டி.வி.எஸ் என்டார்க் ஸ்கூட்டர் ஏன் வாங்கலாம்... ஏன் வாங்கக் கூடாது?! #Ntorq

இந்தியாவின் முதல் ஜிபிஎஸ் சிஸ்டம் மற்றும் புளூடூத் வசதி கொண்ட ஒரே ஸ்கூட்டர் டிவிஎஸ் என்டார்க். இதன் ப்ளஸ் மைனஸ் என்ன?

டி.வி.எஸ் என்டார்க் ஸ்கூட்டர் ஏன் வாங்கலாம்... ஏன் வாங்கக் கூடாது?! #Ntorq

சிக்னலில் `கியர் மாத்தி... கிளட்ச் பிடிச்சு’ என்று கடுப்பாகுபவர்களுக்குச் சரியான ஆப்ஷன், ஸ்கூட்டர். பைக்குகளுக்கு இணையாக ஸ்கூட்டர்கள் விற்பனையாகின்றன என்பது நம்ப முடியாத விஷயம். காரணம், பைக் விரும்பிகளே ஸ்கூட்டர் ப்ரியர்களாக மாறிவருவதுதான். கடந்த மாதம் ஹீரோவின் ஸ்ப்ளெண்டர் 2,43,000 பைக்குகள் விற்பனையாகின. அதுவே ஆக்டிவா 2,67,000 பைக்குகளுக்குமேல் விற்பனையாகின. டிவிஎஸ்-ன் ஜூபிட்டர் ஸ்கூட்டர் மட்டும் சென்ற மாதம் 63,000  விற்பனையாகியுள்ளது. #Ntorq

இந்த நிலையில் டிவிஎஸ், ஸ்கூட்டர் மார்க்கெட்டில் இன்னுமொரு கெத்து ஸ்கூட்டரைக் களத்தில் இறக்கியிருக்கிறது. `என்டார்க்' எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த ஸ்கூட்டர், 125 சிசி திறன்கொண்டது. போன்களில் ஸ்மார்ட்போன் மாதிரி, ஸ்கூட்டர்களில் இது `ஸ்மார்ட் ஸ்கூட்டர்' என்கிறது டிவிஎஸ். அதற்குக் காரணம் இருக்கிறது. இந்தியாவிலேயே ஜிபிஎஸ் நேவிகேஷனும் ப்ளூடூத் வசதியும்கொண்ட முதல் ஸ்கூட்டர் என்டார்க். இதை வாங்கலாமா?

Ntorq

வாவ்:

1. முதல் லைக் - இதன் ப்ளூடூத் மற்றும் ஜிபிஎஸ் சிஸ்டம்கொண்ட ஸ்க்ரீனுக்கு. உங்கள் போனில் ப்ளூடூத்தை கனெக்ட் செய்துகொண்டு... கால், மெசேஜ் அலெர்ட்டுகள், போன் பேட்டரி, நெட்வொர்க் சிக்னல் எல்லாமே இதில் செக் செய்துகொள்ளலாம். வழி தெரியாதபட்சத்தில் போனில் ஜிபிஎஸ் போட்டு ஸ்கூட்டரை நிறுத்தி நிறுத்திப் பார்க்கவேண்டியதில்லை. ஸ்பீடோ மீட்டருக்குமேல் உள்ள 5 இன்ச் ஸ்க்ரீனில் வழி பார்க்கலாம்.

2. ஷார்ப்பான என்டார்க் டிசைன் - செம ஸ்போர்ட்டி. இதன் இன்ஸ்பிரேஷனே - Stealth Aircraft எனும் போர்விமானம்தான். ஆண்களுக்கு இந்த டிசைன் நிச்சயம் பிடிக்கும். கிராப் ரெயில் டிசைனே இது `ஆண்கள் ஸ்கூட்டர்' என நினைக்கவைக்கிறது. டியோ போல ஹெட்லைட், இதன் ஏப்ரானில் இருப்பது ஸ்டைல். ஹேண்டில்பார்களிலேயே இண்டிகேட்டர்கள் இருப்பதுகூட மில்லெனியல் டிசைன். 

3. இதன் டெயில் லைட்டையும் இண்டிகேட்டர் லைட்டையும் சேர்த்துப் பார்த்தால் `ஆங்கிரி பேர்டு’ புருவம்போலவே இருக்கிறது. இது LED என்பது ஸ்பெஷல்.

Ntorq4. முன் பக்கம் 220 மிமீ டிஸ்க் பிரேக். இந்தியாவின் முதல் பெட்டல் டிஸ்க் கொண்ட ஸ்கூட்டரும் என்டார்க்தான். பிரேக் அடித்தால் `பச்சக்’ என நிற்கிறது.

5. 125 சிசி செக்மென்ட்டிலேயே அதிக அண்டர் சீட் ஸ்டோரேஜ்கொண்ட ஸ்கூட்டர் என்டார்க். இதன் இடவசதி 22 லிட்டர். 

6. கார்கள்போல் என்டார்க்கில் டிரைவிங் மோடுகள் உண்டு. ஸ்ட்ரீட் மோடு, ஸ்போர்ட் மோடு என இரண்டு மோடுகள். டிஜிட்டல் கடிகாரமும் உண்டு. ஸ்போர்ட்ஸ் மோடில் லேப் டைமரும் கொடுத்திருக்கிறார்கள். 0-60 டைமர்கூட உண்டு என்பது சூப்பர் ஸ்பெஷல். 

7. இரண்டு ட்ரிப் மீட்டர்கள். ஒன்று தூரத்துக்கு. மற்றொன்று - ஸ்கூட்டர் ரிசர்வ் ஆகும்போது, இன்னும் எவ்வளவு தூரம் போகலாம் என்பதைச் சொல்லும் `டிஸ்டன்ஸ் டு எம்ப்டி மீட்டர்’.

8. சீட்டுக்கு அடியில் மொபைல் சார்ஜிங் போர்டு உண்டு. போனை சார்ஜ் போட்டுக்கொண்டே வண்டி ஓட்டலாம்.

9. இன்ஜின் பர்ஃபாமென்ஸ் செம ஸ்மூத். அதிர்வுகளே தெரியவில்லை. 

10. பிரேக் லாக் க்ளாம்ப் உண்டு. ஏற்ற - இறக்கங்களில் சைடு ஸ்டாண்டு போட்டு ஸ்கூட்டரை ஈஸியாக பார்க் செய்துகொள்ளலாம். 

11. இன்ஜின் கில் ஸ்விட்ச்கொண்ட முதல் ஸ்கூட்டர் என்டார்க். சிக்னலில் ரொம்ப நேரம் நிற்கும்போது, இன்ஜினை ஆஃப் செய்துகொள்ளலாம்.


ப்ச்:
1. ஏப்ரிலியா, ஆக்ஸஸ் போன்ற ஸ்கூட்டர்கள் அளவு இதன் இன்ஜின் சூப்பர் ஸ்போர்ட்டியாக இல்லை. ஆக்ஸிலரேஷன் சுமார்தான். ஆக்ஸிலரேட்டரை முழுமையாகத் திருப்பிய பிறகும், பொறுமையாகத்தான் வேகமெடுக்கிறது. 

2. அண்டர் சீட் ஸ்டோரேஜ் 22 லிட்டர் இடவசதி இருந்தாலும், பெரிய ஹெல்மெட்டை வைத்துப் பூட்ட முடியவில்லை. இதன் பின்பக்க கிராப் ரெயிலிலும் ஹெல்மெட்டை வைத்து லாக் செய்ய முடியாது. 

Ntorq

3. வாட்டர் பாட்டில் வைக்க, ஃபைல்கள் வைக்க முன் பக்க ஏப்ரானில் இடம் இல்லை. 

4. மேடு பள்ளங்களில் பின் பக்க சஸ்பென்ஷன் ஓகே. ஆனால், முன் பக்கம் அதிர்வுகளை நம் ஹேண்ட்டில்பாருக்குக் கடத்துகிறது.

Ntorq

5. ஹோண்டா கிராஸியாவைவிட 9 கிலோ அதிகம்; ஆக்ஸஸைவிட 12 கிலோ அதிகம். என்டார்க்கின் எடை 116 கிலோ. இதனால் பெண்கள் இதைக் கையாள்வது கொஞ்சம் டஃப்.

6. மிக முக்கியமாக இது உங்கள் ஸ்கூட்டர் பட்ஜெட்டை உயர்த்தும் ஸ்கூட்டர். சென்னையில் இந்த ஸ்கூட்டரின் ஆன் ரோடு விலை 74,772 ரூபாய். வசதிகள் அதிகம்தான் என்றாலும் விலையும் ஆக்டிவாவைவிட அதிகம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!