Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

”அப்ப அவருக்கு வாடகைக்கு வீடு தரமாட்டாங்க!” - நம்மாழ்வார் பிறந்த நாள் விழா சுவாரஸ்யங்கள்

நம்மாழ்வார் பிறந்த நாள் விழா

கரூர் மாவட்டம், கடவூரில் உள்ள வானகத்தில் இயற்கை குறித்து முன்மாதிரி பண்ணையை உருவாக்க தான் வாங்கிப் போட்ட நிலத்தில் துயில் கொள்கிறார் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார். ஆனால், அவர் பற்ற வைத்த இயற்கை குறித்த தேடல் தீ, இயற்கையைக் காக்க நினைக்கும் சக்திகளாலும் இயற்கை மீது எய்யப்படும் பேரிடர்களை தகர்த்தெறியக் கிளம்பும் இளைஞர்களாலும் நாளுக்குநாள் பரபரவென எட்டுத் திக்கும் பரவிக் கொண்டிருக்கிறது. அந்த விழிப்பு உணர்வு ஊசி நம்மாழ்வார் கிழவன் போட்டது. குறிப்பாக, முன்னெப்போதும் இல்லாத வகையில், இயற்கையைக் காக்கத் துடிக்கிற கரங்களில் ஏனைய கரங்கள் பெண்களுடையதாக இருக்கிறது. அதனால்தான் இந்த முறை பெண்களைச் சிறப்பிக்கும் வகையில் நம்மாழ்வாரின் 80-வது பிறந்தநாள் விழா மேடை முழுக்க பெண்களை மட்டுமே கொண்டு அலங்கரித்தார்கள் வானகத்தில் உள்ள நிர்வாகிகள். 

அதோடு,வேளாண்மை, இயற்கை, சூழலியல், கல்வி, நாட்டு மருத்துவம், மரபு வாழ்வியல் என்று பல மட்டங்களிலும் இயற்கையோடு இயைந்த வாழ்வை மீட்டெடுக்க அரும்பாடுபடும் பெண்களை அழைத்து, அவர்களுக்கு 'நம்மாழ்வார் விருது' வழங்கி கௌரவித்தார்கள்.

விழாவுக்கு முன்னெத்தி ஏர்களாக நம்மாழ்வாரின் மனைவி சாவித்திரி அம்மாளும் மகள் மீனாவும் மேடையேற்றப்பட்டனர். காலை உணவாக கம்பங்கூழ், கேழ்வரகு கூழ், மிளகாய், கொத்தவரை, சுண்டைக்காய் வத்தலோடு வழங்கப்பட்டது. பார்வையாளர்களின் தாகம் தீர்க்க பானைகளில் மூலிகை வேர் போடப்பட்ட தண்ணீர் வைக்கப்பட்டிருந்தது. அது பருகுவதற்கு அவ்வளவு சுகந்தமாக இருந்தது. ஒன்பது மணி போல் நம்மாழ்வார் சமாதியில் சாமி கும்பிட்டவர்கள், ஊர்வலமாக நடந்து போய் நிகழ்ச்சியைத் தொடங்கினார்கள். இந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாக கேரளாவைச் சேர்ந்த தணல் அமைப்பின் தலைவி உஷாகுமாரியும், கோவையைச் சேர்ந்த இயற்கை செயற்பாட்டாளர் ஸ்ரீதேவியும் அழைக்கப்பட்டனர். விழாவைத் தொகுத்து வழங்க திருநங்கை ரோஸை அழைத்திருந்தார்கள். அதுவும் பார்வையாளர்களை மெச்ச வைத்தது. 

அதோடு, மயிலாட்டம், ஒயிலாட்டம், பறையாட்டம், சிலம்பாட்டம், நாட்டுப்புறப்பாடல் என்று மண்சார்ந்த கலைகள் அரங்கேற்றப்பட்டன. மதியம் அறுசுவை இயற்கை உணவும் வழங்கப்பட்டது.


மீனாமுதலில் பேசிய நம்மாழ்வாரின் மகள் மீனா "அப்பா எப்போதும் பெண்களை மதிப்பார். 'பெண்களுக்கு 33 சதவிகிதம் இடஒதுக்கீடு போதாது. எல்லாவற்றிலும் 50-க்கு 50 என்ற சம உரிமை வேண்டும்'"ன்னு சொல்லுவார். 'பெண்ணே சக்தி; வீரம்'ன்னு முழங்குவார். என்னை,'நேருவுக்கு இந்திராகாந்தி; எனக்கு மீனா'ன்னு சொல்லுவார். அவர் பெண்களுக்கு நினைத்தது 50 சதவிகிதம் இட ஒதுக்கீடு. அது இப்போ நடக்க ஆரம்பிச்சுருக்கு. எல்லா துறைகளிலும் ஆணைத் தாண்டி பெண்கள் ஜொலிக்கிறார்கள். இங்கே, இந்த மேடையில் 100 சதவிகிதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்திருக்கிறது. அதுக்கு காரணம், அப்பா நினைத்த பெண் சுதந்திரம். எல்லா ஆண்களின் வெற்றிக்குப் பின்னே பெண்கள் இருக்கிறார்கள் என்பது, இப்போ எல்லா பெண்களின் வெற்றிக்கும் பின்னே ஆண்கள் இருக்கிறார்கள் என்ற நிலையாக உருமாறி இருக்கிறது" என்றார்.

 அடுத்து, சாதனைப் பெண்மணிகளுக்கு விருது வழங்கும் விழா. நம்மாழ்வார் தொடர்பில் இயற்கை விவசாயத்துக்கு மாறி சாதித்த அரவக்குறிச்சி சரோஜா, தேனி வளர்ப்பு ஒட்டன்சத்திரம் ஜோஸ்மீன், 2000 சுகப்பிரசவங்களை செய்த வீரம்மாள், நாட்டு வைத்தியத்தில் ஜொலிக்கும் முத்துச்செல்வி, மரபுவிதை காப்பாளர் அழகேஸ்வரி, மரபுவழி வாழ்வியல் முறையை செயல்படுத்தும் காந்திமதி செந்தமிழன், கல்வியாளர் சாந்தி உள்ளிட்ட பலருக்கும் 'நம்மாழ்வார் விருது' வழங்கப்பட்டது. அதோடு, வானகம் சார்பில் அவர்களுக்கு சிறு தொகையும் வழங்கப்பட்டது. அதன்பிறகு, பேசிய சிறப்பு அழைப்பாளர்களில் ஒருவரான தணல் அமைப்பின் தலைவி உஷாகுமாரி,

 "20 வருஷமா இந்த அமைப்பை நடத்திக்கிட்டு வர்றேன். இந்த அமைப்பின் மூலமாக மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர்ச்சியாக இயற்கையைக் காப்பது, மீட்டெடுப்பது தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறேன். கேரள மாநிலத்தில் செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லி உரங்களால் ஏற்படும் பாதிப்புகளை ஆய்வு செய்து, அந்த மாநில அரசு கவனத்துக்குக் கொண்டு போகிறேன். இதனால், அங்கே நல்ல மாற்றம் நடக்கிறது. இதற்கு காரணம் நம்மாழ்வார் அய்யாதான். நான் ஆரம்பத்துல தோட்டக்கலைத்துறையில் வேலை பார்த்தேன். ஹைதராபாத்தில் ஒரு நிகழ்ச்சியில் நம்மாழ்வார் அய்யாவைச் சந்திக்க நேர்ந்தது. அதன்பிறகு, 'நான் வேலை செய்ய வேண்டியது வெளியில், மக்களிடத்தில்'ன்னு மூன்றே வருடங்களில் வேலையை உதறித் தள்ளிட்டு, இந்த அமைப்பைத் தொடங்கி இதுநாள் வரை நம்மாழ்வார் காட்டிய வழியில் இயற்கையை மீட்டெடுக்கப் பாடுபட்டுக்கிட்டு இருக்கேன். மரபுவிதைகளை மீட்டெடுத்துகிட்டு இருக்கேன். எல்லோரும் பசுமைப் புரட்சிதான் வளர்ச்சி சொல்லிட்டு இருந்தப்ப, 'இல்லை மரபு விதைகளைக் காப்பதுதான் வளர்ச்சி'ன்னார் நம்மாழ்வார். நானும் அந்தக் கொள்கையைக் கடைப்பிடிக்கிறேன். அதேபோல், நமது மரபுவிதைகளை அழித்து, இங்கே எமனாக வர இருக்கிற மரபணு மாற்றப்பட்ட விதைகளைக் கொண்டு வர கார்ப்பரேட் நிறுவனங்களும் அரசாங்கங்களும் துடிக்கின்றன. நாம் அவர்களைத் துரத்தி அடித்து, நம் மரபுகளைக் காக்கும் இரண்டாம் சுதந்திரப் போராட்டத்தை நடத்த வேண்டும். அதற்கு, நம்மாழ்வார் அய்யா கொள்கைகள் வழிநடத்தும்" என்றார்.

 ஸ்ரீதேவிஅடுத்துப் பேசிய இயற்கை செயற்பாட்டாளர் ஸ்ரீதேவி,  "நானும் நம்மாழ்வார் அய்யாவை ஹைதராபாத் கேம்பைனில்தான் சந்தித்தேன். அதன்பிறகு, இயற்கை செயற்பாட்டாளராக அவதாரம் எடுத்தேன். அதற்காக, மாநிலம் விட்டு இப்போ கோயமுத்தூர் வந்து தங்கி இருக்கிறேன். நம்மாழ்வார் அய்யா எங்களைப் பார்க்கும்போது, ஓடி வந்து அன்போடு கட்டித் தழுவுவார். அப்போது எங்களுக்குள் மிகப்பெரிய எனர்ஜி லெவல் அதிகரிக்கும். அதுதான் இயற்கை குறித்து இவ்வளவு வேகத்தோடு எங்களைச் செயல்பட வைக்குது. ஆண்கள் இன்று அரசியல் செயல்பாடுகளில் கோலோச்சுகிறார்கள். அதனால் அழிவே ஏற்படுகிறது. ஆனால், பெண்கள் சமூக செயல்பாடுகளில் வீரியமாக இருக்கிறார்கள். அதனால்தான், பல நன்மைகள் கிடைக்கின்றன. தொடர்ந்து நம்மாழ்வார் அய்யா வழியில் பீடுநடை போடுவோம்" என்றார்.

 இறுதியாக, நம்மாழ்வார் மனைவி சாவித்திரி அம்மாளைப் பேசச் சொன்னார்கள். 

"அவருக்கும் எனக்கும் சண்டையே வந்ததில்லை. நான் கோபப்பட்டாலும், அவர் விட்டுக்கொடுத்துப் போயிடுவார்.நம்மாழ்வார் மனைவி பெண்களை அவ்வளவு மதிப்பார். என்னைத் திருமணம் செய்த நாளில் இருந்து, இறக்கும் வரைக்கும் என்னை, 'வாங்க, போங்க, என்னங்க'ன்னு மரியாதையாகத்தான் பேசுவார். ஆனால், வீட்டில் அதிகம் தங்காமல் அதிகம் வெளியே சுத்திக்கிட்டு இருப்பார். 'என்னடா இப்படி குடும்பத்தைக் கவனிக்காம, ஊருக்காக அலைகிறாரே'ன்னு தோணும். ஆனா, இப்போ அவருக்காக கூடுகிற கூட்டத்தை, அவர் சேர்த்து வைத்திருக்கிற ஆள்களைப் பார்க்கும்போதுதான், 'அவர் வீட்டிலேயே தங்கி இருந்தா இவ்வளவு பேரை சம்பாதிச்சிருக்க முடியுமா?'ன்னு பெருமையா நினைக்கிறேன். அவரோடு பல ஊர்களில் தங்க நேர்ந்திருக்கு. 'சோஷியல் ஒர்க்கர்'ன்னு சொன்னால், யாருமே மதிச்சு வாடகைக்கு வீடு தரமாட்டாங்க. ஆனால், இன்னைக்கு அவர்களே தங்கள் வீடுகளில் அவரோட போட்டோவை மாட்டி வச்சுருக்கிறதைப் பார்த்தா, மகிழ்ச்சியா இருக்கு. அதேபோல், இன்னைக்கு 'நம்மாழ்வார் சொன்னதால இயற்கை விவசாயத்துக்கு மாறிட்டோம், நாட்டு வைத்தியத்துக்கு மாறிட்டோம்'ன்னு பலரும் சொல்றாங்க. 'குழந்தைகளை எங்கே படிக்க வைக்கிறீங்க?'ன்னு கேட்டால்,'சி.பி.எஸ்.சி பள்ளியில்'ங்கிறாங்க. இது சரியா?. அரசுப் பள்ளிகளில் குழந்தைகளைப் படிக்க வையுங்கள். கல்வியிலும் மாற்றம் கொண்டு வாருங்கள். அப்போதான் இயற்கையை முழுமையாக உணர்ந்திருக்கிறீர்கள் என்று அர்த்தம்" என்றார்.

 தொகுப்பாளர், "அம்மாவிடம் சந்தேகம் கேட்பவர்கள் கேட்கலாம்?" என்று சொல்லப்பட, அதற்கு அவர், 'வேண்டாம்' என்று மறுத்துவிட்டார். அதனால், 'நம்மாழ்வார் மகள் மீனாவிடம் கேட்கலாம்' என்று சொல்லப்பட்டது. விருதுபெற்ற காந்திமதி செந்தமிழன், "நம்மாழ்வார் அய்யாவை இப்போதும் சிலர் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், ஆரம்பகாலத்தில் அவர் உயிரோடு இருந்தபோது, அவர் எடுக்கும் முயற்சிகளைப் பார்த்து பலரும் கேலி பண்ணும்போது, அதைக் கேட்கும் உங்களுக்கு ஒரு மகளா என்ன தோணும்?" என்று கேட்டார். அதற்கு மீனா, "ஆமாம், எல்லோரும் அவரை நக்கல் பண்ணுவார்கள். 'மண்புழு உரம்'ன்னு அவர் சொன்னப்போ, யாருமே அதை ஏத்துக்கலை. 'இதெல்லாம் சுத்த பைத்தியகாரத்தனம்' ன்னாங்க. அதைக் கேட்ட நான், 'ஏம்பா 10 வருஷத்துக்குப் பிறகு நடக்குறதை இப்போ பேசணும். இப்போ நடக்குற விஷயத்தை மட்டும் பேசினால் என்ன?'ன்னு கேட்பேன். 'பத்து வருஷத்துக்குப் பிறகு நடக்குறதை இப்போ உணர்த்துறதுதான் வளர்ச்சி. இதோடு வீரியம் பிற்பாடு தெரியும்'ன்னார். இப்போ தெரிகிறதுதானே?" என்றார்.

 ஆமாம்,தெரிகிறது!.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

விகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது? விஜய்யிடம் என்ன பிடிக்கும்? - விஷால்
Advertisement

MUST READ

Advertisement