வெளியிடப்பட்ட நேரம்: 11:01 (19/04/2018)

கடைசி தொடர்பு:12:50 (19/04/2018)

ஃபேஸ்புக்கை விடுங்கள்... அமேசான் உங்கள் வீட்டுக்குள் என்ன செய்கிறது தெரியுமா?

உங்கள் அரிசியையும் பருப்பையும் எதையாவது செய்து அமேசான் விற்றுவிடும். அமேசானுக்கு கொடுத்தது போக, கண்டிப்பாய் முழு லாபமும் விவசாயிக்கு வந்து சேர்ந்துவிடும். ஒருவேளை, நமது விவசாயப் பொருள்கள் அமேசானுக்கு அதிக லாபத்தை தர ஆரம்பித்தால், அவர்கள் நமது பொருளை உலகமெல்லாம் கொண்டு செல்லக்கூடும்.

ஃபேஸ்புக்கை விடுங்கள்... அமேசான் உங்கள் வீட்டுக்குள் என்ன செய்கிறது தெரியுமா?

அமேசான் நிறுவனம், கடந்த பிப்ரவரி மாதம் `ரிங்' என்னும் வீடியோ காலிங் பெல் தயாரிக்கும் நிறுவனத்தை 6,500 கோடி ரூபாய்க்கு வாங்கியது. இந்தச் செய்தியை, நம்மில் எத்தனை பேர் படித்திருப்போம் எனத் தெரியாது. ஆனால், உலகமே உற்று கவனிக்கவேண்டிய, விவாதிக்கவேண்டிய மிக முக்கியமான செய்தி இது. 

காலிங்பெல் எல்லாம் வழக்கொழிந்து, நாம் மொபைலில் மிஸ்டுகால் கொடுத்து கதவு திறக்கச் சொல்ல ஆரம்பித்துவிட்ட இந்தக் காலத்தில், `காலிங் பெல்லில் முதலீடா?' எனத் தோன்றுகிறது இல்லையா! அதுவும் `இதில் 6,500 கோடி ரூபாய் பணம் போடுவதென்றால், அவர்கள் பைத்தியக்காரர்களாகத்தான் இருக்க வேண்டும்' என்றுகூட நினைக்கத்தோன்றும். ஆனால், உலகின் நம்பர் ஒன் நிறுவனமாக போட்டிபோட்டுக்கொண்டிருக்கும் அமேசான் ஒன்றும் முட்டாள் அல்ல.

அமேஸான்  

உண்மையில், இந்த ரிங் பெல் என்பது பக்கா க்ளாரிட்டியுள்ள, ஹெச்டி கேமராவுடன் 180 டிகிரி பார்க்கக்கூடிய ஒரு ஹைடெக் டோர் பெல். எப்போதும் இன்டெர்நெட்டில் இணைந்திருக்கும் இது, நீங்கள் வீட்டுக்குள் இருக்கும்போது மட்டுமல்ல, வெளியில் எங்கேயாவது இருக்கும்போதும் யாராவது உங்கள் வீட்டுக்கு வந்தால், உங்கள் மொபைலுக்கோ, கம்ப்யூட்டருக்கோ தகவல் அனுப்பும். நீங்கள் உட்கார்ந்த இடத்தில் இருந்தே யார் வந்திருப்பது எனப் பார்த்து அவருடன் பேசவோ அல்லது தேவையான தகவல்களைக் கொடுத்து இதன் உதவியுடன் அவர்களைத் திருப்பி அனுப்பவோ முடியும். அவர்கள் வந்து போன வீடியோவை பிறகு தேவைப்படும்போது உங்கள் சேமிப்பிலிருந்து பிளே ஃபார்வேர்டு, பேக்வெர்டு செய்து பார்க்கவும் முடியும்.

மேலும், இதனுடன் இணைந்த `அமேசான் கீ ஹோம் கிட்'டை பேக்கேஜாக வாங்கிக்கொண்டால், நீங்கள் உங்கள் கதவை பூட்டு சாவி இல்லாமல் ரிங் பெல்லைக் கொண்டு டிஜிட்டலாய் லாக் செய்துகொள்ள முடியும். இதனால், மனைவி வீட்டின் உள்ளே படுத்திருக்கும்போது தாமதமாய் வரும் கணவருக்கு எழுந்து போகத் தேவையில்லாமல் படுக்கையில் இருந்தபடியே கதவைத் திறக்கலாம் அல்லது முன்பே செட் செய்துகொண்ட ஒரு பாஸ் நம்பர் மூலம் கணவரே மனைவியை எழுப்பாமல் கதவைத் திறந்துகொள்ள முடியும்.  வீட்டுவேலை செய்பவர்கள் வருகையில் அலுவலகத்தில் இருந்தபடியே கதவைத் திறந்துவிடுவதுடன், அவர்கள் வீட்டினுள் என்ன செய்கிறார்கள் என்றும் இந்த பேக்கேஜில் இணைந்திருக்கும் வீட்டுக்குள்ளான கேமரா மூலம் உங்களால் கண்காணிக்கவும் முடியும்.

அமேஸான்

 பார்க்க இது உபயோகமாய்த்தானே தெரிகிறது என்கிறீர்களா? 

ஆனால், உண்மையில் 20 வருடங்களுக்கு முன் ஆன்லைனில் புத்தகம் விற்க வந்த நிறுவனம், இன்று ஏன் அக்கறையாய் நமது வீட்டுப் பாதுகாப்பில் இவ்வளவு பணத்தைக் கொட்டுகிறது என்று யோசித்தால் சந்தோஷத்துக்குப் பதில் கொஞ்சம் பயமாகக்கூட இருக்கிறது. ஏனென்றால், அமேசான் புராடெக்ட்ஸ் என்று அவர்களது பொருள்களில் நமக்கு நன்கு பரிச்சயமான பொருள்களை மட்டும் ஒரு வரிசையில் கோத்துப்பார்த்தால் ஒரு விஷயம் புரியும். 20 வருடங்களுக்கு முன்னர், முதன்முதலில் அமேசான் நிறுவனம் ஆரம்பிக்கக் காரணம், செய்தித்தாளில் வந்த ஒரு பெட்டிச்செய்திதான் என்றால் நம்ப முடிகிறதா? ஆம், எதிர்வரும் பத்து வருடங்களில் இ-காமர்ஸ் 2000 மடங்குக்குமேல் அதிகம் ஆகும் என்றதைப் படித்ததால் அந்தத் துறையில் தொழில் தொடங்கலாம் என ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம்தான் அமேசான். 

இந்த நிறுவனத்தின் லோகோவின் கீழே புன்னகைபோல ஓர் அம்புக்குறி இருக்குமே கவனித்திருக்கிறீர்களா? அது Amazon-ல் A-ல் ஆரம்பித்து Z-ல் முடியும். A-Z எல்லாமே கிடைக்கும் என்பதன் அடையாளம்தான் அது.

முதலில் சில கம்ப்யூட்டர் பொருள்கள் விற்கலாம் என யோசித்தார்கள். பிறகு, புத்தகங்களுக்கான தேவையானது எல்லா ஊர்களிலும் ஒன்றைப்போலத்தான் இருக்கும் என்று புத்தகங்கள் விற்க ஆரம்பித்தார்கள். ஆனால், பத்து வருடங்களுக்குப் பிறகும் வியாபாரம் இல்லாமல் மந்தமாகவே போக, வீட்டுக்குத் தேவையான மற்ற பொருள்களையும் விற்க ஆரம்பித்தார்கள். வியாபாரம் சூடுபிடிக்க ஆரம்பித்தது.  வியாபாரம் இருந்தாலே வேறு தொல்லைகளும் வரும்தானே? 

அமேஸான்

புதிதாய் போட்டி கம்பெனிகள் முளைக்க ஆரம்பித்தன‌. அதேசமயத்தில், நிறைய உற்பத்தியாளர்கள் தங்கள் பொருள்களை விற்க அமேசான் நிறுவனத்தை அணுகவும் தொடங்கினர். அமேசானுக்கு, இப்போது சர்ச் இன்ஜினில் தேடுபவர்களுக்கு முதலில் வருவது மட்டும் போதவில்லை. மற்ற எல்லோரையும்போல பேப்பர் விளம்பரங்களும், பேனர் விளம்பரங்களும் பெரிதாக உதவாது என்பதையும் அவர்கள் உணர்கிறார்கள். இப்போது அவர்களுக்கு பொருள்களை விற்க வேறு டெக்னாலஜி தேவைப்படுகிறது.

முதலில் எதையாவது வாங்கலாம் என்று வரும் உங்களுக்கு, தாங்கள் விற்கும் ஆயிரக்கணக்கான பொருள்களையும் தங்கள் பக்கங்களில் வகைவாரியாகக் காட்டுகிறார்கள். பிறகு, நீங்கள் தேடுவதிலிருந்தே உங்கள் தேவைகளை யூகிக்கிறார்கள். இப்போது அவர்கள் உங்களை அடையாளம் கண்டுகொள்கிறார்கள். அதன் பிறகு நீங்கள் தேடிய, அதன் தொடர்பான பொருள்கள் நீங்கள் ஆன்லைனில் வேறு பக்கங்களில் இருக்கும்போதெல்லாம் தொடர்ச்சியாக உங்கள் கண்ணில் படச்செய்து அவர்கள் உங்களை வாங்கவைக்கிறார்கள். ஆனால், வியாபாரத்துக்கு இதுவும் போதவில்லை. நீங்கள் அமேசானைத் திறந்து தேடும் பொருளை மட்டும் உங்களிடம் விற்றால் பத்தாது. `உங்கள் விருப்பம் என்னவென்று தெரிந்தால், அதை வைத்து உங்களுக்கு  ஆசை காட்டலாம்… அதற்கு என்ன செய்யலாம்’ என யோசிக்க ஆரம்பிக்கிறார்கள். 

நீங்கள் கம்ப்யூட்டரோடு, ஸ்மார்ட்போன் வைத்திருக்கிறீர்கள். அதன் மூலம் ஜீ.பி.எஸ்-ஸில் நீங்கள் இருக்கும் இடம் தெரியும். முன்பெல்லாம் அவர்களால் நீங்கள் எந்த மொழியில் டைப் செய்கிறீர்களோ, அந்த மொழியில் மட்டும்தான் புரிந்துகொள்ள முடியும். ஆனால், இப்போது டிரான்ஸ்லேட்டர் வந்துவிட்டது. நீங்கள் தமிழில் டைப் செய்வதையும் அவர்களால் ஆங்கிலத்தில் புரிந்துகொள்ள முடிகிறது. வாய்ஸ் டைப்பிங் இருக்கிறது. நீங்கள் பேசுவதை அது டைப்புகிறது. இன்னும் கொஞ்சநாளில் உங்கள் மனைவி உங்களிடம், ``சாயங்காலம் சீக்கிரம் வாங்க, சேலை வாங்க கடைக்குப் போகணும்” என்று சொல்லி போனை வைத்த மறுவிநாடி உங்கள் மொபைலிலோ, கம்ப்யூட்டர் ஸ்க்ரீனிலோ ஆன்லைன் சேலை விளம்பரங்கள் ஒளிரலாம்.

சரி, ஆன்லைனில், மொபைலில் உங்களைக் கண்காணித்தாகிவிட்டது. உங்கள் பொழுதுபோக்கு நேரத்தில் நீங்கள் அவர்களுடன் இருந்து தொடர்பைத் துண்டித்திருப்பீர்களே? அந்த நேரத்தை எப்படி உபயோகிக்கலாம் என்று யோசிக்க ஆரம்பிக்கிறார்கள்.

பொழுதுபோக்குக்காக, நீங்கள் புத்தகம் படிப்பீர்கள் என்று நீங்கள் படிக்கும் புத்தகத்தையும், நீங்கள் தேடும் பொருள்களையும் இணைக்கலாம் என்று நீங்கள் படிக்கும் புத்தகத்தை கிண்டில் என்று இ-புக் ஆக்கிப் பார்க்கிறார்கள். ஆனால், நீங்கள் படிப்பதில் ஆர்வம் குறைந்தவர்களாய் இருக்கிறீர்கள். அங்கே உங்களைக் கவர முடியவில்லை. அடுத்து அதிகம் எங்கே சுற்றுகிறீர்கள் என்று பார்த்தால் சினிமா.

மெதுவாக `அமேசான் பிரைம்' என்று உங்கள் சினிமா நேரத்தைக் குறிவைக்கிறார்கள். பிடித்தப் படங்களை அவர்களே வழங்குகிறார்கள். உங்கள் போனிலிருந்து டிவி-யை இணைக்க ஃபயர் ஸ்டிக் தருகிறார்கள். டிவி-யை ஸ்மார்ட் டிவி ஆக்குகிறார்கள். 

அமேஸான்

ஆனால், நீங்கள் டிவியையும் ஆஃப் செய்துவிட்டு சும்மா இருக்கிறீர்கள். அந்த நேரத்தை விடுவானேன். என்ன செய்யலாம்? பேசாமல் உங்கள் வீட்டையே ஸ்மார்ட் வீடாக்கிவிட்டால் போதுமே. எந்நேரமும் உங்களை கவனிக்கலாம் அல்லவா? அலெக்ஸா அறிமுகம் ஆகிறது உங்களுக்கு. நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம்… சும்மா சொன்னால் போதும். அது டிவியை ஆன் செய்கிறது, ஏசியின் அளவைக் குறைக்கிறது. கேட்டால் போதும். அது பீட்சா ஆர்டர் செய்கிறது. மீதி நேரங்களில் அது தேமேயென சும்மா இருக்கிறது என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மையில் அது நம்மைக் கவனித்துக்கொண்டிருக்கிறது.

இப்போது யோசித்துப்பாருங்கள். உங்கள் வீட்டில் நீங்கள், உங்கள் மனைவி, உங்கள் மகன் மூன்று பேரும் வெவ்வேறு அறைகளில் உள்ள  டி.வி-க்களில் `மெர்சல்' படம் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். விளம்பர இடைவேளை. உங்கள் டி.வி-யில் இப்போது நீங்கள் வாங்கலாம் என்று பேசிக்கொண்டிருந்த செருப்பு விளம்பரம் ஓடுகிறது. அதேசமயம், அடுத்த அறையில் உங்கள் மனைவியின் டி.வி-யில் அவருக்கான நகை விளம்பரம்… அதிலும் குறிப்பாக, அந்த டைமண்ட் நெக்லஸ் விளம்பரம் ஓடுகிறது. ஆனால், மகன் அறையிலோ அவன் கேட்டு அழுத லெகோ டாய்ஸ் விளம்பரம். சரி, இப்போது மூவரும் ஒரே அறையில் உட்கார்ந்து அதே படத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். இப்போது என்ன விளம்பரம் வரும் தெரியுமா? யாருடைய முடிவு முதலில் ஜெயிக்குமோ அவர்கள் சார்ந்த விளம்பரம்தான் திரையில் ஒளிரும். ஏனென்றால், செலவு செய்வதில் யார் உண்மையான குடும்பத் தலைவர் என்பதை அலெக்ஸா உங்களுக்குத் தெரியாமல் டி.விக்கு சொல்லியிருக்கும்.

ஆனால், இவ்வளவு செய்தாலும் அலெக்ஸாவிடம் ஒரு குறை இருக்கிறது. அலெக்ஸா வெறும் மூளைதான். காது இருப்பதால் கவனிக்கவும், வாய் இருப்பதால் கொஞ்சம் பேசவும் செய்கிறது. ஆனால், அதனால் பார்க்க முடிவதில்லை. அந்தக் குறையை நிவர்த்திசெய்யத்தான் இப்போது ரிங் பெல் அறிமுகம் ஆகிறது.

அமேஸான்

ஆம்… அலெக்ஸா மூளை என்றால் ரிங் அதன் கண்கள். முதலில் வாசலைப் பாதுகாக்க என்றுதான் வருகிறது. ஆனால், இப்போது நீங்கள் வாங்கியிருக்கும் பேக்கேஜ் கிட் மூலம் அது உள்ளேயும் பார்க்கப்போகிறது. இப்போது உங்கள் வீட்டில் என்ன பொருள் இருக்கிறது என்று அதற்குத் தெரியும். என்ன சாப்பிடுகிறீர்கள் என்று அதற்குத் தெரியும். என்ன உடுத்துகிறீர்கள் என்று தெரியும். இனி அது உங்கள் வீட்டில் இல்லாத பொருள்களை அது தனது கண்களால் பார்க்கப்போகிறது. நீங்கள் வாங்கவேண்டிய பொருள்களை நீங்கள் பேசுகையில் உற்றுக் கேட்கிறது. இனி உங்கள் வீட்டு விளம்பரங்களில் வரவேண்டியது எது என்றும் அதுதான் தீர்மானிக்கவும்போகிறது.

இப்போது உங்கள் வீடு அமேசான் வீட்டின் வெறும் ஒரு புள்ளிதான். உங்கள் வீட்டைப்போலவே, எல்லா வீட்டையும் புள்ளிகளாய் இணைத்து உலக அளவில் ஒரு பெரிய கோலமும் அமேசான் போட்டுவிட்டது. ஆக, இப்போது உபயோகிப்பாளர்களை தயார்படுத்திவிட்டது. அடுத்து, வெளியிலிருந்து இதற்கெல்லாம் சப்ளை ரெடி செய்ய வேண்டுமே!

இனி, அவர்கள் ஊருக்கு ஊர் ரீடெய்ல் மார்ட் தொடங்கப்போகிறார்கள். நீங்கள் போகவே வேண்டாம். அலெக்ஸாவிடம் சொன்னால், அது அமேசானிடம் சொல்லி… அடுத்த சில மணியில் பொருளை உங்கள் வீட்டில் இறக்கிவிடும். அதற்கான முன்னேற்பாடாய் `அமேசான் நவ்' என்ற பெயரில் ஆர்டர் செய்த இரண்டு மணி நேரத்தில் மளிகைப்பொருள்கள், காய்கறிகள் என  தினசரிப் பொருள்களை இப்போதே அவர்கள் டெலிவரி செய்து பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். 

இப்போது ரிங் வந்துவிட்டது என்று வைத்துக்கொள்ளுங்கள்.  நீங்கள் வேறு கம்பெனிகளில் ஆர்டர் செய்தால், அவர்கள் டெலிவரிக்கு வரும்போது கதவைத் திறக்கட்டுமா, வேண்டாமா என்று ரிங் பெல் உங்களை கேள்வி கேட்கும். அமேசானில் ஆர்டர் செய்தால், டெலிவரியை கதவைத் திறந்து உள்ளே கதவு அருகில் வைக்க அமேசான் உத்தரவாதத்துடன் உங்களை கேட்காமல் அதுவே அனுமதித்துவிடும். நாள்பட, நாள்பட உங்களுக்கு இதுதான் வசதியாகத் தெரியும். நீங்கள் இப்போது அமேசானின் செளகரியங்களுக்கு அடிமையாகி இருப்பீர்கள்.

எவ்வளவு பெரிய கட்டமைப்பு பாருங்கள்!

உலகை கூகுள் ஒரு வழியில் ஆள்கிறது என்றால் அமேசான் இன்னொரு வழியில் ஆளப்போகிறது. இதைத் தவிர்க்க, தடுக்க நம்மால் எதுவும் செய்ய முடியும் என நம்புகிறீர்களா? கூகுளும் அமேசானும் உங்களது ஒவ்வோர் அசைவையும் கண்காணிக்கிறது என்று யாராவது சொன்னால் நம்பாதீர்கள். உண்மையில் உங்களது ஒவ்வோர் அசைவையும் அதுதான் தீர்மானிக்கிறது. 

ஆனால், இதை எதிர்க்கொள்ள நமக்கு இன்னொரு வழியும் இருக்கிறது. அது அவர்கள் வழியிலேயே நாமும் அவர்களை டீல் செய்வதுதான். நம்மை வியாபாரம் செய்யும் இவர்களை வைத்தே, நாம் வியாபாரம் செய்ய ஆரம்பித்தால்… செய்து லாபம் பார்க்க ஆரம்பித்தால் எப்படி இருக்கும் என யோசித்துப்பாருங்கள். 

அமேஸான்

ஒரு வாடிக்கையாளராக நாம் ஒரு பொருளின் விலையை அதிகம், குறைவு என எப்படி முடிவுசெய்கிறோம்? உதாரணத்துக்கு, ஒரு கிலோ துவரம் பருப்பு வாங்கவேண்டியிருக்கிறது என வைத்துக்கொள்வோம். பத்து கடைகளில் விசாரிப்போம். எல்லோரும் 180 ரூபாய் என்று விலை சொல்கிறார்கள். ஒரே ஒரு கடையில் மட்டும் 150 என்று சொன்னால், அது நமக்கு விலை குறைவு என்று வாங்கிக்கொள்கிறோம். ஆனால், அதை விளையும் இடத்திலேயே வாங்கினால் அதன் விலை வெறும் 40 ரூபாய்தான் என்றும், அதுதான் அதற்கான உண்மை விலை என்பதும் நமக்குத் தெரியவே தெரியாது. பிறகு எப்படி 40 ரூபாய் பொருள் நம்மிடம் வரும்போது 180 ரூபாய் ஆனது என்றால்… அதுதான் வாங்குபவருக்கும் விளைவிக்கும் விவசாயிக்கும் இடையில் கைமாற்றும் பத்துப் பதினைந்து இடைத்தரகருக்கான லாபம்.

இப்போது அமேசான் எப்படி உங்களுக்கு குறைந்த விலையில் பொருள்களைக் கொடுக்கிறது பாருங்கள். வாடிக்கையாளருக்கும் உற்பத்தியாளருக்கும் இடையே இடைத்தரகர்கள் இல்லை. ஒன்லி அமேசான். அது பொருள்களை செய்பவர்களிடம் வாங்கி அதன் கிடங்கில் அடுக்கிக்கொள்கிறது. கேட்பவர்களுக்கு சப்ளை செய்கிறது. அதனால் குறைந்த விலையில் கொடுக்க முடிகிறது.

இப்போது நமது விவசாயிகள் ஊருக்கு ஒரு சங்கம் அமைத்து, தங்கள் அரிசி, பருப்புகளை ஒரு பிராண்ட் செய்து, அமேசான் வழியாக இன்றைய மார்க்கெட் விலைக்கு குறைவாகவோ அல்லது கிலோ 100 ரூபாய்க்கோ விற்கத் தொடங்கினால்? அமேசானுக்குக் கிடைக்கும் லாபம் நமது விவசாயிக்கும் கிடைக்கும்தானே?

உங்கள் அரிசியையும் பருப்பையும் எதையாவது செய்து அமேசான் விற்றுவிடும். அமேசானுக்கு கொடுத்தது போக, நிச்சயமாக முழு லாபமும் விவசாயிக்கு வந்து சேர்ந்துவிடும். ஒருவேளை, நமது விவசாயப் பொருள்கள் அமேசானுக்கு அதிக லாபத்தைத் தர ஆரம்பித்தால், அவர்கள் நமது பொருளை உலகமெல்லாம் கொண்டுசெல்லக்கூடும். லாபம் தரும் தொழிலை விட விரும்பாமல், ரிங் பெல்லை 6,500 கோடி ரூபாய் கொடுத்துக் காத்ததுபோல, நமது விவசாயம் செழிக்க அவர்களேகூட ஏதும் வழிவகைகள் செய்யக்கூடும். எல்லாம் ஒரு நம்பிக்கைக் கணக்குத்தான். 

உங்களில் யாராவது ஒருவர் இப்போது வழக்கம்போல அந்தத் தரகர்களும் நம் நாட்டவர்கள்தானே, அவர்கள் பிழைத்தால் என்ன தவறு? இப்போது நீங்கள் சொல்லும் நிவாரணத்தால், இந்தப் பணம் மொத்தமும் அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனத்துக்குத்தானே போகப்போகிறது என்று கேட்பீர்களானால், செத்துக்கொண்டிருக்கும் விவசாயமும் விவசாயியும் செழிக்க வேறு வழி சொல்லுங்கள். ஒருவேளை, இங்கே சொல்வது நடக்க ஆரம்பித்ததும் தரகர்கள் கொள்ளை லாபம் அடிப்பதிலிருந்து இறங்கிக்கூட வரலாம். அப்போது நமது தரகரும் விவசாயியும் சேர்ந்து பிழைக்கவும் வாய்ப்பிருக்கிறது.

இது ஒரு யோசனைதான். ஆனால், நிதர்சனம்? இதை எதிர்த்தாலும் சரி... ஆதரித்தாலும் சரி, பேசுவதைவிடுத்து செயல்படுத்துவதைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தால் நிச்சயம் நமக்கு நன்மைகள் மட்டுமே நிகழும்!


டிரெண்டிங் @ விகடன்