வெளியிடப்பட்ட நேரம்: 08:04 (18/04/2018)

கடைசி தொடர்பு:08:52 (18/04/2018)

உதவி செய்யும் மகனைப் பெற்ற அப்பா ஆசீர்வதிக்கப்பட்டவர்! – நெகிழ்ச்சிக் கதை #FeelGoodStory

உதவி செய்யும் மகனைப் பெற்ற அப்பா ஆசீர்வதிக்கப்பட்டவர்! – நெகிழ்ச்சிக் கதை #FeelGoodStory

கதை

`என் இதயத்தைத் திருடிய ஒரே மனிதன் என் மகன்’ - நெகிழ்ந்து போய் ஒரு பேட்டியில் இப்படிச் சொன்னார் அமெரிக்க நடிகை சாண்ட்ரா புல்லக் (Sandra Bullock). சில நேரங்களில் நம் எல்லோருடைய பிள்ளைகளுமே ஏதோ ஒருவிதத்தில் நம் மனதைக் கொள்ளை கொண்டவர்களாகத்தான் இருந்திருப்பார்கள். ஆனால், தேவைப்படும்போது பெற்றோருக்கு ஒரு மகன் உதவுவதென்பது இன்றைய காலத்தில் எதிர்பார்க்கவே முடியாத ஒன்றாக ஆகிவிட்டது. வளர்ந்த பிறகு பெற்றோரும் பிள்ளைகளும் விலகி, தனித்தனித் தீவுகளாகவே வாழ்கிற காலச்சூழல் இது. இதற்கு விதிவிலக்காக எந்த இடத்தில், எந்த நிலையில் மகன் இருந்தாலும் அவனால் உதவி பெறும் பெற்றோர் பாக்கியசாலிகள்; தேவதைகளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அப்படி ஒரு மகனைப் பெற்ற தந்தையின் கதை இது.

அது மட்டுமல்ல… இந்த உலகின் எந்த மூலையில் நீங்கள் இருந்தாலும் சரி… உங்கள் மனதில் ஆழமாக ஒன்றைச் செய்வதற்கு முடிவெடுத்துவிட்டால், அதை உங்களால் நிச்சயம் செய்ய முடியும்- இந்த உண்மையையும் அழகாக விளக்குகிறது இந்தக் கதை.

அமெரிக்காவின் வடக்கு மாகாணங்களில் ஒன்று, மின்னசோட்டா (Minnesota). 20 ஆண்டுகளுக்கு முன்னர் அங்கிருக்கும் ஒரு சிறு கிராமத்திலிருந்தார் அந்த முதியவர். அவர் ஒரு விவசாயி. அது, உருளைக்கிழங்கு பயிரிடும் காலம். அதற்காக அவர் நிலத்தை ஆழமாகத் தோண்டவேண்டியிருந்தது. ஆனால், முதுமை… உதவிக்கு ஆளில்லை. இருந்த ஒரே மகனும் ஏதோ ஒரு பிரச்னையில் மாட்டிக்கொண்டு சிறையிலிருந்தான். சட்டச் சிக்கல்களை எதிர்கொண்டு அவனை வெளியே கொண்டுவரவும் வழியில்லை. உருளையைப் பயிரிடும் நாள்கள் நெருங்கிக்கொண்டிருக்க, அவர் சிறையிலிருக்கும் தன் மகனுக்கு ஒரு கடிதம் எழுதினார்… 

கதை

`இந்த வருஷம் நம்ம தோட்டத்துல உருளைக்கிழங்கு பயிரிட முடியாதுனு தோணுதுப்பா. உன் அம்மாவுக்கு உருளைக்கிழங்குன்னா அவ்வளவு உசுரு. அவ உசுரோட இருந்தவரைக்கும் ஒரு வருஷம்கூட நாம உருளைக்கிழங்கைப் பயிரிடாம இருந்ததில்லை. என்ன பண்றது? இப்போ எனக்கு உதவிக்கு ஆளில்லை. என்னால நிலத்தை மம்பட்டியால தோண்டவே முடியலை. கால் மணி நேரம் ஓங்கி மம்பட்டியால வெட்டினாலே மூச்சு வாங்குது. நீ மட்டும் இங்கே இருந்திருந்தீன்னா எந்தப் பிரச்னையும் இருந்திருக்காது. நீ ஒத்தை ஆளாவே நின்னு உருளைக்கிழங்கைப் பயிரிட மொத்த நிலத்தையும் தோண்டியிருப்பே… என்ன பண்றது… நீ ஜெயில்ல இருக்கியே… சாரிப்பா… என்னமோ எழுதணும்னு தோணிச்சு. எழுதிட்டேன். உடம்பைப் பார்த்துக்கோ! – பிரியங்களுடன் உன் அப்பா.’

இந்தக் கடிதத்தை அனுப்பிய இரண்டாவது நாளில் அவருக்குச் சிறையிலிருந்த மகனிடமிருந்து ஒரு தந்தி வந்தது. `அப்பா… நல்ல வேளைப்பா. நீங்க நம்ம நிலத்தைத் தோண்டலை. அங்கேதான் நான் சில வெடிகுண்டுகளையும் துப்பாக்கியையும் புதைச்சுவெச்சிருக்கேன். ஜாக்கிரதை!’ இப்படிச் சொன்னது தந்தி வாசகம்.

அடுத்த நாள், அதிகாலை 4:00 மணிக்கு அது நடந்தது. அந்த விவசாயியின் வீட்டுக்கு பத்து, பதினைந்து எஃப்.பி.ஐ ஏஜென்ட்டுகளும் சில காவல்துறை அதிகாரிகளும் வந்தார்கள். அவருடைய நிலத்தையே தலைகீழாகப் புரட்டுவதுபோல, அங்குலம் அங்குலமாகத் தோண்டிப் பார்த்தார்கள். ஆனால், எவ்வளவு ஆழமாகத் தோண்டியும் அவர்களால் ஒரு சிறு கைத்துப்பாக்கியைக்கூட கண்டுபிடிக்க முடியவில்லை. இரவானதும், வெறுத்துப் போனவர்களாகக் கிளம்பிப் போனார்கள். 

கதை

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த விவசாயி, சிறையிலிருந்த தன் மகனுக்கு இன்னொரு கடிதத்தை எழுதினார். அதில் நடந்ததையெல்லாம் விவரித்திருந்தார்… `இப்போ நான் என்னப்பா செய்யட்டும்?’ என்று கடிதத்தை முடித்திருந்தார்.

இரண்டே நாளில் சிறையிலிருந்த மகனிடமிருந்து கடிதம் வந்தது. அதில் இப்படி எழுதியிருந்தது… `அப்பா… இப்போ நீங்க ஆசைப்பட்ட மாதிரியே இப்போ  நிலம் நல்லா தோண்டியிருக்குல்லப்பா! அப்புறமென்ன… உருளைக்கிழங்கை பயிரிடுங்க. ஜெயில்ல இருந்துக்கிட்டு என்னால செய்ய முடிஞ்சதெல்லாம் இவ்வளவுதாம்ப்பா… மன்னிசுக்கோங்க!’’

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்