Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நீங்கள் உங்கள் வீட்டில் பெண் நாயை வளர்த்திருக்கிறீர்களா?

அம்மாவுக்கு வீட்டுல பெண் குழந்தை இல்லையேன்னு ரொம்பக் கவலை. நானும் என் தம்பியும் பையனாவே பொறந்துட்டோம். அப்பாவுக்கு அன்பா பாத்துக்க புள்ள இல்லையேன்னு கவலை. எனக்குச் சண்டை போட தங்கச்சி இல்லையேன்னு கவலை. தம்பிக்கு சப்போர்ட் பண்ண அக்கா இல்லையேன்னு கவலை. இப்படி எங்க குடும்பத்துல இருக்குற ஒவ்வொரு நபரும் வீட்டில் ஒரு பெண் இல்லாததைக் குறையாகவே கண்டோம். எங்கோ ஏதோ ஒரு பெண் அண்ணா, தம்பி என்று அழைத்தால் போதும் அவர்கள் கேட்டது போகக் கேட்காத உதவிகளைக் கூட ஓடி ஓடிச் செய்வோம். அப்படி இருந்த எங்கள் குடும்பத்திற்குள் ஒரு நாள் பரணி வந்தாள். நான்தான் கொண்டு வந்தேன். பிறந்த தேதி, நேரம் அனைத்தும் தெரிந்திருந்ததால் அப்பா நட்சத்திரம் பார்த்து பரணின்னு பேர் வெச்சாரு. அவ வந்த நாள்ல இருந்து வீட்டுல ஒரு மாற்றம் தெரிஞ்சுது. அம்மாவும் அப்பாவும் சண்டை போடுறது குறைஞ்சுது. ஏன்னா, ரெண்டு பேரும் சத்தமா பேசுனாலே நடுவுல போய் நின்னு பரணி குரைக்கத் தொடங்கிடுவா... 

நாய்

ஆம். பரணி ஒரு நாய்தான். பெண் நாய். அப்பா அம்மாவ திட்டக் கூடாது. அம்மா எங்களைத் திட்டக் கூடாது. அம்மா அழக் கூடாது. இப்படி வீட்டுல யாரு சோகமா இருந்தாலும் சரி அவளுக்கும் அது ஒட்டிக்கும். அப்பா வீட்டுல சந்தோஷமா சிரிச்சு அரட்டை அடிச்சுப் பாக்குறது அபூர்வம். எப்பவாச்சும் அதிசயமா நடக்கும். ஆனால், பரணி வீட்டுக்கு வந்த அப்புறம் அதை நாங்க தினமும் பாத்தோம். பரணிய பாக்குறப்ப எல்லாம் அப்பா மனசுல ஒரு நிம்மதி தெரியும், முகத்துல புன்னகை பூக்கும். குழந்தை மாதிரி அத கூப்பிட்டு மடியில படுக்க வைக்கலைன்னா அப்பாவுக்கு அன்றைக்குத் தூக்கமே வராது. காலப்போக்குல வீட்டுக்குப் புள்ளை இல்லாத குறைய தீத்துவைக்க வந்தவனு அம்மா சொல்லத் தொடங்கிட்டாங்க. அப்பா ஒருபடி மேல போய் வீட்டுக்கு பரணி இல்லம்ன்னு பேர் வைக்க ரெடி ஆயிட்டாரு. ஒருமுறை இப்படியெல்லாம் வீட்டுக்குப் பேரு வெச்சு, பரணி யாருன்னு கேப்பாங்க நான் என்ன சொல்றதுன்னு கேட்டேன். அதுக்கு, பரணி எங்க வீட்டுப் பொண்ணுதான்னு சொல்லுங்குறாரு. 

அவ்ளோ தூரம் வீட்டுல ஒருத்தியா பரணிய நாங்க நெனச்சாலும். வீட்டுக்கு வர ஆட்கள் முகம் சுளித்தபடி முதல்ல கேக்குற கேள்வி, ``பொட்ட நாயா...?" என்பதுதான். அப்பா ஆரம்பத்துல அவங்கள நெனச்சு கோவப்பட்டாலும் காலப்போக்குல, ``ஆமா... அதுக்கு என்ன?" என்று எதிர்க்கேள்வி போடத் தொடங்கினார். அதோட விட்டாங்களா! ``பொட்ட நாய ஏன் வாங்குனீங்க. அது ஊர்மேய போயிடும், தெரு நாயோட சென சேர்ந்து வயித்துல குட்டியோட வந்துடும் அதெல்லாம் வெச்சுப்பார்க்க முடியாது", ``பொட்ட நாய வெச்சு மேய்க்க முடியாது. ஊர் நாய்ங்க எல்லாம் நம்ம வீட்டுப் பக்கம்தான் சுத்தி சுத்தி வரும்", ``பொட்ட நாய்க்கு ஆறு மாசத்துக்கு ஒரு தடவ நம்மதான் ரத்தத்தைக் கழுவி விட்டுட்டு இருக்கணும். இதெல்லாம் உங்களுக்கு எதுக்கு" இப்படியாகப் பல கேள்விகள். எதற்கும் சளைக்கவில்லை நாங்கள். சோதனை என்னவென்றால், இந்தக் கேள்விகளில் பலவற்றைப் பெண்களே கேட்டிருக்கிறார்கள்.

பரணி ஒன்றும் அவர்கள் கூறுவதுபோல் இல்லை. அம்மா வாசல் தெளித்துக் கோலம் போடும்போது வாசலில் அம்மா அருகில் அமர்வதில் தொடங்கி நாள் முழுவதும் யார் வெளியே சென்றாலும் வாசல் வரை வந்தாலும் அதைத் தாண்டி வெளியே சென்றது இல்லை. வெளியே அழைத்துச் செல்லும்போது கூட சங்கிலியில் கட்டி அழைத்துச் சென்றால் அம்மா அப்பாவுக்குக் கோவம் வந்துவிடும். அவளும் அவளுண்டு அவள் வேலையுண்டு என்று சென்றுவிட்டுப் போகலாம் என்பதுபோல் அருகில் வருவாள். வீட்டில் உள்ள ஒவ்வொருவரிடமும் எப்படி எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதில் தொடங்கி வீட்டிற்கு வந்தவர்கள் மறுபடி வரும்போது முதலில் பரணியை அழைக்கும் அளவுக்கு அனைவரையும் அன்பால் சுண்டியிழுத்து விடுவாள். பெண் நாய் என்பதாலேயே அவளைக் கண்டு ஆரம்பத்தில் முகம் சுளித்தவர்கள் கூட அவளோடு பழகிய பிறகு அவள் அன்புக்கு அடிமையாகக் கிடக்கிறார்கள். இதுவரை ஒருவரையும் கடித்ததில்லை. அன்பைத் தவிர யாருக்கும் எதையும் அவள் தந்ததில்லை. எந்தப் பிறவியிலும் பெண்ணுக்கே உரிய குணம் அன்பு காட்டுவது.

பெண் நாய்

இன்று பரணி தாயாகி ஒரு மாத காலம் ஆகிவிட்டது. நான்கு குட்டிகள், அப்படியே பரணியைப் போல. இரண்டு ஆண், இரண்டு பெண். இரண்டு ஆண் குட்டிகளையும் பிறந்த பத்தே நாள்களில் நான் நீ என்று போட்டி போட்டுக் கேட்டுவிட்டார்கள். ஆனால், இரண்டு பெண் குட்டிகளும் வாங்க ஆளின்றி அதன் அம்மாவின் காலையே சுத்தி சுத்தி வருகின்றன. பெண்களை ஒதுக்குவது மனித இனத்தில் மட்டுமல்ல, மனிதர்கள் மற்ற இனங்களிலும் பெண்ணை ஒதுக்கிக்கொண்டே இருக்கிறார்கள். நமது சமுதாயத்தின் ஆழ்மனதில் ஆழமாகப் பதிந்துவிட்ட கருத்து இது. பெண் என்றால் ஒதுக்கப்பட வேண்டியவள். ஒதுங்கியிருக்கவேண்டியவள். அது மனிதியாயினும் மற்ற விலங்காயினும். வெளியே சுற்றித் திரியும் நாய்கள் செய்யும் செயலுக்கும் பொட்ட நாய் ஊர்மேயும் என்று பெண் நாயையே குறைகூறும் நமது வார்த்தைகளில் பதிந்து கிடக்கிறது ஆணாதிக்கம்.

பிறந்த பத்து நாளில் வாங்குவதற்குப் பதிவு செய்யப்பட்ட ஆண் குட்டிகளை நாளை எடுத்துச் சென்றுவிடுவார்கள். பெண்ணாகப் பிறந்த ஒரே காரணத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டு இருக்கும் இந்த இரண்டு பெண் குட்டிகளும், பெண் இனத்தை ஒதுக்கும் இழிவான இச்சமுதாயத்தின் கறுப்புப் புள்ளியாக எங்கள் வீட்டில் வளர்க்கப்படும். சுதந்திரமாக.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement