உங்கள் வீட்டில் செல்லப்பிராணி இருக்கிறதா...பெற்றோர்கள் கவனிக்க வேண்டியதென்ன?!

பிராணிகளின் கழிவுகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும். அவை தங்கும் இடத்தைத் தினமும் ஆன்டிசெப்டிக் லோஷன் பயன்படுத்திச் சுத்தப்படுத்துவது அவசியம்.

உங்கள் வீட்டில் செல்லப்பிராணி இருக்கிறதா...பெற்றோர்கள் கவனிக்க வேண்டியதென்ன?!

பொம்மைகள் எத்தனை இருந்தாலும், செல்லப் பிராணிகளிடம் குழந்தைகளுக்கு உருவாகும் பிடிப்பு உயிரோட்டமானது. அதைக் கவனித்துக்கொள்ளும்போது குழந்தையும் ஒரு தாயாக/தந்தையாக மாறிவிடும். செல்லப் பிராணி வளர்ப்பு, ஆர்வம் நிறைந்த ஒரு செயல் மட்டுமல்ல; உடல்நலம், மனநலம், சமூகநலம் ஆகியவற்றை ஒன்றாகக்கொண்டது. உங்கள் குழந்தையின் உலகத்தில் கைப்பேசிகளைக் கொடுத்து, இயந்திரமாக மாற்றுவதைக் காட்டிலும் செல்லப் பிராணிகளுடன் பழகவிடுவது பல மடங்கு சிறந்தது. குழந்தைகளுக்கான செல்லப் பிராணி வளர்ப்பு பற்றியும் அவற்றைப் பராமரிக்கும் அடிப்படை வழிமுறைகள் பற்றியும் சொல்கிறார், கால்நடை மருத்துவர் செளந்திர பாண்டியன்.

செல்லப்பிராணி

 

டாக்டர் செளந்திர பாண்டியன்.குழந்தைகளிடம் அன்பு, பாசம், கருணை போன்ற குணங்களை வளர்த்தெடுக்க செல்லப் பிராணி வளர்ப்பு தூண்டுகோலாக அமையும். ஆனால், செல்லப் பிராணிகளை வாங்கிக்கொடுப்பதற்கு முன்பு, அது அவர்களின் வயது, மனநிலை போன்றவற்றுக்கு ஏற்றதா என்பதை யோசித்துப் வாங்குவது முக்கியம்.

விலங்குகளின் உலகம் மிகவும் சிறியது. அதிலும், வீட்டில் வளர்க்கப்படும் நாய் போன்ற செல்லப் பிராணிகள், மனிதர்களை அதிகம் எதிர்பார்ப்பவை. அவை மனிதர்களிடமிருந்து, கவனிப்பையும் அன்பையும் எதிர்பார்க்கும். தனக்கு உணவு அளிப்பவர்களிடம் காட்டும் மரியாதையும் அன்பும் தனி ரகம். இதனால், குழந்தைகள் அவற்றின் செயல்களை ரசிக்கத் தொடங்கிவிடுவர். அவர்களின் சில இயல்புகளான அழுகை, அடம்பிடிப்பது போன்ற பழக்கங்களிலும் மாறுதல் ஏற்படும்.

உங்கள் வீட்டில் உள்ள செல்லப் பிராணிகளுக்கு, உங்கள் குழந்தைகளை உணவு அளிக்கப் பழக்கபடுத்துவதன் மூலம், மற்றவர்களுக்கு உதவும் பழக்கத்தை கொண்டுவர முடியும். சரியான நேரத்துக்கு உணவு அளிக்கத் தொடர்ந்து பழக்கப்படுத்துவதால், அவர்களிடம் நேர மேலாண்மை மேலோங்கும்.

இன்றைய பல குழந்தைகள், இணையதளங்களில் மூழ்கிக் கிடக்கிறார்கள். உயிருள்ள அம்சங்களைவிட உயிரற்ற அம்சங்களுடன் அதிகநேரம் செலவிடுகிறார்கள். இதனால், அவர்களின் கற்பனைத்திறன் பாதிக்கப்படும். மற்ற செயல்களிலும் விருப்பமின்றி இருப்பர். இப்படிப்பட்ட குழந்தைகளுக்குச் செல்லப் பிராணி வாங்கிக்கொடுப்பதன் மூலம் நிச்சயம் மாற்றமுடியும்.

 

பிற உயிர்களின் மீது அன்பு செலுத்த வேண்டும் என்பது ஒரு மானுட தத்துவம். வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளால், உங்களின் குழந்தை மானுட பாடத்தை நிச்சயம் கற்றுக்கொள்வார்கள்.

குழந்தைகளுக்குச் செல்லப் பிராணியை வாங்கிக்கொடுக்கும் பெற்றோர்கள் கவனிக்க வேண்டியவை:

செல்லப்பிராணி

5 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கே செல்லப் பிராணியை அறிமுகப்படுத்த வேண்டும். அதற்கு முன்பு அவர்களுக்கு அவற்றிடம்  எப்படிப் பழக வேண்டும் என்ற தெளிவு இருக்காது. தங்கள் கோபம், அழுகை போன்றவற்றை சட்டெனப் பிராணிகளிடம் காட்டலாம் என்பதால் கவனம்.

நாய், கிளி போன்றவற்றை நேரடியாகக் குழந்தைகளிடம் கொடுக்காமல், முதலில் வீட்டில் உள்ள பெரியவர்களுடன் பழகும் வாய்ப்பை ஏற்படுத்துங்கள். அவை கட்டளைகளுக்குப் பணிய ஆரம்பித்த பிறகு  குழந்தைகளின் கவனிப்பில் கொடுங்கள்.

உங்கள் குழந்தைகளுக்கு உடலில் ஏதேனும் காயங்கள் இருக்கும்போது, செல்லப் பிராணிகளுடன் விளையாட அனுமதிக்காதீர்கள். இதனால், தொற்றுக்கிருமிகள் பரவி, குழந்தையின் உடல்நலன் மேலும் மோசமாகும்.

செல்லப் பிராணிகளுக்கு உரிய காலகட்டத்தில் தடுப்பூசி போடுவது அவசியம்.

குழந்தைகள் நாயின் கழுத்தை கட்டிக்கொள்வதை ஒருபோதும் அனுமதிக்காதீர்கள். இதுபோன்ற சமயங்களில் நாயின் செயல்பாடுகள் மாறும் பட்சத்தில், குழந்தையின் முகத்தில் கடிப்பதற்கும் வாய்ப்புள்ளது.

உங்கள் வீட்டில் நாய் வளர்க்கிறீர்கள் எனில்,குழந்தைகள் அதனுடன் நெருகிப்பழகும் அதன் முடி மூச்சுக்குழாய் வழியே உள்ளே சென்று சுவாசக் கோளறுகளை ஏற்படுத்தும்.

குழந்தைகளுக்கு ஆரம்பத்தில், மீனை செல்லப் பிராணியாக அறிமுகப்படுத்தலாம். அதனால் ஆபத்து ஏற்படாது. அதன்பிறகு, முயல், அணில் போன்றவற்றை அறிமுகப்படுத்துங்கள். 9 வயதுக்குப் பிறகு நாய் அல்லது பூனையை அறிமுகப்படுத்துவது நல்லது.

செல்லப் பிராணிகளைக் குளிப்பாட்டும்போதும் மருந்து தடவும்போதும், கையுறை அணிவது அவசியம். பாதிக்கப்பட்ட நாய் உள்ள வீட்டின் தரைப் பகுதியை, மருத்துவரின் ஆலோசனைப்படி தகுந்த கிருமிநாசினியால் அவ்வப்போது கழுவுங்கள்.

பிராணிகளின் கழிவுகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும். அவை தங்கும் இடத்தைத் தினமும் ஆன்டிசெப்டிக் லோஷன் பயன்படுத்திச் சுத்தப்படுத்துவது அவசியம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!