செடி வளர்ப்பதைப்போலத்தான் குழந்தை வளர்ப்பும்! - உண்மை சொல்லும் கதை #MotivationStory | A story about Parenting is also like growing plants

வெளியிடப்பட்ட நேரம்: 07:57 (12/04/2018)

கடைசி தொடர்பு:08:34 (12/04/2018)

செடி வளர்ப்பதைப்போலத்தான் குழந்தை வளர்ப்பும்! - உண்மை சொல்லும் கதை #MotivationStory

உங்கள் குழந்தை கேட்பதையெல்லாம் வாங்கித் தருகிறீர்களா? கவனம்!

செடி வளர்ப்பதைப்போலத்தான் குழந்தை வளர்ப்பும்! - உண்மை சொல்லும் கதை #MotivationStory

கதை

`பெற்றோருக்கும் குழந்தைக்கும் இடையிலான உறவு கற்பித்தல் அடிப்படையில்தான் இருக்கிறது; அப்படி இருக்கவேண்டியது அவசியமும்கூட’ - ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கல்வியாளர் கில்பர்ட் ஹையத் (Gilbert Highet) தெளிவாகச் சொல்லியிருக்கிறார். குழந்தைக்கு வார்த்தையை, எழுத்தை, குடும்பத்தை, உறவினரை, அக்கம்பக்கத்தாரை, பழக்கவழக்கங்களை, பாரம்பர்யத்தை.. இன்னும் என்னென்னவோ கற்றுக்கொடுக்கும் முதல் ஆசிரியர்கள் பெற்றோரே. ஆனால் `பொத்தி வளர்க்கிறேன்’ என்கிற பெயரில் சுயகாலில் நிற்கத் தெரியாதவர்களாக, எதையும் எதிர்த்து நிற்கத் தெரியாதவர்களாக வளர்க்கப்படுகிறவர்கள்தான் இங்கு அநேகம். குழந்தை கேட்பதெல்லாம் எளிதாகக் கிடைத்துவிட்டால் அவற்றின் அருமை தெரியாமல் போகும்; ஒரு பொருளுக்காகக் கொடுக்கப்படும் உழைப்பின் மதிப்பு தெரியாமல் போகும். வாழ்க்கையை சுயமாக வாழ்வது எப்படி என்பது புரியாமல் போகும். சில நேரங்களில் வேண்டியதை பெற்றுத் தருவதைவிட, அதை எப்படிப் பெறுவது என்று வழிகாட்டுவது நல்லது. `குழந்தைகளை சுயமாக நடைபழக விடுங்கள்... அதே நேரத்தில் அவர்களைப் பத்திரமாகக் கண்காணித்தபடி பின்தொடர்ந்துகொண்டே இருங்கள்’ என்பது ஜப்பானியர்கள் பின்பற்றும் ஒரு வழிமுறை. இந்த உண்மையை விளக்குகிறது இந்தக் கதை.

கதை

அவர்கள் இருவரும் பக்கத்து பக்கத்து வீட்டுக்காரர்கள். ஒருவர் ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர்; மற்றொருவர், ஓய்வு பெற்ற பொறியாளர். பொறியாளருக்கு புதிது புதிதாக எதையாவது செய்து பார்ப்பதிலும், நவீன தொழில்நுட்பங்களிலும் ஆர்வம் அதிகம். இருவருக்குமே நேரம் அதிகம் இருந்தது. ஒருநாள் பேசிக்கொண்டிருந்தபோது ஆசிரியருக்கு அந்த யோசனை தோன்றியது. `இருவருக்கும்தான் வீட்டுக்கு முன்பாக பெரிய இடம் இருக்கிறதே... சின்னத் தோட்டம் போட்டால் என்ன?’ இதைச் சொன்னதும் பொறியாளர் ஒப்புக்கொண்டார். இருவரும் ஊருக்கு வெளியேயிருந்த செடிகள் விற்பனை நிலையத்துக்குப் போனார்கள். அவரவருக்குப் பிடித்த விதவிதமான செடிகளை வாங்கி வந்தார்கள். தங்கள் வீட்டில் செடிகளை நட்டு வளர்க்க ஆரம்பித்தார்கள். 

ஓய்வு பெற்ற ஆசிரியர் செடிகளை வளர்ப்பதில் அவ்வளவு அக்கறை எடுத்துக்கொள்ள மாட்டார். குறைவாகத்தான் தண்ணீர் ஊற்றுவார். ஆனால், பக்கத்து வீட்டிலிருந்த பொறியாளர் அப்படியல்ல. எந்தச் செடிக்கு எந்த உரம் போட்டால் நல்லது என்று புத்தகங்களையும் இணையதளங்களையும் படித்து அதைப் பின்பற்றுவார். காலை, மாலை, இடைவெளியில் கிடைக்கும் நேரத்திலெல்லாம் தண்ணீர் ஊற்றுவார். மொத்தத்தில் அவர் வளர்க்கும் செடிகளை மிக நன்றாகப் பார்த்துக்கொண்டார். 

ஆசிரியர் வளர்த்த செடிகள் எளிமையான தோற்றத்துடன் இருந்தன; நன்றாகவும் வளர்ந்திருந்தன. பொறியாளரின் செடிகளும் செழுமையோடும் பசுமையோடும் வளர்ந்துகொண்டிருந்தன. ஒருநாள் இரவு கனமழை பெய்தது. வெளியே வரவே முடியாத அளவுக்கு காற்றோடு சேர்ந்து விட்டு விளாசிய பெருமழை அது; காலையில்தான் நின்றது. கிட்டத்தட்ட சின்னதாக ஒரு புயலடித்து ஓய்ந்தது மாதிரி இருந்தது. பொறியாளரும் ஆசிரியரும் அடுத்த நாள் வீட்டைவிட்டு வெளியே வந்தார்கள். தாங்கள் வளர்க்கும் செடிகளுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதைப் பார்த்தார்கள். பொறியாளருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவர் வளர்த்துக்கொண்டிருந்த செடிகளெல்லாம் மண்ணிலிருந்து வேரோடு வெளியே வந்து சேதமடைந்திருந்தன. அவர் துடித்துப் போனார். சரி, அடுத்த வீட்டில் நிலைமை எப்படியிருக்கிறது என்பதைப் பார்க்கப் போனார். 

கதை

ஆசிரியரின் வீட்டில் அவருக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. சேதம் மிக மிக சொற்பமாகவே இருந்தது. இரண்டே செடிகள் மட்டுமே மண்ணைவிட்டு வெளியே வந்திருந்தன. பொறியாளர், ஆசிரியரிடம் கேட்டார்... ``நாம ரெண்டு பேருமே தோட்டத்துல செடிகளை வளர்த்தோம். நான் என் செடிகளைப் பார்த்துப் பார்த்து வளர்த்தேன். உங்களைவிட நல்லா பராமரிச்சேன். அதிகமா தண்ணிகூட விட்டேன். இப்போ பாருங்க... இந்த மழையில என்னோட செடிகளெல்லாம் வேரோட பிடுங்கிக்கிட்டு வெளியே வந்துடுச்சு. ஆனா, உங்க செடிங்க அப்படியே இருக்கு. அது எப்படி?’’ 

அந்த ஓய்வு பெற்ற, அனுபவமும் முதிர்ச்சியும் நிறைந்த ஆசிரியர் சொன்னார்... ``நீங்க உங்க செடிகள் மேல ரொம்ப கவனம் செலுத்தினீங்க, நிறைய தண்ணீர் விட்டீங்க. அதனாலேயே அந்தச் செடிகளுக்கு உழைக்கவேண்டிய, எதுக்கும் மெனக்கெடவேண்டிய அவசியம் இல்லாமப் போயிடுச்சு. உங்க செடிகளுக்கு எல்லாமே ஈசியா கிடைக்க நீங்க வழி செஞ்சுட்டீங்க. நான் என்னோட செடிகளுக்குக் கொஞ்சமா தண்ணிவிட்டதால அதுங்களோட வேர்கள் இன்னும் தண்ணி வேணும்னு நீள ஆரம்பிச்சுது. அதனாலயே மண்ணுக்குள்ள ஆழமாகப் புகுந்த வேர்கள் பலமானது. அதனாலதான் என் செடிகள் பிழைச்சுது...’’      

குறிப்பு: குழந்தை தவறாக அடியெடுத்துவைத்து தடுமாறி, கீழே விழுகிறதா?  ஜப்பானியர்கள் பதறிப்போய் தூக்கிவிட மாட்டார்கள். அழுதாலும், தானாக எழுந்திருக்கும் வரை காத்திருப்பார்கள். `அப்போதுதான் குழந்தைக்குக் கீழே விழுந்தால் அடிபடுவோம் என்பது புரியும்; திரும்பக் கீழே விழக் கூடாது என்பதையும் கற்றுக்கொள்ளும் என்பது அவர்களின் லாஜிக்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close