வெளியிடப்பட்ட நேரம்: 21:04 (12/04/2018)

கடைசி தொடர்பு:21:04 (12/04/2018)

சுதும்பு, தளம்பாறை, வாலம்பாறை... காணாமல் போன மீன் இனங்களும் காரணங்களும்!

தனது பதினைந்து வயதில் தொடங்கி இருபத்தைந்து வருடங்களாக மீன்பிடித்து வரும் சிகாமணி அவர்கள் தான் பார்த்த சுதும்பு, தளம்பாறை, வாலம்பாறை போன்ற மீன் இனங்கள் இன்று சுத்தமாகவே இல்லை என்கிறார். பாறை இனங்களில் பல வகைகள் இருந்ததாகவும் அவை யாவும் இன்று காணப்படுவது இல்லை, நான்கைந்து வகைகளே காணப்படுவதாகவும் வருந்துகிறார்.

சுதும்பு, தளம்பாறை, வாலம்பாறை... காணாமல் போன மீன் இனங்களும் காரணங்களும்!

ஆதி முதல் மனிதனின் உணவுமுறையில் உலகம் முழுவதும் தனித்த இடம் பிடித்து இன்றுவரை அந்த இடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருப்பவை மீன்கள். அவற்றை மனிதனுக்கு அள்ளிக் கொடுக்கும் மீனவர்களின் ஆபத்து நிறைந்த பயணங்களும், கடலோடு அவர்கள் கொண்டுள்ள நேசமும் அந்தக் கறுத்த உடலில் வீசும் மீன் வாடையிலும், கடற்காற்றின் உப்புக்கரிப்பிலுமே மறைந்துவிடுகிறது. அன்று அவர்களைச் சந்தித்தபோது கூட மனதில் இருந்த இறுக்கத்தை அப்பட்டமாகக் காட்டிய அவர்களது முகம் சொன்னது நாம் அவர்களுக்கான மதிப்பினை சரியாகக் கொடுக்கவில்லை என்பதை. ஆம், தங்களுக்குள் ஆனந்தமாகச் சிரித்துப் பேசியவர்களுக்கு வேற்று நபரிடம் பேசவிடாமல் ஏனோ தயக்கம் வந்து தவிர்த்தது.

கடலோடு அவர்களுக்கு இருக்கும் பிணைப்பு, தவழ்ந்து விளையாடும் குழந்தைக்கும் அதை வாரிக்கொள்ளும் தாயிற்கும் ஆனது. அத்தகைய கடலில் பாய்விரித்தும், துடுப்போடும், இன்றைய மோட்டார் படகுகளிலும் இந்தக் கடலோடிகள் செல்லும்போது சந்திக்கும் ஆபத்துகள் பல. அனைத்தையும் கடந்து அவர்கள் பிடித்துவரும் மீன்கள் தான் அடுத்த நாள் அவர்களுக்குச் சோறுபோடும். சில சமயங்களில் அடுத்த நாள் என்பது அவர்களுக்கு இல்லாமலே கூட போகலாம். என்னதான் இந்தக் கடல் அவர்களுக்குப் பல இழப்புகளைத் தந்து இருந்தாலும் அவளே அவர்களுக்கு வாழ்வாதாரத்தையும் தருபவள். அதில் அபாயங்கள் அதிகமானாலும் அத்தொழிலை அவர்கள் விட்டது இல்லை. அதற்குக் காரணம் பல ஆயிரம் ஆண்டுகளாகத் தொடரும் அவர்களது அந்தப் பரம்பரைத் தொழில் வெறும் வயிற்றுப் பிழைப்புக்காக மட்டும் அல்ல. மனிதகுலத்துக்காக. மனிதகுலத்தின் உணவுத்தேவைக்காக. 

மீன் பிடிப்பு

அப்படி வாழ்ந்த மீனவ வம்சாவளிகள் இன்று இந்தத் தொழிலைவிட்டுத் தனது குழந்தைகளை அனுப்ப வேண்டும் என்பதிலும், வராமல் தடுப்பதிலும் கவனமாக இருப்பதற்குக் காரணம் இருக்கவே செய்கிறது. எண்ணிக்கையில் அருகிவரும் மீன் இனங்களும், வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் மீன் வளமும் அவர்களது வாழ்வாதாரத்தைப் பெரிதும் பாதிக்கிறது. ஒரு நாளைக்குப் படகில் கடலுக்குள் சென்றுவர எரிபொருள் செலவு குறைந்தது 500 ரூபாய் ஆகும். அதுபோக வலைகளைப் பின்னுவதற்கு, அவர்களுக்கான உணவு, நீர் ஆகியவற்றுக்கு ஆகும் செலவு. ஒரு படகிற்கு குறைந்தபட்சம் நான்கு மீனவர்கள் செல்வார்கள். 3000 ரூபாய்க்குக் குறையாமல் விற்கும் அளவிற்கான மீன்களைப் பிடித்து வந்தால்தான் அனைவருக்குமான நியாயமான பங்கீடு கிடைக்கும். ஆனால், 1000 ரூபாய் மதிக்கக்கூடிய மீன்கள் கூட கிடைப்பதில்லை. பெரும்பாலும் இவர்கள் திரும்புவது வெறும் கையோடுதான்.

காலம் காலமாக மனித முயற்சியில் மீன் பிடித்தலை நம்பியிருக்கும் பாரம்பர்ய மீனவர்கள் இன்று இந்த நிலையில் இருப்பதற்குக் காரணம் ட்ராலர்கள் எனப்படும் சுருக்குவலைகள்தாம் என்று ஆதங்கப்படுகிறார் ஒரு கட்டுமர மீனவர். நீண்ட ட்ராலர்களைக் (Trawlers) கொண்டு கடலுக்கடியில் இருக்கும் அனைத்து மீன்களையும் வளைத்துக்கொண்டு போகும் இந்தச் சுருக்குவலைகள் கப்பலின் அடிப்பகுதியில் கடலுக்குள் கட்டப்பட்டிருக்கும். அதை இழுத்துக்கொண்டே போகும் கப்பல்கள் வழியில் கூட்டமாக வரும் அனைத்து மீன்களையும் ஒட்டுமொத்தமாகப் பிடித்துவிடுகிறது. மீன் குஞ்சுகள் பொதுவாக தாய் மீனுக்குக் கீழேதான் நீந்திச்செல்லும். பாரம்பர்ய மீனவர்கள் பிடிக்கும் வலையில் மீன்குஞ்சுகள் சிக்கினால், அதை அவர்கள் அப்போதே எடுத்து கடலில் மீண்டும் விட்டுவிடுவார்கள். ஆனால் ட்ராலர்களில் அது இயலாது. போதுமான அளவு மீன்கள் சிக்கும் வரை மேலே எடுக்கப்படாது. கூட்டமாகப் பிடிக்கப்படும் மீன்களில் வலையினுள் சிக்கியிருக்கும் மீன்குஞ்சுகள் மூச்சுத்திணறி அப்படியே செத்துவிடும். மேலே இழுக்கப்படும் வலையில் இப்படிச் செத்துக்கிடக்கும் மீன்குஞ்சுகளை எடுத்து கடலில் எறிந்துவிடுவார்கள். அதைப் பிடிப்பதால் அவர்களுக்கு எந்தப் பயனுமில்லை. ஆனால், இந்தச் செயல் வளர்ந்து வரும் மீன்களின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்துவிடுகிறது. வளரும் மீன்கள் இல்லையேல் வருங்காலத்திற்கு மீன் வளம் இருக்குமா? 

இந்த விபரீதத்தை ட்ராலர் மீன்பிடிப் படகுகளில் தவிர்க்கவே முடியாது. மீன்பிடித் தடையை ஒன்றரை மாத காலத்திலிருந்து இரண்டு மாத காலமாக உயர்த்தி உள்ளோம். வருடா வருடம் மீன்களின் இனப்பெருக்க காலத்தில் நீடிக்கும் தடை இது. ஆனால், என்னதான் தடை நாள்களை ஏற்றிக்கொண்டே போனாலும் தடை முடிந்து கடலுக்கு வரும் ட்ராலர்கள் அந்த சீசனில் பிறந்து வளர்ந்துகொண்டிருக்கும் மீன்குஞ்சுகளுக்கு எமனாக இருப்பதைத் தவிர்க்க முடிவதே இல்லை.

இதைத் தடுக்கவே முடியாது என்பதைப் புரிந்துகொண்ட மீனவர்கள், இவற்றை ஓர் எல்லைக்கு உட்படுத்தினார்கள். அதாவது பெரிய படகுகளும், ட்ராலர்களும் கரைக்கடலில் மீன்பிடிக்கக் கூடாது. நேராக ஆழ்கடலுக்குச் சென்றுவிட வேண்டும் என்பதே அது. சுருக்குவலையில் மீன் பிடிப்பவர்கள் இந்த எல்லையை மதிப்பதே இல்லை. ஆழ்கடலில் எல்லா நேரங்களிலும் மீன்கள் கடலின் மேற்பகுதிக்கு வருவதில்லை. ஆகையால், அவர்கள் அடிக்கடி எல்லையைத் தாண்டி வந்து மீன்பிடிப்பது வாடிக்கையாகிவிட்டது. இதனால் சாதாரண மீனவர்கள் தனது படகுகளைக் கொண்டுசென்று நடுக்கடலில் அவர்களைச் சுற்றிவளைத்து பேச்சுவார்த்தை நடத்துவதும் சில சமயங்களில் அது பிரச்னையில் முடிவதும் அன்றாடம் நடக்கக் கூடியது. ஆனால், இதை மீன்வளத் துறையிலும் சரி, கடலோரக் காவல் படையிலும் சரி யாரும் கவனிப்பதும் இல்லை, வந்து உதவுவதும் இல்லை.

மீனவர்

தனது பதினைந்து வயதில் தொடங்கி இருபத்தைந்து வருடங்களாக மீன்பிடித்து வரும் சிகாமணி அவர்கள் தான் பார்த்த சுதும்பு, தளம்பாறை, வாலம்பாறை போன்ற மீன் இனங்கள் இன்று சுத்தமாகவே இல்லை என்கிறார். பாறை இனங்களில் பல வகைகள் இருந்ததாகவும் அவை யாவும் இன்று காணப்படுவது இல்லை, நான்கைந்து வகைகளே காணப்படுவதாகவும் வருந்துகிறார். நாட்டின் முதுகெலும்பாக விவசாயம் கருதப்படுவது போல் மீன்பிடித்தலும் மிக முக்கியம் வாய்ந்த தேசியத் தொழில். ஆனால், அதில் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவது இவர்களைப் போன்ற பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், நாட்டின் மீன் வளத்தையும் வெகுவாகப் பாதிக்கிறது. விவசாயத்தை மறந்து கார்ப்பரேட்களுக்குக் காடுகளைக் கொடுத்துக்கொண்டிருக்கும் இன்றைய மத்திய மாநில அரசுகள், நாளை கடல் வளத்தையும் கொடுத்துவிட்டால் அதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. ஆகவே, வளங்களை இருக்கும்போதே பாதுகாத்திட முனைய வேண்டும்.


டிரெண்டிங் @ விகடன்