வெளியிடப்பட்ட நேரம்: 09:51 (11/04/2018)

கடைசி தொடர்பு:09:51 (11/04/2018)

"தட்டான் விட்டான்..." செல்லூர் ராஜுவின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து!

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வாழ்க்கை வரலாற்றையே புத்தகமாகப் போடும்போது, நாசாவுக்கே சவால் விட்ட நம் தங்கம் அமைச்சர் செல்லூர் ராஜுக்கு என்ன குறைச்சல்..?

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வாழ்க்கை வரலாற்றையே புத்தகமாகப் போடும்போது, நாசாவுக்கே சவால் விட்ட நம் தங்கம் அ.தி.மு.க அமைச்சர் செல்லூர் ராஜுக்கு என்ன குறைச்சல்..? ராஜு என்ன தக்காளி தொக்கா..? இதோ அச்சிலிருக்கும் `செல்லூரார் வாழ்க்கை வரலாறு' புத்தகத்தின் சில பக்கங்களைக் கிழித்து உங்களுக்குத் தருகிறேன்...


* 1968-ல் மதுரைக்கு வடக்கே இருக்கும் செல்லூர் கிராமத்தில் ஒரு மின்னல் தோன்றி மறைந்தது. ஊரே மழைக்காக காத்திருக்கும்போது, ரயில்வே ஸ்டேஷனை ஒட்டியுள்ள ஒரு வீட்டில் 'குவா குவா' என்று குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்கிறது. மழை ஷோவெனப் பெய்ய... மின்னல் வெட்டியிருக்கிறது. பார்த்தால் அந்த மின்னல் அந்தக்குழந்தையின் கையில்! மின்னலையே பிடித்து விளையாடியதால் 'மின்னல் ராஜு' என்றே ஊராரால் அழைக்கப்பட்டார். ஊர் மக்களில் ஒருவர் தெர்மாக்கோலால் இந்தக் குழந்தை நனைந்துவிடாமல் காத்தார்.  தெர்மாக்கோலுக்கும் அவருக்குமான பந்தம் அங்கிருந்துதான் தொடங்கியது. 


* ஊர் மக்களால் `மின்னல் ராஜு', ' ஞானக்குழந்தை', 'அறிவுக்கொழுந்து', 'லிட்டில் ஜீனியஸ்'  என்று அழைக்கப்பட்ட செல்லூர் ராஜுவும் விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக பயங்கர அறிவுடன் விளங்கினார். சிறுவயதில் செல்லூர் ராஜுவுக்கு வானவியல் மீது அளவு கடந்த பிரியம். இரவானதும் வானத்திலிருக்கும் நட்சத்திரங்களை எண்ண ஆரம்பித்துவிடுவார். இப்படி ஒருமுறை அவர் எண்ணி ஸ்லேட் குச்சியால் எழுதி வைத்த 94,798 ஓட்டுகளை அவர் 2011 சட்டமன்ற தேர்தலில் பெற்றார் என்பது ஒன்பதாவது அதிசயமாக கின்னஸில் அண்மையில் இடம்பிடித்திருக்கிறது. 

செல்லூர் ராஜு


* ஒரு மழைக்கால சீஸனில் செல்லூர் ராஜு தன் வீட்டருகே பறக்கும் தட்டான்களைப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் மனதில் ஃப்ளாஷ் அடித்த யோசனைதான் 'தட்டான் ஏர்வேஸ்'! நூறு தட்டான்களைப் பிடித்து அவற்றின் வாலில் கையிற்றைக் கட்டி, அந்தக் கயிற்றை மொத்தமாக ஒரு பெரிய சணல் கயிற்றில் கட்டி அதை நம் கைகளில் கட்டிக்கொண்டால் தட்டான்கள் பறக்கும்போது நாமும் பறக்கலாம் என்பதே ஐடியா. நாகமலை புதுக்கோட்டையிலிருந்து சோழவந்தான் வரை பறந்து காட்டியவர், ``உயிரினத்துக்கு ஊறு விளைவிக்கக்கூடாது. அது தப்பே!' என்று தெய்வத்திருமகள் விக்ரம் போல சொன்னார். அந்தத் தட்டான்களை நாகமலைக் காட்டுக்குள் விட்டுவிட்டார். இதனாலேயே இவரது  நண்பர்கள், 'தட்டான் விட்டான்' என்று இவரை அன்போடு அழைத்துப் பழகினர்.

*  சின்ன வயதில் தாய்ப்பாசத்தில் எம்.ஜி.ஆரையே மிஞ்சிவிடும் அளவுக்கு இருந்த செல்லூர் ராஜு ஒருமுறை கோபத்தில் அவரது அம்மாவை எதிர்த்துப்பேசிவிட்டார்.  தோசை சுட்டுக் கொடுத்தால் இட்லியும், இட்லி சுட்டுக் கொடுத்தால் தோசையும் கேட்டு அடம்பிடிப்பார். இந்த இரண்டையும் சுட்டுக் கொடுத்தால் பூரி கேட்டு அழுவார். பூரியும் சுட்டுக் கொடுத்தால் அதையும் வேண்டாமென்பார். கடைசியில் சப்பாத்தி சுட்டுக் கொடுப்பார். ஒரு முறை இட்லி, தோசை, பூரி மற்றும் சப்பாத்தி சுட்டு வைத்திருந்தார் அவர் அம்மா. அன்று விளையாடிவிட்டு வந்த செல்லூரார், இவற்றில் எதையும் சாப்பிடாமல் சோறு கேட்டு அழுது அடம்பிடித்திருக்கிறார். 'சோத்துப் பண்டமே!' என்று திட்டிய இவர் அம்மா முதன்முறையாக இவரை பழுக்கக் காய்ச்சிய கரண்டியால் சுட்டிருக்கிறார். அன்றிலிருந்து எப்படி சுட்டாலும் எதைச்சுட்டுக் கொடுத்தாலும் கேள்வி கேட்காமல் சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். 

* குடிசை வேய்ந்த செல்லூர்  ஆரம்ப பாடசாலையில்தான் செல்லூர் ராஜு படித்தார். படிப்பில் எப்போதும் முதல் மாணவனாக திகழ்வார். ஆசிரியர் எந்தக் கேள்வி கேட்டாலும் பதில் சொல்லி அசத்தி விடுவார். ஆசிரியர்களின் செல்லப்பிள்ளையான அவர்மீது சக மாணவர்கள் பொறாமை கொண்டிருந்தனர். ஒருநாள் வீட்டிலிருந்து குடிக்க வாட்டர் கேன் எடுத்துவர மறந்துவிட்டார். உச்சி வெயில் நேரத்தில் தாகமெடுத்துவிட  சக மாணவர்களிடம் குடிக்கத் தண்ணீர் தருமாறு கேட்டார் செல்லூரார். ஒருவரும் கொடுக்கவில்லை. வேண்டுமென்றே காதில் விழாததுபோல உதாசீனப்படுத்தினார்கள். பொறுத்துப்பொறுத்துப்பார்த்த செல்லூரார், ``ஐயோ... நெருப்பு... கூரையில் நெருப்பு!'' என கூக்குரல் எழுப்பினார். மாணவர்கள் அனைவரும் தங்கள் வாட்டர் கேன்களை எடுத்துக்கொண்டு கூரையைப் பார்த்தபடி, ``எங்கே எங்கே?' என பரபரப்புடன் கேட்டனர். செல்லூரார் சாவகாசமாக ஒரு டம்ளரை எடுத்து அவர்கள் கொண்டு வந்திருந்த கேனிலிருந்து ஊற்றி வயிறு குளிரக் குடித்தார். ''நெருப்பு எங்கேடா?'' என்று எல்லோரும் கேட்டபோது, தன் வயிற்றைக் காட்டி, ``நெருப்பு என் வயிற்றில் பற்றி எரிந்தது. இப்போது தண்ணீர் ஊற்றி அணைத்துவிட்டேன் ஃப்ரெண்ட்ஸ்!'' என்று சொல்லி சிரித்தார்.

 

செல்லூர் ராஜு

 * செல்லூர் ராஜு வளர்ந்து பெரிய ஆளாகி விடுகிறார். தியாகராஜர் கல்லூரியில் பி.எஸ்சி படித்து பட்டம் பெற்றார். முதல் இன்டெர்வியூவிலேயே 'டபுள் புரொமோஷன்' கொடுக்கப்பட்டு 'நீங்கள் ஏன் அரசியலுக்குப் போகக்கூடாது?' என்று அனுப்பி விட்டார்கள்.  அவர் வேலை பார்த்தால் அவர் குடும்பம் மட்டுமே பலனடையும். ஆனால், அரசியலில் இறங்கினால்  இந்த நாட்டு மக்களே பலனடைவார்கள் என்பதுதான் அதற்குக் காரணம். அந்த சுவையான இன்டெர்வியூ சம்பவம் இதுதான்... கப்பல் கம்பெனிக்கான இன்டெர்வியூ அது. ``மிஸ்டர் ராஜு! நீங்கதான் நம்ம கப்பலோட கேப்டன்னு வையிங்க. கப்பலை செலுத்திட்டு இருக்குறப்போ நம்ம கப்பலை நோக்கி புயல் வருது. என்ன செய்வீங்க?'' என்று முதல் கேள்வி கேட்கப்பட்டது.

சற்றும் யோசிக்காமல்,  ```கப்பல்ல இருக்குற ஒரு நங்கூரத்தை எடுத்து நச்சுனு கடலுக்குள்ள வீசி நங்கூரத்தை நாட்டுவேன்!'' என்றார்.  உடனே,  ``மீண்டும் இன்னொரு புயல் கப்பலை நோக்கி வருது. இப்ப என்ன செய்வீங்க?'' என்று கேட்கப்பட்டது. அதற்கும் அசராமல் பதில் சொன்னார் செல்லூரார். ``கப்பல்ல இருக்குற இன்னொரு நங்கூரத்தை எடுத்து கடலுக்குள் நச்சுனு நாட்டுவேன்.'' கேள்வி கேட்டவரும் அசராமல், ``சரிப்பா, பத்து புயல்கள் அடுத்தடுத்து உங்க கப்பலை நோக்கி  வருகிறது... என்ன செய்வீங்க?'' என்று கேட்டார். அதற்கும் அசராமல், ``கப்பல்ல இருக்குற பத்து நங்கூரத்தையும்  எடுத்து கடலுக்குள் வீசி அம்புட்டையும் நாட்டுவேன்'' என்றார். கடுப்பான கேள்வி கேட்பவர், ``ஆங்...நல்லா நாட்டுவீங்க. ஒரு கப்பல்ல இத்தனை நங்கூரத்தை எங்கேயிருந்து எடுத்தீங்க?'' என்று நக்கலாகக் கேட்டார் அந்த அதிகாரி. 

அதற்கும் சளைக்காமல் இப்படி பதில் சொன்னார் நம் செல்லூர் ராஜு: ``நீங்க எங்கேயிருந்து இத்தனை புயல்களை என் கப்பலை நோக்கி நாட்டுனீங்களோ அங்கேயிருந்துதான்!''


-இப்படி பல ருசிகரமான சம்பவங்களின் தொகுப்புதான் செல்லூர் ராஜுவின் வாழ்க்கை வரலாறு. படிக்கத் தவறாதீர். 
(வெளியீடு: காமெடி பப்ளிகேஷன்ஸ், 88, கருப்பு சுண்ணாம்புக்காரத் தெரு, மதுரை- 9; விலை: 301) 

-இது கற்பனை மட்டுமே... யாரையும் புண்படுத்துவது எங்கள் நோக்கமல்ல மக்களே!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்