கிரிக்கெட் வறுவல், சோயா கறி, பாசி எண்ணெய்...இவை தாம் எதிர்கால உணவுகள்! | Food of the Future World - Cricket Insect, Algae Oil, Plant Meat...

வெளியிடப்பட்ட நேரம்: 17:41 (10/04/2018)

கடைசி தொடர்பு:17:41 (10/04/2018)

கிரிக்கெட் வறுவல், சோயா கறி, பாசி எண்ணெய்...இவை தாம் எதிர்கால உணவுகள்!

ஆம்... பூச்சிகள்தான் எதிர்காலத்தின் பிரதான உணவாக இருக்கக் கூடும் என்று சொல்லப்படுகிறது. ஏற்கெனவே, பல மேற்குலக நாடுகளில் கிரிக்கெட் பூச்சியைக் கொண்டு உருவாக்கப்படும் பொடிகள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

கிரிக்கெட் வறுவல், சோயா கறி, பாசி எண்ணெய்...இவை தாம் எதிர்கால உணவுகள்!

இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் உலக மக்கள் தொகை 900 கோடியைத் தாண்டும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. எனில், உணவுத் தேவை இன்று இருப்பதிலிருந்து 70% உயரும். ஆனால், அவ்வளவு உணவைத் தயாரிக்க ஏற்ற வளங்கள் நமக்கு இருக்கிறதா? பதில் ``இல்லை" என்பதுதான். 

கடந்த 2014ம் ஆண்டிலிருந்து ``மோல்டு" (Mold) எனும் வலைதளம் மற்றும் பத்திரிகையைத் தொடங்கினார் லின் யீ யுவான் (Lin Yee Yuan). எதிர்கால உணவுகள் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டும், அது குறித்த கட்டுரைகளை எழுதிக்கொண்டும் வருகிறார். சமீபத்தில், யுவான் ஆராய்ச்சியின் அடிப்படையில் நமக்கான எதிர்கால உணவுகள் என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டது ``நேஷ்னல் ஜியாக்ரபி" (National Geography) நிறுவனம். இனிவரும் காலங்களில் இந்த உணவுகள் உலகின் பெரும்பகுதிகளில் பிரதான உணவாக இருக்கக் கூடும் என்று அது கூறியுள்ளது. 

1. கிரிக்கெட் பூச்சி :

ஆம்... பூச்சிகள்தான் எதிர்காலத்தின் பிரதான உணவாக இருக்கக் கூடும் என்று சொல்லப்படுகிறது. ஏற்கெனவே, பல மேற்குலக நாடுகளில் கிரிக்கெட் பூச்சியைக் கொண்டு உருவாக்கப்படும் பொடிகள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதை மாவாக அரைத்தும் பல இடங்களில் சாப்பிடுகிறார்கள். கிரிக்கெட் பூச்சியைக் கொண்டு இந்தோனேசியாவில் ``ரெம்பெயக்" (Rempeyek) என்ற உணவு தயாரிக்கப்படுகிறது. தாய்லாந்தில் ``சிங் ரிட்" (Ching Rit) எனும் வறுவல் சமைக்கப்படுகிறது. ஆனால், இன்றைய நிலையில் இவையனைத்தும் உலகின் சில பகுதிகளில்தான் உணவாக இருக்கின்றன. ஆனால், எதிர்காலத்தில் இது உலகம் முழுக்க முக்கிய உணவாக இருக்கும்.

எதிர்கால உணவுகள் - கிரிக்கெட் பூச்சி

மாட்டிறைச்சியில் இருப்பதை விட புரதமும் (Proteins), நுண் பொருள்களும் (Micro Nutrients) கிரிக்கெட் பூச்சியில் அதிகமாக இருக்கின்றன. இன்றைய நிலையில், கிரிக்கெட் பூச்சி உணவுகளின் விலை சற்று அதிகமாக இருந்தாலும், எதிர்காலங்களில் அதன் விலை பெருமளவு குறையும் என்று சொல்லப்படுகிறது. கிரிக்கெட் பூச்சிகளை வளர்க்கும் பண்ணைகள் சில இன்று அமெரிக்காவில் இருக்கின்றன. எதிர்காலங்களில் இந்தப் பண்ணைகள் உலகம் முழுக்க பெரும் வியாபாரமாக மாறும். கிரிக்கெட் பூச்சி பல வகைகளில் உணவாக இருக்கும்.

2. ``கேர்ன்ஸா" கோதுமை:

அமெரிக்காவின் கான்ஸாஸ் மாகாணத்தில் இருக்கும் ``லேண்ட் இன்ஸ்டிட்டியூட்" (Land Institute) அதிக மகசூலைக் கொடுக்கும், அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட ஒரு கோதுமைப் பயிரை உருவாக்கினார்கள். அதற்குப் பெயர் ``கேர்ன்ஸா" (Kernza). 
வழக்கமாக கோதுமைப் பயிர்கள் ஒரு வருடம் வரை மட்டுமே வாழும். ஆனால், கேர்ன்ஸா 5 வருடங்கள் வரை மகசூலைக் கொடுக்கும் திறன்கொண்டது. அதேபோல், 10 அடி நீளம் வரைப் போகும் ஆழமான வேர்களையும் கொண்டது. 

கோர்ன்ஸா கோதுமை - எதிர்கால உணவுகள்

இது இன்னும் பரவலாகப் பயிர் செய்யப்படாவிட்டாலும் கூட, இதன் தன்மையின் அடிப்படையில் பார்க்கும் போது, எதிர்காலத்தில் இந்த கோதுமைதான் உணவிற்கான முக்கியப் பயிர் வகையாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. 

3. சைவ மாமிசம்!:

சைவ மாமிசம் - எதிர்கால உணவு

மாமிசத்துக்காக அதிக கால்நடைகளை வளர்ப்பதுதான் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்திற்கான (Green House Gas Emission) முக்கிய காரணியாகச் சொல்லப்படுகிறது. மேலும், மக்கள் தொகை பெருமளவு இருக்கும்பட்சத்தில், அதற்கு இணையாக கால்நடைகளின் எண்ணிக்கையைக் கூட்டுவது சற்று கடினமான விஷயம். எனவே, பட்டாணி, சோயா போன்றவைகளிலிருந்து அதே சுவையைக் கொண்டு வரும் ``சைவ மாமிசங்களை" உருவாக்க முடியும். அது எதிர்காலத்தில் ஒரு முக்கிய உணவாக இருக்கும். 

4. பாசி எண்ணெய், பாசி வெண்ணெய்:

பாசி எண்ணெய், வெண்ணெய்

எதிர்காலத்தில் எண்ணெய்க்குப் பெரும் பஞ்சம் ஏற்படலாம். அப்போது, பாசியிலிருந்து (Algae) எண்ணெய் எடுக்கும் நிலை ஏற்படும். பாசியிலிருந்து எண்ணெய், வெண்ணெய் எடுக்கும் ஆராய்ச்சிகள் இன்றும் தொடர்ந்துக்கொண்டேயிருக்கின்றன. 

5. பண்ணைக் கோழிகள்:

பண்ணைக் கோழிகள்

இன்றே அதுதான் நிலைமையாக இருக்கிறது. எதிர்காலத்தில் பண்ணைகளில் ஊசியிடப்பட்டு, பதப்படுத்தப்பட்டு வளர்க்கப்படும் கோழிகள் மட்டும்தான் கிடைக்கும். 

எதிர்கால உணவுகள்

``இன்று நல்ல, ஆரோக்கியமான உணவுக்காகப் போராடிக்கொண்டிருக்கிறோம். நாளை உணவுக்கே நாம் பெரும் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியிருக்கும். இந்த உணவுகள் எல்லாம் முக்கிய உணவாக இருக்கலாம். ஆனால், இன்றே நாம் மண் வளத்தைக் காப்பாற்றினால் மட்டும்தான் இது கூட சாத்தியமாகும். இல்லையென்றால், மனித இனம் பெரும் பஞ்சத்தை சந்திக்கும் வாய்ப்புகள் இருக்கிறது" என்று எச்சரிக்கிறார் லின் யீ யுவான்.                  

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்