வெளியிடப்பட்ட நேரம்: 15:41 (14/04/2018)

கடைசி தொடர்பு:16:27 (14/04/2018)

பால்வீதி மண்டலத்தின் வடிவத்தையும் பரப்பையும் எப்படி கணக்கிட்டார்கள் தெரியுமா?

நட்சத்திரங்களின் அமைப்பும் அதன் நகர்வும் வைத்து பால்வீதியின் வடிவத்தை நாம் புரிந்துகொள்ளலாம். சிதறிக்கிடக்காமல் தொகுப்புகளாக அமைந்திருக்கும் நட்சத்திரங்கள் நமது அண்டத்தின் வடிவத்தை எடுத்துரைக்கின்றன.

பால்வீதி மண்டலத்தின் வடிவத்தையும் பரப்பையும் எப்படி கணக்கிட்டார்கள் தெரியுமா?

நமது அண்டை வீட்டின் வடிவத்தை நமது சாளரத்தின் வழியாகப் பார்த்தே அளந்துவிடலாம். அதுவே நமது வீட்டின் வடிவத்தை எப்படி அளப்பது? வீட்டுக்கு வெளியே சென்று பார்ப்பதன் மூலம் அளந்துவிடலாம். அதுவே நமது வீட்டின் பரப்பு பல ஆயிரம் கோடி கிலோமீட்டர்களுக்கும் அதிகமாக இருந்தால்...?

நமக்கு அருகாமையில் இருக்கும் மற்ற அண்டங்களை (Galaxy) தொலைநோக்கியின் மூலம் பார்த்து அளந்து வைத்திருக்கிறோம். ஏனென்றால் அவற்றின் தோற்றத்தை நம்மால் பார்க்க முடிகிறது. எட்வர்ட் ஹப்பிள் என்ற விஞ்ஞானி அண்டங்களின் வடிவத்தை நான்காக வரையறுத்துள்ளார். சுருள் ( Spiral) வடிவங்களில் இருக்கலாம், நீள்வட்ட ( Elliptical) வடிவமாக இருக்கலாம், கண்ணாடி வில்லை (  Lens- shaped) வடிவத்தில் இருக்கலாம், அல்லது ஒழுங்கற்ற (Irregular) முன்பின் கலைந்த வடிவமாக இருக்கலாம். அதில் நமது பால்வீதி மண்டலம் சுருள் வடிவம் கொண்டது என்பதை எவ்வாறு நாம் தெரிந்துகொண்டோம்.

அதைத் தெரிந்துகொள்வதற்கு முன் நாம் நட்சத்திரங்களைப் பற்றிப் புரிந்துகொள்ள வேண்டும். ஏதேனும் ஓர் இரவு நேரத்தில் வானில் இருக்கும் நட்சத்திரங்களை கவனித்துப் பாருங்கள். அவற்றின் தொகுப்பு மொத்தமும் கோடுகளால் தொடர்பு படுத்தினால் ஏதேனும் ஒரு வடிவத்தைக் கொடுக்கும். அதுவும் நீளமாக நீண்டுகொண்டே போகும். ஒரு இடத்தில் இருந்து பார்த்தால் அந்தப் பகுதியில் தெரியும் விண்மீன்கள் மட்டும் தானே தெரியும். அதை மட்டுமே வைத்துக்கொண்டு நம்மால் மொத்த அண்டத்தின் வடிவத்தையும் புரிந்துகொள்ள முடியாதல்லவா!

நட்சத்திரத் தொகுப்பு

Photo Courtesy: Wikipidea

அதனால், உலகின் அனைத்துக் கோணங்களில் இருந்தும் மொத்தம் 600 இடங்களில் இதுபோன்று செய்து பார்த்தார்கள். இதைச் செய்துபார்க்க வைத்த ஜெக்கோபஸ் என்ற விஞ்ஞானி அவற்றைத் தொகுத்துப் பார்த்தபோது உலகம் முழுவதும் இருந்த விண்மீன்  கூட்டத்துக்கும் ஒரு தொடர்பு இருந்ததும் அதுவும் நீளமாக வளைந்து செல்லும் தொடர்பாகவும் இருப்பது தெரியவந்தது. சுருக்கமாகச் சொன்னால், ஒரு வட்டத்தின் வடிவத்தைப் போலவே இருந்தது. இது மற்ற சுருள் வடிவ அண்டங்களில் இருக்கக்கூடிய தோற்றமாகும். அவர் கண்டறிந்த கணக்குகளை வைத்து பால்வீதி அண்டத்தையும் அதில் நமது சூரியனின் இருப்பையும் வரைகட்டமாக வரைந்துள்ளார்.

வரைகட்டம் ? Graph

Photo Courtesy: University of Massachusetts

இதை ஏற்றுக்கொள்ளச் சிறிது கடினமாகத்தான் இருக்கும். அது எப்படி சில நூறு இடங்களில் இருந்து எடுக்கும் படத்தின் மூலம் மொத்த அண்டத்தின் வடிவத்தை நம்மால் புரிந்துகொள்ள முடியும். சிறிது சிரமம்தான். அதையே விண்வெளியில் செய்துபார்த்தால்...!

விண்வெளித் தொலைநோக்கி மூலம் நமது பால்வீதி அண்டத்தின் நட்சத்திரங்களை ஆராய்ந்தபோது, அவை அமைந்திருந்த வடிவம் இங்கிருந்து பார்த்ததுபோலவே, கிட்டத்தட்ட ஒரு வட்டம் போலத்தான் இருந்தது. வானில் மேகமூட்டமற்ற தெளிவான இரவுவேளையில் நட்சத்திரங்களை ஆராய்ந்தால், தொடர்ச்சியான கோடாக சில நட்சத்திரக் கூட்டம் இருக்கும் அதற்குப் பக்கத்திலேயே இருள் நிறைந்து அதே போன்று நீண்டிருக்கும். அதற்குக் கீழேயே மீண்டும் நட்சத்திரக் கூட்டம் கோடுகளாக நீண்டிருக்கும். இது சுருள் வடிவத்தின் அமைப்பாகும். அத்தோடு அது நகரும் திசையைக் கவனித்தபோது மற்றுமொரு உண்மை புரிந்தது. அதன் இஷ்டத்துக்கு ஏதோவோர் திசையில் நகராமல் சுழற்சி முறையில் நகர்ந்து வட்டமாக சுற்றிச் சுற்றி வருகின்றன. இதுவும் சுருள் வடிவ அண்டத்தின் தன்மையாகும். 
மெஸ்ஸியர்  81 என்ற அண்டமும் இதே போன்ற அமைப்புகளை உடையதுதான். அதனோடு நமது அண்டத்தில் கண்டுபிடித்தவற்றைப் பொருத்திப் பார்த்தே நாம் இந்த முடிவுக்கு வந்துள்ளோம்.

Messier 81 Galaxy

ஆனால், அதைப்போல் நமது அண்டம் முழுச்சுருள் வடிவம் அல்ல. இதை அரைச்சுருள் வடிவம் என்று கூறலாம். அதாவது மத்தியில் இருக்கும் நீள்சதுர வடிவ ஒளிக்கூட்டத்தின் இரண்டு பக்கங்களில் இருந்துதான் இவ்வண்டத்தின் நான்கு நட்சத்திரக் கைகளும் நீள்கின்றன. ஆம், நமது அண்டத்திற்கு நான்கு கைகள் உள்ளன. மேலே நட்சத்திரக் கூட்டம் கோடுகளாகப் பிரியும், கீழே இருள் இருக்கும் என்று பார்த்தோமல்லவா! அதற்குக் காரணமும் இந்தக் கைகள் தான். நட்சத்திரங்கள் சிதறிப்போகாமல் ஒரே தொகுப்புகளாக அமைந்திருக்கின்றன. அந்த நட்சத்திரத் தொகுப்புகள் மத்தியில் இருந்து முடிவு வரை சுழன்றுகொண்டே இருக்கின்றன. பால்வீதியின் மொத்த விட்டம் ஒரு லட்சம் ஒளி ஆண்டுகள். நமது சூரியக்குடும்பம் பால்வீதியின் மத்தியில் இருந்து 25,000 ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருக்கிறது.

பால்வீதி மண்டலம்

Photo Courtesy: NASA

நமது பால்வீதி மண்டலத்தின் வடிவம் மற்றும் பரப்பினை எவ்வாறு கணக்கிட்டார்கள் என்பதைப் புரிந்துகொள்ள இன்னும் சிரமமாக இருக்கிறதா?

மேலும் எளிமையாகக் கூறவேண்டுமென்றால், வாத்துப் பரிசோதனை தான் சரியான வழி.

இயற்பியலாளர்கள் பொதுவாக ஒரு புது துகளோ, கதிரோ கண்டுபிடிக்கப்பட்டால் அது என்ன என்பதைக் கண்டறிய இதைத் தான் கடைபிடிப்பார்கள் . ஒரு பறவை நடந்து செல்கிறது. ஆனால், அது என்ன பறவை என்று பெயர் தெரியவில்லை. அதை எப்படிக் கண்டுபிடிப்பது? அது எந்த பறவையைப் போல நடக்கிறது, எந்தப் பறவையைப் போல சத்தமிடுகிறது என்பதை வைத்து அதைப் புரிந்துகொள்ளலாம். ஒரு வித்தியாசமான வாத்து இனப் பறவையைப் பார்க்கிறீர்கள், ஆனால், அதன் பெயர் தெரியவில்லை. அது வாத்து போல் நடக்கிறது, வாத்து போல் நீந்துகிறது என்பது உங்களுக்குப் புரிகிறது. எனில் அது ஒருவகையான வாத்து இனம் என்ற தீர்வுக்கு வருவீர்கள் அல்லவா! அதேபோல் இதற்கு முன் கண்டுபிடித்த அண்டங்களின் அமைப்பில் இருக்கும் செயற்பாட்டோடு நம்முடையதை ஒப்பிட்டுப் பார்த்தபோது இது சுருள்வடிவமாக இருப்பது தெரியவந்துள்ளது.

இதற்கு மேலும் நம்ப முடியவில்லையா?

விண்வெளியில் ஒரு செயற்கைக் கோளினை ஏவி விடுங்கள். அது பால்வீதிக்கு வெளியே சென்று அதை முழுமையாகப் புகைப்படம் எடுத்துக்கொண்டு வரட்டும். அதைப் பார்த்து நம்பிக்கொள்ளுங்கள் நமது அண்டத்தின் வடிவம் இதுதான் என்று. ஆனால் ஒரு விஷயம், நீங்கள் அனுப்பும் செயற்கைக்கோள் பால்வீதிக்கு வெளியே சென்று ஒளிப்படம்  எடுக்க 10,000 ஆண்டுகள் ஆகும். அது திரும்பி வர  மீண்டும் ஒரு 10,000 ஆண்டுகள் ஆகும்.


டிரெண்டிங் @ விகடன்