Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காதுக்குள் கேட்ட அந்த க்றீச் க்றீச் சத்தம்..! #EnvironmentStory


``அய்யோ.... காது கிழியுதே..."

``என்னாச்சு... என்னாச்சு..." கட்டிலில் தலை சாய்ந்து உறங்கிக்கொண்டிருந்த நாகப்பனின் மகள் தந்தையின் சத்தம் கேட்டு அலறியடித்துக்கொண்டு எழுந்தாள்.

``ஏம்புள்ள... என்ன சத்தம் அது... இவ்ளோ பயங்கரமா கேக்குது" 

``எந்தச் சத்தமும் இல்லையேங்ப்பா... இங்க அமைதியா தான இருக்கு"

மீண்டும் அதே அலறல். காதை அடைத்துக்கொண்டு ``என்னதான் ஆச்சு" என்று பதறிக்கொண்டு கட்டிலை விட்டு இறங்கி மருத்துவமனை அறைக்கு வெளியே ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தார். இரவு 11 மணி இருக்கும் எங்கும் நிசப்தம், மருத்துவமனையின் வடமேற்குப் பகுதியில் அவர்கள் இருந்த வளாகத்துக்கு அருகிலேயே புதிய வளாகம் கட்டுவதற்காக அங்கிருந்த மரத்தை இருவர் வெட்டிக்கொண்டு இருந்த இயந்திர ஓசையைத் தவிர வேறு எந்த ஓசையும் இல்லை.

அவர் பேசும்போது எந்தச் சத்தமும் இல்லை. பேச்சை நிறுத்தி அமைதியடைந்தால் மீண்டும் அதே மரண ஓலம். நாகப்பனுக்குக் குழப்பமாக இருந்தது.

``அப்பா... ஏதாவது கெட்டக் கனவு கண்டீங்களா!" தனது தந்தைக்குக் காதில் அடிப்பட்டது இன்னும் குணமடையவில்லையோ என்ற கவலை வானதியின் மனதை உறுத்தினாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கேட்டாள்.

மரத்தை வெட்டிக்கொண்டிருந்தவர்கள் வெட்டுவதை நிறுத்திவிட்டு அன்றைய கூலியை வாங்கிக்கொண்டு கிளம்புவதைக் கவனித்துக்கொண்டே, ``இல்ல புள்ள, திடீர்ன்னு ஏதோ சத்தம் கேட்டுச்சு, யாரோ அழுகுற மாதிரி" என்றார்.

``காதுல அடிபட்டதால எதாவது பிரச்னையா இருக்கும், தூங்கி ஓய்வெடுங்கப்பா... காலையில டாக்டர் வந்ததும் கேட்டுக்கலாம்." எதுவும் பேசாமல் அமைதியாகச் சென்று படுத்தார். 

மறுநாள் காலை சோதித்த மருத்துவர், ``உடம்புக்கு ஒண்ணும் இல்ல. வண்டியில இருந்து கீழ விழுந்தப்ப காதுல அடிபட்டதால கொஞ்ச நாளைக்கு காதுக்குள்ள ஏதாவது சத்தம் வந்துட்டு இருக்கும். போகப்போக சரி ஆகிடும். இங்கயே இருந்தா இப்படித்தான் மனசு இறுக்கத்தால ஏதேதோ யோசிக்கத் தோணும். உடம்புக்கு ஒண்ணுமில்லை, இவர வீட்டுக்குக் கூட்டிட்டுப் போங்க" என்று கூறிவிட்டு அடுத்த அறைக்குச் சென்றுவிட்டார். வானதியும் பாக்கிகளைக் கட்டிவிட்டுத் தனது தந்தையை அழைத்துச் சென்றாள். காரில் அமர்ந்த நாகப்பனுக்கு மீண்டும் அதே சத்தம் கேட்டது, ``புள்ள... நேத்து மாதிரியே சத்தம் கேக்குது."

``ஒன்னுமில்லீங்ப்பா, டாக்டர்தான் கொஞ்ச நாள் போனா சரி ஆயிடும்ன்னு சொன்னாரே. கவலைப்படாதீங்க" என்று ஆறுதல் சொல்லிவிட்டு காரை ஓட்டத் தொடங்கினாள். சிறிது தூரம் செல்லும் வரை கேட்டுக்கொண்டே இருந்த அந்தச் சத்தம் சிறிது சிறிதாகக் குறையத் தொடங்கியது. கொஞ்ச தூரம் சென்றதும் மீண்டும் கேட்டது. இப்படியாக ஆங்காங்கே சிறிதும் பெரிதுமாகக் கேட்டுக்கொண்டே இருந்த அந்த ஓசையை சில மணிநேரங்களில் உற்றுக் கவனிக்கத் தொடங்கினார். ஆனால், அது என்ன சத்தம் என்று மட்டும் அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை.

சத்தம்

இப்படியாக ஒரு வாரத்தை ஓட்டிய நாகப்பன், அன்றைய அதிகாலை சமயம் வாசலில் அமர்ந்து பேப்பர் படித்துக்கொண்டிருந்தபோது கிறீச்... கிறீச்...என்று அதே போல் மீண்டும் ஓசை கேட்டது. சுற்றும் முற்றும் பார்த்தார். வீட்டுத் தோட்டத்தில் வானதி செம்பருத்திப் பூக்களைப் பறித்துக்கொண்டிருந்தாள். அவளைத் தவிர வேறு யாரையுமே அவர் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை இல்லை. மீண்டும் சில நொடிகள் இடைவெளியில் அதே சத்தம் கேட்டது. சத்தம் வந்த திசையைக் கவனிக்கத் தொடங்கினார். மெள்ள மெள்ள உற்றுக் கவனிக்க அவரது கழுத்து தனது மகள் இருக்கும் திசைநோக்கித் திரும்பியது. ``இப்படியும் இருக்குமா...!" தனக்குத் தானே சிந்தித்தவர், ``ச்சே ச்சே... ரொம்ப கற்பனை பண்றேன்" என்று சொல்லிக்கொண்டாலும் தயக்கத்தோடு அவரது மகளை மேலும் கவனித்தார். அவரது மகள் ஒவ்வொரு செம்பருத்தியாய் பறிக்கப் பறிக்க அதே சத்தம் கேட்டது. அதிர்ந்துபோனார்.

மலர்களைப் பூஜைக்காக எடுத்துச் சென்ற தனது மகளை, ``வானதி... வானதி... இங்க வா புள்ள" என்று அழைத்தார்.

``ஏனுங்ப்பா..."

``ரெண்டு மூணு பூவை எடு" அவளும் தனது கூடையிலிருந்து இரண்டு பூவை எடுத்துக்கொடுத்தாள், ``அட... செடியில இருந்து எடு புள்ள..."

ஏதும் புரியாமல் வானதியும் குழப்பத்தோடு இரண்டு பூக்களைக் கொய்தாள். ஒவ்வொன்றையும் காதுகொடுத்து உற்றுக்கேட்ட நாகப்பனுக்கு அதே ஓசை கேட்டது. அவ்வளவு அருகில் கேட்ட பிறகுதான் புரிந்தது, அது செடியின் அழுகைச் சத்தம் என்று.

காதில் அடிபட்ட அதிர்வால் அவரது அங்கண நரம்பு ( Vestibular nerve) மேலும் விரிவடைந்து மனிதர்களால் கேட்கமுடியாத ஓசைகளையும் கேட்கும் திறன் வந்திருந்தது. அன்று மருத்துவமனையில் கேட்ட ஓசை கூட மரம் வெட்டிக்கொண்டிருந்தபோது மரம் அலறியது தானோ என்ற சிந்தனை தோன்றவே அவசரமாக வீட்டிற்குள் ஓடினார்.

கையில் அரிவாளோடு வெளியே வந்தவர் நேராக வீட்டில் இருந்த கொய்யா மரத்தின் அருகே சென்றார். ``இப்ப தெரிஞ்சுரும்..." என்று சத்தமாகவே சொல்லிக்கொண்டவர் அரிவாளை ஓங்கி மரத்தின் மீது வீசினார். அரிவாள் மரத் தண்டில் ஆழமாகப் பதிந்து நின்றது. இன்னதென்று விவரிக்க முடியாத வகையில் ஓர் ஓலம் காதை அடைக்கும் அளவுக்குக் கேட்டது. சில நிமிடங்கள் நீண்ட ஓலச் சத்தம் மெள்ள மெள்ள அரற்றும் விதமாகக் குறைந்து முனகலாகி அடங்கிவிட்டது. அதிர்ந்துபோன நாகப்பன் வேகவேகமாக அரிவாளை வெளியே எடுத்தார். ``அழாத கண்ணு சரி ஆயிடும், இனிமே உன்ன காயப்படுத்த மாட்டேன்" என்று கொய்யா மரத்தைக் கட்டிக்கொண்டு அழத் தொடங்கினார். வீட்டிற்குள் ஓடிச்சென்று மஞ்சள் தூளை எடுத்து வந்து வெட்டுப்பட்ட காயத்தில் அதைத் தேய்த்துவிட்டு, ``சரி ஆயிடும், சீக்கிரமே சரி ஆயிடும்..." என்று தன்னை மறந்து மரத்தைத் தடவிக் கொடுத்தார். என்னவோ ஏதோ என்று ஓடிவந்த வானதி, தந்தையின் செயல்களைக் கண்டு ஒன்றும் புரியாமல் குழம்பினாள்.

அந்தச் சமயத்தில் மீண்டும் அதே போல் மரண ஓலம் கேட்டது. இது அடங்குவதாக இல்லை, நிமிடங்கள் போகப்போக அதிகமானது. பதறிக்கொண்டு எழுந்த நாகப்பன், அடித்துப் பிடித்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே ஓடினார். பக்கத்து வீட்டில் ஒரு முருங்கை மரத்தை வெட்டிக் கொண்டிருந்தார்கள். ``செல்லமுத்து... செல்லமுத்து.... மரத்த வெட்டாத" என்று கத்திக்கொண்டு ஓடிவந்த நாகப்பனைப் பார்த்து செல்லமுத்துவுக்கு ஆச்சர்யமாக இருந்தது. 

``ஏனுங் நாகப்பா... இந்த மரத்த வெட்டிட்டு மகனோட புது கார் நிறுத்த இடவசதி செய்யணும், சரி நீங்க போய் ஓய்வெடுங்க, உடம்பு சரியில்லாம அலையாதீங்க..." என்று சொல்லிவிட்டு அவர் தனது வேலையைத் தொடங்க, மரத்தின் மரண ஓலத்தைக் கேட்டு ஆத்திரமடைந்த நாகப்பன, "டேய்... கொலைகாரா... இப்ப இந்தக் கொலைய நிறுத்தப் போறியா இல்லையா...!" என்று அரிவாளை ஓங்கிக்கொண்டு செல்லமுத்துவைக் கொலைவெறியோடு முறைத்தார். அவரது நடத்தையைக் கண்டு பின்தொடர்ந்த வானதி அதிர்ச்சியடைந்து, ``அப்பா... ஒண்ணும் பண்ணிடாதீங்க..." என்று தடுக்க முயல அவளை ஆக்ரோஷமாய்த் தள்ளிவிட்டார். பயத்தில் கோடாரியைப் போட்டுவிட்டு அவர் நகர்ந்துசெல்ல, ``வானதி கொய்யா மரத்துக்கிட்ட மஞ்சள் தூள் இருக்கும் சீக்கிரமா எடுத்துட்டு வா..." என்று கண்கள் கலங்க அவர் கட்டளையிட வானதி ஓடிச்சென்று எடுத்து வந்தாள்.

வானதி கொடுத்த மஞ்சள் தூளை வெட்டுப்பட்ட காயங்களோடு கதறிக்கொண்டிருந்த முருங்கை மரத்தின் அருகில் அமர்ந்து காயங்களில் தடவி விட்டார். அப்பாவின் நிலை கண்டு மனமுடைந்த வானதி, ``அப்பா..." என்று உடைந்த குரலில் அவர் தோள் தொட்டு அழைக்கவே, ``மரம் அழுகுறது எனக்குக் கேக்குது புள்ள..." என்ற அவரது கதறல் அந்த முருங்கை மரத்தின் மரண ஓலத்தை அங்கு நின்றிருந்த இருவரின் மனதிலும் ஆறா வடுவாய்ப் பதிய வைத்தது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement