"பெண்ணின் நுண்ணிய உணர்வுகளுக்கு உருவம் கொடுக்கும் ஒரு முயற்சி!" ‘ஒரு சில பல நிமிடமும் பேச்சும்’ நாடக இயக்குநர் கீதா கைலாசம்

கீதா கைலாசம்

``ஏழு, எட்டு வருஷமா சிறுகதைகள் எழுதிட்டிருக்கேன். நாம் அன்றாடம் கடந்துபோகும் சில எதார்த்தமான விஷயங்களே பல கதைகளுக்கான கருவைக் கொடுக்கும். அப்படி உருவானதுதான் இந்த நாடகத்தின் கருவும்'' என்கிறார் கீதா கைலாசம்.

``என் நாடகத்தின் நாயகி, லதா. அவளால் தன்னுடைய உணர்வுகளை மத்தவங்ககிட்ட வெளிப்படுத்த முடியலை. அது கோபமானாலும் சரி, சந்தோஷம், வெறுப்பு அல்லது பயமானாலும் சரி, இப்படி வெளிப்படுத்த முடியாத உணர்வுகளை, ஒரு கட்டத்தில் மத்தவங்ககிட்ட சொல்றதுக்கு வாய்ப்பு கிடைச்சா லதாவுக்கு எப்படி இருக்கும்? இதுதான் ‘ஒரு சில பல நிமிடமும் பேச்சும்’ நாடகத்தின் கதை. இதை நகைச்சுவையோடு  சொல்லியிருக்கேன்” என்கிற கீதா கைலாசம் குரலில் குதூகலம் ததும்புகிறது. 

கீதா கைலாசம்இயக்குநர் இமயம் கே.பாலசந்தரின் மருமகள்; ஆனால், இது அவரின் அடையாளமல்ல; அவருடன் பயணித்து, பல தொலைக்காட்சித் தொடர்களில் தயாரிப்பு வேலை செய்த அனுபவசாலி. மாமனார் கலைத்துறையில் படைத்த சாதனைகளுக்கு மரியாதை செய்யும் வகையில், ஏப்ரல் 20-ம் தேதி, சென்னை நாரதா கானா சபாவில், இவரது முதல் நாடகமான ‘ஒரு சில பல நிமிடமும் பேச்சும்’ அரங்கேறுகிறது. பாலசந்தரின் நெருங்கிய வட்டத்திலிருந்து நீண்ட நாள் கழித்து, ஒரு படைப்பு என்பதால், நாடக ரசிகர்களிடம் பெரும் ஆவலை ஏற்படுத்தியிருக்கிறது.

`. ஒரு நிகழ்ச்சிக்குப் போயிருந்தபோது, இந்தக் கதையைக் குறுநாடகமாக நடித்தேன் அங்கே வந்திருந்தவர்கள் எல்லாம் மனநல ஆலோசகர்கள். அவங்கதான் இதை ஒரு முழூ நாடகமா பண்ணினால், நிறைய பேரிடம் கொண்டுபோய் சேர்க்கலாம்னு சொன்னாங்க. ஸ்கிரிப்ட் எழுதினேன். மூன்று மாசம் நாடகத்துக்கான எல்லா ஏற்பாடுகளும் செஞ்சேன். என்னோடு சேர்ந்து, நேரம் காலம் பார்க்காமல் வேலை செஞ்ச என் டீமூக்கு நன்றி சொல்லணும். லதா கதாபாத்திரத்தில், மாடல் அண்டு ஆர்டிஸ்ட் மேகா ராஜன் நடிக்கிறாங்க. ஹமாம் விளம்பரம் மூலம் பிரபலமானவங்க. பல ஆங்கில நாடகங்களில்  நடிச்சிருங்காங்க. தமிழில் இதுதான் முதல்முறை. ஒரு பெண்ணின் நுண்ணிய உணர்வுகளுக்கு உருவம் கொடுக்கும் முயற்சி. அந்தக் கதாபாத்திரமாவே மாறியிருக்காங்க. நான் லதாவின் மாமியாராக நடிக்கிறேன்.  டீமின் எல்லோரின் உழைப்பும் இருக்கு. ரிகர்சல் மட்டும் 50 நாள் பண்ணியிருக்கோம். ஒரு பெரிய கலைப்பட்டறைக்கு போய்ட்டு வந்த அனுபவம் கிடைச்சிருக்கு" என்கிற கீதா கைலாசம் கண்களில் கனவு மின்னுகிறது.

``இப்படி ஒரு படைப்பை உருவாக்கி, கே.பி சாருக்கு சமர்ப்பிப்பது நீண்ட நாள் கனவா?''

``நான் அவருடன் பல தொலைக்காட்சித் தொடர்களின் தயாரிப்பு பிரிவில் வேலை பார்த்திருக்கிறேன். அவரின் கடின உழைப்பைப் பார்த்து வியந்திருக்கிறேன். 80 வயசிலும் அதிகாலை நான்கு மணிக்கு எழுந்துடுவார். ஒரு ஆர்டிஸ்ட் எப்படி வேணும்னு கேட்கிறாரோ, அப்படியே கொண்டுவந்து நிறுத்துவேன். அவரின் படைப்பில் சின்ன  தவறும் வந்துடக்கூடாதுனு ரொம்ப கவனமா இருப்பாரு. அந்த உழைப்பும், பொறுப்புணர்வும் கலை மீதான பேரார்வத்தின் பாதிப்பு சுற்றி இருக்கிறவங்களையும் தொற்றிக்கொள்ளும். அப்படித்தான் எனக்கும் . வசனம், திரைக்கதை எழுதுறது என் பலம். நகைச்சுவை எனக்கு இயல்பா வரும். இந்த ஆர்வம் வர காரணமா இருந்த கே.பி சாருக்கு இதைச் சமர்ப்பிக்கிறேன். என் கணவர் கைலாசமும் இதற்குக் காரணம். அவரைப் பற்றி வெளியில் தெரியாது. 'மர்ம தேசம்', 'ரமணி  VS ரமணி' போன்ற ஹிட் அடித்த சீரியல்களுக்கு தயாரிப்பாளரா இருந்தவர். இப்போ என் படைப்புகளை வெளியில் சொல்லவேண்டிய நேரம்னு நினைக்கிறேன். நீண்ட நாள் இதைச் செய்யாம இருந்திருக்கிறேன். கிட்டதட்ட நானும் லதா மாதிரிதான்" எனச் சிரிக்கிறார் கீதா.

கீதா கைலாசம்

``அப்போ, இனி திரைப்படங்கள் வழியாகவும் எதிர்பார்க்கலாமோ?''

``நிச்சயமா! திரைப்படங்களில் வேலை பார்க்கும் ஆர்வமும் இருக்கு. குழந்தைகள் சம்பந்தமான படைப்புகளை உருவாக்க ஆசை. தவிர, இப்போ ஒரு ஸ்கிரிப்ட் இருக்கு. இளம் தம்பதியின் விவாகரத்து பற்றிய கதை.  தொடர்ந்து கலைத்துறையில் இயங்குவேன்” என்கிறார். ஹாட்ஸ் ஆப்! 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!