ஒரு சின்ன பிளாஸ்டிக் ஸ்ட்ரா என்ன செய்யும்? பிரிட்டன் அரசையே கதிகலங்கச் செய்யும்!

ஒரு சின்ன பிளாஸ்டிக் ஸ்ட்ரா என்ன செய்யும்? பிரிட்டன் அரசையே கதிகலங்கச் செய்யும்!

லகின் மிக நீண்ட கடற்கரை அது. கடலின் நடுவே இருக்கும் தண்ணீர் அலைகளை எழுப்பி தன் சக்தியால் கரைகளுக்கு அனுப்புகிறது. அலைகள் தன்னுடன் பயணிக்கும் கடல் வாழ் உயிரினங்களையும் சேர்த்துக்கொண்டு கரையைத் தொட்டுவிட்டு மீண்டும் திரும்பிவிடுகிறது. ஆனால், கடல் வாழ் உயிரினங்களில் சிலவற்றை மட்டும் கரையில் துப்பிவிட்டுச் சென்றுவிடுகிறது. அந்த உயிரினங்களை உண்ணும் பறவைகள் சாப்பிட அருகில் சென்றுவிட்டு பறந்துவிடுகின்றன. விலங்குகள் மட்டும் அந்த உயிரினங்களைச் சாப்பிடுகிறது. ஆனால், சாப்பிட்ட சிறிது நேரத்தில் அந்த விலங்குகளும் மடிந்துவிடுகின்றன. அதற்குக் காரணம், கடல் வாழ் உயிரினங்கள் உண்ட பிளாஸ்டிக்குகள்தாம். இது நடைபெறுவது வளர்ந்த நாடான பிரிட்டனில்தான். 

பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள் பிரிட்டன்

Photo- Greenpeace UK

பிரிட்டன் கடலில் நிரம்பியிருக்கும் பிளாஸ்டிக்குகளால் அந்நாடு மிகப்பெரிய அழிவினைச் சந்தித்து வருகிறது. பொதுவாகவே இது பெரும்பாலான நாடுகளில் இருக்கும் சூழலியல் சிக்கல்தான். பெருகி வரும் கடல் பிளாஸ்டிக்குகளால், அவற்றைத் தடை செய்யும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது, அந்நாட்டு அரசு. பிரிட்டன் பிரதமர் தெரசா பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் ஆபத்து பற்றியும், அதனைக் கட்டுப்படுத்துவது குறித்தும் பேசியுள்ளார். மேலும், நீர்ம பொருள்களை அருந்தும் ஸ்ட்ரா போன்ற பிளாஸ்டிக் குழாய்களை பிரிட்டனில் தடை செய்ய இருப்பதாகவும் அவர் பேசியுள்ளார். பிரிட்டனில் ஒவ்வொரு வருடமும் சுமார் 8.5 பில்லியன் ஸ்ட்ராக்கள் பயன்படுத்தப்படுவதாகக் கடல் பாதுகாப்புச் சங்கம் அண்மையில் தெரிவித்திருந்தது. கடல் மற்றும் அதன் கரையோரமாக இருக்கும் பகுதிகளில் இருந்து அகற்றப்படும் பிளாஸ்டிக் கழிவுகளில் ஸ்ட்ராக்கள் அதிகமான அளவில் இருப்பதாகவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது. விலங்குகள் மற்றும் கடல்சார் உயிரினங்களுக்கும் பிளாஸ்டிக் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது.

பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களால் பாதிக்கப்படும் விலங்குகள்

Photo- Earth Touch

இதுதவிர சுற்றுச்சூழலுக்கும் பிளாஸ்டிக் மிகப்பெரிய கேடுகளை விளைவிக்கிறது. பிளாஸ்டிக்குகளால் ஏற்படும் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு முதற்கட்டமாக அதிகமாகச் சேரும் ஸ்ட்ராக்கள், பிளாஸ்டிக் பட்ஸ் ஆகியவற்றைத் தடை செய்ய அந்நாட்டுச் சுற்றுச்சூழல் அமைச்சகம் முடிவெடுத்துள்ளது. இது ஓர் ஆரம்பம்தான்... இதன் முழுமையான பலன் இனிதான் தெரிய ஆரம்பிக்கும். இந்த ஸ்ட்ராக்கள் தடை சாத்தியப்பட்டால் முழுமையாக பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை செய்து விடுவோம் எனவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஒரு மெல்லிய ஸ்ட்ரா மட்குவதற்கு சுமார் 400 வருடங்களுக்கு மேல் எடுத்துக்கொள்ளும். ஒவ்வோர் ஆண்டும் 8.5 மில்லியன் ஸ்ட்ராக்கள் சேர்ந்தால் எதிர்காலத்தில் கடற்கரையின் முழுவதும் ஸ்ட்ராக்களால் நிரம்பியிருக்கும். இதற்கு முடிவுகட்டும் விதமாக 2019-ம் ஆண்டின் இறுதிக்குள் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களின் பயன்பாடு இல்லாத பிரிட்டனை அமைக்கச் சுற்றுச்சூழல் அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

இத்திட்டம் மட்டும் சாத்தியமானால் காமன்வெல்த் நாடுகளுக்கு பிரிட்டன் மிகப்பெரிய சவால்விடும். பிரிட்டன் அரசாங்கம் வளரும் நாடுகளில் மேற்கொள்ளும் கழிவு மேலாண்மை ஆராய்ச்சிக்காக 87.4 மில்லியன் டாலர் பணத்தை ஒதுக்கிக்கொண்டிருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் பிரிட்டன் ஒரு தடைச் சட்டத்தைக் கொண்டுவந்தது. அதன்படி, நுண்ணிய பிளாஸ்டிக்குகளுக்குத் தடைவிதித்தது. அதனால் தற்போதுவரை ஒன்பது பில்லியினுக்கும் குறைவான பிளாஸ்டிக் பைகளே பிரிட்டனில் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. கூடிய விரைவில் பிளாஸ்டிக்கை தடை செய்து இயற்கை வளத்தைக் காப்பதற்கும் முயற்சிகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டம் முதல்கட்டமாக பிளாஸ்டிக் ஸ்ட்ராவில் தொடங்கியுள்ளதால் ஓர் ஆண்டுக்கு ஒரு லட்சம் கடல்வாழ் உயிரினங்களுக்கும் மேல் காக்கப்படும் என பிரிட்டன் அரசாங்கம் சொல்லியிருக்கிறது. 

கடலில் சேகரிக்கப்படும் ஸ்ட்ராக்கள்

Photo-1millionwomen

பிளாஸ்டிக் கழிவுகள் உபயோகிப்பது உலகின் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. வளர்ந்த நாடான பிரிட்டனில் 8.5 மில்லியன் ஸ்ட்ராக்கள் என்றால் அதைப் பற்றிய விழிப்புஉணர்வே இல்லாமல் இருக்கும் இந்தியா போன்ற நாடுகளில் எத்தனை கோடி ஸ்ட்ராக்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும். எத்தனை விலங்குகள், உயிரினங்கள் அழிக்கப்பட்டிருக்கும். சுற்றுச்சூழல் அமைச்சகத்தை முடுக்கிவிட்டு பிரிட்டன் அரசாங்கம் சுற்றுச்சூழலைக் காக்கத் தொடங்கிவிட்டது. இந்தியச் சுற்றுச்சூழல் அமைச்சகமும் கச்சா எண்ணெய்க்காகப் பூமியைத் தோண்டி சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் திட்டத்தை ஓரம் வைத்துவிட்டு சுற்றுச்சூழல் மாசுபாடுகளைக் குறைக்கும் திட்டத்தைக் காக்க முன்வர வேண்டும். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!