புக் சேலஞ்ச்... ’தேசியவிருது’ செழியன் பரிந்துரைக்கும் 7 புத்தகங்கள்!

பரதேசி, ஜோக்கர் ஆகிய படங்களின் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த செழியன் தற்போது 'டூலெட்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார் . அவருக்குப் பிடித்த புத்தகங்கள்

புக் சேலஞ்ச்... ’தேசியவிருது’ செழியன் பரிந்துரைக்கும் 7 புத்தகங்கள்!

ஃபேஸ்புக்கில், அவ்வப்போது ஏதாவது ஒரு சேலஞ்ச் டாப்பிக் டிரெண்டாகி வலம்வரும். தற்போது, தனக்குப் பிடித்தமானவர்களிடம் விருப்பமான புத்தகங்களின் அட்டைப்படத்தை பதிவுசெய்யச் சொல்லி சேலஞ்ச் செய்வது டிரெண்டாகியுள்ளது. புத்தக வாசிப்பில் ஆர்வமிக்கவர்கள் பலரும் தங்கள் நண்பர்களிடம் இந்த 'புக் சேலஞ்ச்'சை செய்துவருகிறார்கள்.

வாசிப்பு, மக்தான அனுபவங்களைத் தரக்கூடிய ஒன்று. கலை, அரசியல் என ஒவ்வொரு துறையிலும் ஆளுமைகள் பலரும் தேர்ந்த வாசிப்பாளர்களாக இருப்பர். பலருக்கும் வாழ்வின் ரகசியத்தை, பெரும் தன்னம்பிக்கையை அவர்கள் வாசித்த புத்தகங்கள் கொடுத்திருக்கும். 'பரதேசி', 'தென்மேற்குப் பருவக்காற்று', 'ஜோக்கர்' உள்ளிட்ட படங்களின் ஒளிப்பதிவாளர் செழியன், `டூலெட்' படத்தின் மூலம் தற்போது இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார். இன்னும் திரைக்கு வராத இந்தப் படம் சிறந்த தமிழ்ப்படமாக தேசிய விருது வென்றுள்ளது. சினிமா மட்டுமின்றி இலக்கியம், இசை எனப் பல துறைகளில் இயங்கிவரும் செழியன், சினிமாவுக்கு வருவதற்கு முன்னர் சிறுகதைகள், இலக்கியக் கட்டுரைகள், உலக சினிமா குறித்த கட்டுரைகள் பல எழுதியுள்ளார். அவருக்குப் பிடித்தமான புத்தகங்கள் குறித்துக் கேட்டோம்... 

அவர்  பரிந்துரைக்கும் புத்தகங்களின் பட்டியல்...

1.  குற்றமும் தண்டனையும் - தஸ்தயேவ்ஸ்கி - எம்.ஏ.சுசீலா மொழிபெயர்ப்பு

குற்றமும் தண்டனையும்

இலக்கிய உலகில், ரஷ்ய இலக்கியங்களுக்கு தனிமதிப்பு உண்டு. பலருக்கும் ஆதர்ச எழுத்தாளரான தஸ்தயேவ்ஸ்கியின் `குற்றமும் தண்டைனையும்' நாவல், உலக அளவில் பிரபலமானது. பல முக்கிய எழுத்தாளர்களின் குட் லிஸ்ட்லும் இந்தப் புத்தகம் நிச்சயம் இடம்பெற்றிருக்கும்.

2.  மதகுரு - ஸெல்மா லாகர்லெவ் - க.நா.சு மொழிபயர்ப்பு

      மதகுரு

சுவீடன் நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் ஸெல்மா லாகர்லெவ் எழுதிய இந்த நாவல் `மதகுரு' ஒருவரைப் பற்றிய கதையைச் சொல்வது. இந்த நாவலுக்காக 1909-ல் செல்மா லாகர்லெவ்வுக்கு நோபல் பரிசு கிடைத்தது. இந்த நாவலை எழுத்தாளர் க.நா.சு தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

3.  அந்நியன் ஆல்பெர் காம்யு- வெ.ஸ்ரீராம் மொழிபெயர்ப்பு

அந்நியன் ஆல்பெர் காம்யு

பிரெஞ்சு மொழி இலக்கியமான `அந்நியன் ஆல்பெர் காம்யு', பலருக்கும் பிடித்தமான பரிச்சயமான ஒரு நாவல்.  வெ.ஶ்ரீராம், இந்த நாவலை தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

4.  கரமாஸவ் சகோதரர்கள் - தஸ்தயேவ்ஸ்கி 

கரமாஸவ் சகோதரர்கள்

தஸ்தயேவ்ஸ்கியின் `கரமாஸவ் சகோதரர்கள்' நாவலை இலக்கியத்தின் சிகரம் எனக் குறிப்பிடுவார்கள். இந்த நாவலைப் பற்றி பல மேடைகளில் பேசியுள்ளார், எழுத்தாளர் பிரபஞ்சன். 

5.  தாவோ தேஜிங் - லாவோட்சு - சி மணி மொழிபெயர்ப்பு

 தாவோ தேஜிங் - லாவோட்சு

லாவோட்சு என்கிற சீன அறிஞரால் எழுதப்பட்ட மெய்யியல் நூல். கி.மு.6-ம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகச் சொல்லப்படும் இந்த நூல், தத்துவம் சார்ந்த நூல்களில் மிக முக்கியமானதாகக் கூறப்படுகிறது.

6.  தனிமையின் நூறு ஆண்டுகள் -  சுகுமாரன் மொழிபெயர்ப்பு

தனிமையின் நூறு ஆண்டுகள்

ஸ்பானிஷ் மொழியில் காப்ரியேல் கார்சியா மார்க்கேஸால் எழுதப்பட்ட இந்த நாவல், இதுவரை 37 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழில் இந்த நாவலை கவிஞர் சுகுமாரன் மொழிபெயர்த்துள்ளார். ”கடந்த ஐம்பது ஆண்டுகளில் உலக மொழிகளில் வெளிவந்தவற்றில் மகத்தான படைப்பு ’தனிமையின் நூறு ஆண்டுகள்' '' என எழுத்தாளர் சல்மான் ருஷ்டி இந்த நாவல் குறித்துக் குறிப்பிட்டுள்ளார்.

7. லெவ் தல்ஸ்தோய் சிறுகதைகளும் குறுநாவல்களும் - நா.தர்மராஜன்  மொழிபெயர்ப்பு

லியோ டால்ஸ்டாய் எனப் பரவலாகக் குறிப்பிடப்படும் லெவ் தல்ஸ்தோய், ரஷ்ய இலக்கியத்தில் மிக முக்கியமானவர். இவரும் தஸ்தயேவ்ஸ்கியும் ரஷ்ய இலக்கியத்தின் மகத்தான ஆளுமை.

இவை அனைத்தும் செழியன் பரிந்துரை செய்த புத்தகங்கள். செழியன், ’உயிரெழுத்து' இதழின் ஆசிரியரான சுதீர் செந்திலுக்கு விருப்பமான புத்தகங்களைப் பதிவிட சேலஞ்ச் செய்வதாகக் கூறினார். 

சுதீர் செந்தில் குறிப்பிட்ட புத்தகங்கள்:

1. வால்காவிலிருந்து கங்கை வரை - ராகுல் ஜி
2. உலகைக் குலுக்கிய பத்து நாட்கள் - ஜான் ரீடு
3. பட்டாம்பூச்சி - ஹென்ரி ஷாரியர் 
4. அன்னா கரினினா - லியோ டால்ஸ்டாய்
5. அரை நாழிகை நேரம் - பாறப்புறத்து
6. Shogun - James Clavell
7. யவன ராணி - சாண்டில்யன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!