வெளியிடப்பட்ட நேரம்: 17:51 (08/04/2018)

கடைசி தொடர்பு:11:14 (09/04/2018)

பறவைகளுக்கு வானத்தில் சரியான திசையைக் காட்டுவது யார்?

பறவைகள் எப்படிச் சரியான வழியைக் கண்டுபிடிக்கின்றன. பூமியின் திசையை எப்படிஅறிந்து கொள்கின்றன என்பது போன்ற விஷயங்கள் பல வருடங்களாகவே மர்மமாக இருந்தன.

பறவைகளுக்கு வானத்தில் சரியான திசையைக் காட்டுவது யார்?

பறவைக்கூட்டம்

நமது ஊரில் இருக்கும்  வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் பற்றி பலருக்குத் தெரிந்திருக்கும். வருடத்தின் குறிப்பிட்ட சில மாதங்களில் வேடந்தாங்கலைத் தேடி பறவைகள் படையெடுத்து வரும். அவை உலகின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து இங்கே வருபவை. வடஅமெரிக்க கண்டத்தின் ஒரு மூலையில் இருக்கும் கனடா முதல் சைபீரியா வரை உலகின் பல இடங்களில் இருந்தும் பல்வேறு வகை பறவைகள் அங்கு வருகின்றன. இதில் பெரும்பாலானவை இனப்பெருக்கத்துக்காக வருபவை, சிலவை வேறு எங்கோ செல்லும் வழியில் இங்கே சில காலம் தங்கிச் செல்பவை. எது எப்படியாக இருந்தாலும் ஏதோ ஒரு இடத்திலிருந்து வெகு தொலைவில் இருக்கும் வேறு இடத்துக்கு வழி தவறாமல் வந்து சேர்கின்றன. இப்படிப் பல வருடங்களாக இந்த விஷயம் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது, அதில் வேடந்தாங்கல் என்பது சிறிய உதாரணம்தான் உலகம் முழுவதிலுமே பல இடங்களில் பறவைகளின் செயல்பாடு அப்படித்தான் இருக்கிறது.

பறவைகளின்பாதை தவறுவதில்லை

பறவை

வானத்தில் பறக்கும் பறவைகளைப் பார்க்கும்போது அவை இலக்கின்றி பறந்து திரிவதைப்போல தோன்றினாலும் உண்மையில் அவை அப்படிப் பறப்பதில்லை. அவைகளுக்குத் தெரிந்த வழியில்தான் பறந்து செல்கின்றன. எந்த ஒரு பறவையாக இருந்தாலும் காலையில் இரை தேடிச் செல்லும் பின்பு மாலையில் சரியாக தனது இடத்தை அடைந்துவிடும். பழக்கப்பட்ட இடங்களில் இருப்பதுதான் இப்படிச் சரியான பாதையைக் கண்டுபிடிக்கின்றன என்பதில்லை. எடுத்துக்காட்டாகப் புறாப் பந்தயத்தில் பல கிலோமீட்டர் தொலைவுக்கு அப்பால் சென்று பறக்க விடப்படும் புறாக்கள் சில நாள்களில் வளர்க்கப்படும் இடங்களுக்கு வந்து சேர்ந்து விடும். வானில் பறக்கும்போது திசையைச் சரியாக அறிந்துகொண்டால் மட்டுமே ஒரு பறவையால் சரியான பாதையைத் தேர்ந்தெடுக்க முடியும் என்பதால் இந்த விஷயத்தில் பல வருடங்களாகவே ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு பெரிய குழப்பம் உண்டு. 'பறவைகள் எப்படிச் சரியான வழியைக் கண்டுபிடிக்கின்றன?' அது மட்டுமின்றி  பூமியின் திசையை எப்படி அறிந்துகொள்கின்றன என்பது போன்ற விஷயங்கள் பல வருடங்களாகவே மர்மமாக இருந்து வந்தது.

திசையைக் கண்டுபிடிக்க உதவும் பூமியின் காந்தப்புலம்

பார்வையில் காந்தப்புலன்

பூமியைச் சுற்றி காந்தப்புலம் இருப்பது அனைவரும் அறிந்த விஷயம்தான். பூமியின் இந்த காந்தப்புலன் பல வகைகளில் உதவிக்கரமாக இருக்கிறது. பல வருடங்களாகவே காம்பஸ் எனப்படும் திசைகாட்டியின் உதவியுடன் மனிதர்கள் திசைகளை அறிந்து வந்திருக்கிறார்கள். பறவைகளும்கூட திசைகளை அறிவதற்குப் பூமியின் காந்தப்புலத்தைப் பயன்படுத்தக்கூடுமோ என்ற சந்தேகம் பல வருடங்களாக இருந்துவந்தது. எனவே, அதைச் சார்ந்து அவற்றின் மூளைக்குள் திசைகாட்டி இருக்கிறது, அதன் இறக்கைகளில் இருக்கும் இரும்புதான் திசையைக் கண்டறிய உதவுகிறது என்பது போன்ற கருத்துகள் பல வருடங்களாகவே கூறப்பட்டு வந்தன. இறுதியாகப் பறவைகள் எப்படி திசையை சரியாகக் கண்டறிகின்றன என்பதைக் கண்டறிந்திருக்கிறார்கள் ஜெர்மன் மற்றும் ஸ்வீடன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள். இவர்கள் ஜீப்ரா பின்ச் (zebra finche) மற்றும் யூரோப்பியன் ராபின் ( European robin) என்ற இரண்டு வகை பறவைகளில் நடத்திய தொடர்ச்சியான  ஆராய்ச்சிகளுக்குப் பின்னர்  Cry4 என்ற புரதம்தான் அவைகளுக்குத் திசையைக் கண்டறிவதற்கு உதவியாக இருக்கிறது என்பதை நிரூபித்திருக்கிறார்கள். கண்களின் ரெட்டினா பகுதியில் இருக்கும் இந்த Cry4 புரதம் கிரிப்டோகுரோம் என்ற வகையைச் சேர்ந்தது, இது தாவர வகைகள் மற்றும் விலங்குகளில் காணப்படும் வழக்கமான புரதமாக இருக்கிறது. இந்தப் புரதம் ஒளி உணர் தன்மையைக் கொண்டிருக்கிறது. இந்தப் புரதம் கண்களில் இருப்பதால் பறவைகளும் பார்வையின் மூலமாகவே பூமியின் காந்தப்புலத்தை அறிந்துகொள்ள உதவியாக இருக்கிறது. இந்தப் புரதம் சிரிகார்டியன் ரிதத்திலும் பங்கு வகிப்பது குறிப்பிடத்தக்கது. பறவைகள் இடம்பெயரும் காலகட்டத்தில் இந்தப் புரதம் பறவைகளுக்கு அதிகமாகச் சுரப்பதையும் கண்டறிந்திருக்கிறார்கள்.


டிரெண்டிங் @ விகடன்