வெளியிடப்பட்ட நேரம்: 13:30 (13/04/2018)

கடைசி தொடர்பு:14:34 (13/04/2018)

மாநிலப் பல்கலைக்கழகங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வருகிறதா?

மாநிலப் பல்கலைக்கழகங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வருகிறதா?

`ஜூன் மாதத்தில், தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், கோவை வேளாண் பல்கலைக்கழகம் உள்பட பல பல்கலைக்கழகங்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர, மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை முடிவுசெய்துள்ளது' என்ற செய்தி, பரபரப்பைக் கிளம்பியுள்ளது. 

பல்கலைக்கழகங்கள்

``தமிழகப் பல்கலைக்கழங்களை மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்தால், மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும். இது மாநில சுயாட்சி மீதும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் அதிகாரத்தின் மீதும் நடத்தப்படும் நேரடித் தாக்குதல்" என்று தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்  மத்திய அரசை எச்சரித்துள்ளார். 

மத்திய அரசின் மனிதவளத் துறை, மாநிலப் பல்கலைக்கழகங்களை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு வாய்ப்புள்ளதா என்றும், இது தொடர்பாக மத்திய அரசிடமிருந்து ஏதேனும் தகவல் பல்கலைக்கழகங்களுக்கு வந்திருக்கிறதா என்றும் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகத் துணைவேந்தர்களிடம் பேசினோம்...

பல்கலைக்கழகம்கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ராமசாமி, ``இதுகுறித்து எங்களுக்கு எந்தத் தகவலும் வரவில்லை. இதுபோன்ற திட்டம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. மத்திய அரசு, புதியதாக மத்திய பல்கலைக்கழகங்களைத் தொடங்கலாம். ஆனால், மாநில அரசின் பல்கலைக்கழகங்களை மத்திய அரசின் பல்கலைக்கழகங்களாக மாற்ற முடியாது. தற்போது மத்திய மனிதவளத் துறை அறிவித்துள்ள சிறப்புத் தன்னாட்சி அதிகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களின் பட்டியலில், அழகப்பா பல்கலைக்கழகம் மட்டுமே இடம்பெற்றிருக்கிறது. இதற்காக அழகப்பா பல்கலைக்கழகத்துக்குக் கூடுதலாக நிதி உதவியை மட்டுமே மத்திய அரசு வழங்கும். பல்கலைக்கழத்தின் செயல்பாட்டில், மத்திய அரசு எந்த வகையிலும் குறுக்கீடு செய்ய முடியாது" என்றார். 

பல்கலைக்கழகம்சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் துரைசாமி, ``இது ஒரு தவறான செய்தி. செய்தியாளர்கள் ஒரு செய்தியைப் பிரசுரிக்கும்போது அதுகுறித்து சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்தில் கேட்டிருக்கலாம். மத்திய அரசு மிகப்பெரிய திட்டத்தை அறிமுகப்படுத்தும்போது, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களுடனும் மாநில அரசுடனும் விவாதிக்கும். இதுகுறித்து எந்தவிதமான விவாதமோ அல்லது பேச்சோ இதுவரை நடத்தப்படவில்லை. மத்திய அரசிடமிருந்து எந்தவிதமான தகவலும் வரவில்லை. ஆகையால், தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களை மனிதவளத் துறை தனது கட்டுப்பாட்டில் எடுப்பதற்கான வாய்ப்புகள் இல்லை" என்றார். 

பல்கலைக்கழகம் அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சுப்பையா, ``இதுகுறித்து, அழகப்பா பல்கலைக்கழகத்துக்கு எந்தவிதமான கடிதமும் மனிதவளத் துறையிடமிருந்து வரவில்லை. மேலும், செய்தித்தாளில் வெளியிடப்பட்ட பட்டியலில் எங்களது பல்கலைக்கழகத்தின் பெயரும் இல்லை. செய்தித்தாள் வழியாகத்தான் இந்த விவரங்களைத் தெரிந்துகொண்டோம். மத்திய அரசின் மனிதவளத் துறை, இந்திய அளவில் 12 மாநிலப் பல்கலைக்கழகங்களுக்குச் சிறப்புத் தன்னாட்சி அந்தஸ்தை வழங்கியிருக்கிறது. இதில், தமிழகத்தில் அழகப்பா பல்கலைக்கழகம் மட்டுமே சிறப்புத் தன்னாட்சியைப் பெற்றிருக்கிறது. இதற்காக, மத்திய அரசு 120 கோடி ரூபாயை நிதி உதவியாக வழங்கும். இதில் முதல்கட்டமாக 20 கோடி ரூபாய் வழங்கியிருக்கிறது. இதுதவிர, சர்வதேச அளவில் இடம்பெறுவதற்கு மத்திய அரசிடம் 1,000 கோடி ரூபாயைப் பெறவும் விண்ணப்பித்திருக்கிறோம். இதைப் பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள விஷயங்கள் அனைத்தையும் பூர்த்திசெய்துள்ளோம். ஆகையால், இந்த நிதியும் எங்களுக்குக் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இதுகுறித்த விவரங்களை மட்டுமே மத்திய அரசு எங்கள் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பியுள்ளது" என்றார். 

உயர்கல்வித் துறைச் செயலாளர் சுனில் பாலிவாலும், உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகனும் ``தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் செல்ல வாய்ப்பில்லை" என்று தெரிவித்துள்ளனர்.


டிரெண்டிங் @ விகடன்