Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நீங்கள் வாழ்வதற்காகச் செலவழிப்பவரா, செலவழிப்பதற்காக வாழ்பவரா? - ஒரு நெகிழ்ச்சிக் கதை #FeelGoodStory

கதை

சீனாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான பிரபல தொழிலதிபர் ஜாக் மா (Jack Ma) ஒரு பேட்டியில் இப்படிச் சொன்னார்... ``பணத்தைச் சம்பாதிப்பதைவிட, அதைச் செலவழிப்பது மிகவும் கடினமாக இருக்கிறது.’’ இதை விளையாட்டாகச் சொன்னாரா, உண்மையைத்தான் சொன்னாரா என்று ஆராய்வது ஒருபுறமிருக்கட்டும். பணம் படைத்தவர்களுக்கு வேண்டுமானால், செலவழிப்பது கடினமாக இருக்கலாம். இல்லாதவர்களுக்கு, கஷ்டப்பட்டு பொருளீட்டுபவர்களுக்கு அவர்கள் செலவழிக்கும் ஒவ்வொரு பைசாவுமே அர்த்தமுள்ளவை; அவர்களின் வாழ்க்கைக்கு ஆதாரமானவை. பல நேரங்களில் எவ்வளவு ஆடம்பரமாகச் செலவழிக்கிறோம் என்பது நமக்கே தெரிவதில்லை. `உனக்கும் கீழே உள்ளவர் கோடி’ என்கிற கண்ணதாசனின் தத்துவமொழிகள் பல நேரங்களில் நமக்கு நினைவுக்கு வருவதில்லை. ஆனால், அந்த சுயநினைவு (Conscious) ஒவ்வொருவருக்குமே மிக மிக அவசியம். அதைச் சுட்டிக்காட்டுகிறது இந்தக் கதை. 

அது ஒரு காலை நேரம். கணவர் காபி குடித்தபடி தொலைக்காட்சியில் செய்திகள் பார்த்துக்கொண்டிருந்தார். அவருடைய மனைவி அவரருகே வந்தார். கணவர் நிமிர்ந்துப் பார்த்தார். 

``ஏங்க... எப்பவும்போல ஒரு நாளைக்கு ரெண்டு, மூணு டிரெஸ் போடுறது, அழுக்குக்கூடையில வீசுறதெல்லாம் ரெண்டு நாளைக்கு வேணாம்.’’

``ஏன்?’’ 

``நம்ப தேவியம்மா ரெண்டு நாளைக்கு ஊருக்குப் போறாங்களாம்...’’ 

பீட்சா

தேவியம்மா என்று அவரின் மனைவி குறிப்பிட்டது, அவர்கள் வீட்டுப் பணிப்பெண்ணை. வயது அறுபதை நெருங்கிக்கொண்டிருந்தது. 

``எங்கே போறாங்களாம்?’’ 

``ஊர்ல இருக்குற அவங்களோட மகளையும் பேத்தியையும் பார்க்கப் போறாங்களாம்.’’ 

``அப்பிடியா... சரி... நான் ஞாபகத்துலவெச்சுக்குறேன்...’’ 

``அப்புறம் இன்னொரு விஷயம்... அவங்களுக்குப் பணம் ஏதாவது குடுத்துவிடணுமே...’’

``ஏன்... அதான் தீபாவளி, பொங்கலுக்கெல்லாம் போனஸ் குடுக்குறோமே..!’’ 

``அது இருக்கட்டும். அவங்க பாவம் ஏழ்மையானவங்க, வீட்டு வேலை செஞ்சு பிழைக்கிறவங்க. ஊருக்குப் போறப்போ அவங்ககிட்ட கொஞ்சம் பணம் இருந்தா தாராளமா செலவழிப்பாங்கல்ல? அதுனாலதான் நாம ஏதாவது பணம் குடுத்தா அது அவங்களுக்கு உதவியா இருக்கும்னு நினைக்கிறேன்.’’ 

``இப்போல்லாம் நீ ரொம்ப இரக்கப்பட ஆரம்பிச்சிட்டேப்பா... சரி, பணத்துக்கு என்ன பண்ணுவே?’’ 

``அதைப் பத்திக் கவலைப்படாதீங்க. இன்னிக்கி நைட் பீட்சா வாங்கிச் சாப்பிடலாம்னு 500 ரூபா எடுத்துவெச்சிருந்தோம்ல... அதை தேவியம்மாவுக்குக் குடுத்துடலாம்.’’ 

``பிரமாதம்...’’ என்று சொல்லி சிரித்தார் கணவர். 

பணம்

*** 

மூன்று நாள்களுக்குப் பிறகு அந்த முதிய பணிப்பெண் வேலைக்குத் திரும்பினார். வீட்டிலிருந்த உரிமையாளர் அவரைப் பார்த்து புன்முறுவல் பூத்தார். ``அப்புறம்... ஊர்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா... ரெண்டு நாள் எப்படிப் போச்சு?’’ 

``எல்லாரும் நல்லா இருக்காங்க சார்... ரெண்டு நாள் எப்பிடிப் போச்சுன்னே தெரியலை. பேத்தியும் பொண்ணும் விடவே மாட்டேன்னுட்டாங்க. நான்தான் எப்படியோ சமாதானப்படுத்திட்டு வந்து சேர்ந்தேன். அதுலயும் அம்மா ஒரு ஐநூறு ரூபா பணம் குடுத்துவிட்டாங்களா... அது ரொம்ப உதவியா இருந்துச்சு.’’ 

``அந்தப் பணத்தை என்ன பண்ணுனீங்க?’’ 

அந்த மூதாட்டி ஒரு கணம் யோசித்தார்... ``பேத்திக்கி 150 ரூபாய்க்கு ஒரு கவுன் எடுத்தேன். அவளுக்கு 40 ரூபாய்க்கு ஒரு பொம்மை; என் பொண்ணு வீட்டுக்குப் பலகாரம் வாங்கிட்டுப் போனது ஒரு 40 ரூபா. ஊர்ல குலசாமி கோயிலுக்கு 50 ரூபா வரிப்பணம் குடுத்தேன். என் பொண்ணுக்கு கண்ணாடி வளையல் வாங்கினது 25 ரூபா... அப்புறம் என் மருமகனுக்கு பெல்ட்டு ஒண்ணு 50 ரூபாய்க்கு வாங்கினேன். மிச்சமிருக்குற காசையெல்லாம் என் பேத்திக்கி நோட்டு புத்தகம், பென்சில், பேனா, கலர் பென்சில்னு வாங்கிக் குடுத்துட்டேன் சார்...’’

பிட்சா

பதிலைக் கேட்டு அயர்ந்து போனார் அந்த வீட்டு உரிமையாளர். ஒரு பீட்சா வாங்கும் பணத்தில் இவ்வளவு செய்யலாமா? அவருக்கு அன்றைக்கு ஓர் உண்மை புரிந்தது... `வாழ்வதற்காகச் செலவழிக்கலாம், செலவழிப்பதற்காக வாழக் கூடாது.’’ 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement