Published:Updated:

காவிரி: கர்நாடக அரசுக்கு உத்தரவிட உச்ச நீதிமன்றம் மறுப்பு

காவிரி: கர்நாடக அரசுக்கு உத்தரவிட உச்ச நீதிமன்றம் மறுப்பு
காவிரி: கர்நாடக அரசுக்கு உத்தரவிட உச்ச நீதிமன்றம் மறுப்பு
காவிரி: கர்நாடக அரசுக்கு உத்தரவிட உச்ச நீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி: காவிரி நீரைத் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிடுவதற்கு உச்ச நீதிமன்றம் இன்று மறுத்துவிட்டது. கர்நாடக அரசு  12 டி.எம்.சி. தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என்ற  தமிழக அரசின் கோரிக்கை ஏற்கப்படவில்லை.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக கர்நாடகமும், தமிழகமும் தொடர்ந்த வழக்குகளை நீதிபதிகள் ஆர்.எம். லோதா, ஜஸ்தி செலமேஸ்வர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது.

அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் சி.எஸ்.வைத்தியநாதன், காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட கர்நாடகம் மறுத்து வருவதால் தமிழகத்தில் சம்பா சாகுபடிப் பயிர்கள் போதிய நீரின்றி கருகி வருகின்றன. நதிநீர்ப் பங்கீட்டு விவகாரத்தில் காவிரி நடுவர் மன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவு, அந்த உத்தரவு அமல்படுத்தப்படுவதை உறுதி செய்ய அமைக்கப்பட்ட கண்காணிப்பு குழு பிறப்பிக்கும் உத்தரவு, பிரதமர் தலைமையிலான காவிரி ஆணையம் பிறப்பிக்கும் உத்தரவு என எந்த அமைப்பின் உத்தரவையும் கர்நாடகம் மதிப்பதில்லை. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கடந்த மாதங்களில் பிறப்பித்த உத்தரவையும் கர்நாடகம் சரியாக நிறைவேற்றவில்லை என்று கூறினார்.

இதையடுத்து கர்நாடகத்தின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் ஃபாலி நாரிமன், அனில் திவான் ஆகியோர் வாதிடுகையில், காவிரி நீரைக் கொண்டு கர்நாடகத்தின் குடிநீர், நீர்ப்பாசனத் தேவையை மட்டும்தான் பூர்த்தி செய்ய முடிகிறது. தமிழகத்துக்கு திறந்துவிடும் அளவுக்கு உபரி நீர் இல்லை என்றனர்.

இதைத் தொடர்ந்து பேசிய நீதிபதிகள், "கர்நாடகத்தின் குடிநீருக்கு தண்ணீர் தேவைப்படுகிறது என்ற வாதத்தை ஒதுக்குவதற்கில்லை. அதே சமயம், தமிழகத்தின் நிலையைக் கருதி அந்த மாநிலம் கோரியுள்ள 12 டிஎம்சி நீரில் குறைந்தபட்சம் 6 டிஎம்சி நீரையாவது திறந்துவிட இயலுமா?' என்று கேட்டனர்.

அதற்கு "எங்கள் மாநிலத்துக்கே போதிய நீர் இல்லாதபோது, தமிழகத்துக்கு எவ்வாறு நீரை வழங்க முடியும்? எங்களால் ஒரு சொட்டு நீரைக் கூட வழங்க முடியாத நிலையில் இருக்கிறோம்' என்று கர்நாடகத்தின் சார்பில் அதன் வழக்குரைஞர்கள் கூறினர்.

இந்த பதிலால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், "காவிரி நீரை குடிநீருக்காக பயன்படுத்துவது அவசியமானது என்பதை ஒப்புக் கொள்கிறோம். விவசாயத்தை விட மக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்வது முக்கியம்தான். ஆனால், இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 1992-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை குடிநீர் பயன்பாட்டுக்கான காவிரி நீர்த் தேவை குறித்து நீதிமன்றத்திலும் சம்பந்தப்பட்ட அமைப்புகளிடமும் கர்நாடகம் பிரச்னை எழுப்பாதது வியப்பளிக்கிறது.

எனவே, 1992-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை காவிரி நதியில் இருந்து குடிநீர்த் தேவைக்காக கர்நாடக அரசு எவ்வளவு தண்ணீரை பயன்படுத்தியது? அந்த காலகட்டங்களில், காவிரியில் இருந்து தமிழகத்தின் நீர்ப்பாசன தேவைக்காக எவ்வளவு தண்ணீர் திறந்து விடப்பட்டது? இது தொடர்பான விவர அறிக்கையை செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணிக்குள் கர்நாடகம் தாக்கல் செய்ய வேண்டும்' என்று உத்தரவிட்டதுடன் வழக்கு விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.

இந்த நிலையில், இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களுக்குப் பின், காவிரி நீரைத் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிடுவதற்கு உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. கர்நாடக அரசு  12 டி.எம்.சி. தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என்ற  தமிழக அரசின் கோரிக்கையை நீதிபதிகள் ஏற்கவில்லை.

அதேவேளையில், இதுதொடர்பாக காவிரி நதிநீர் ஆணையத்திடம் முறையிடுமாறு தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்கிய நீதிபதிகள், இந்த வழக்கை பிப்ரவரி 4-க்கு ஒத்திவைத்தனர்.