Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சூரியனிடமிருந்து தப்பிக்க வளிமண்டலத்தில் தூவப்படும் உப்பு... இன்னொரு தெர்மோகோல் ஐடியா?

வெப்பமயமாதல் பூமியைக் காட்டு காட்டு என்று காட்டிக்கொண்டிருக்கிறது. அதைத் தடுக்க உலகம் முழுவதும் பல்வேறு குழுக்கள் பிரசார பீரங்கிகளால் விழிப்புஉணர்வு குண்டுகளை வீசிக்கொண்டிருந்தாலும், மக்கள் மத்தியில் முன்னேற்றம் மிகச் சொற்ப அளவிலேயே இருக்கிறது. அதைவிடக் கொடுமை என்னவென்றால் நாளுக்கு நாள் எடுக்கும் முயற்சிகளால் பூமி குளிர்ச்சியடைய வேண்டும். ஆனால், அதற்கு மாறாக பூமியின் வெப்பம்தான் அதிகரித்துக்கொண்டே போகிறது. ஒவ்வோர் ஆண்டும் உலக நாடுகள் அனைத்தும் வரவிருக்கும் பேராபத்தில் இருந்து காப்போம்; மாசுகளைக் குறைப்போம் என்று ஒரு பக்கம் சூளுரைத்தாலும் மறுபக்கம், சத்தமே இல்லாமல் நிலமும் கடலும் வெப்பமடைய ஏதுவான அனைத்து வாயுக்களையும் குறைவின்றி உற்பத்தி செய்துகொண்டுதான் இருக்கின்றன. புவி வெப்பமடையக் காரணமாக இருக்கும் வாயுக்கள் வளிமண்டலத்தையும், ஓசோன் படலத்தையும் கூட அரித்துக்கொண்டிருக்கின்றன. இது ஒருபுறம் என்றால், மக்களும் சிக்னலில் நிற்கும் போது வண்டியை முறுக்கி கார்பன்கள் காற்றை வன்புணர்வு செய்யத் தூண்டுவதில் தொடங்கி எங்கு சூழல் தொடர்பாகப் போராட்டங்கள், பிரசாரங்கள் நடந்தாலும் வண்டியைத் திருப்புவதும், சேனலை மாற்றுவதுமாக அவரவர் பங்கைச் செவ்வனே செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்களையும் குற்றம் சொல்ல முடியாது. அன்றாடம் சாப்பாட்டுக்குப் போராடும் மக்கள் ஒரு பக்கம் இருக்க, அவர்களைப் பற்றிய சிந்தனை துளிகூட நடுத்தர, உயர்தர மக்களுக்கு வந்துவிடக் கூடாதே என்று மிகக் கவனமாகச் செயல்படும் பெருநிறுவனங்கள், அனைவர் கண்களையும் ஆசை என்ற மூடுபனியால் மூடி வைத்திருக்கின்றன.

நிலைமை இப்படியிருக்க வளிமண்டலத்தைப் பாதுகாக்கவும், சூரியனின் புறஊதாக் கதிர்கள் பூமியைப் பாதிக்காமல் இருக்கவும் வளிமண்டலத்தில் உப்பைத் தூவினால் போதும் என்கிறார்கள் சில அறிவுஜீவி விஞ்ஞானிகள்.

வளிமண்டலம் உப்பு

அரிசோனா மாகாணத்தின் டக்சன் நகரத்தில் உள்ள ``தி பிளானட்டரி சைன்ஸ்" என்ற நிறுவனத்தில் பணிபுரியும் திரு. ராபர்ட் நெல்சன் என்பவர்தான் இந்தத் திட்டத்தைப் பரிந்துரைத்த விஞ்ஞானி. அவரை ஆதரிக்கும் குழு அதற்கான சில கூற்றுகளை முன்வைக்கின்றனர். ``பசுமை இல்ல வாயுக்கள் இருக்கும் வரை புவி வெப்பமயமாதல் குறையாது. மனிதர்கள் இருக்கும் வரை பசுமை இல்ல வாயுக்களின் உற்பத்தி குறையாது. ஆகவே, அவற்றால் வரும் விளைவுகளைத் தாமதப்படுத்தலாம். அதற்கு இந்தத் திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.
சமையல் உப்பினை வளிமண்டலத்தில் தூவுவதால் சூரியனிலிருந்து வரும் புறஊதாக் கதிர்கள் பூமியை நேரடியாகப் பாதிப்பதைத் தடுக்கலாம். உப்புத் துகள்கள் இந்தக் கதிர்களை மீண்டும் விண்வெளிக்கே பிரதிபலித்துவிடும். பசுமை இல்ல வாயுக்களில் ஒசோனைப் பாதிக்கும் குளோரோ ஃப்ளூரோ கரிம வாயுக்களை உப்பில் இருக்கும் ஐயோடின் மூலக்கூறுகள் தடுத்துவிடுவதால் ஒசோன் சேதமடையாமல் பாதுகாக்கப்படும்" என்கிறார் இந்தத் திட்டத்தை முன்வைத்த ராபர்ட்.

``இது வசீகரமான திட்டம்தான். பொதுவாக இந்த மாதிரியான திட்டங்கள் மேம்போக்காகப் பார்க்கும்போது அமல்படுத்த ஏதுவானதாகத் தான் தோன்றும். ஆனால், அவற்றின் உள்ளார்ந்த ஆற்றல் திறன் குறைவாகவே இருக்கும். இதுவும் அப்படித்தான்" என்கிறார் பென் ஸ்டேட் ஆராய்ச்சிப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மைக்கேல் மேன் என்ற விஞ்ஞானி.

ஆரம்பத்தில் இதுபோன்ற சிந்தனைகளை வைரத் துகள்களை வைத்து முயற்சி செய்து பார்த்திருக்கிறார்கள். ஆனால் அது மனிதர்களுக்கு நுரையீரல் கோளாறுகளை உண்டாக்க வாய்ப்புகள் இருந்தது. ஆனால், சமையல் உப்பில் பக்கவிளைவுகள் இல்லாமலும், அதன் திறன் நமக்குப் பயனுள்ளதாகவும் இருப்பதாகக் கூறுகிறார்கள். இதில் சில சிக்கல்கள் உள்ளன. உப்பு நமக்குத் தீங்கு விளைவிக்காது என்பது உண்மைதான். ஆனால், அதன் மூலக்கூறுகளும் அப்படித்தான் என்று கூறுவதற்கில்லை. உதாரணமாக சல்ஃபேட் வளிமண்டலத்தில் வேதிவினை புரிந்தால் அமில மழை வர வாய்ப்புகள் உண்டு.

எப்படி இருப்பினும் இதில் இருக்கும் விளைவுகளைச் சரிசெய்து இதை நடைமுறைக்குக் கொண்டு வருவதில் நெல்சன் மிகுந்த ஆர்வத்தோடு உள்ளார். என்னதான் செய்தாலும் மனிதன் வெளியிடும் பசுமை இல்ல வாயுக்கள் வளிமண்டலத்தைப் பாதித்து அதன்மூலம் வரும் புறஊதாக் கதிர்களால் ஏற்படும் பாதிப்புகளைவிட வளிமண்டலத்திற்கு உள்ளே நிகழும் விளைவுகளும் காற்று தரம் குறைவதாலும் ஏற்படும் விளைவுகளும் அதிகம். இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் ஒசோன் படலம் தற்போது சரியாகிக் கொண்டுதான் வருகிறது. ஆயினும் காலநிலை மாற்றங்களின் வேகம் குறைந்ததாகத் தெரியவில்லை. ஆகவே, விஞ்ஞானிகள் இதுபோன்ற தற்காலிகத் திட்டங்களை விட்டுவிட்டு, மனித குலம் இயற்கையை அழிக்காமல் வாழ நீடித்த வளர்ச்சிக்கு ஏற்ற ஆற்றல் வளங்களைக் கண்டுபிடிப்பதிலும், வளிமண்டலத்தில் பசுமை இல்ல வாயுக்களைக் குறைப்பதற்கும், அவற்றின் வெளியேற்றத்திற்கு முடிவு கட்டுவதற்கும் ஏற்ப அதற்கு இயற்கை மாற்றினை கண்டுபிடிப்பதற்கும் அவர்களது அறிவைப் பயன்படுத்த வேண்டும். அதுவே, மனிதகுல முன்னேற்றத்தை அடுத்தகட்டத்தை நோக்கிக் கொண்டுசெல்லும். மற்றவை, தெர்மோகோல் ஐடியாக்கள் போலதான் இருக்கும். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

விகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது? விஜய்யிடம் என்ன பிடிக்கும்? - விஷால்
Advertisement

MUST READ

Advertisement