வெளியிடப்பட்ட நேரம்: 07:44 (19/04/2018)

கடைசி தொடர்பு:09:09 (20/04/2018)

ஸ்விஃப்ட் முதல் இடத்தில் இருப்பது ஏன்... புது ஸ்விஃப்ட் வாங்கலாமா...?! #NewSwift

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஹேட்ச்பேக் என்ற சாதனையை 13 ஆண்டுகளாக தக்கவைத்துக் கொண்டிருக்கும் ஸ்விஃப்ட்டின் புது மாடலை ஏன் வாங்க வேண்டும்?

காந்தியை, சிலருக்குப் பிடிக்கும்; சிலருக்குப் பிடிக்காது. ஆனால், காந்தி இல்லாமல் இந்திய சுதந்திர வரலாற்றை எழுத முடியாது. அப்படித்தான் ஸ்விஃட் இல்லாமல் ஹேட்ச்பேக் கார்களுக்கு வரலாறே கிடையாது. `இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஹேட்ச்பேக்!' என்ற சாதனையை, 13 ஆண்டுகளாக தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. இந்த கார் இல்லாத சாலைகளையே பார்க்க முடியாது என்கிற அளவுக்கு வாடிக்கையாளர்களால் அதிகம் நேசிக்கப்படும் கார், ஸ்விஃப்ட். 

ஸ்விஃப்ட்

ஆரம்பத்தில் வெறும் 1.3 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் மட்டும் வெளிவந்த ஸ்விஃப்ட், 2007-ம் ஆண்டு 1.3 லிட்டர் டீசல் இன்ஜினை அறிமுகம் செய்தது. இதையடுத்து, 2010-ம் ஆண்டில் 1.2 லிட்டர் K-சீரிஸ் பெட்ரோல் இன்ஜினை அறிமுகப்படுத்தியது. கடைசியாக, 2014-ம் ஆண்டில்கூட ஒருசில மாற்றங்களோடு களமிறங்கியது. இப்படி தொடர்ந்து மாற்றங்களைக் கண்டுகொண்டிருக்கும் ஸ்விஃப்டின் மூன்றாம் தலைமுறை கார் இப்போது வந்துவிட்டது. காரின் வடிவமைப்பு, இன்டீரியர், சேஸி என அனைத்துமே மாற்றம் கண்டுள்ளன. புது ஸ்விஃப்டை ஏன் வாங்க வேண்டும்... ஏன் வாங்க கூடாது?

ஸ்விஃப்ட்

1. மாருதியின் சேவை: ஸ்விஃப்ட்டை வாங்க முதல் காரணம், இது மாருதியின் கார். இந்தியாவிலேயே அதிக கார் சர்வீஸ் சென்டர்கள் மாருதியிடம்தான் உள்ளன. நீங்க எந்த ஏரியாவில் இருந்தாலும் உங்களுக்கு 20 கி.மீ தூரத்தில் நிச்சயம் ஒரு மாருதி ஷோரூம் இருக்கும். அவ்வளவு பெரிய நெட்வொர்க் மாருதியுடையது. ஊட்டி மலையில் நடுவழியில் நின்றுவிட்டாலும்கூட ஸ்பேர்பார்ட்ஸ் எளிதில் கிடைத்துவிடும். அதன் விலையும் குறைவு. 

 2. ஸ்டைல்: மாருதி, தனது ஸ்விஃப்டின் ஸ்டைலை அவ்வப்போது மாற்றிக்கொண்டே இருக்கிறது. இப்போது வந்திருக்கும் மூன்றாம் தலைமுறை ஸ்விஃப்ட்டின் ஸ்டைல், டிரெண்டுக்கு ஏற்றமாதிரி இருக்கிறது. முன்பக்க கிரில்லில் இருந்து பின்பக்கம் ஷார்ப்பான கோடுகள் வரை `ஜென் Z' தலைமுறையினருக்காக உருவாக்கியிருப்பது தெரிகிறது. புரொஜெக்டர் ஹெட்லைட், LED DRL லைட்டுகள், சைடு மிரர்ரில் இண்டிகேட்டர், ஸ்டைலான அலாய் வீல்கள் என தற்போது போட்டியாளர்களாக இருக்கும் கிராண்ட் ஐ10, போலோ, ஃபிகோ எல்லாமே கொஞ்சம் பழைய டிசைனோ நினைக்கவைத்துவிட்டன. எக்ஸ்டீரியர் மட்டும்தான் இப்படியா என்றால், இன்டீரியர் முழுவதும் கறுப்பு நிறத்தில் ரேஸ் காரில் உள்ளதுபோல ஃபிளாட் பாட்டம் ஸ்டீயரிங் வீல்கள் கொடுத்து இளைஞர்களை இழுத்துவிட்டது.

ஸ்விஃப்ட்

3. இடவசதி: முன்பைவிட ஸ்விஃப்ட்டில் இப்போது கொஞ்சம் இடம் பெருத்துவிட்டது. விசாலமான உணர்வில் பயணம் செய்யலாம். லெக் ரூம் பெரிதாகிவிட்டது. உயரம் அதிகமானவர்கள் கவலைப்பட வேண்டாம் ஹெட் ரூமும் பெருத்துவிட்டது. குடும்பத்தோடு ஊருக்குச் செல்பவர்கள் இப்போது எக்ஸ்ட்ரா லக்கேஜ் கொண்டுபோகலாம் 268mm பூட் ஸ்பேஸ் உள்ளது. 

4. தரம்: மாருதி ஸ்விஃப்ட்டின் தரம் கேள்விக்குறியாக இருந்தது. பலரையும் `ஸ்விஃப்ட் வேண்டாம்பா' என்று சொல்லவைத்ததே தரம்தான். ஆனால் இப்போது, ஸ்விஃப்டின் தரம் பற்றி கேள்விகளே எழும்பாது. புது ஸ்விஃப்ட்டின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இன்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியரில் ஃபிட் & ஃபினிஷ் அருமை.

5. வசதிகள்: பழைய ஸ்விஃப்ட்டில் ஏசி, பவர் விண்டோஸ் தவிர எதுவுமே இருக்காது. ஆனால், புது ஸ்விஃப்ட்டில் வசதிகளுக்கு பஞ்சமே இல்லை. எலெக்ட்ரிக் ஃபோல்டிங் மிரர்ஸ், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், ரியர் வைப்பர்/டிஃபாகர், கீலெஸ் என்ட்ரி, ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன், ஆண்ட்ராய்டு ஆட்டோ - ஆப்பிள் கார் பிளே வசதிகொண்ட டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், நேவிகேஷன் ஆட்டோ கிளைமேட் கன்ட்ரோல், ஆட்டோ ஹெட்லைட்ஸ், ரியர் வியூ கேமரா, வாய்ஸ் கமாண்ட், கீ-லெஸ் என்ட்ரீ... என லிஸ்ட் பெருசு.

6. ஓட்டுதல் அனுபவம்:  ஸ்விஃப்ட்டில் K-series பெட்ரோல் இன்ஜின் உள்ளது. மேக் இன் இந்தியா, சுதேசி விரும்பிகளுக்கு நல்ல செய்தி, இந்த இன்ஜின் முழுவதும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது. அதிர்வுகளும் இன்ஜின் இரைச்சலும் பெரிதாக இல்லை. டீசல் தேவையென்றால், ஃபியாட்டின் 1.3 லிட்டர் டீசல் இன்ஜின் உள்ளது. ஃபியாட் இன்ஜின் எப்படியென்று ஃபியாட் ஓட்டியவர்களுக்கு நிச்சயம் தெரியும். மாருதியின் பெரிய பலமே ஃபியாட் இன்ஜின்தான். பவர், டார்க், ரீஃபைன்மென்ட் எல்லாமே ஏகபோகம். ஃபோக்ஸ்வாகன் போலோ, ஃபோர்டு ஃபிகோ காரைவிட கிரவுண்ட் க்ளியரன்ட் பெருசு என்பதால் புது ஸ்விஃப்ட், ஸ்பீடு பிரேக்கரில் அடிவாங்குவதே இல்லை. 

ஸ்விஃப்ட்

1. ஏசி: ஸ்விஃப்டில் ஏசி பவர்ஃபுல்லாக இருந்தாலும் ரியர் ஏசி வென்ட் இல்லை என்பது சிறிய நெருடல்தான்.

2. பாதுகாப்பு: இரண்டு ஏர்பேக், ABS, சீட் பெல்ட் பிரிடென்ஷனர்ஸ், ISOFIX என்று எல்லாமே இருக்கின்றன. ஆனால், கிராஷ் டெஸ்டுக்கு காரை உட்படுத்தவில்லையே.

3. டயர்: ஸ்விஃப்டில் இருக்கும் 65 புரொஃபைல் சைஸ் டயர்கள் சிறியதுபோலத் தெரிகின்றன. 16 இன்ச் வீல் கொடுக்கப்பட்டிருந்தால், ஸ்விஃப்ட்டின் லெவல் உயர்ந்திருக்கும்.

4. பர்ஃபாமென்ஸ்: பெட்ரோல் இன்ஜினைப் பொறுத்தவரை, புது ஸ்விஃப்ட்டில் பழைசைவிட வேகமாகவே உள்ளது. ஆனால், டீசல் இன்ஜினில் இன்னும் அந்த டர்போ லேக் உள்ளது. போட்டியாளர்களைவிட பர்ஃபாமென்ஸ் கொஞ்சம் குறைவுதான். 5-வது கியரில் முந்தைய ஸ்விஃப்ட்டைவிட வேகம் குறைவுதான். தேவையான நேரத்தில் பவர் இருக்கும். ஆனால், சட்டெனப் பறக்காது ஸ்விஃப்ட்.


டிரெண்டிங் @ விகடன்