வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (17/04/2018)

கடைசி தொடர்பு:07:43 (17/04/2018)

இக்கட்டான சூழ்நிலையில் ரிஸ்க் எடுப்பது கைகொடுக்குமா? - நம்பிக்கைக் கதை #MotivationStory

நம்பிக்கையின் அவசியம் குறித்துத் தெரிந்து கொள்ள அவசியம் படியுங்கள்!

இக்கட்டான சூழ்நிலையில் ரிஸ்க் எடுப்பது கைகொடுக்குமா?  - நம்பிக்கைக் கதை #MotivationStory

கதை

லகப் புகழ்பெற்றவை ஆன் ஃப்ராங்க் (Anne Frank) டைரிக் குறிப்புகள். யூதப் பெண்ணான ஆன் ஃப்ராங்க், நாஜிப் படைகளின் கண்களில் படாமல் ஒளிந்து வாழ்ந்தபோது எழுதிய வாழ்க்கை அனுபவங்கள் ஒவ்வொன்றும் வலியும் வேதனையும் நிரம்பியவை. அதில் ஆன், ஓரிடத்தில் இப்படி எழுதியிருந்தார்... `பிறருக்குக் கொடுத்து உதவுவதால், ஒருவர்கூட ஏழையாவதில்லை.’ ஒரு நாளல்ல, இரண்டு நாள்களல்ல... கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கையின்போது அவர் எழுதிய வரிகள் இவை. அப்படியானால், கொடுப்பதின், பிறருக்கு உதவுவதின் அருமையை அவர் உணர்ந்துதான் எழுதியிருப்பார்... அல்லவா!? எதையும் பெறுவதைவிட, கொடுப்பதில்தான் மகிழ்ச்சி அதிகம். சரி, ஒன்றை ஏன் பிறருக்குக் கொடுக்க வேண்டும்... அடுத்தவருக்காக என்று எதையும் ஏன் விட்டுச் செல்ல வேண்டும்? தங்கள் அனுபவங்களை, வரலாற்றை, புதிய கண்டுபிடிப்புகளை, எண்ணற்ற தொழில்நுட்பத்தை நம் முன்னோர் நமக்காக விட்டுச் சென்றதால்தான் நாம் இன்றைக்கு மகிழ்ச்சியான, வசதியான வாழ்க்கையை அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். இதை நம்மில் யாருமே உணர்வதில்லை. பிறருக்காக எதையும் விட்டுச் செல்வதிலிருக்கும் மகத்துவத்தை உணர்த்தும் கதை இது! 

குழாய்

ஒரு மனிதன் தனியாகப் பாலைவனத்தில் மாட்டிக்கொண்டான். அவன் கொண்டு வந்திருந்த தண்ணீரும் தீர்ந்து போயிருந்தது. தாகம் வாட்டியெடுத்தது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை உதவுவதற்கு ஆட்கள் யாரும் தென்படவில்லை.  தண்ணீர் கிடைப்பதற்கான அறிகுறிகூடத் தெரியவில்லை. அவன் நடந்து நடந்து சோர்ந்து போனான். `அவ்வளவுதான்... தாகத்தில் உயிரைவிட வேண்டியதுதான்’ என அவன் நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில் சற்று தூரத்தில் சின்னதாக ஒரு சோலை இருப்பது தெரிந்தது. `அங்கே ஒருவேளை தண்ணீர் கிடைக்குமோ..? கிடைத்தாலும், கிடைக்கும்.’ அவன் நம்பிக்கையோடு, நடக்கக்கூட முடியாத அந்த நேரத்திலும், எட்டு வைத்து மெள்ள மெள்ள சோலையை நோக்கி நடந்தான். 

அது ஒன்றும் பெரிய பாலைவனச் சோலை அல்ல. வாடி, வதங்கி இரண்டு ஈச்சை மரங்கள் நின்றிருந்தன. இடிந்து, பாழடைந்த வீடு ஒன்றும் அருகிலிருந்தது. ஏதோ புயல் காற்றால் அந்த வீட்டின் ஜன்னல்கள், கதவுகளெல்லாம் பெயர்ந்துவிழுந்திருந்தன. அவன் நீர் கிடைக்காதா என்று அங்குமிங்கும் தேடினான். வீட்டின் பக்கவாட்டில் ஓர் அடிகுழாய் இருப்பது தெரிந்தது. அவன் தடுமாறித் தடுமாறி அதனருகே போனான். அடிகுழாயைத் தன் பலம் கொண்ட மட்டும் ஓங்கி ஓங்கி அடித்தான். எத்தனை முறை அடித்தும், குழாயிலிருந்து ஒரு சொட்டுத் தண்ணீர்கூட வரவில்லை. அவன் சோர்ந்து போனான். அவனுக்குத் தாகத்திலும் களைப்பிலும் மயக்கமே வந்துவிடும் போலிருந்தது. அப்போதுதான் அதை கவனித்தான். 

குழாய்

குழாயிலிருந்து பத்தடி தூரத்தில் ஒரு சின்ன கூஜா இருந்தது. கார்க் போட்டு மூடிவைத்திருந்த கூஜா. அந்த மனிதன் அதனருகில் போனான். கூஜாவுக்கு அடியில் ஒரு தாளில், குறிப்பு ஒன்றும் எழுதிவைக்கப்பட்டிருந்தது. அவன் மூடியைத் திறந்து பார்த்தான். கூஜா நிறையத் தண்ணீர் இருந்தது. அவனுக்கு ஆனந்தத்தில் கண்கள் விரிந்தன. இப்போது அவன் அந்த பேப்பரை எடுத்துப் படித்தான். அதில் இப்படி எழுதியிருந்தது... `நண்பரே, முதலில் இந்த கூஜாவிலிருக்கும் தண்ணீரை அடிகுழாயில் ஊற்றி நிரப்புங்கள். பிறகு அடிகுழாயை அடியுங்கள். தண்ணீர் வரும். பின்குறிப்பு: இங்கிருந்து போகும்போது மறக்காமல் கூஜாவில் நீர் நிரப்பி, மூடிவிட்டுச் செல்லவும்.’ 

அந்த மனிதன் இப்போது என்ன செய்யலாம் என யோசித்தான். `சரி... கூஜாவிலிருந்த தண்ணீர் முழுவதையும் குழாயில் ஊற்றிவிடுகிறோம். அதற்குப் பிறகு தண்ணீர் வராவிட்டால் என்ன செய்வது? தாகத்தில் உயிரைவிட வேண்டியதுதான். ஆனால், இந்த கூஜா தண்ணீரைக் குழாயில் ஊற்றாமல் எடுத்துக் குடித்துவிட்டால், உயிர்பிழைத்துக்கொள்ளலாம்.’ இந்த இரண்டு வாய்ப்புகள்தான் அவனுக்கு இருந்தன. அவன் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப் போனான். ஆனால், இந்தக் குறிப்பை எழுதியவர், `தண்ணீர் வரும்’ என்று நம்பிக்கையோடு எழுதிவைத்திருக்கிறாரே..! அப்படியானால் அது உண்மையாகத்தானே இருக்கும்? 

தண்ணீர்

இயல்பாக அந்த மனிதன் நல்லவன். பிறருக்கு உதவும் சுபாவம்கொண்டவன். கொடுப்பதில் மகிழ்பவன். `ஒருவேளை என்னைப்போலவே யாராவது தாகத்தோடு இந்த இடத்துக்கு வந்தால் என்ன செய்வார்கள்?’ என்று ஒரு கணம் யோசித்துப் பார்த்தான். கடைசியில் ரிஸ்கான முடிவை எடுத்தான். கூஜாவை எடுத்தான். அதிலிருந்த தண்ணீர் முழுவதையும் அடிகுழாயில் ஊற்றினான். அடிக்க ஆரம்பித்தான். இரண்டே அடி... தண்ணீர் பொங்கிக்கொண்டு வந்தது. அவன் தேவையான அளவு தண்ணீர் குடித்து தாகத்தைத் தீர்த்துக்கொண்டான். களைப்பாறினான். அந்த கூஜா நிறைய தண்ணீர் பிடித்து, அதை மூடினான். பிறகு அந்தக் குறிப்பு எழுதப்பட்டிருந்த தாளை எடுத்தான். அதற்குக் கீழே தன் பேனாவை எடுத்து இப்படி எழுதினான்... `நான் சொல்வதை நம்புங்கள்... நிச்சயம் தண்ணீர் கிடைக்கும். ஏதாவது ஒன்றைப் பெறுவதற்கு எதையாவது கொடுத்துத்தான் ஆக வேண்டும்...’ 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்