வெளியிடப்பட்ட நேரம்: 09:08 (13/04/2018)

கடைசி தொடர்பு:09:42 (13/04/2018)

காட்டுயானைக்கும் கும்கிக்கும் நடந்த சேஸிங்! - ஒரு கும்கி உருவாவது எப்படி? அத்தியாயம் 7

காடு, மலை எனக் கடந்து வந்த  ஒற்றை யானை எதற்கும் துணிந்தது. முதுமலை துரத்தியதில் அங்கே இங்கே என ஓடிக்கொண்டே இருந்ததில் அது சோர்வடைய ஆரம்பித்தது. இனி ஓட முடியாது என்பதை உணர்ந்த காட்டு யானை முதுமலையைப் பார்த்து திரும்பி நின்றது.

காட்டுயானைக்கும் கும்கிக்கும் நடந்த சேஸிங்! - ஒரு கும்கி உருவாவது எப்படி? அத்தியாயம் 7

காட்டு யானையை விரட்டிக்கொண்டு முதுமலை போய்க் கொண்டிருக்கிறது. காட்டு யானையும் பிளிறிக் கொண்டே ஓடுகிறது. பெரிய தந்தங்களைக் கொண்ட முரட்டு ஆண் யானை கும்கியை பார்த்துப் பயந்து ஓடுகிறது என மாறன் நினைத்துக்கொள்கிறார். அந்த நினைப்பு ஓரிரு நிமிடங்கள்தான் நிலைத்தது. திடீரென முன்னோக்கிச் சென்ற முதுமலை நின்று தலையை ஆட்டுகிறது. மாறனின் உடல் வியர்க்க ஆரம்பிக்கிறது. ஏனெனில் ஓடிய காட்டு யானை முதுமலையைப் பார்த்து திரும்பி நின்றுகொண்டிருந்தது.

முதலில் ஏன் காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்கும், கிராமத்துக்குள்ளும் வருகின்றன என்கிற ஒரு கேள்வி இருக்கிறது. அவற்றின் பதில் தெரிந்தால் மட்டுமே கும்கிகளின் தேவை குறித்து புரிந்துகொள்ள முடியும். ஏனெனில் ஒரு காலத்தில் கும்கியும் ஒரு காட்டு யானைதான். சந்தர்ப்பம் அமைந்தால் காட்டு யானையும் ஒரு நாள் கும்கிதான். ஒவ்வொரு யானைக் கூட்டத்துக்கும் ஒரு வழித்தடம் உண்டு. இந்த வழித் தடம் யானைகளின் ஜீன்களிலேயே இருப்பவை. அதன் தாய் எந்த வழியில் சென்றதோ அதே வழியில் அதன் பிள்ளைகளும் செல்லும். எங்கே நீர் கிடைக்கும், உணவு  கிடைக்கும், ஆபத்துக்கு எங்கே சென்று ஒதுங்க வேண்டும் என்பதெல்லாம் தெரியும். இந்த ஆண்டு குறிப்பிட்ட இடத்தில் ஒரு யானைக் கூட்டத்தைப் பார்த்தால், மறுபடியும் அந்தக் கூட்டத்தை அடுத்த ஆண்டு அதே நாளில்தான் பார்க்க முடியும். ஒரு யானை கூட்டத்தின் பாதையை இன்னொரு யானைக் கூட்டம் ஒரு போதும் தொந்தரவு செய்யாது. அதனதன் வழித் தடத்தில்தான் தேவையான உணவு, நீர் ஆகியவற்றைத் தேடிக்கொள்ளும். வறட்சியான காலங்களில் உணவும் நீரும் கிடைக்காதபோதுதான் உணவையும் தண்ணீரையும் தேடி யானைகள் தடம் மாறுகிறது. ‘எலிபென்ட் காரிடார்’ எனப்படும் அதன் வழக்கமான நடைபாதையை வேலி அமைத்துத் தடுப்பதால், ஒரு நாளைக்கு 15 கிலோ மீட்டர் பயணித்து 250 கிலோ உணவு, 150 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டிய யானை வேறு வழியில்லாமல் விவசாயத் தோட்டங்களுக்குள்ளும் ஊருக்குள்ளும் புகுந்துவிடுகிறது.

முதுமலை

முந்தைய அத்தியாயம் 

தோட்டத்துக்குள் வருகிற காட்டு யானைகளை விரட்ட கிருஷ்ணகிரி அருகே ஒரு கிராமத்தில், சாதாரண நூல் கயிற்றில் இன்ஜின் கழிவு ஆயில், மிளகாய்ப் பொடி, மூக்குப் பொடி ஆகியவற்றைத் தடவி வயல் எல்லையில் கட்டி வைத்திருந்தார்கள்,  இதிலிருந்து வெடிமருந்துபோல வாசனை வரும். அந்த வாசனைக்கு யானைக் கூட்டம் எதுவும் தோட்டத்து பக்கம் வரவில்லை. ஆனால், ஒற்றை யானை ஒன்று தொடர்ந்து பலமுறை அந்த எல்லையைக் கடந்து தோட்டத்துக்குள் புகுந்தது. பொதுவாக ஒற்றை யானையிடம் எந்தக் கட்டுப்பாடும் இருக்காது. துணிந்து எதிலும் இறங்கிவிடும். ஆனால், கூட்டமாக வரும்  யானைகளுக்கு குட்டிகளைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இருப்பதால் அவை ரிஸ்க் எடுக்காது. காட்டு ஆண் யானைகள் வளர்ப்பு யானைகளைவிட உடலிலும் மனதிலும் பலமானவை. பொதுவாக யானைகள் மனிதர்களைக் கண்டால் விலகிப் போய்விடும். ஆனால், பல கிலோ மீட்டர்கள் சுற்றித் திரிந்து எங்கே இருக்கிறோம் எனத் தெரியாமல் இருக்கிற நேரங்களில்தான் மனிதர்களுக்கு எதிரான தாக்குதல்களை அவை நிகழ்த்துகின்றன. அப்படியான நேரங்களில்தான் கும்கிகளை வைத்து யானைகளை விரட்டுகிறார்கள். எல்லோரும் நினைப்பதுபோல கும்கி யானைகள் எவ்வளவு பெரிய காட்டு யானைகளையும் எளிதில் விரட்டி விடாது. அதற்கு மிகப் பெரிய போராட்டத்தை நடத்தியாக வேண்டும். காட்டு யானைகள் கும்கிகளை குத்திக் கிழித்த சம்பவங்களும் தமிழ்நாட்டில் நடந்ததுண்டு.

அப்படி பாதை தவறி வந்த ஒற்றைக் காட்டு யானையைத்தான் மாறனும் முதுமலையும் வனத்துக்குள் விரட்டிக்கொண்டு போகிறார்கள். காடு, மலை எனக் கடந்து வந்த  ஒற்றை யானை எதற்கும் துணிந்தது. முதுமலை துரத்தியதில் அங்கே இங்கே என ஓடிக் கொண்டே இருந்ததில் அது சோர்வடைய ஆரம்பித்தது. இனி ஓட முடியாது என்பதை உணர்ந்த காட்டு யானை முதுமலையைப் பார்த்து திரும்பி நின்றது. மாறன் உள்ளுக்குள் பயத்தை வைத்துக்கொண்டு அதை வெளிக்காட்டாமல் முதுமலையின் மீது அமர்ந்திருக்கிறார். உண்மையில் உள்ளுக்குள் உதறலெடுக்க ஆரம்பிக்கிறது. காட்டு யானை மண்ணை அள்ளி தன் மீது போட்டுக்கொண்டு துரு துருவென நின்றது. சுமார் 30 காட்டு யானைகளுக்கு மேல் பிடிக்க முக்கிய காரணமாய் இருந்தது முதுமலை. அப்போதெல்லாம் உதவிக்கு ஒன்றோ இரண்டோ கும்கி யானைகள் உதவிக்கு இருந்தன. இப்போது அப்படி எதுவும் உதவிக்குப் பக்கத்தில் இல்லை. ஒன்று நேருக்கு நேராக யானையுடன் மோத வேண்டும், இல்லை, காட்டு யானையின் தாக்குதலில் இருந்து தப்பித்து பின்வாங்க வேண்டும். முகாமில் இருக்கிற கும்கி யானைகளை எதிர்கொள்வது போல ஒற்றைக் காட்டு யானையை எதிர் கொள்ள முடியாது.

முதுமலை காட்டு யானை

இந்த நேரத்தில் முதுமலையை வைத்து ரிஸ்க் எடுக்க முடியாது என்பதை மாறன் நன்கு அறிவார், சில ஆண்டுகளுக்கு முன்பு மதம் பிடித்திருந்த முதுமலையை ஒரு மரத்தில் கட்டி வைத்திருந்தார்கள். அப்போது கோபத்தில் பக்கத்திலிருந்த மூங்கில் மரத்தை உடைக்கும்போது  மூங்கில் குத்தியதில் முதுமலையின் வலது கண் பார்வை பறி போயிருந்தது. இப்படியான சூழ்நிலையில் நேருக்கு நேர் காட்டு யானையை எதிர்ப்பது என்பது புத்திசாலித்தனம் இல்லை என்பதை உணர்கிறார். காட்டு யானை தாக்கிவிடும் என்று உறுதியாக நம்புகிறார். பின்னோக்கி வரும்படி மெதுவாக முதுமலைக்குக் கட்டளையிடுகிறார். முதுமலையும் மெல்லப் பின்னோக்கி நகர்கிறது. நல்ல வேலையாக மருத்துவர் குழுவும் வன அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு வருகிறார்கள். காட்டு யானை மேற்கொண்டு முன்னேறாமல் ஒரே இடத்தில் நிற்கிறது. பிறகு மேலும் ஒரு கும்கி யானை கொண்டு வரப்பட்டுக் காட்டு யானை காட்டுக்குள் விரட்டப்பட்டது. முதுமலை பத்திரமாக முகாமுக்குத் திரும்பியது. 1980-ம் ஆண்டிலிருந்து முதுமலைக்கு மாவூத்தாக இருந்த மாறன் 2012-ம் ஆண்டு ஓய்வு பெறுகிறார். இப்போதும் கும்கியாக பயன்படுத்தப்படும் முதுமலை யானை மாறனின் மகன் பொம்மனின் வசம் ஒப்படைக்கப்படுகிறது. முதுமலை இருக்கிற முகாமுக்கு அருகிலேயே  மாறனுக்கு வீடு என்பதால் தினமும் வந்து முதுமலையைப் பார்த்து செல்கிறார். இப்போதும் மாறனின் கட்டளைகளுக்கு முதுமலை செவி சாய்க்கிறது.

முதுமலை முகாமில் காட்டில் பிடிக்கப்பட்ட யானைகள் தவிர்த்து முதுமலையில் பிறக்கிற  குட்டி யானைகளுக்கும் ஆரம்பத்தில் இருந்தே கும்கி பயிற்சி கொடுக்கப்படுகிறது. முகாமில்  இருக்கிற குட்டி யானைகள் தவிர்த்து வெளியிலிருந்து முகாமுக்கு வந்து சேர்கிற குட்டி யானைகளின் கதைகள் எல்லாம் சுவாரஸ்யமானவை. முகாமிலிருக்கிற தாய் யானையைக்  குட்டி யானையின் பயிற்சிக்காக பிரித்து வேறொரு முகாமுக்கு மாற்றி விடுவார்கள். அப்போது தாய் யானை மிகப் பெரிய சம்பவத்தை நிகழ்த்தும். அவ்வளவு எளிதில் அதனிடமிருந்து குட்டியைப் பிரித்துவிட முடியாது. முன் இரு கால்களும் கட்டப்பட்டு,  நான்கு கும்கி யானைகளின் துணையுடன் தாயைக் குட்டியிடமிருந்து பிரித்து வேறொரு முகாமுக்குக் கொண்டு செல்வார்கள். குட்டி யானையை ஒரு மாதம் தாயிடமிருந்து பிரிந்துவிட்டாலே குட்டியை மீண்டும் தாய் தன்னோடு சேர்த்துக் கொள்ளாது. முகாமில் இருக்கிற  குட்டியும் ஒரு மாதத்தில் தாயை மறந்துவிடும். யானைகளுக்கே இருக்கிற இயற்கையான குணம் என்பதால், காட்டு யானைகளும் மனித வாசனைக் குட்டி யானையின் மீது இருந்தால் குட்டி யானையை மீண்டும் தன்னோடு சேர்த்துக் கொள்ளாது. அதனால்தான் குழிகளில் விழுந்த அல்லது தாயிடமிருந்து பிரிந்த குட்டிகளை கைப்பற்றுகிற வனத்துறை, சிகிச்சையளித்து பின்னர் அதன் உடலில் மண்ணையும் சகதியையும் பூசி மீண்டும் காட்டுக்குள் விடுவார்கள். ஆனாலும் மனித வாசனையைக் கண்டுகொள்கிற தாய் குட்டியை மீண்டும் சேர்த்துக்கொள்வதில்லை.  அப்படிக் கடந்த வருடம் மே மாதம் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அய்யூர் என்ற கிராமப் பகுதியில் தாயைப் பிரிந்த குட்டி யானை ஒன்று உடம்பில் காயங்களுடன் சுற்றித் திரிந்தது. தகவலறிந்த வனத்துறை குட்டி யானையை மீட்டு தங்கள் பாதுகாப்பில் வைத்தனர். யானையைப் பராமரித்து பழக்கமில்லாத வனத்துறையினர், அந்தக் குட்டி யானையைப் பராமரிக்க முதுமலை புலிகள் சரணாலயத்திலிருந்து மாவூத் ஒருவரை வரவழைக்கிறார்கள்.

கும்கி

முந்தைய அத்தியாயம்

முதுமலையில் முப்பது ஆண்டுகளாக  மாவூத்தாக இருப்பவர் பொம்மன். முதுமலை கள இயக்குநர் குட்டி யானையை பார்த்துக்கொள்ள  பொம்மனை அய்யூருக்கு அனுப்பி வைக்கிறார். பொம்மன் போய்ப் பார்த்தபொழுது குட்டி யானை உடல் முழுதும் செந்நாய்கள் கடித்த காயங்களுடன் இருந்தது. குட்டி யானையின் வலியை உணர்கிற பொம்மன்  குட்டி யானையின் மொத்த காயங்களையும் குணப்படுத்தி தன்னோடு முதுமலைக்கு அனுப்பி வைத்தால் நேர்த்திக்கடன் செலுத்துவதாக கடவுளிடம் வேண்டுகிறார்….

- தொடரும்


 


டிரெண்டிங் @ விகடன்