நம் உயிர் காக்க நமக்கே தெரியாமல் உதவுபவர்கள் யார்? - நெகிழ்ச்சிக்கதை #FeelGoodStory

நமக்கே தெரியாமல் நமக்கு உதவி செய்தவர்களுக்கு நாம் என்ன செய்யப் போகிறோம்!

நம் உயிர் காக்க நமக்கே தெரியாமல் உதவுபவர்கள் யார்? - நெகிழ்ச்சிக்கதை #FeelGoodStory

கதை

`ல்லாச் சுமைகளுமே போற்றுதலுக்குரியவை’ - அமெரிக்க கார்ட்டூனிஸ்ட் வால்ட் கெல்லி (Walt Kelly) பிறர், நமக்காகத் தாங்கிக்கொள்ளும் பொறுப்பை வெகு அழகாக இப்படிச் சொல்லியிருக்கிறார். குடும்பச்சுமை, அலுவலகச்சுமை இவற்றையெல்லாம் விட்டுவிடுவோம். நமக்கே தெரியாமல் சில பொறுப்புகளைச் சுமந்துகொண்டு நமக்கு ஒரு பாதுகாப்பு அரணாக இருப்பவர்களை நாம் நினைத்தே பார்ப்பதில்லை. குளு குளு ஏ.சி கம்பார்ட்மென்ட்டில், பெர்த்தில் படுத்துறங்கி சொகுசாக ரயில் பயணம்... காலையில் இறங்கும்போது நம் ஒருவருக்குக்கூட நம்மை பத்திரமாகக் கொண்டு சேர்த்த ரயில் டிரைவருக்கு நன்றி சொல்லத் தோன்றியதில்லை. அதேபோல பாதுகாப்பான பேருந்துப் பயணத்துக்கு உதவிய ஓட்டுநர் தொடங்கி கல், முள் குத்தாமல் நம் பாதங்களைப் பார்த்துக்கொள்ளும் செருப்புத் தொழிலாளி வரை எத்தனையோ பேரை நாம் நினைத்துப் பார்ப்பதேயில்லை. சிலர் `பொறுப்பு’ என்கிற பெயரில் சுமக்கும் சுமை நம் உயிருக்கேகூட எவ்வளவு பாதுகாப்பைத் தருகிறது என்பதை விளக்குகிறது இந்தக் கதை.

வரலாற்றில் சில வீரர்களின் பெயர்கள் மறக்க முடியாதவை. அவற்றில் ஒன்று, ஜோசப் சார்லஸ் ப்ளம்ப் (Joseph Charles Plumb). அமெரிக்காவின் நேவல் அகாடமியில் (U.S. Naval Academy) பட்டம் பெற்றவர். வியட்நாம் போரில், கப்பலிலிருந்து கிளம்பிப் போய் தாக்கும் போர் விமானத்துக்கு (Jet Flight) பைலட்டாக இருந்தவர். 74 முறை வெற்றிவாகை சூடியவர். 75-வது முறை கிளம்பியபோது, எதிரிகளின் ஏவுகணையால் தாக்கப்பட்டு, அவருடைய விமானம் எரிந்துபோனது. பாராசூட்டில் பறந்து தப்பித்த ப்ளம்ப், எதிரிகளிடம் மாட்டிக்கொண்டார். ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக சிறையிலிருந்தார். அந்தக் கடுமையான சோதனையைக் கடந்து விடுதலையானார். பின்னாள்களில் எழுத்தாளராக, மேடைப் பேச்சாளராக மாறினார். அந்த நாள்களில் நடந்த சம்பவம் இது.

ஒருநாள் ப்ளம்ப் தன் மனைவியுடன் ஒரு ரெஸ்டாரன்ட்டில் அமர்ந்திருந்தார். மனைவிக்கு வேண்டியதைக் கேட்டு கேட்டு ஆர்டர் செய்துகொண்டிருந்தார் ப்ளம்ப். சற்றுத் தள்ளியிருந்த ஒரு மேஜையில் அமர்ந்திருந்த ஒருவர் இவர்களையே பார்த்துக்கொண்டிருந்தார். ஆனால், ப்ளம்ப்பின் எண்ணமெல்லாம் மனைவியை கவனிப்பதிலேயே இருந்தது. அதனால் அவர் தங்களை ஒரு மனிதர் பார்த்துக்கொண்டேயிருப்பதை அறியவில்லை.

பாராசூட்

சிறிது நேரம் போனது. அந்த மேசையிலிருந்தவர் எழுந்து இவர்களருகே வந்தார். ``மன்னிக்கவும்... நீங்க ப்ளம்ப்தானே?’’ என்று கேட்டார்.

``நீங்க..?’’

``நான் கேட்டதுக்குப் பதில் சொல்லுங்க... நீங்க கிட்டி ஹாக் (Kitty Hawk) பிரிவுலதானே பைலட்டா இருந்தீங்க... வியட்நாம் போர்ல கலந்துக்கிட்டீங்களே... உங்க விமானம்கூட சுடப்பட்டு, அதுலருந்து தப்பிச்சீங்களே...’’

ப்ளம்ப் கொஞ்சம் அசுவாரஸ்யத்தோடு சொன்னார்... ``ஆமா. இப்போ அதுக்கென்ன?’’

``உங்க விமானத்தை எதிரிங்க சுட்டு வீழ்த்தினாங்கல்ல... அன்னிக்கி நான்தான் உங்க பாராசூட்டை பேக் பண்ணிவெச்சேன்.’’

இதைக் கேட்டு ப்ளம்ப் சட்டென்று எழுந்துகொண்டார். இப்போது அந்த மனிதர், ப்ளம்ப்பின் கையைப் பிடித்து குலுக்கினார்... ``அன்னிக்கி பாராசூட் சரியா வேலை பார்த்துச்சுனு நினைக்கிறேன்...’’

``நிச்சயமா. அன்னிக்கி மட்டும் அந்த பாராசூட் வேலை செய்யாமப் போயிருந்தா, நான் உங்களுக்கு முன்னாடி நின்னுக்கிட்டு இருக்க மாட்டேன்...’’

மாலுமி

அந்த மனிதர் மேலும் சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்துவிட்டுக் கிளம்பிப் போனார். அன்று இரவு ப்ளம்ப்பால் நிம்மதியாக உறங்க முடியவில்லை. இப்படி நினைத்துக்கொண்டார்... `கிட்டி ஹாக்கில் இருந்தபோது அந்த மனிதரை எத்தனை முறை நான் பார்த்திருப்பேன், கடந்து போயிருப்பேன்... தொள தொள பேன்ட், இறுக்கமான சட்டை, தொப்பி யூனிஃபார்மில் நின்றுகொண்டிருப்பார். ஒரு `குட்மார்னிங்’கோ, `எப்படி இருக்கீங்க?’ என்கிற விசாரிப்பையோகூட நான் செய்ததில்லை. இப்போது புரிகிறது... அது ஏனென்றால், நான் போர் விமானத்தை இயக்கும் பைலட். அவர் ஒரு சாதாரண மாலுமி. நான் செய்தது தவறு... மாபெரும் தவறு!’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!