வெளியிடப்பட்ட நேரம்: 06:48 (16/04/2018)

கடைசி தொடர்பு:06:48 (16/04/2018)

எந்தச் சூழ்நிலையிலும் வெற்றியைத் தக்கவைத்துக்கொள்வது எப்படி? - #MotivationStory

மூன்று உதை விதி முறை உங்களுக்குத் தெரியுமா?

எந்தச் சூழ்நிலையிலும் வெற்றியைத் தக்கவைத்துக்கொள்வது எப்படி? - #MotivationStory

தன்னம்பிக்கைக் கதை

`புத்திசாலித்தனத்துக்கும் முட்டாள்தனத்துக்கும் இருக்கும் வித்தியாசம் என்னவென்றால், புத்திசாலிக்குத் தன் எல்லை தெரியும்’ - விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் பொன்மொழி இது. பணியிடம், தனிப்பட்ட வாழ்க்கை இவற்றில் எதில் பிரச்னை என்றாலும், கொஞ்சமே கொஞ்சூண்டு புத்திசாலித்தனம் இருந்தால் சமாளித்துவிடலாம். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், எத்தனைபேர் வந்தாலும், எப்பேர்ப்பட்ட இடராக இருந்தாலும் புத்திசாலித்தனம் கைகொடுக்கும்; அதோடு நம் மரியாதையையும் கௌரவத்தையும் அது காப்பாற்றும்; தலைகுனிவை ஏற்படுத்தாமல், தன்னம்பிக்கையோடு வீறுநடைபோட்டு நடக்கவைக்கும். புத்திசாலித்தனத்தின், அறிவுகூர்மையின் மேன்மையைப் பறைசாற்றும் கதை இது. 

வாத்து வேட்டை

அவர் இங்கிலாந்தின் பிரபல வழக்குரைஞர்களில் ஒருவர். ஓய்வாக இருக்கிற நேரங்களில் இங்கிலாந்து மக்களில் சிலருக்கு ஒரு பழக்கமுண்டு... வேட்டைக்குப் போவது. அந்த வழக்கறிஞர் அப்படி ஓர் ஓய்வுக் காலத்தில் வேட்டைக்குப் புறப்பட்டார்... வாத்து வேட்டை. அன்றைக்கு அவர் போனது ஸ்காட்லாந்து பகுதிக்கு. அவருக்கு அது கொஞ்சம் மோசமான நாள். காலை ஆறு மணியிலிருந்து அலைந்து திரிந்தும் ஒரு வாத்துக்கூட அவர் கண்ணில்படவில்லை. வெயில் சுட்டெரிக்கும் பதினோரு மணிக்குத்தான் ஒரு வாத்து கண்ணில்பட்டது. துப்பாக்கியால் அதை சுட்டு வீழ்த்தினார் வழக்கறிஞர். 

துப்பாக்கிச் சூட்டை வாங்கிய வாத்து ஒரு வயல்வெளியிலிருந்த வேலியைத் தாண்டி அந்தப் பக்கம் போய் விழுந்தது. வழக்கறிஞர் ஒரு கணம்தான் யோசித்தார். பிறகு தயங்கவே இல்லை. வேலியைத் தாண்டி குதிப்பதற்கு முயற்சி செய்தார். அப்போது வேலிக்கு அந்தப் பக்கமிருந்து ஒரு குரல் கேட்டது. 

``நில்லுங்க... யார் நீங்க...இங்கே என்ன செய்றீங்க?’’ 

வழக்கறிஞர் குரல் வந்த திசையைப் பார்த்தார். ஒரு முதிய விவசாயி, தன் ட்ராக்டரில் அமர்ந்தபடி அவரைப் பார்த்துக்கொண்டிருந்தார். 

``நான் ஒரு வாத்தை சுட்டேன். அது இந்த வயல்ல விழுந்துடுச்சு. அதை எடுத்துட்டுப் போறதுக்காக வந்தேன்...’’ 

அந்த முதியவர் சொன்னார்... ``இது என் நிலம்... இங்கே அத்துமீறி யாரும் நுழையக் கூடாது.’’ 

``பெரியவரே... நான் யார்னு தெரியாமப் பேசுறீங்க... நான் யார் தெரியுமா? இங்கிலாந்துலயே புகழ்பெற்ற லாயர்கள்ல ஒருத்தன். நீங்க மட்டும் அந்த வாத்தை எடுக்க விடலைனு வைங்க... அப்புறம் நடக்குறதே வேற. கோர்ட்ல கேஸ் போட்டு உங்களை உண்டு,இல்லைனு பண்ணிடுவேன். அதுக்கப்புறம் நீங்க நடுத்தெருவுலதான் நிக்கணும்...’’ 

முதியவர் இதைக் கேட்டு லேசான புன்முறுவல் பூத்தார். இவ்வளவு ஆணவத்தோடு பேசும் அந்த வழக்கறிஞருக்கு ஒரு பாடம் கற்றுத்தர வேண்டும் என்கிற எண்ணமும் அவருக்குத் தோன்றியது. ``சரிங்கய்யா... இங்கே, ஸ்காட்லாந்துல இது மாதிரி சின்னப் பிரச்னை வந்தா நாங்க என்ன செய்வோம்னு உங்களுக்குத் தெரியாதுனு நினைக்கிறேன்... சரியா?’’ 

கதை - தன்னம்பிக்கை

``என்ன செய்வீங்க?’’ 

`` `மூணு உதை விதிமுறை’-யை கடைப்பிடிப்போம்...’’ 

``அதென்ன மூணு உதை விதி?’’ 

``அது ஒண்ணுமில்லை. முதல்ல நான் உங்களுக்கு மூணு உதை கொடுப்பேன். அதுக்கப்புறம் நீங்க என்னை மூணு உதை உதைக்கலாம். அப்புறம் நான் மறுபடியும் உங்களுக்கு மூணு உதை கொடுப்பேன். அப்புறம் நீங்க... கடைசியில யார் `நான் தோத்துட்டேன்’னு ஒப்புத்துக்குறாங்களோ, அவங்க தோத்தவங்க. இந்த விதிப்படி நான் தோத்துட்டேன்னு ஒப்புத்துக்கிட்டா நீங்க வாத்தை எடுத்துட்டுப் போயிடலாம். நீங்க தோத்துட்டேன்னு ஒப்புத்துக்கிட்டா, வாத்தை இங்கேயே விட்டுட்டுப் போயிடணும். அவ்வளவுதான்.’’ 

வழக்கறிஞர் முதியவரைப் பார்த்தார். நிச்சயம் மூன்று உதைகளுக்குக்கூட இந்தக் கிழவர் தாங்க மாட்டார் என்றே அவருக்குப்பட்டது. போட்டிக்கு ஒப்புக்கொண்டார். முதியவர் ட்ராக்டரைவிட்டு இறங்கினார். வழக்கறிஞரிடம் போனார். இது முதியவர் முறை. தன் பூட்ஸ் அணிந்த கால்களால் ஓங்கி வழக்கறிஞரின் கால்களில் ஓர் உதைவிட்டார். அவ்வளவுதான். வழக்கறிஞர் அப்படியே முழங்கால் தரையில்பட கீழே உட்கார்ந்துவிட்டார்.  

கதை - மோட்டிவேஷன் கதை

 

அவர் எழுந்ததும் அடுத்த உதை விழுந்தது... கிட்டத்தட்ட மூக்குவரை உயர்ந்தது கிழவரின் கால்கள். அந்த உதை வழக்கறிஞரின் தாடையைப் பதம் பார்த்தது. வழக்கறிஞர் கீழே விழுந்துவிட்டார். முதியவர் கொடுத்த மூன்றாவது உதை வயிற்றில். ஆனால், அந்த உதை பலமாக விழவில்லை. 

இப்போது ஒருவழியாக வழக்கறிஞர் சமாளித்து எழுந்து நின்றார். ``ஓ.கே. கிழவா... இப்போ என் முறை... கிட்டே வா. உன்னை நான் என்ன செய்றேன்னு பாரு...’’ 

கிழவர் அமைதி தவழும் முகத்தோடு சொன்னார். ``சார்... இருங்க... இருங்க. ஒத்துக்கிறேன். நான் உங்ககிட்ட தோத்துட்டேனு ஒத்துக்கிறேன். தயவுசெஞ்சு உங்க வாத்தை நீங்களே எடுத்துட்டுப் போங்க...’’

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்