடுத்து ஒரு மோதல் சூழ்நிலை அமைந்தால் இரு யானைகளுக்கும் அது நீயா நானா போட்டியாகத்தான் இருக்கும்.

1 அத்தியாயம்  2 அத்தியாயம்  3 அத்தியாயம்  4 அத்தியாயம்  5 அத்தியாயம் 

யானைகள் முகாமில் மதம் பிடித்த யானையை ஆற்றிற்குப் பக்கத்தில் இருக்கிற மரத்தில்  பதினைந்து மீட்டர் அளவுள்ள நான்கு பெரிய சங்கிலிகளால் கட்டி வைத்திருப்பார்கள். மரம் இருக்கிற இடத்திலிருந்து ஆற்றிற்கு வரும் அளவிற்கு சங்கிலியின் நீளம் பெரிதாக இருக்கும்.  மரம், ஆறு ஆகிய இரண்டு இடங்களைத் தவிர வேறு எங்கும் யானையால் நகரவே முடியாது. யானைக்கு உணவை ஆற்றங்கரையின் ஓரத்தில் கொண்டு போய் வைத்து விடுவார்கள். தண்ணீர் அருந்திவிட்டு உணவை உண்கிற  யானை மீண்டும் மரத்தின் பக்கத்திற்கு நகர்ந்தே சென்று விடும். மதம் பிடித்த யானை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப மூன்று மாதங்களாகும். அதுவரை யானையை அந்த இடத்தில்தான் கட்டிவைத்து கவனித்துக் கொள்வார்கள். அது டிசம்பர் மாதம், திடீரென  விஜய் யானைக்கு மதம் பிடிக்க ஆரம்பிக்கிறது. மதம் பிடித்திருந்த விஜய் யானையை ஆற்றின் ஓரத்தில் கட்டி வைத்திருந்தார்கள். அது மழைக்காலம் என்பதால் ஆற்றில் நீர் வரத்து அதிகமாக இருக்கிறது. விஜய் ஆற்றின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தது. அந்தச் சூழ்நிலையில் விஜய்க்கு  எதுவும் அசம்பாவிதம் நடந்துவிடக் கூடாது என நினைக்கிற யானை மருத்துவர் விஜய்யை வேறு இடத்திற்கு மாற்றலாம் என முடிவெடுக்கிறார்.

முதுமலை முகாம் யானை

மதம் பிடித்து கட்டி வைத்திருக்கிற விஜய்யை வேறு இடத்திற்கு மாற்றுவது அவ்வளவு எளிதான காரியமில்லை. மதம் பிடித்திருக்கும் பொழுது யானை எதற்கும் ஒத்துழைக்காது. மாறாக பக்கத்தில் யார் சென்றாலும் முதலில் தாக்கவே  முயற்சிக்கும். அப்படியிருக்கையில் எப்படி இன்னொரு இடத்திற்கு மாற்றுவது என யோசிக்கிறார்கள். கடைசியில் முதுமலை யானையை வைத்து விஜய்யை வேறு இடத்திற்கு மாற்றுவது என முடிவெடுக்கிறார்கள். இதைக் கேள்விப்படுகிற முதுமலை யானையின் மாவூத் மாறன்  “இந்த முயற்சி விபரீத விளைவை” ஏற்படுத்துமென எச்சரிக்கிறார். மதம் பிடித்திருக்கும் யானையை முதுமலையை  வைத்து இன்னொரு இடத்திற்கு மாற்ற முடியாது என எவ்வளவோ எடுத்துச் சொல்கிறார். “பயப்படுகிறீர்களா மாறன்” என அவரை நோக்கி கேள்வி எழுகிறது.

முதுமலை யானைக்கு 30 ஆண்டுகளாக மாவூத்தாக இருப்பவர் மாறன். இதற்கு முன்பே இரண்டு யானைகளும் பல முறை மோதிக்கொள்ள இருந்தன. மாவூத்துகளின் சாமர்த்தியத்தால் இது வரை எந்த அசம்பாவிதமும் நிகழாமல் இருந்தது. ஆனால் நிலைமை இப்போது சாதாரணமாக இல்லை. இரண்டு யானைகளும் மோதுவதற்கு   சந்தர்ப்பம் பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றன. அதிலும் விஜய் யானைக்கு மதம் பிடித்திருக்கிறது. முதுமலை யானைக்கு ஏதாவது நிகழ்ந்து விடுமோ என மாறன் உள்ளுக்குள் கவலைப்படுகிறார். வன அதிகாரிகளும், மருத்துவரும் ஒரு வழியாகப் பேசி மாறனைச் சம்மதிக்க வைக்கிறார்கள். காலை 10 மணி, மழை தூரல் போட்டுக் கொண்டிருந்தது. ஆற்றில் நீர் அதிகமாக ஓடிக் கொண்டிருக்கிறது. மாறன், முதுமலை யானையை விஜய் இருக்கிற ஆற்றுப்பகுதிக்குக் கொண்டு வருகிறார். செயினை அவிழ்த்து விஜய்யை  வேறு இடத்திற்கு மாற்ற முயற்சி நடக்கிறது. கால்கள் கட்டப்பட்டிருப்பதால் எளிதாக விஜய்யை வேறு இடத்திற்கு மாற்றி விடலாம் என தவறான முடிவை எடுக்கிறார்கள். மருத்துவர்கள், வன ஊழியர்கள், அதிகாரிகள் ஊர் மக்கள் என எல்லோரும் ஆற்றுக்கு மறு பக்கம் நின்று கொண்டிருக்கிறார்கள். விஜய் ஆற்றின் ஓரத்தில் நின்று கொண்டிருக்கிறது. முதுமலையைப் பார்த்த விஜய் மூர்க்கமாகி பிளிறுகிறது. முதுமலை கோபப்படாமல் இருக்க அதனை மாறன் பேசி பேசி சாந்தப்படுத்துகிறார். விஜய்யின் நடவடிக்கையைப் பார்த்ததும்,  முதுமலையின் உடல் மொழி மாறுவதை அதன் மீது அமர்ந்திருக்கும் மாறன் உணர ஆரம்பிக்கிறார்.

யானைகள் முகாம்

சுற்றி நடக்கிற விஷயங்களைக் கவனிக்கிற விஜய் பிளிறிக் கொண்டே  துள்ள ஆரம்பிக்கிறது. கால்கள் கட்டப்பட்டிருப்பதால் விஜய்யால் வேகமாக முன்னேற முடியவில்லை.விஜய்யின்  நடவடிக்கையைப் பார்த்து அதுவரை அமைதியாக இருந்த முதுமலை கோபமாகிறது. மாறனின் கட்டுப்பாட்டை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக முதுமலை விலகி  போக ஆரம்பிக்கிறது. மாறனின் கட்டளைகளை உதாசீனப்படுத்துகிறது. ஒரு சில நொடிகளில் ஆற்றில் நின்ற விஜய்யை நோக்கி ஆக்ரோஷமாக ஓடுகிறது. யானை மீது அமர்ந்திருந்த  மாறன் என்ன செய்வதென தெரியாமல் குச்சியை வைத்து முதுமலையைக் கட்டுப்படுத்த முயல்கிறார். ஆனால் எந்தப் பயனுமில்லை. நீண்ட தந்தங்களை கொண்ட முதுமலை விஜய்யை நேருக்கு நேர் தாக்க பாய்கிறது.  நான்கு கால்களும் கட்டப்பட்டிருந்தாலும் விஜய்யும் ஆக்ரோஷமாக முதுமலையை எதிர்கொள்கிறது. இப்படி சூழ்நிலை மாறுமென யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆற்றிற்கு அருகில் நின்று கொண்டிருந்த மருத்துவர் அதிகாரிகள் எல்லோரும்  முதுமலையைக் கட்டுப்படுத்தும்படி மாறனை நோக்கிக் கத்துகிறார்கள். அதற்குள் முதுமலை விஜய்யின் முன்னங்கால்களுக்கு இடையில் தந்தத்தால் வேகமாக குத்துகிறது. விஜய்யும் முதுமலையின் தலையில் வேகமாக மோதுகிறது. என்ன நடக்கிறது என யூகிப்பதற்குள்  விஜய் நிலை தடுமாறுகிறது. ஓடுகிற நீரில் ரத்தம் கலந்திருப்பதை பார்த்தவர்கள் அலற ஆரம்பிக்கிறார்கள். விஜய் யானை மெல்ல சாய்கிறது. முதுமலை விஜய்யின் அடிவயிறு பகுதியில் தந்தத்தால் குத்தி கிழித்திருந்தது. மாறன் முதுமலையை அடக்க முயல்கிறார். ஆனால் விஜய்யை குத்துவத்திலே குறியாக இருக்கிறது.விஜய் அடிபட்டு கீழே விழுகிறது. குச்சியை வைத்து அடித்ததில் முதுமலை எந்த அசைவும் இல்லாமல் கோபத்தில் பிளிற ஆரம்பிக்கிறது. முதுமலையைக் கட்டுப்படுத்தாவிட்டால் விஜய் யானையைக் கொன்று விடும் என மாறன் அஞ்சுகிறார்.

அப்போது மாறனுக்கு திடீரென ஒரு யோசனை தோன்றுகிறது. எப்போதும் யானைகளுக்குச் செடி கொடிகளை வெட்டுவதற்கு, முதுமலையைக் காட்டுக்குள் அழைத்து செல்வார். அப்போது செடிகளை வெட்டப் பயன்படும்  கத்தியை முதுமலையின் தலை பகுதிக்கு மேலாக வைத்திருப்பார். பொறிதட்டி உடனே அந்தக் கத்தியை எடுத்து திருப்பி பிடித்து முதுமலையின் நெற்றி பகுதியில் வைத்து மூன்று நான்கு முறை குத்துகிறார். முதுமலை மாறனின் கட்டுப்பாட்டுக்குள்  வருகிறது. அமைதியாக இரு என்கிற வார்த்தையை மிக சத்தமாக கட்டளையிடுகிறார். யானை அமைதியாகிறது. மிகப் பெரிய போராட்டத்திற்கு பிறகு முதுமலையை அங்கிருந்து மாறன் அழைத்துச் செல்கிறார். விஜய்க்கு மருத்துவ சிகிச்சை நடக்கிறது. நிகழ்வை நினைத்து மாறன் வருத்தப்படுகிறார். மருத்துவரும் ஊழியர்களும் தவற்றை உணர்கிறார்கள். சுமார் 4 மாதங்கள் விஜய் மருத்துவ சிகிச்சையில் இருந்தது. சிகிச்சை முடிந்து விஜய் சகஜ நிலைக்குத் திரும்புகிறது. இரண்டு யானைகளும் ஒன்றை ஒன்று பார்த்து விடக் கூடாது என்பதால் முதுமலையை வேறு ஒரு முகாமிற்கு மாற்றுகிறார்கள். அதன் பிறகு  இப்போது வரை இரண்டு யானைகளும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டதில்லை. ஆனால் சந்தர்ப்பம் பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றன.

மதம் கொண்ட யானை

கும்கி யானைகளைப் பயன்படுத்தி காட்டு யானைகளை விரட்டுவார்கள். கூட்டமாக இருக்கும் பெண் யானைகள் எப்போதும் கும்கி யானையை பார்த்தால் ஓடிவிடும். பெண் யானைகளை விரட்டுவதில் எந்தச் சிக்கலுமில்லை. ஏனெனில் அவை எப்போதும் குடும்பமாக இருப்பவை. குடும்பத்திற்கு எந்தச் சிக்கலும் வந்துவிடக் கூடாது என்பதில் பெண் யானைகள் கவனமுடன் இருக்கும். ஆனால் ஆண் காட்டு யானைகளுக்கு அப்படி குடும்பம் குட்டி என்று யாருமில்லை. பெண் யானை தலைமையில் குட்டியாக இருக்கிற ஆண் யானை 12 வயதாகும் பொழுது குடும்பத்திலிருந்து விரட்டப்படும். அதன் பிறகு அவை குடும்பத்தோடு சேர்வதேயில்லை. தனியாகவே காடுகளுக்குள் இருக்கிற ஆண் காட்டு யானைகள் மதம் பிடிக்கும் பொழுது மிகப் பெரிய அசம்பாவிதங்களை நிகழ்த்தும். மதம் பிடிக்கிற நேரங்களில் பெண் யானையோடு இணை சேர நடக்கிற சண்டையில் இன்னொரு ஆண் யானையைக் கொன்று விடுகிற யானை, இணைசேரும் பொழுது முரண்டு பிடிக்கும் பெண் யானைகளையும் குத்தி கொன்றுவிடுகிற சம்பவங்களும் நிகழும்.தனியாக இருக்கிற ஆண் யானைகள் கும்கி யானையைக் கொண்டு விரட்டினால் அவ்வளவு எளிதில் பணிந்து ஓடி போகாது. அவற்றை விரட்ட மிகப் பெரிய போராட்டங்களைக் கும்கியும் மாவூத்துக்களும் சந்திக்க வேண்டி வரும்.

அட்டகாசம் செய்த காட்டு யானையை விரட்ட கூடலூர் மண்வயல்  பகுதிக்கு முதுமலையை அழைத்து செல்கிறார்கள். காட்டு யானையை பார்த்த மாவூத் முதுமலையின் உதவியுடன் அதை துரத்துகிறார். காட்டு யானையை விரட்டிக் கொண்டு முதுமலை போய்க் கொண்டிருக்கிறது. காட்டு யானையும் பிளிறிக் கொண்டே ஓடுகிறது. பெரிய தந்தங்களை கொண்ட முரட்டு ஆண் யானை கும்கியை பார்த்து பயந்து ஓடுகிறது என மாறன் நினைத்துக் கொள்கிறார். அந்த நினைப்பு ஓரிரு நிமிடங்கள்தான் நிலைத்தது. திடீரென முன்னோக்கி சென்ற முதுமலை நின்று தலையை ஆட்டுகிறது.  மாறனின் உடல் வியர்க்க ஆரம்பிக்கிறது. ஏனெனில் ஓடிய காட்டு யானை முதுமலையை பார்த்து திரும்பி நின்றுக் கொண்டிருந்தது.

தொடரும்….


டிரெண்டிங் @ விகடன்