வெளியிடப்பட்ட நேரம்: 11:15 (13/04/2018)

கடைசி தொடர்பு:11:15 (13/04/2018)

நம் பெரும்பாலான கனவுகளை நாம் மறந்துவிடுவது எதனால்... ஓர் எளிய விளக்கம்! #Dreams

உளவியலுக்குள் சென்று குழப்பிக்கொள்ளாமல் கனவுகள் குறித்த ஒரு கேள்விக்கு ஓர் எளிய விடை காண்போமா? அந்தக் கேள்வி... நம் பெரும்பாலான கனவுகளை நாம் ஏன் மறக்கிறோம்?

நம் பெரும்பாலான கனவுகளை நாம் மறந்துவிடுவது எதனால்... ஓர் எளிய விளக்கம்! #Dreams

னவுகள். மாய வலைகள் விரித்து, நாம் அதை உண்மை என்று நம்பும் தருணத்தில், நம் ஆழ் மனதை எழச் செய்து, இது நிஜமல்ல, என்று நம்மைக் கிண்டல் செய்யும். அப்போது, கண்ட கனவின் தன்மையைப் பொருத்து அதை மகிழ்ச்சியுடனோ, வருத்தத்துடனோ ஏற்றுக் கொள்வோம். ஆனால், நாம் காணும் கனவுகள் அனைத்தும் நமக்கு நினைவில் இருக்கிறதா? பயமூட்டும் கனவுகள், நல்ல உணர்வுகளைக் கொடுக்கும் கனவுகள் மட்டும் நமக்கு நினைவில் இருக்கும். ஆனால், அதுவும் முழுமையாக நினைவில் இருக்காது. அதன் மையக்கரு மட்டும் வெளியே சொல்லும் அளவுக்கு மனதில் பதிந்திருக்கும். 

கனவு

மருத்துவ அறிவியலில் கனவுகள் குறித்த ஆராய்ச்சிகள் மிகவும் குறைவானவை. இன்றும் சிக்மண்ட் ஃபிராய்ட் (Sigmund Freud) அவர்களின் ஆராய்ச்சிகளைத்தான் நாம் மேற்கோள் காட்டுகிறோம். அவரின் ஆய்வுக் கட்டுரைகளைத் தொகுத்து வெளிவந்த 'The Interpretation of Dreams' புத்தகம்தான் கனவுகள் பற்றி நம்மிடம் இருக்கும் தகவல் களஞ்சியம். ``கனவுகள் ஏன் ஏற்படுகின்றன? இந்தக் கனவுக்கு என்ன அர்த்தம்?" போன்ற கேள்விகளுக்கு இன்று உளவியல் ரீதியாக நிறைய பதில்களை இணையத்தில் பெற்றுவிட முடியும். அந்த உளவியலுக்குள் சென்று குழப்பிக்கொள்ளாமல் கனவுகள் குறித்த ஒரு கேள்விக்கு ஓர் எளிய விடை காண்போமா? அந்தக் கேள்வி...

நம் பெரும்பாலான கனவுகளை நாம் ஏன் மறக்கிறோம்?

இதற்கு முதலில் கனவுகளின் தன்மை குறித்து தெரிந்துகொள்ள வேண்டும். நிஜ வாழ்வில் ஒரு தெருவில் நாம் இறங்கி நடக்கும்போது, ஏற்கெனவே அதில் இருக்கும் விஷயங்களை நம் மூளை உள்வாங்கி, இது இந்தப் பொருள், அது அந்த இடம், இவர் இப்படியிருக்கும் மனிதர் என்று குறித்துக்கொள்ளும். நிஜ வாழ்வில் இதைச் செய்வது மிகச் சுலபம். ஆனால், கனவுகள் விநோதமானவை. காரணம், அங்கே தெரு என்ற ஒன்றே நீங்கள்தான், அதாவது உங்கள் மூளைதான் கட்டமைக்கிறது. நீங்கள் அந்தத் தெருவில் இறங்கி நடக்க நடக்க, அதிலிருக்கும் விஷயங்களை உணர உணர, திரைக்கு அப்பாலிருந்து அந்தத் தெருவை உங்கள் மூளையே உங்களுக்குத் தெரியாமல் உருவாக்கிக் கொண்டிருக்கும். அதாவது, உருவாக்குதலுக்கும், உணர்தலுக்கும் இடையில் உங்களை நிறுத்தி அழகு பார்ப்பதுதான் நீங்கள் காணும் கனவின் வேலையே. இதைத்தான் ஆங்கிலத்தில் "We create and perceive our dreams simultaneously" என்கிறார்கள். இதுகுறித்த விளக்கம், கிறிஸ்டோபர் நோலன் அவர்களின் கனவுப் படமான 'Inception'-லும் இடம் பெற்றிருக்கும்.

கட்டுப்பாடற்ற உலகம்

கண்ட கனவுகளை மறந்துவிட்டோம் என்று உணர்வது வெறுப்பை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது. "அது என்ன கனவு?" என்று யோசித்து யோசித்து எண்ணக்குலைவும் ஏமாற்றமும் ஏற்பட்டுப் பாதி நாளை அதில் ஒட்டி விடுவோம். ஒரு சிறிய கனவுக்காக இந்த அளவுக்கு நாம் மன வருத்தம் கொள்வதற்கு காரணம், நாம் அதைக் கனவு என்று பார்ப்பதே இல்லை. நேற்று இரவு நீங்கள் யோசித்த ஒரு விஷயம் அல்லது செய்த ஒரு செயல் உங்களுக்கு மறந்து போனால், எப்படி ஒரு ஏமாற்றம் ஏற்படுமோ, அதற்குக் கொஞ்சமும் சளைத்ததல்ல, இந்தக் கனவுகளால் வரும் ஏமாற்றம். சுருக்கமாகச் சொன்னால், இரவு மது அருந்திவிட்டு, காலையில் ஹேங்ஓவரின்போது யோசித்து யோசித்து தலைவலியை தருவித்துக் கொள்வது போலத்தான்.

மனிதனின் சராசரி வாழ்நாளில், மூன்றில் ஒரு பங்கு உறக்கத்திலேயே கழிந்து விடுகிறது. இந்த உறக்கம் என்ற செயலில், நம் உடல் பல்வேறு உறக்க நிலைகளைக் கடக்கிறது. இதில் 25 சதவிகிதம் கனவுகள் உருவாவது வேகக்கண்ணசைவு உறக்கம் எனப்படும் Rapid Eye Movement (REM) தருணத்தில்தான். இங்கே உங்கள் கண் இமைகள் மூடியிருக்கும். நீங்கள் உறக்கத்தில் கனவுகளை கண்டுகொண்டிருப்பீர்கள். அதற்கு ஏற்றவாறு உங்கள் கருவிழிகளும் வேகமாக அசைந்து கொண்டிருக்கும். கனவில் என்ன நடந்தாலும் உங்கள் உடலால் ஒன்றும் செய்ய முடியாது. அது உங்கள் கனவுகளில் நடக்கும் செயல்களுக்கு மதிப்பளிக்காது. அதாவது உங்களைக் கனவில் நாய் ஒன்று துரத்துகிறது என்றால் அதற்கு உங்கள் படுக்கையின் மேலுள்ள கால்கள் எதுவும் செய்யாது. இது ஒரு வகையில் நம் பாதுகாப்புக்காகத்தான். கனவில் நடக்கும் சம்பவங்களுக்கு எல்லாம் நம் உடல் பதிலளிக்கும் வகையில் செயல்பட்டுக் கொண்டிருந்தால், அது நம்மை ஆபத்தில்தான் கொண்டுபோய் நிறுத்தும். இதைத்தான் தூக்கத்தில் நடப்பவர்கள் செய்கிறார்கள். அதனால்தான் அதை ஒரு வியாதியாக, ஒரு மனப்பிரச்னையாக கணக்கில் கொள்கிறார்கள்.

விந்தை உலகம்

சரி, 25 சதவிகித கனவுகள்தானே இந்த REM தூக்கத்தில் ஏற்படுகிறது. அப்போது மீதி கனவுகள் எப்போது நிகழ்கின்றன? REM எனப்படும் வேகக்கண்ணசைவு உறக்கத்தின் அடுத்த நிலை கண் அயர்ந்த உறக்க நிலை எனப்படும் Non-Rapid Eye Movement Phase. இது மிகவும் ஆழ்ந்த அதே சமயம் மிகவும் ஆரோக்கியமான உறக்கம். சில சமயம் நம் உடல் REM தூக்கத்துக்குச் செல்லாமலே இந்த ஆழ்ந்த உறக்க நிலைக்குச் சென்றுவிடும். மிகவும் கடினமாக உழைத்த நாள்களில் இது சாதாரணமாக நிகழும். எது எப்படியோ, இதிலும் கனவுகள் ஏற்படும். இதிலும் சரி, நம் REM தூக்கத்தில் உண்டாகும் கனவுகளும் சரி, நமக்கு மறந்து போவது ஒரு சாதாரண விஷயம்தான்.

ஒரு விஷயத்தை நாம் மறக்கிறோம் என்றால், அதற்கு ஒரேயொரு விளக்கம் மட்டுமே இருக்கக்கூடும். அந்த விஷயத்தை நம் நினைவகம் பதிவு செய்துவிட்டு, பின்பு ஏதோ ஒரு காரணத்துக்காக இது வேண்டாம் என அழித்துவிட்டிருக்கும். அல்லது உண்மையாகச் சொல்லப் போனால், இந்த விஷயம் வேண்டாம் என்று உங்கள் மனதின் ஓர் அறையில் பூட்டி வைத்துவிட்டு, சாவியையும் தொலைத்துவிடும். ஆம், நாம் எந்த ஒரு விஷயத்தையும் அவ்வளவு சீக்கிரம் மறப்பதில்லை. தேட முடியாத ஓர் இடத்தில் வைத்து விடுகிறோம் அவ்வளவே. காரணம், அது நமக்கு இப்போது தேவையில்லை என்று உங்கள் மூளை கருதுவதுதான். அதை நீங்கள் மீண்டும் நினைவுகூர பல்வேறு பயிற்சிகள் இருக்கின்றன. இப்போது பிரச்னை அதுவல்ல. இது அவசியமற்றது என்று நம் மூளை பூட்டி வைக்கும் கனவுகள் நமக்குப் பயன் தராதவை என்று நம் மூளை நினைக்கிறது.

மாறும் இயற்பியல் விதிகள்

இந்தச் செயல் கனவு என்றல்ல, நிஜ வாழ்விலும் நடக்கும். உதாரணமாக, இன்று காலை நீங்கள் பல் துலக்கும்போது எந்த விஷயத்தைக் குறித்து நீங்கள் யோசித்துக் கொண்டிருந்தீர்கள்? இன்று யோசித்ததை வேண்டுமானால், எப்படியோ சிரமப்பட்டு சொல்லி விடலாம். நேற்று யோசித்தது? ஒரு வாரத்துக்கு முன்பு யோசித்து? சென்ற மாதம் யோசித்தது? போன பொங்கல் அன்று யோசித்தது? எல்லாம் நீங்கள் யோசித்ததுதானே? உங்கள் நினைவகத்தில் பதிந்துபோன ஒரு விஷயம்தானே? தேடி எடுக்க முயற்சி செய்யுங்களேன்! கடினம்தானே? இதே போலத்தான் கனவுகள் குறித்த நினைவலைகளும். 

கனவுகள் என்பது பொதுவாகவே ஒரு படைப்பு போலத்தான். நாள் முழுக்க நீங்கள் செய்யும் செயல்களில் கவனம் செலுத்தி, கவனம் செலுத்தி சோர்வடைந்த உங்கள் மூளை, கனவுகளின்போதுதான் தன் இஷ்டத்துக்குச் சுதந்திரமாக உலா வருகிறது. இந்தக் கனவு உலகத்தில் இயற்பியல் விதிகள் கிடையாது, எந்தச் சட்டதிட்டமும் கிடையாது, கட்டுப்பாடுகளும் கிடையாது. இது ஒரு ஃபேண்டஸி உலகம் போலத்தான். கிட்டத்தட்ட, உங்கள் மூளைக்கு இது ஒரு போதை போலத்தான். இந்தக் கனவுலகில் உங்கள் மனதைப் பாதிக்கும் வகையில் அதிர்ச்சியான, துக்கமான, சந்தோஷமான அல்லது மிக முக்கியமான நிகழ்வுகள் நடந்தால் மட்டுமே அதை உங்கள் மூளை நினைவில் வைத்துக்கொள்ளும். ஒரு நிகழ்வு அல்லது ஓர் உணர்வு, அது நிஜ வாழ்வில் தோன்றியதோ, கனவில் தோன்றியதோ, அது உங்கள் நினைவகத்தில் சென்று அமர முன்நெற்றிப் புறணி அல்லது முன்நுதல் புறணியின் (Prefrontal Cortex) பங்கு மிக முக்கியமானது.

Dorsolateral Prefrontal Cortex (dlPFC)

இந்த முன்நுதல் புறணியின் ஒரு பகுதியான Dorsolateral Prefrontal Cortex (dlPFC) தான் நம் உணரும் விஷயங்களை நம் நினைவகத்தில் பதிவு செய்துகொள்ள அனுமதிக்கிறது. Dorso என்றால் உச்சிப்பகுதி, Lateral என்றால் பக்கவாட்டுப் பகுதி. முன்நுதல் புறணியின் இந்தப் பகுதிகள்தான் நம் நினைவகத்துக்குப் பொறுப்பு. பெரும்பாலான கனவுகளின்போது, இந்தப் பகுதியும் செயலிழந்து இருக்கும். அதனால்தான் நமக்கு நாம் காணும் எல்லாக் கனவுகளும் நினைவில் நிற்பது இல்லை. இந்தப் பகுதியை செயல்பட வைக்கத் தூண்டுகோலாக இருப்பவை நம் உணர்ச்சிகள். நீங்கள் காணும் கனவுகள் சோகம், துக்கம், சந்தோஷம், பயம் போன்ற உணர்வுகளைக் கடத்துமாயின், இந்தக் கனவு முக்கியமானது என்று உணர்ந்துகொண்டு இந்த Dorsolateral Prefrontal Cortex பகுதி தன்னை செயல்பட வைத்துக்கொள்கிறது. அந்தக் குறிப்பிட்ட கனவையும் பதிந்து வைத்துக்கொள்கிறது. மிகவும் ஆபத்தான கனவு எனும்போது உங்களைப் பதற்றத்துடன் உறக்கத்தில் இருந்து எழ வைக்கிறது. உங்களுக்கு அந்தப் பதிந்த கனவும் நினைவில் இருக்கிறது. எந்த உணர்வையும் தூண்டாத கனவுகள் வேறொரு சிறையில் பூட்டி வைக்கப்பட்டு, திறக்க முற்பட்டும் திறக்காமல், பின்பு ஒரு காலத்தில் அழிந்தே போய் விடுகிறது.

நிழல் உலகம்

சரி, அப்படிப் பார்த்தால் நமக்கு ஒரு சில நாள்களில் தேவையற்ற கனவுகளும் நினைவில் இருக்கின்றனவே, அது எப்படி? மிகச் சுலபம். அப்படிப்பட்ட கனவுகளை நீங்கள் கண்ட தினத்தன்று உறக்கத்தில் இருந்து ஒரு முறையோ, பல முறையோ எழுந்திருப்பீர்கள். எழுந்தவுடன் இப்போது நாம் என்ன யோசித்தோம் என்பதே உங்கள் மனதில் ஓடும் கேள்வியாக இருக்கும். இப்போது நீங்கள் விழிப்பு நிலையில் இருப்பதால் உங்கள் Dorsolateral Prefrontal Cortex பகுதியும் நீங்கள் எழும் முன்னரே தன் உறக்கத்தைவிட்டு செயல்பாட்டுக்கு வந்திருக்கும். அப்போது நீங்கள் கண்ட கனவும் உங்கள் நினைவகத்தில் பதிந்திருக்கும். நம் உடல் எப்படிச் செயல்படுகிறது என்பது விந்தையிலும் விந்தை அல்லவா?

உங்களுக்குத் தோன்றிய மறக்க முடியாத கனவுகளை கமென்ட் பாக்ஸில் பதிவு செய்யுங்களேன்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்