பொம்மன் vs சுள்ளி கொம்பன்... இரவு நேர ஆக்‌ஷன்! - ஒரு கும்கி உருவாவது எப்படி? அத்தியாயம் 9

''சார் நீங்க எங்க கொண்டு போய்விட்டாலும் மூன்று மணி நேரத்துல இந்த குட்டி யானை திரும்பவும் இங்க வந்துவிடும்”

பொம்மன் vs சுள்ளி கொம்பன்... இரவு நேர ஆக்‌ஷன்! - ஒரு கும்கி உருவாவது எப்படி? அத்தியாயம் 9

காட்டு யானையைப் பிடிக்க பொம்மன் கூடலூர் பக்கமிருக்கிற பிதர்காடு கிளம்புவதற்கு முன்பு பொம்மன் எப்படி கும்கியானது என்கிற சில சுவாரஸ்யங்களைச் சொல்லிவிடுகிறேன். ஏனெனில் பொம்மன் குறித்து இடையில் விட்டுப் போகிற கதைகளால் பொம்மனின் கதை பட்டுப் போகவும் வாய்ப்பிருக்கிறது. காட்டுக்குள் இருந்து ரதியோடு வந்த குட்டி யானையை மீண்டும் காட்டுக்குள் அனுப்ப முயன்றார்கள். ஆனால், குட்டி யானை ரதியை விட்டுப் போக மறுத்தது. காட்டு யானைகுட்டியைப் பிடித்து முகாமில் வளர்க்கக் கூடாது; மீண்டும் அதை எப்படியாவது காட்டுக்குள் கொண்டு போய் விடுங்கள் எனத் தமிழக வனத்துறை அறிவுறுத்துகிறது. முதுமலையின் தெற்கே இருந்த இன்னொரு மலையில் கொண்டு போய் விட்டு விடுவதென முடிவெடுக்கிறார்கள். ஆனால், போக மாட்டேன் என முரண்டு பிடிக்கிற குட்டி பொம்மனை யார் மலை தாண்டி கொண்டு போய் விடுவதெனக் கேள்வி எழுகிறது. கதையில் அடுத்து என்ன நடக்கப் போகிறது எனத் தெரியாமல் இருக்கிற ரகசியம்தான் பிறகு நடக்கிற எல்லா நிகழ்வுகளையும்  சுவாரஸ்யமாக்குகிறது. அந்தப் பொறுப்பை அனுபவம் வாய்ந்த மாவூத்திடம் ஒப்படைக்க வனத்துறை முடிவு செய்கிறது. கடைசியில் அந்தப் பொறுப்பு கிருமாறன் கைகளில் வந்தடைகிறது. அப்போது கிருமாறனின் வலது கையாக சுப்பிரமணி கும்கி யானை இருந்தது.

பொம்மன்

1 அத்தியாயம்    2 அத்தியாயம்    3 அத்தியாயம்    4 அத்தியாயம்    5 அத்தியாயம்    6 அத்தியாயம்    7 அத்தியாயம்

 8 அத்தியாயம்

பொம்மனைச் சங்கிலியால் கட்டி இழுத்துச் சென்று அடர் வனத்துக்குள் விட்டுவிட்டு வர அதன் கழுத்தில் சங்கிலி போடப்பட்டது. பொம்மனை மீண்டும் காட்டுக்குள் அனுப்புவதில் ரதி யானை வடிவில் புது சிக்கல் வந்தது. பொம்மனைப் பிரிய மனமில்லாமல் பொம்மன் கூடவே ரதி இருந்தது. பொம்மனைப் பிரிய முடியாமல் கத்தி கூச்சல் போட ஆரம்பித்தது. முகாமில் இருந்த கும்கி யானைகளைப் பயன்படுத்தி பொம்மனை ரதியிடமிருந்து பிரித்தார்கள். ரதிக்கும் பொம்மனுக்கும் இடையில் இருக்கிற பிணைப்பை பார்க்கிற கிருமாறன் அங்கிருந்த வனத்துறை அதிகாரிகளிடம் “சார் நீங்க எங்க கொண்டு போய் விட்டாலும் மூன்று மணி நேரத்துல திரும்பவும் இங்க வந்துவிடும்” என்கிறார். ஆனால், வனத்துறை அதிகாரிகள் குட்டியானை மீண்டும் வராது என அடித்துச் சொல்கிறார்கள்.

அன்றைய தினம் காலை 9 மணிக்கு பொம்மனை சுப்பிரமணி யானை வலுக்கட்டாயமாகக் காட்டுக்குள் கட்டி இழுத்துச் செல்கிறது. சுமார் நான்கு மணி நேரக் காட்டு பயணத்துக்குப் பிறகு முதுமலைக்கு தெற்கே இருக்கிற ஒரு மலையைத் தாண்டி பொம்மனை விட்டு விட்டு கிருமாறன் முகாமுக்குத் திரும்புகிறார். அன்றைய மாலை ஐந்து மணிக்கு முகாம் யானைகளுக்கு உணவு வழங்கப்படுகிறது. கிருமாறன் சொன்னது போலவே 5:30 மணிக்கு பொம்மன் முதுமலை முகாமுக்குத் திரும்பி ஒட்டுமொத்த முகாமுக்கு அதிர்ச்சியளித்தது. ரதியோடு மீண்டும் சேர்ந்துகொண்டது. பொம்மன் முதன் முதலில் முகாமுக்கு வந்த நாள்களில் கொண்டு போய் காட்டுக்குள் விட்டிருந்தால் மீண்டும் முகாமுக்கு வராமல் இருந்திருக்கும். ஆனால், நான்கைந்து மாதங்களாக அது முகாமுக்கு வருவதும் ரதியோடு இருப்பதுமாக இருந்ததால் முகாம் வாழ்க்கைக்குப் பழகி இருந்தது. திரும்பி வந்த பொம்மனால் வனத்துறை அதிகாரிகள் என்ன செய்வது எனக் குழம்புகிறார்கள். மீண்டும் காட்டுக்குள் கொண்டு போய் விட்டுப் பயனில்லை என்பதை உணர்கிற அதிகாரிகள் பொம்மனை கும்கியாக மாற்றுவது என முடிவெடுக்கிறார்கள். ஒரு வாரத்துக்குள் பொம்மனை கூண்டுக்குள் போட்டு பயிற்சியை ஆரம்பிக்க வேண்டுமென முடிவு செய்கிறார்கள். முதுமலையில் இருக்கிற சிறிய மரங்களைக் கொண்டு சிறிய கரோல் ஒன்று பொம்மனுக்காக கிருமாறன் தயார் செய்கிறார். பொம்மனுக்குத் தற்காலிக மாவூத்தாக 19 வயது சேத்தன் என்பவர் நியமிக்கப்படுகிறார். பயிற்சி ஆரம்பித்த சில நாள்களில் சேத்தனின் பயிற்சியில் பொம்மனிடம் எந்த முன்னேற்றமும் இல்லாமலிருப்பதைக் கவனிக்கிற வனத்துறை பொம்மனுக்கு கும்கி பயிற்சி கொடுக்க கிருமாறனையும் அதன் மாவூத்தாகவும் நியமிக்கிறது. கிருமாறனின் பயிற்சியில் பொம்மன் கொஞ்சம் கொஞ்சமாக கும்கி யானையாக மாற்றப்பட்டது. 2013-ம் ஆண்டு முழு கும்கியாக பொம்மன் மாறியது. ஆனாலும் பொம்மனை வைத்து எந்தக் காட்டு யானையையும் இது வரை பிடித்ததில்லை. மற்ற கும்கி யானைகளுக்கு உதவியாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது.

ஓ மாதன்

2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நீலகிரி மாவட்டம் கூடலூர்  பிதர்காடு பகுதியில் ஆண் காட்டு யானை ஒன்று குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்து 2 தொழிலாளர்களை அடித்துக் கொன்றது. சுள்ளி கொம்பன் (சிறிய தந்தம் கொண்ட) யானையைப் பிடித்தால் மட்டுமே இறந்தவரின் உடலைப் பெறுவோம் என ஊர் மக்கள் போராடுகிறார்கள். கடையடைப்புகள் நடக்கிறது. வேறு வழியின்றி காட்டு யானையைப் பிடிக்கும்படி அரசு உத்தரவிடுகிறது.  காட்டு யானையை கும்கிகள் உதவியுடன் பிடிப்பது என வனத்துறை முடிவு செய்கிறது. இப்படித்தான் பொம்மனுக்கு அந்த அசைன்மென்ட் வந்து சேர்ந்தது.  2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3-ம் தேதி பொம்மனும் அதற்கு உதவியாக ஜம்பு, கும்கி யானைகள் சம்பவ இடத்துக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. பொம்மனின் மாவூத்தாக அப்போது ஓ மாதன் என்பவர் பணியில் இருந்தார். கிருமாறனையும் வனத்துறை உடன் அழைத்துச் சென்றிருந்தது. வனத்துறையினர் 5 குழுக்களாக பிரிந்து கால்நடை மருத்துவர் மனோகரன் உதவியுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.  எலியாஸ்கடை எனும் பகுதிக்கு அருகே உள்ள வனப்பகுதியில் காட்டு யானை இருப்பதை உறுதி செய்கிறார்கள். 

காட்டு யானையைப் பார்த்தவுடன் பிடித்துவிட முடியாது. அதன் குண நலன்களை முதலில் ஆராய வேண்டும். பிறகு காட்டு யானையைப் சமவெளி பகுதிக்குக் கொண்டு வர வேண்டும். காட்டு யானையைப் பிடிக்கிற இடத்துக்குப் பக்கத்தில் ஆறுகளோ குழியோ இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் யானையைப் பிடிப்பதற்கு முன்பு யானைக்கு மயக்க ஊசியைச் செலுத்துவார்கள், மயக்க ஊசி செலுத்திய யானை சூழ்நிலையைக் கருதி தப்பி ஓடவே பார்க்கும். யானையின் உடல் பயத்தில் சூடாக ஆரம்பித்தால் மயக்க ஊசி வேகமாக வேலை செய்ய ஆரம்பிக்கும். அப்படி வேலை செய்ய ஆரம்பித்தால் யானை எந்த இடத்தில் வேண்டுமானாலும் மயக்கம் போட்டு விழலாம். அதனால் யானையை சமவெளி பகுதிக்கு விரட்டிக்கொண்டு வருவார்கள். எப்பொழுதும் யானையைப் பிடிப்பதற்கு முன்னால் இதையெல்லாம் கருத்தில் கொண்டு முதல் இரண்டு நாள்களுக்குக் கும்கி யானையைக் கொண்டு காட்டு யானையைக் கவனிப்பார்கள். பொம்மனும் அப்படி யானையைப் பிடிப்பதற்கு நான்கு நாள்களுக்கு முன்பே சம்பவ இடத்துக்குக் கொண்டு சென்று காட்டு யானையின் வழித்தடம், அதன் குண நலன்களைக் கவனித்தார்கள். வனத்துறையினர் 5 குழுக்களாக பிரிந்து கால்நடை மருத்துவர் உதவியுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். எலியாஸ்கடை எனும் பகுதிக்கு அருகே உள்ள வனப்பகுதியில் காட்டு யானை இருப்பதை உறுதி செய்கிறார்கள்.

இரவு நேரத்தில் யானை இருக்கிற திசையில் பயணிக்கிறார்கள். மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டும், ஏனெனில் பதுங்கியிருந்து யானை தாக்குவதற்கான வாய்ப்பும் இருக்கிறது.  குடியிருப்புப் பகுதிக்குள் காட்டு யானை வருகிற பாதைக்குப் பக்கத்தில் தினமும் இரவில் கும்கி யானைகளைக் கட்டி வைக்கிறார்கள். காட்டு யானையின் நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டிருக்கும்பொழுது யாரும் எதிர் பார்க்காத நிகழ்வு ஒன்று நடக்கிறது.  பொம்மனுக்குத் துணையாக வந்த ஜம்பு யானைக்கு மதம் பிடிக்க ஆரம்பித்தது. அடுத்த நாள் காட்டு யானையைப் பிடித்துவிடலாம் என முடிவெடுத்திருந்த வனத்துறைக்கு இது இடியாக அமைந்தது. ஜம்புவை குளிர்விக்கும்படியான உணவுகள் கொடுக்கப்படுகின்றன. ஆனாலும் ஜம்புவை கட்டுப்படுத்த முடியவில்லை. அங்கிருக்கிற ஒரு மரத்தில் ஜம்புவை கட்டி வைத்து அதன் நடவடிக்கைகளையும் கவனித்துக் கொண்டிருந்தார்கள்.  திட்டமிட்டபடி காட்டு யானையைப் பிடித்தே தீருவது என முடிவு செய்த வனத்துறை, ஜம்பு யானைக்கு மாற்றாக சாடிவயல் யானைகள் முகாமிலிருந்து உடனே சுஜய் என்கிற கும்கி யானையைக் கூடலூருக்கு வரவழைக்கிறார்கள்.  

முகாம் யானை

அன்றைய தினம் மாலை நேரத்தில் சுஜய் யானை வந்து சேருகிறது. இரவு யானையைப் பிடிப்பது என ஒட்டு மொத்த குழுவும் தயாராகிறது. இரவில் காட்டு யானையைப் பிடிப்பது சாதாரண காரியமல்ல. இரவு 10 மணிக்கு மேல் காட்டு யானை குடியிருப்புப் பகுதிக்கு வருகிறது. கும்கி யானைகளின் பின் ஒரு கால் சங்கிலியால் அங்கிருந்த மரத்தில் கட்டப்பட்டிருக்கின்றன. குடியிருப்புப் பகுதியை நெருங்கும்பொழுது ஊசி மூலம் பிடித்துவிடலாம் எனப் பொறுமை காக்கிறார்கள். கால்நடை மருத்துவர்கள் மயக்க ஊசியுடன் காத்திருக்கிறார்கள். எப்படியும் காட்டு யானையைப் பிடித்துவிடுவோம் என்கிற நம்பிக்கையில் கிருமாறனை காட்டு யானைக்கான கரோலை (கூண்டை) தயாரிக்கச் சொல்லி அனுப்புகிறார்கள். கிருமாறனும் உடனே அங்கிருந்து முதுமலை யானைகள் முகாமுக்குக் கிளம்புகிறார். எல்லோருக்கும் என்ன நடக்கப் போகிறது என்கிற பயம் இருந்தது, அன்றைய இரவு சுமார் 10:45 மணிக்கு கும்கி யானைகள் கட்டப்பட்டிருக்கும் இடத்துக்குக் காட்டு யானை வருகிறது. ஏற்கெனவே 2 பேரை கொன்றிருக்கிறது. எனவே, மொத்தக் குழுவும் கூடுதல் கவனமெடுத்து அதன் நடவடிக்கையை கவனித்துக்கொண்டே இருக்கிறார்கள். யானை நேராக கும்கி யானைகள் கட்டியிருக்கும் இடத்துக்கு வந்து பொம்மனுக்குப் பக்கத்தில் நிற்கிறது. எல்லோருக்கும் 'பக் பக்' என இதயம் துடிக்க ஆரம்பிக்கிறது. ஏனெனில் கும்கி யானைகள் இரண்டும் ஒரு மரத்தில் கட்டி வைக்கப்பட்டிருக்கிறது. தூரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த மதம் பிடித்த ஜம்பு யானை பிளிறிக்கொண்டே இருந்தது. காட்டு யானை குடியிருப்புப் பகுதிக்குள் நுழையும்பொழுது பிடிக்கலாம் என்பதே திட்டம். ஆனால், நடப்பதோ வேறு. காட்டு யானை நெருங்க நெருங்க பொம்மன் தன்னுடைய உடல் மொழியை மெல்ல மாற்ற ஆரம்பிக்கிறது. ஊர் மக்கள் காட்டு யானையான சுள்ளி கொம்பனை ஆக்ரோஷமான யானை எனச் சொல்லியிருந்தார்கள், ஏதேனும் அசம்பாவிதம் நிகழுமோ என அஞ்சுகிறார்கள். ஆனால், காட்டு யானை பொம்மனுக்குப் பக்கத்தில் வந்து அமைதியாய் நின்றது. நேரம் கடந்துகொண்டே இருந்தது காட்டு யானை எங்கும் நகரவில்லை. 12, 1, 2 என நேரம் போய் கொண்டிருக்கிறது. அது வரை பொறுமையாய் இருந்த வனத்துறையும் மருத்துவரும் யானையை ஊசி மூலம் பிடிக்கலாம் என முடிவெடுக்கிறார்கள். விடிய ஆரம்பித்தால் மக்கள் கூட்டம் கூடிவிடும் எனச் சொல்லி, விடியற்காலை சரியாக 4.30 மணிக்கு முதல் மயக்க ஊசியைக்  காட்டு யானைக்குச் செலுத்துகிறார்கள். காட்டு யானையின் உடல் மெல்ல அசைந்து கொடுக்கிறது. எச்சரிக்கையாகப் பொம்மனின் கால் சங்கிலியை அதன் மாவூத் ஓ மாதன் அவிழ்த்து விடுகிறார். 

யானை ஊசி வாங்கியதால் முரண்டு பிடிக்க ஆரம்பிக்கிறது. உடனே பொம்மன் யானையை விட்டு காட்டு யானையைப் பிடிக்க முயல்கிறார்கள். காட்டு யானை பொம்மனை தன்னுடைய தும்பிக்கையால் தாக்குகிறது. பொம்மனும் தன்னுடைய முன் இரு தந்தங்களால் காட்டு யானையை முட்டித் தள்ளுகிறது. சில நிமிடங்களில் மயக்க ஊசியின் விளைவால் தள்ளாட ஆரம்பிக்கிறது. இதுதான் சமயம் எனப் பொம்மன் அதன் ஆதிக்கத்தைச் செலுத்துகிறது. காட்டு சுள்ளி கொம்பன் எதிர்பார்த்த எந்த எதிர்ப்பும் இல்லாமல் மயங்கி விழுகிறது. காட்டு யானையின் கால்களை சங்கிலியால் கட்டுகிறார்கள். முதுமலை யானைகள் முகாமுக்கும்  தகவல் தெரிவிக்கப்படுகிறது. இவ்வளவு எளிதில் யானை சரணடையுமென்று யாரும் எதிர்பார்க்கவில்லை. பொழுது விடிய ஆரம்பித்ததும் சுள்ளி கொம்பனைப் பிடித்துவிட்டார்கள் என்கிற தகவல் ஒட்டுமொத்த கூடலூருக்கும் பரவுகிறது. ஊர் மக்கள் பிடிபட்ட காட்டு  யானையைப் பார்க்க வர ஆரம்பிக்கிறார்கள். பித்தர்காடு, சேரம்பாடி, எலியாஸ்கடை எனச் சுற்றியிருந்த ஊர் கிராம மக்கள்  நிம்மதி பெருமூச்சு விடுகிறார்கள்.

அந்த நிம்மதி அதிகபட்சமாக ஒரு மணி நேரம் கூட நிலைக்கவில்லை. யானையைப் பார்க்க வந்திருந்த பலரும் கேட்ட ஒரே கேள்வி "சுள்ளி கொம்பன் எங்க?" அந்த கேள்வியில்  ஒட்டுமொத்த குழுவும், அதிர்ந்து போனார்கள்,  ஏனெனில்  விடிய விடிய காத்திருந்து வனத்துறை பிடித்தது சுள்ளி கொம்பனை அல்ல..

- தொடரும்...  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!