தேநீர் முதல் கன்னம் தட்டல் வரை... கவர்னர் பத்திரிகையாளர் சந்திப்பில் நடந்தது என்ன?

தேநீர் முதல் கன்னம் தட்டல் வரை... கவர்னர் பத்திரிகையாளர் சந்திப்பில் நடந்தது என்ன?

அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி, கல்லூரி மாணவிகளிடம் பேசிய செல்போன் பதிவில் `கவர்னர் தாத்தா இல்லை...' என்ற பேச்சு, ஆளுநர் மாளிகையின் பிம்பத்தைக் கேள்விக்குறியாக்கியது. இதற்கிடையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானத்தை அவசர அவசரமாக ஒரு நபர் விசாரணைக் கமிஷனாக நியமித்த விவகாரமும் சர்ச்சையைக் கிளப்பியது. இதற்கிடையில் பத்திரிகையாளர் சந்திப்புக்கு அழைப்புவிடுத்தார் பன்வாரிலால் புரோஹித். 

கவர்னர்

`தமிழக ஆளுநர், பத்திரிகையாளர்களை மாலை 6 மணிக்குச் சந்திக்க இருக்கிறார்' என்று உறுதி செய்யப்பட்டவுடனே ஆளுநர் மாளிகையில் இரண்டாவது நுழைவாயில் பத்திரிகையாளர்களும் கேமராமேன்களும் குவிய ஆரம்பித்தனர். `பத்திரிகையாளர் சந்திப்பு, தர்பார் ஹாலில் நடைபெறும்' என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஹாலில் பதவி ஏற்பு, நூல் வெளியிட்டு விழா என கவர்னர் பங்குபெறும் விழாக்கள் மட்டுமே நடைபெறுவது வழக்கம். முதல்முறையாகப் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்வு தர்பார் ஹாலில் நடப்பதால், நிருபர்களும் கேமராமேன்களும் முண்டியடித்து இடம் பிடித்தனர். 

``எல்லாரும் டீ குடிக்க வாங்க'' என்று ஆளுநர் மாளிகை அதிகாரி 5:30 மணிக்கு பத்திரிகையாளர்களை அழைத்தபோது, பத்திரிகையாளர்கள் யாரும் இருக்கையைவிட்டு எழுந்திருக்கவில்லை. சரியாக 6 மணிக்கு தர்பார் ஹாலுக்குள் நுழைந்தார் ஆளுநர். ``வணக்கம்'' என்று ஆங்கிலத்திலும் தமிழிலும் சொன்ன கவர்னருக்கு, யாரும் பதில் வணக்கம் தெரிவிக்காமல் உட்கார்ந்தே இருந்தனர். கவர்னரின் வலதுபக்கம் ஆளுநரின் செயலாளர் ராஜகோபாலும், இடதுபக்கம் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் செல்லதுரை, பதிவாளர் சின்னையாவும் அமர்ந்திருந்தனர். 

``தமிழக கவர்னராகப் பதவி ஏற்று ஆறு மாத காலம் முடிவடைந்திருக்கிறது. அதையொட்டியே பத்திரிகையாளர் சந்திப்பு'' என்று விளக்கம் கொடுத்த கவர்னர், ஒரு நபர் கமிஷன் ஏன் அமைத்தார் என்பதற்கு விளக்கம் கொடுத்தார்.

``தமிழகப் பல்கலைக்கழகங்கள் அனைத்துக்கும் நான்தான் தலைவர்" என்று சொல்லி அதற்குச் சான்றாக `The Governors' Guide' என்ற புத்தகத்தில் பல்கலைக்கழக வேந்தருக்கு என்னென்ன அதிகாரங்கள் இருக்கின்றன என்பது குறித்து படித்துக் காண்பித்தார். ``என்னுடைய அனுமதி இல்லாமலேயே மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஐந்து நபர்கொண்ட விசாரணைக் குழுவை அமைத்தது தவறு. அதனால் அந்தக் குழுவை துணைவேந்தர் கலைத்துவிட்டார். நான் அமைத்துள்ள ஒரு நபர் கமிஷன் விரைவில் அறிக்கையைச் சமர்ப்பிக்கும். அந்த அறிக்கையின் அடிப்படையில் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள்" என்று சொன்னார் ஆளுநர். 

``உங்கள் மீதே குற்றச்சாட்டு இருக்கும் நிலையில் இந்த விசாரணைக் கமிஷன் உங்களையும் விசாரிக்குமா?'' என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, உடனே கோபப்பட்ட கவர்னர், ``எனக்கு 78 வயதாகிறது. கொள்ளுத்தாத்தா நிலையில் இருக்கும் என்னிடம் இதுபோன்ற கேள்வி கேட்பது அபத்தமானது. நான் நிர்மலா தேவியைப் பார்த்ததுகூட கிடையாது" என்று சொன்னார்.

``சிபிஐ விசாரிக்குமா?'' என்ற செய்தியாளர்கள் கேள்விகள் எழுப்பினார்கள். ``ஒரு நபர் கமிஷன் சந்தானம் ஐ.ஏ.எஸ் கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் முடிவெடுக்கப்படும். தவறு செய்தவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று பதிலளித்தார் ஆளுநர். 

பெண் நிருபர், ``இது பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்னை. நீங்கள் விசாரணைக் கமிஷனில் ஒரு பெண் அதிகாரியை நியமித்திருக்கலாமே. இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது?'' என்று கேள்வி எழுப்பினர். ``ஏற்கெனவே விசாரணை செய்ய முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு நிறைய அனுபவம் இருக்கிறது. அவர் வேண்டுமானால் பெண் அதிகாரிகளின் உதவியைக் கேட்டு பெறலாம்" என்று விளக்கம் கொடுத்தார்.  

``சந்தானம் ஐ.ஏ.எஸ். கமிஷனின் வரைமுறைகள் என்னென்ன?'' என்று கேட்க, அதற்கு விளக்கம் சொல்ல கவர்னர் தடுமாறியபோது, ஆளுநரின் செயலாளர் வரைமுறை குறித்த விவரங்களை வழங்கினார். அதையும் செய்தியாளர்களிடம் படித்துக் காண்பித்தவரிடம் ``நீங்கள் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளும்போது நிர்மலாவும் கலந்துகொண்டிருப்பதாகச் சொல்லியிருக்கிறாரே?'' என்று நிருபர்கள் விடாப்பிடியாகக் கேட்க, ``நீங்கள் அந்த ஆடியோவை முழுமையாகக் கேட்டீர்களா? என்னுடைய பெயரைச் சொல்லவே இல்லையே. நான் நிறைய பல்கலைக்கழக விழாக்களில் கலந்துகொள்கிறேன். அப்போது நிறைய பேர் கலந்துகொள்கின்றனர். அவர்கள் என் பெயரைச் சொன்னால் நான் சம்பந்தப்பட்டிருப்பதாக அர்த்தமாகுமா? நான் பங்குபெறும் விழாவில் என்னைச் சுற்றி கூட்டமாக இருப்பார்கள். இந்த நிலையில் படம் எடுத்தது எப்படி எனக்குத் தெரியும்?'' என்று எதிர்க்கேள்வி கேட்டார். 

``நிர்மலா விவகாரம் தொடர்பாக உங்களிடம் மீண்டும் விசாரணை நடத்தப்படுமா?'' என்ற கேள்விக்கு, ``நீங்களே என்னை விசாரியுங்களேன்" என்று மீண்டும் கோபப்பட்டார் கவர்னர்.

``கமிட்டியின் அறிக்கை தாக்கல் செய்த பிறகு பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தப்படுமா?" என்று கேட்டதற்கு, ``அனைத்து ஊடகங்களுக்கும் சந்தானம் ஐ.ஏ.எஸ். விசாரணை ஆணையத்தின் அறிக்கை அனுப்பிவைக்கப்படும். ஆறு மாதங்களுக்குப் பிறகு உங்களை மீண்டும் சந்திப்பேன்" என்றார். 

பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் நியமனம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, ``கடந்த ஆறு மாதங்களில் துணைவேந்தர்களாக நியமிக்கப்பட்ட ஐந்து பேரில் மூன்று பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். பல்கலைக்கழகத்தையும் கல்வியையும் மேம்படுத்த இந்தியாவின் எந்தப் பகுதியில் வசிப்பவரையும் நியமிக்கலாம் என்றுதான் சட்டவிதிமுறைகள் உள்ளன" என்று அதற்கும் தயாராக விளக்கம் கொடுக்க, சட்டப்புத்தகத்தின் உதவியை நாடினார். 

காவிரி விவகாரம் குறித்து கேள்வி எழுப்பியபோது, ``பிரதமரைச் சந்திக்க என்னை அணுகியிருந்தால், நான் பிரதமரிடம் பேசி உடனே அனுமதி பெற்றுக்கொடுத்திருப்பேன். ஆனால், இதுகுறித்து என்னை அணுகவில்லை. இன்று மதியம்கூட மத்திய நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரியுடன் தொலைபேசியில் காவிரி நதி நீர் ஆணையம் அமைப்பது குறித்துப் பேசினேன். காவிரிப் பிரச்னை குறித்து நான் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்பட அனைத்து மாநில ஆளுநர்களும் சந்தித்த கூட்டத்திலும் விரிவாகப் பேசியிருக்கிறேன்" என்று சொன்னவர், ``Conference of Governors நிகழ்ச்சியில் ஆளுநர் பேசியதை செய்தியாளர்களிடம் படித்துக் காண்பித்தார். காவிரி ஆணையம் அமைக்க குரல்கொடுப்பதற்கு முன்னரே, நான் காவிரி பிரச்னை குறித்து பேசியிருக்கிறேன். காவிரி விஷயத்தில் அரசியல் செய்யாமல் தீர்வு காணவேண்டும். இதற்காக நீர்வளத் துறை அமைச்சகத்துடன் தொடர்ந்து பேசிவருகிறேன். நானும் ஒரு விவசாயிதான். தமிழக விவசாயிகளின் நிலையை நான் அறிவேன்" என்று விளக்கம் கொடுத்தார். 

``தமிழக அரசின் நடவடிக்கைகள் திருப்தியளிக்கவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர்களிடம் நீங்கள் கூறியிருக்கிறீர்களே?" என்ற கேட்டதற்கு, ``அப்படிச் சொல்லவேயில்லை. `பல்கலைக்கழகங்களின் நடவடிக்கை திருப்தியில்லை' என்றுதான் சொன்னேன். தமிழக அரசின் நடவடிக்கைகள், திருப்தியளிக்கும் வகையிலேயே இருக்கிறது. நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன். எதிர்க்கட்சிகள், அவர்களுடைய கடமையைச் செய்கிறார்கள்" என்று சொன்னார். 

பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்த பிறகு, ``நீங்கள் தமிழ் மொழியைக் கற்றுவருவது குறித்து செய்தியாளர்கள் கேட்க, ``நான் தமிழை விரும்புகிறேன். தமிழ் இனிமையான மொழி" என்று தமிழிலேயே பதில் சொன்ன கவர்னரிடம், ``உங்களுடைய தமிழ் ஆசிரியர் யார்?'' என்று கேட்ட பெண் பத்திரிகையாளரின் கன்னத்தில் தட்டிச் சென்றார் ஆளுநர்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!