Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ப்ளூட்டோ ஒரு கோள் என்பது உண்மையா? ஒரு கோளுக்கான தகுதிகள் என்ன?

சுழற்சி. நம் பேரண்டத்தை மட்டுமல்ல, பேரண்டத்தின் ஒரு சிறிய பகுதியான பூமியின் மேல் இருக்கும் நம்மைப் போன்ற உயிர்களையும், உயிர்ப்புடன் வைத்திருக்கும் ஒரு செயல். சூரியன் தொடங்கி, பல கோடி வருடங்களுக்கு முன் உடைத்துத் தூக்கி எறியப்பட்ட பாறை, ஒரு பெரிய விண்கல்லிலிருந்து நேற்று சிதறடிக்கப்பட்ட சிறு துகள் என எல்லாமுமே தங்களுக்கு என ஒரு வட்டப்பாதையை ஈர்ப்பு விசையால் தகவமைத்து கொண்டு நிற்காமல் சுற்றி வருகின்றன. பகல் இரவுகளை மாற்றி மாற்றிக் கடந்து செல்கின்றன. நம் சூரியக் குடும்பம் போல பல்வேறு குடும்பங்கள் நம் பால்வெளியை தாண்டியிருக்கின்றன என்கிறது மனிதனின் விண்வெளி ஆராய்ச்சிகள். காணக்கூடிய பிரபஞ்சத்தில் (observable universe), ஏன் நம் சூரியக் குடும்பத்திலேயே ஆங்காங்கே பல பெரிய விண்கற்கள் சுற்றுகின்றன. ஆனால், அவை அனைத்துக்கும் நாம் கோள், கிரகம் என்ற ஓர் அந்தஸ்தை கொடுக்கவில்லை. நம் சூரியக் குடும்பத்தின் ஒன்பதாவது கோளாகப் பெயர் பெற்ற ப்ளுட்டோவையே ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளலாமா வேண்டாமா என அவ்வப்போது விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 

ப்ளுட்டோ

அதற்குள் செல்வதற்கு முன், கோள், கிரகம் என்றெல்லாம் அழைக்கப்படும் Planet-களின் ஒரு குட்டி ஃப்ளாஷ்பேக்! வானவியல் குறித்த ஆராய்ச்சிகளில் முதலில் கிரேக்கர்களே சிறந்து விளங்கினர். மாமேதை கலீலியோ சூரியக் குடும்பம் குறித்து ஆராய்ச்சிகள் செய்து கோள வடிவ பூமிதான் சூரியனைச் சுற்றுகிறது என்ற கருத்தை முன்வைக்க அதற்குக் கத்தோலிக்கர்கள் எதிர்ப்பு தெரிவித்த கதை நமக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். இந்த `ப்ளேனட்' என்ற வார்த்தையே கிரேக்க மொழிதான். அப்படியென்றால் `உலாவுபவர்கள்' என்று பொருள். பண்டையக் காலத்திலிருந்தே வான் குறித்த ஆராய்ச்சிகள் நடந்துகொண்டுதான் இருந்தன. ஆனால், அவர்கள் இந்தக் கோள்களையும் நட்சத்திரங்கள் என்றே நினைத்துக் கொண்டனர். 

1600-களில் தொலைநோக்கிகள் (Telescope) கண்டறியப்பட்ட பிறகே, நமக்கு விண்வெளி குறித்த பல ரகசியங்கள் புரிய ஆரம்பித்தன. சாதாரண கண்களுக்குப் புலப்படாத பல விஷயங்கள் வெளிச்சத்துக்கு வந்தன. 1781-ம் ஆண்டு, மார்ச் 31-ம் தேதி புகழ்பெற்ற வானியலாளர் வில்லியம் ஹெர்ஷல் யுரேனஸ் (Uranus) கிரகத்தைக் கண்டறிந்தார். அதன் பிறகு 30 வருடங்கள் கழித்து 1801-ம் ஆண்டு செவ்வாய் (Mars) மற்றும் வியாழன் (Jupiter) கிரகங்களுக்கு இடையே செரெஸ் (Ceres) என்ற கோள் இருப்பதாகக் கண்டறியப்பட்டது. பின்னர், அது வெறும் விண்கல் என ஒதுக்கப்பட்டது. 1846-ம் ஆண்டுதான் நெப்டியூன் (Neptune) கண்டறியப்பட்டது. அதன் பிறகு, 1930-ம் ஆண்டு கிளைட் டாம்பாக் (Clyde Tombaugh) என்பவர் நெப்டியூன் கோளுக்கு அப்பால், மற்றொமொரு சிறிய கோள் இருப்பதாகவும், ஆச்சர்யமூட்டும் வகையில், அதன் நீள்வட்டப் பாதை ஒரு கட்டத்தில், நெப்டியூனின் நீள்வட்டப் பாதையையும் தாண்டி சூரியனுக்கு அருகில் வந்து போவதாகக் கூறினார். அப்போது ஒரு கோளாகக் கருதப்பட்ட அதற்கு ப்ளூட்டோ என்று பெயர் வைக்கப்பட்டது.

விண்வெளியில் மிதக்கும் ஒரு பொருளுக்குக் கோள் அல்லது கிரகம் என்று பெயர் பெற என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும்?

2006-ம் ஆண்டில், சர்வதேச வானியல் சங்கம் (International Astronomical Union) இதற்கு சில கோட்பாடுகளைக் கொண்டுவந்தது.

1) சூரியனைச் சுற்றி வரும் பொருளாக இருக்க வேண்டும்.

2) கோளம் அல்லது கிட்டத்தட்ட அந்த வடிவம் பெற தேவையான நிறை இருக்க வேண்டும்.

3) மற்றொரு சூரியக் குடும்பப் பொருளுக்குத் துணைக்கோளாக இருக்கக் கூடாது. எ.கா.: நிலா, மற்றும் இதர கோள்களின் துணைக்கோள்கள்.

4) உருவாக்கத்தின் போது அதிலிருந்து சிதறிய கழிபொருள்கள் (Debris) மற்றும் சிறிய பொருள்கள் எதுவும் அதனுடன் அதன் நீள்வட்டப் பாதையில் பயணம் செய்யக் கூடாது.

ப்ளூட்டோ

ப்ளூட்டோவை ஒரு கோள் என்று ஏற்றுக் கொள்ளலாமா?

இப்படி விதிமுறைகள் கொண்டுவந்த பின்பு, அதுவரை ஒன்பதாவது கோளாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ப்ளூட்டோவின் அந்தஸ்து பறிபோனது. காரணம், ப்ளூட்டோ அந்த நான்காவது விதிமுறைக்கு ஒத்துவரவில்லை. அதன் கழிபொருள்கள் இன்னமும் அதனுடன் பயணம் செய்கின்றன. இருந்தும், அதன் பின்னர் சிறிய கோள்கள் (Dwarf Planets) என்று ஒரு புதிய வகை கொண்டு வரப்பட்டு அதில் ப்ளூட்டோவுக்கு இடம் கொடுத்தனர்.

ஆனால், பல விஞ்ஞானிகள் இதை ஏற்றுக்கொள்ள இன்று வரை மறுக்கின்றனர். கடந்த 2015-ம் ஆண்டு, ஹரிஸான் விண்கலம் (Horizon Spacecraft) ப்ளூட்டோவைச் சுற்றி வந்து எடுத்த படங்கள் இவர்களுக்கு ஆதரவு தரும் வகையில் அமைந்தன. காரணம், அந்தப் படங்களில் ப்ளூட்டோவின் பல ரகசியங்கள் வெளியே வந்தன. அதில் ப்ளூட்டோ பல்வேறு புவியியல் மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்றும், 11,000 அடிகள் (3500 மீட்டர்கள்) உயரம் கொண்ட மலைகள் இருப்பதாகவும் கண்டறியப்பட்டன. இந்தக் கண்டுபிடிப்புகளின் முத்தாய்ப்பாக அமைந்தது ப்ளூட்டோவின் நடுவில் இருக்கும் அந்த இதயம் போன்ற வடிவம். டாம்பாக் இடம் (Tombaugh Regio) என்று பெயரிடப்பட்ட அது முழுக்க மீத்தேன் கூறுகளால் உருவான ஐஸ் கட்டிகளால் ஆனது. அதே போல, விநோதமான பனிச்சறுக்குப் போன்ற நிலப்பரப்பு பார்ப்பதற்கு ஏதோ ஒரு பாம்பின் சட்டை போல காட்சியளித்தது. இவ்வளவு புவியியல் சிறப்பு வாய்ந்த ப்ளூட்டோவை எப்படி கோள் இல்லை எனக் கூறலாம் என்பதே இவர்களின் வாதம். 

நம்மைப் பொறுத்தவரை சூரியக் குடும்பம் என்றால் ஒன்பது கோள்கள்தான். அதில் ப்ளூட்டோவுக்கும் இடமுண்டு. ஆனால், இப்போது அதை ஏற்றுக்கொள்ள மறுத்து மேலே கூறிய கோட்பாடுகளை முன்வைக்கிறார்கள். சரி, நீங்கள் கூறுங்கள். ப்ளூட்டோவை நாம் ஒரு கிரகம் என்று சேர்த்துக் கொள்ளலாமா?

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement