சர்வம் பூனை மயம்... இந்தக் கிராமத்தில் மக்கள் தொகையைவிட பூனைகள் தொகை அதிகம்! | A Village in Taiwan has more number of cats than population

வெளியிடப்பட்ட நேரம்: 20:11 (18/04/2018)

கடைசி தொடர்பு:20:11 (18/04/2018)

சர்வம் பூனை மயம்... இந்தக் கிராமத்தில் மக்கள் தொகையைவிட பூனைகள் தொகை அதிகம்!

எல்லாம் நன்றாகத் தான் போய்க் கொண்டிருந்தது. 1990களில் ஹூடாங் கிராமத்தின் வீழ்ச்சி தொடங்கியது. அங்கிருந்த மொத்த நிலக்கரி சுரங்கங்களும் மூடப்பட்டன. பிழைப்புக்காக மக்கள் ஊரை காலி செய்து வெளியேறத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் ஆறாயிரமாக இருந்த மக்கள் தொகை 100ஆக குறைந்து போனது.

சர்வம் பூனை மயம்... இந்தக் கிராமத்தில் மக்கள் தொகையைவிட பூனைகள் தொகை அதிகம்!

"மி
யா
வ்வ்வ்வ்வ்......."

இது தான் இந்த கிராமத்தோட "கொக்கரக்கோ" விடியல் டோன். 

பூனைகள் கிராமம்

இந்தக் கிராமத்துல எங்க நின்னாலும், உட்கார்ந்தாலும், நடந்தாலும், ஓடினாலும் நீங்க பூனைகளைக் கண்டிப்பா பார்க்கலாம். இந்தக் கிராமத்துல மனிதர்களைவிடவும், பூனைகளோட எண்ணிக்கை தான் அதிகம். அதனாலேயே, இந்தக் கிராமத்துக்கு "பூனை கிராமம்" என்ற செல்லப்பெயர் உண்டு. 

தைவானின்  கிராமம்

தைவான் நாட்டோட வடக்குப் பகுதியிலிருக்கும் அழகான மலை கிராமம் " ஹூடாங்" (Houtong). கீலுங் ஆற்றை ஒட்டி அமைந்திருக்கிறது இந்தக் கிராமம். "ஹூடாங்" என்பதற்கு  சீன மொழியில "குரங்குகளின் குகை" என்று அர்த்தம். இந்த மலைப்பகுதியில, பல வருடங்களுக்கு முன்னாடி ஒரு குகையில நிறைய குரங்குகள் வசித்ததா வரலாறு சொல்லுது. அதன் காரணமாகத் தான், இந்த ஊருக்கு "ஹூடாங்" என்ற பெயர் வந்திருக்கு. குரங்கு கொடுத்த பெயர் மறைஞ்சு இன்னிக்கு பூனைகள் இந்த ஊருக்கு ஒரு புது பெயரையும், ஊர் மக்களுக்கு ஒரு புது வாழ்க்கையையும் அமைச்சுக் கொடுத்திருக்கு. 

தைவானின்  கிராமம்

1920கள்ல ஜப்பானின் ஆதிக்க ஆட்சியில சிக்கியிருந்தது தைவான். அப்போதைய ஜப்பான் அரசாங்கம் இந்த மலைப்பகுதியில, நிலக்கரி அதிகம் இருப்பதைக் கண்டுபிடித்தது. சில ஆண்டுகளிலேயே, பல சுரங்கங்களை அமைத்தது. அது அந்தப் பகுதி மக்களின் வாழ்வையே மாற்றியமைத்தது. பல வேலை வாய்ப்புகளை உருவாக்கியது. கிராமம் விரிவடைந்தது. ஒரு கட்டத்தில் 900த்திற்கும் அதிகமான வீடுகள் என வளர்ந்து மொத்த மக்கள் தொகை 6,000 என்ற நிலையை எட்டியது. 

தைவான் கிராமம்

எல்லாம் நன்றாகத் தான் போய்க் கொண்டிருந்தது. 1990களில் ஹூடாங் கிராமத்தின் வீழ்ச்சி தொடங்கியது. அங்கிருந்த மொத்த நிலக்கரி சுரங்கங்களும் மூடப்பட்டன. பிழைப்புக்காக மக்கள் ஊரை காலி செய்து வெளியேறத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் ஆறாயிரமாக இருந்த மக்கள் தொகை 100ஆக குறைந்து போனது. ஊரே சூன்யம் வைத்தது போல் ஆகிவிட்டது. சுரங்கங்கள் மூடப்பட்டு ஆள் அரவமற்று கிடந்தன. ஊர் காலியான சமயத்தில், பூனைகளின் வருகை அதிகமாகத் தொடங்கின. ஒரு கட்டத்தில் பூனைகளின் எண்ணிக்கை 200யைக் கடந்தது. அதாவது, அந்தக் கிராமத்தில் இருந்த மனிதர்களின் தொகையை விட இரண்டு மடங்கு அதிகமாக இருந்தன. 

தைவான் கிராமம்

2008யில் பெக்கி செயின் (Peggy Chein) என்ற பெண், இந்தக் கிராமம் குறித்தும், கிராமத்தில் நிறைந்திருக்கும் பூனைகள் குறித்தும் பல போட்டோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து வந்தார். அது இந்தக்  கிராமத்தை பிரபலபடுத்தியது. ஒரு கட்டத்தில் சுற்றுலா பயணிகள் அதிகமாக வரத் தொடங்கினர். கடந்த வருடம் 10 லட்சம் பேர் வரை வருகை தந்துள்ளனர்.

ஊரைச் சுற்றி சாதாரணமாக நடந்தாலே பல இடங்களிலும் பூனைகளைப் பார்க்க முடியும். இதில் பெரும்பாலும் வளர்ப்புப் பூனைகளாக இருந்தாலும் கூட, சில காட்டுப் பூனைகளும் இருக்கின்றன. இருந்தும் அவை மனிதர்களிடத்தில் இருக்க, பழக்கம் கொண்டவையாகவே இருக்கின்றன. இதுவரை பூனைகள் இங்கு யாரையும் கடித்ததாக எந்த பதிவுகளும் இல்லை. இருந்தும், தன்னார்வ குழுவினர் இங்கிருக்கும் அனைத்து பூனைகளுக்கும் தடுப்பூசிகளைப் போட்டுள்ளனர். 

பூனைகள் கிராமம்

"சர்வம் பூனை மயம்" என்ற நிலையில் தான் இந்தக் கிராமம் இயங்குகிறது. சுற்றுலா வரும் பயணிகளைக் குறிவைத்து பூனைப்படம் போட்டு நோட்டுகள், காபி மக்குகள், மொபைல் போன் கவர்கள், ஃப்ரிட்ஜ் மேக்னட்கள், கேக்குகள் போன்றவை வியாபாரம் செய்யப்படுகின்றன. சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் பழைய சுரங்கங்களை மியூசியமாக மாற்றியுள்ளது அரசு.

தங்களை முன்வைத்து இவ்வளவு பெரிய வியாபாரம் நடக்கிறது என்பதைப் பற்றி எந்தக் கவலையுமில்லாமல் ஹூடாங் கிராமத்தை வலம் வந்துக் கொண்டிருக்கின்றன பூனைகள். 


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்